திருமுறை 8 · 8.050 · 7

ஆனந்தமாலை

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்தஎன்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே
சொற்பிரிப்பு
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார், கடந்தார், வியன் உலகம் ;பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார், அமரர் எல்லாம்;கல்நேர் அனைய மனக் கடையாய்க் கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்தஎன் நேர் அனையேன், இனி, உன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே.
உரை

இறைவனது மின்னல் போலும் அழகிய திருவடிகளில் தேவர்கள் பொன் நிறமுள்ள அழகிய மலர்களைத் தூவி, இறைவனை வணங்கி நிற்கின்றார்கள். நானோ கல்லையொத்த மனத்தினனாய்க் கீழ்ப்பட்டவனாய் உள்ளேன். அறிஞர்களால் கழிக்கப்பட்டுக் கவலைப்பட்டு  வீழ்ந்து கிடக்கும் எனக்கு நானே நிகரான கீழ்மை உடையேன். இனி நான் உன்னை வந்தடையும்  வகையினைக் கூறி அருளுவாயாக.

2

என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன்பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடாதென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே.
சொற்பிரிப்பு
என்னால் அறியாப் பதம் தந்தாய்; யான் அது அறியாதே கெட்டேன்;உன்னால் ஒன்றும் குறைவு இல்லை; உடையாய், அடிமைக்கு யார்? என்பேன்;பல் நாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியரொடும் கூடாதுஎன் நாயகமே! பிற்பட்டு, இங்கு, இருந்தேன்-நோய்க்கு விருந்தாயே.
உரை

யான் ஆன்மகுணம் முற்றும் போகாதவன். அத்தகைய எனக்கு யான் இதுவரை அறிந்திராத சிவானுபவமாகிய பெரிய பதவியைத் தந்தருளினாய். அதன் தன்மை அறிந்து  அதனைக் காவாமல் யான் கெடுதியுற்றேன். அடிமையைக் காக்கவில்லை என்ற குறை  உனக்கு இல்லை. நீ உரிய காலத்தே ஆண்டனை; வேண்டிய எல்லாம் எனக்குத் தந்தனை;  உன்னால் யாதொரு குறையும் ஏற்படவில்லை. நாதனே! அடியேனுக்கு யாரைத் துணை  என்பேன்? என் தலைவனே! பல நாட்களாக உன்னை வழிபட்டுத் துதிக்கும் பழைய அன்பரோடு  சேராது பிற்பட்டுக் கிடந்து, பிணிக்கு விருந்தாக இவ்வுலகில் இருக்கின்றேன்.

3

சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித்தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனைமாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே.
சொற்பிரிப்பு
சீலம் இன்றி, நோன்பு இன்றிச் செறிவே இன்றி, அறிவு இன்றித்தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய்ச் சுழன்று, விழுந்து, கிடப்பேனைமாலும் காட்டி, வழி காட்டி, வாரா உலக நெறி ஏறக்கோலம் காட்டி ஆண்டானை, கொடியேன் என்றோ கூடுவதே?
உரை

நல் ஒழுக்கமின்றி, விரதமின்றி அன்பில்லாமல் அறிவில்லாமல் தோற்பாவை கூத்தாடுவது போலத் துன்ப இன்பங்களிற் சுழன்று அவற்றில் மயங்கி அறிவற்று விழுந்து  கிடக்கின்றேன். இத்தகைய பயனற்ற செயல்களில் ஈடுபடாதவண்ணம் முத்திக்குப் போகிற  வழியில் முன்னேறிச் செல்லுமாறு குருவடிவான கோலம் காட்டினாய். இவ்வாறு என்னை  ஆண்ட என் தலைவனைக் கொடிய பிணிகளை உடைய யான் போய்க் கூடுவது எந்நாளோ?

4

கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய்படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னேகொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியேநடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே.
சொற்பிரிப்பு
கெடுவேன்; கெடுமா கெடுகின்றேன்; கேடு இலாதாய், பழிகொண்டாய்;படுவேன், படுவது எல்லாம், நான் பட்டால், பின்னைப் பயன் என்னே ?கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே !நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால், நன்றோ, எங்கள் நாயகமே?
உரை

கெடும் தன்மையுடைய யான் கெடக்கூடிய நியதியின்படிக் கெடுகின்றேன். அத்தகைய என்னை ஆளாக ஏற்றுக் கேடிலானாகிய நீ வீணாகப் பழி ஏற்றனை. துன்பப்  படுவதற்குரிய யான் படவேண்டிய துன்பமெல்லாம் பட்டுவிட்டால் அதற்குப்பின் நீ  காப்பதில்தான் என்ன பயன் உண்டு? கொடிய பெருநரகத்தில் யான் அழியாத வண்ணம்  என்னைக் கை கொடுத்துத்தூக்கி ஆட்கொள்ளும் குருமணியே! எங்கள் நாயகமே ! நீ நடுநிலையில் நில்லாமற் போனால் அது நன்றாகுமோ சொல் !

5

தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியேதாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையேநாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.
சொற்பிரிப்பு
தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய்நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே ;தாயே என்று உன் தாள் அடைந்தேன், தயா, நீ, என் பால் இல்லையே?நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ?
உரை

எல்லாவுயிர்கட்கும் தாயாகி வந்து பாலைத் தருபவனே ! (ஞானப்பால் அளிப்பவனே ! ) அதனைத் தாராது போனால் பாலின்றி மெலியும் சேய் போல் நாயேன் (அறியாமையாற்) கழிவாய்ப் போவேனோ? அண்ணலே! இனியாவது அருள் தருவாயாக! உன்னைத் தாய் என்றெண்ணி உன் திருவடியடைந்தேன். நீ என்னிடம் கருணை  காட்டாதிருக்கிறாய். நான் உன்னையடைந்தவுடன் என்னை ஆட்கொண்டாய். இப்போது  நான் உனக்குத் தேவையில்லையோ?

6

கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமேஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோதேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.
சொற்பிரிப்பு
கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமே ?'ஆ! ஆ! ' என்னாவிடில், என்னை 'அஞ்சேல்' என்பார் ஆரோ-தான்?சாவார் எல்லாம் என் அளவோ? ' தக்க ஆறு அன்று' என்னாரோ?தேவே! தில்லை நடம் ஆடீ ! திகைத்தேன்; இனித்தான் தேற்றாயே !
உரை

அரசே! நீ அருள்புரிய வேண்டாமோ? கொடுமையேன் கெட்டுப்போதல் முறையாமோ?  நீ 'ஐயோ' வென இரங்காவிடில் எனக்கு அஞ்சேல் என உரைப்பவர் வேறு யார்? நின்னருள்  பெறாதவர்கள் யாவரும் இது தலைவற்குத் தக்க முறையன்று என்று இகழ மாட்டாரோ?  தில்லையிலே திருநடனமிடும் தேவனே! திகைப்படைந்தேன். இனி நீ என்னைத் தெளிவிப்பாயாக !

7

நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமேதெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே.
சொற்பிரிப்பு
நரியைக் குதிரைப் பரி ஆக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்து,பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு-அது ஏற்றும் பெருந்துறையாய் !அரிய பொருளே! அவிநாசி அப்பா! பாண்டி வெள்ளமே!தெரிய அரிய பரஞ்சோதீ ! செய்வது ஒன்றும் அறியேனே !
உரை

நரிகளைக் குதிரைகளாக்கி உலகமெலாம் தெரியச் செய்தாய்! பாண்டியனது  பெரிய ஊராகிய மதுரையிலுள்ள மக்களைத் திகைப்பில் ஆழ்த்திய பெருந்துறைப் பெருமானே!  பெறுதற்கரிய மெய்ப்பொருளே! அவிநாசி எனும் திருப்பதியில் வீற்றிருக்கும் எம் அப்பனே!  பாண்டியனான கருணை வெள்ளமே! அறிதற்கரிய மேலான ஒளியானவனே ! நான் என்ன செய்வது என்று ஒன்றும் அறிந்திலனே !