திருமுறை 8 · 8.047 · 11

திருவெண்பா

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்பொய்யும் பொடியாகா தென்செய்கேன் - செய்யதிருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீமருவா திருந்தேன் மனத்து.
சொற்பிரிப்பு
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகிபொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? - செய்யதிரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம்தீமருவாது இருந்தேன் மனத்து.
உரை

சிவபெருமான் சிவந்த திருமேனி உடையவனாய், திருப்பெருந்துறையில்  எழுந்தருளி இருப்பவன். அவன் இவ்வுலகத் தீப்போன்று வெப்பத்தோடு இல்லாமல்  தேன்போலும் இனிமையைத் தருகின்ற செஞ்சோதியானவன். அச்சோதியானவனை என் மனத்தினுள் பொருத்தாமல் இருந்துவிட்டேன். அதனால், என்னுடைய நல்வினை தீவினையாகிற வினைகள் இரண்டும் வெந்து ஒழியவில்லையே. அவற்றிற்கு இடமாய்  இருக்கின்ற இந்தத் தேகமும் உருகிப் பொய்யான வாழ்வும் சாம்பல் ஆகாமல் இருந்ததே.  நான் என்ன செய்வேன்?

2

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோபார்க்கோ பரம்பரனே என்செய்கேன்- தீர்ப்பரியஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து.
சொற்பிரிப்பு
ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ ?பார்க்கோ ? பரம்பரனே, என்செய்கேன்?- தீர்ப்பு-அரியஆனந்த மால் ஏற்றும் அத்தன், 'பெருந்துறையான்தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து?
உரை

என்னோடுகூட நின்று பேரானந்தப் பெரும்பேறு அளிக்கும் தந்தை  திருப்பெருந்துறை இறைவன் தான் என்று ஒருவர் என்பால் தெரிவிப்பாராயின் அவரை வணங்கி ஆரவாரிப்பேனா? அரற்றுவேனா? ஆடுவேனா? பாடுவேனா? பார்ப்பேனா?  பரம்பரனே! நான் வேறு என்ன செய்து பாராட்டுவேன்.

3

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதேஉய்யும் வகையின் உயிர்ப்பறியேன்- வையத்திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்பெருந்துறையில் மேய பிரான்.
சொற்பிரிப்பு
செய்த பிழை அறியேன்: சேவடியே கை தொழுதேஉய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் - வையத்துஇருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான்பெருந்துறையில் மேய பிரான்
உரை

அடியேன் செய்த தவறுகளை இன்னது என்று அறியேன். ஏதோ திருவருள்  வசத்தால் சிவந்த திருவடிகளையே வணங்கினேன். யானாகக் கடைத்தேறி உய்யும்  வகையின் தோற்றமும் அறியேன். அங்ஙனமான அடியேனைத் திருப்பெருந்துறையில்  எழுந்தருளியுள்ள சிவபெருமான் குருமேனி தாங்கி இவ்வுலகத்தே வந்து வேல் வைக்கப்படும் உறைக்குள் வேலைச் செருகினாற்போல என் சிந்தனையுள்  திருவருள் ஞானத்தைச் சேர்த்தான்.

4

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்- தென்னன்பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்வருந்துயரந் தீர்க்கும் மருந்து.
சொற்பிரிப்பு
முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான்பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்;- தென்னன்பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்;வரும் துயரம் தீர்க்கும் மருந்து
உரை

இனிவரும் எனது பிறப்புக்களை நீக்கும் பெரியோனும், தென்னவனும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள பெருங்கருணையாளனும் இனி வரும் துயரங்களாகிய ஆகாமிய வினைகளை அறுக்கும் மருந்து போன்றவனும் ஆகியவன் சிவபெருமான். அவன் என்னுடைய பழைய வினைகள் இரண்டினையும் வினைகளின்  வேராகிய மூல கன்மத்தையும் வேருடன் களைந்து, என் கண் காண என்முன்னே         குருநாதனாக உருமேனி தாங்கிக் காட்சி வழங்கினான்.

5

அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்றமறையோனும் மாலுமால் கொள்ளும்- இறையோன்பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாதிருந்துறையும் என்னெஞ்சத் தின்று.
சொற்பிரிப்பு
அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்றமறையோனும், மாலும், மால் கொள்ளும் - இறையோன்;பெருந்துறையுள், மேய பெருமான்; பிரியாதுஇருந்து உறையும், என் நெஞ்சத்து இன்று.
உரை

எல்லா உலகங்களையும் படைக்கின்றவனாகிய பிரமனும், காக்கின்றவனாகிய  திருமாலும் சிவபெருமானைத் தேடிக் காணாது மயக்கம் கொண்டார்கள். ஆனாலும்,  திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனாகிய சிவபெருமான் அடியேன் மனத்து  நின்று நீங்காது கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான். இறைவனைத் தேடி அலைவார்களுக்கு இதனை யான் உறுதியாகச் சொல்லுகிறேன்.

6

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை- அத்தன்பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்மருந்திறவாப் பேரின்பம் வந்து.
சொற்பிரிப்பு
பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும், பேச்சு அரிது ஆம்மத்தமே ஆக்கும், வந்து, என் மனத்தை:- அத்தன்,பெருந்துறையான், ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும்மருந்து, இறவாப் பேரின்பம், வந்து.
உரை

திருப்பெருந்துறை இறைவனாகிய எம் தந்தை அடியேனை ஆட்கொண்டு பெருங்கருணையோடு எனது துன்பங்களை நீக்கும் மருந்து போன்றவன். அழிவில்லாத பேரின்ப வடிவினன். அவன் வந்து என்னைப் பித்தனாக்கினான். பிறப்பை அறுத்தான். என் மனத்தைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி, என்னால் விவரிக்க முடியாத  அளவிற்குக் களிப்பை உண்டாக்கினான்.

7

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றிஆரா அமுதாய் அமைந்தன்றே- சீரார்திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேயஒருத்தன் பெருக்கும் ஒளி.
சொற்பிரிப்பு
வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றிஆரா அமுதாய் அமைந்தன்றே- சீர் ஆர்திருத்தென் பெருந்துறையான், என் சிந்தைமேயஒருத்தன், பெருக்கும் ஒளி.
உரை

புகழ் நிறைந்த அழகிய தெற்கின் கண்ணதாகிய திருப்பெருந்துறை இறைவனும்  என் மனத்தில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய சிவபெருமான் அருளிய சிவஞானப்  பேரொளி என் பிறவியைப் போக்கி என்னோடு ஒத்து ஆராத அமுதமாக அமைந்து இருந்தது.

8

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்யாவர்க்கும் கீழாம் அடியேனை- யாவரும்பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்மற்றறியேன் செய்யும் வகை.
சொற்பிரிப்பு
யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான்,யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை - யாவரும்பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான் !மற்று அறியேன் செய்யும் வகை
உரை

எல்லார்க்கும் மேலானவனாகிய அளவில்லாத புகழுடைய சிவபெருமான்  யாவர்க்கும் கீழான அடியேனை எவரும் பெற்று அறியாத இன்பத்துள் வைத்தான். என்னுடைய எம்பெருமானே! அங்ஙனம் என்னை வைத்த உனக்குக் கைம்மாறாகச் செய்யும் உபகாரம் ஒன்றையும் அறியேன்.

9

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்ததேவரும் காணாச் சிவபெருமான்- மாவேறிவையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்கமெய்யகத்தே இன்பம் மிகும்.
சொற்பிரிப்பு
மூவரும் முப்பத்து மூவரும், மற்று ஒழிந்ததேவரும், காணாச் சிவபெருமான் - மாஏறி,வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்கமெய்யகத்தே இன்பம் மிகும்.
உரை

பிரமன், திருமால், உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளும் ஏனைய முப்பத்து  முக்கோடி தேவர்களும் மற்றைய தேவர்களும் எளிதில் காண முடியாத சிவபெருமான், குதிரையின்மீது ஏறிக்கொண்டு இவ்வுலகத்தில் வந்து இறங்கினான் அவனுடைய திருவடிகளை வணங்க என்னுடலில் பேரின்பம் ஊற்றெடுத்துப் பெருகியது.

10

இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம்- தருங்காண்பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்மருந்துருவாய் என்மனத்தே வந்து.
சொற்பிரிப்பு
இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்துஇருந்து, இரந்துகொள், நெஞ்சே ! எல்லாம் - தரும்காண்பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்மருந்து உருவாய், என் மனத்தே, வந்து.
உரை

திருப்பெருந்துறையில் உறைகின்ற பேரருளாளன் எம் சிவபெருமான். அவன்  அமுத வடிவமாய் என் உள்ளத்தே வந்திருந்து என்னை ஆட்கொண்டு அருளினான்.  அவனது திருவடிகள் இரண்டையுமே இடைவிடாது நெஞ்சமே நீ நினைந்திரு. உனக்கு  வேண்டிய எல்லாவற்றையும் அவன் தருவான். ஆதலால் அவனது திருவடிகளையே  எப்போதும் நினைத்திருக்க அவனிடம் இருந்து கேட்டு அவற்றைப் பெற்றுக் கொள்வாயாக.

11

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்பமைத்துச்சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையேஊராகக் கொண்டான் உவந்து.
சொற்பிரிப்பு
இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும்துன்பம் தொடர்வு அறுத்துச் சோதி ஆய் - அன்பு அமைத்துசீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையேஊர் ஆகக் கொண்டான், உவந்து.
உரை

திருப்பெருந்துறையான் ஆனந்தம் பெருகச் செய்து அஞ்ஞான இருளை அகற்றித்  துன்பத்தை வேரறுத்துப் பிறவிப்பிணிக்கு மருந்து வடிவாக என் மனத்துள் எழுந்தருளி அவனது அன்பையும் எனக்கு அருள் செய்து, என் மனத்தையே தனக்குத் திருக்கோயிலாகக் கொண்டான்.