1
சொற்பிரிப்பு
உரை
யாகம் முதலான செயல்களை இறைவன் என்று அறியும் அறிவு படைத்தவரும், பக்தியினை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுகின்ற அரன் பணியாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இவையே முத்திக்குரிய எளிய வழிகள் என்று அறியும் திருவருள் வாய்ப்பில்லாதவரும் ஆகிய சமயவாதிகளே மூர்க்கர் எனப்படுவர். அத்தகைய மூர்க்கர்களோடு கூடித்திரியும் எனக்கு அன்பாகிய பக்தி ஒன்றே முக்திக்குரிய நெறி என்று காட்டினான் சிவபெருமான். அங்ஙனம் அவன் காட்டிய அன்பாகிய பக்தி நெறியில் யான் செல்லச் செல்ல, என்னுடைய பழைய வினைகளாகிய சஞ்சிதக் கருமங்களை நீக்கி , அவற்றுக்கு மூலகாரணமாய் உள்ள ஆணவ மலத்தையும் நீக்கினான். அத்தோடு நில்லாமல் என்னுடைய தன்முனைப்பாகிய ஆன்ம போதத்தைக் குறைத்துத் தன்னுடைய பேரறிவாகிய சிவபோதத்தை என் அறிவில் விளங்கச் செய்தான். மகன் குணமறிந்து கொடுத்து உதவும் தந்தை போன்று இத்துணை நன்மைகளையும் என்னை ஆண்டு கொண்டு அருளினான் எம் தந்தையாகிய சிவபெருமான். இத்தகைய பெரும் பேற்றினை இவ்வுலகில் வேறு யார் பெறுவார்கள்? இதுவும் அதிசயமே !