திருமுறை 8 · 8.043 · 10

திருவார்த்தை

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதிகோதில் பரங்கருணையடியார் குலாவு நீதி குண மாகநல்கும்போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்துஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வார் எம்பிரானாவாரே.
சொற்பிரிப்பு
மாது இவர் பாகன், மறை பயின்ற வாசகன், மா மலர் மேய சோதி ,கோது இல் பரம் கருணை, அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும்,போது அலர் சோலைப் பெருந்துறை, எம் புண்ணியன், மண்ணிடை வந்திழிந்து,ஆதிப் பிரமம் வெளிப் படுத்த அருள் அறிவார் - எம்பிரான் ஆவாரே.
உரை

நம் பரமசிவம் மாதொரு பாகத்தன்; வேத மந்திரங்களையே மொழியாகக் கொண்டவன்; இதய மலரில் வீற்றருளும் ஒளியானவன்; குற்றமற்ற அருள் வடிவானவன்; அடியார் கொண்டாடும் நீதியானவன்; நீதியைக் குணமாகக் கொண்டு அருள் புரிபவன்; அரும்புகள் மலர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளிய எம் புண்ணிய  மூர்த்தி; இப்பூமியில் குருநாதனாக வந்து இறங்கிய முதன்மையான சிவ சொரூபம். இத்தகைய சிவபெருமான் அடியேற்குக் காட்டிய திருவருளை உணர்பவர்களே  எமக்குத் தலைவர் ஆவார்.

2

மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன்ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம்திகழும்கோல மணியணி மாடநீடு குலாவு மிடைவை மடநல்லாட்குச்சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே.
சொற்பிரிப்பு
மால், அயன், வானவர் கோனும் வந்து வணங்க, அவர்க்கு அருள் செய்த ஈசன்ஞாலம் - அதனிடை வந்திழிந்து, நல்நெறி காட்டி, நலம் திகழும்கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்குசீலம் மிகக் கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே
உரை

திருமாலும், பிரமனும், தேவர்க்கரசனும் வந்து பணிய, அவர்களுக்கு அருள்புரியும்  நம் இறைவன் உலகத்திடைக் குருவாக இறங்கி வந்து, ஞான நெறியை அறிவுறுத்தினான். அழகு விளங்கும் நல்ல இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களை உடைய  உயர்ந்து விளங்கும் திருவிடைமருதூரில், பெண் அடியவர் ஒருத்திக்கு அவளது ஒழுக்கம்  விளங்கும்படிக் கருணைபுரிந்த தன்மையை அறிய வல்லவர் எம் தலைவராவார்.

3

அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம்பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப்பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்துமணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறி வார் எம்பிரானாவாரே.
சொற்பிரிப்பு
அணிமுடி ஆதி அமரர் கோமான், ஆனந்தக் கூத்தன், அறு சமயம்பணி வகை செய்து, படவு அது ஏறி. பாரொடு விண்ணும் பரவி ஏத்தப்பிணிகெட, நல்கும் பெருந்துறை எம் பேர் அருளாளன், பெண் பால் உகந்துமணி வலை கொண்டு, வான் மீன்விசிறும் வகை அறிவார் - எம்பிரான் ஆவாரே.
உரை

இறைவன் அழகிய சடைமுடி உடைய முதல்வன்; தேவர்களின் தலைவன்; ஆனந்தக் கூத்துடையவன்; அறுவகைச் சமயங்களும் தன்னை வந்து வணங்கும்படிச் செய்கிறான். மண்ணுலகினரும், விண்ணுலகினரும் வாழ்த்தி வழிபட, அவர்களது பிறவிப்  பிணி ஒழியும்படி அருள் செய்யும் பெருந்துறைப் பெருங்கருணையாளன். வலைஞர் மகள்  வலைச்சியாக வந்த உமையம்மையை மணக்க வேண்டித் தோணி ஏறி அழகிய வலை ஏந்தி  பெரிய கெளிற்று மீனை வீசிப் பிடிக்கும் திறத்தை அறியும் தன்மையர் எம் தலைவராவார்.

4

வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்தேட இருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்யஆடல் அமர்ந்த பரிமாஏறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே.
சொற்பிரிப்பு
வேடு உரு ஆகி, மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து, தன்னைத்தேட இருந்த சிவபெருமான், சிந்தனை செய்து, அடியோங்கள் உய்யஆடல் அமர்ந்த பரிமா ஏறி, ஐயன், பெருந்துறை ஆதி, அந்நாள்ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் - எம்பிரான் ஆவாரே.
உரை

மகேந்திர மலையில் இறைவன் வேட்டுவ வடிவம் கொண்டு, தன்பால் இரத்தற்குரிய, மிகுந்த குறைகளை உடைய விண்ணவர் தன்னைத் தேடும்படியாக வீற்றிருந்தருளினான். அடியோங்கள் உய்வதை எண்ணி வலிமை பொருந்திய குதிரையில் ஏறியவன். இத்தகைய தலைவனாகிய திருப்பெருந்துறை முதல்வன் அக்காலத்தில்  மலையில் வேடனாகவும், கடலில் வலைஞனாகவும் , நிலத்தில் குதிரை வீரனாகவும்  எழுந்தருளி அவரவர் வடிவில் அவரவர்களை ஆண்டு கொண்ட தன்மையை  அறிபவரே எம் தலைவராவார்.

5

வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார்பந்தனை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங்கை அதனில்பந்தணை மெல்விர லாட்கருளும் பரிசறி வார்எம் பிரானாவாரே.
சொற்பிரிப்பு
வந்து, இமையோர்கள் வணங்கி ஏத்த, மாக் கருணைக்கடல் ஆய், அடியார்பந்தனை விண்டு அற நல்கும், எங்கள் பரமன், பெருந்துறை ஆதி, அந்நாள்உந்து திரைக் கடலைக் கடந்து, அன்று, ஓங்கு மதில் இலங்கை அதனில்,பந்து அணைமெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் - எம்பிரான் ஆவாரே.
உரை

வானவர்கள் தாம் வாழ்வதற்காகவே இறைவனை வழிபடும் குறையுடைய குணம்  உடையவர்கள். மெய்யடியார்களோ முத்தியினையும் வேண்டாது மெய்யன்பினால்  இறைவனை வழிபட்டுக் கொண்டு இருக்க விரும்பும் நிறையுடைய குணமுடையவர்கள்.  வானவர்கள் தமது பகை விலகி நலம் மிக வேண்டும் என்று பயன் கருதி வழிபாடு செய்ய,  இறைவன் அவர்கள் வேண்டுதலைக் கருதாது உண்மை அடியார்களின் பாச பந்தங்கள்  நீங்கிப் போக, சிவத் தோற்றத்தை அருளுகின்றவன். பெரிய கருணைக் கடலாய் உள்ளவன்  எங்கள் பரமனாகிய திருப்பெருந்துறை முதல்வன். அவன் திரைவீசும் கடலைக் கடந்து  உயர்ந்த மதில் சூழ்ந்த இலங்கையில் பந்து விளையாடும் மெல்லிய விரலை உடைய  வண்டோதரிக்கு அருள் புரிந்த - வேண்டுவார் வேண்டுவதே அருளும் கருணையுடையவன்  என்னும் - வகையறிபவரே எம் தலைவராவார்.

6

வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவ னாய்க்கடி நாய்கள்சூழஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெரு மான்தான் இயங்கு காட்டில்ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதியன்றுகேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே.
சொற்பிரிப்பு
வேவத் திரிபுரம் செற்ற வில்லி, வேடுவன் ஆய்க் கடி நாய்கள் சூழ,ஏவல் - செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான், இயங்கு காட்டில்ஏ உண்ட பன்றிக்கு இரங்கி, ஈசன், எந்தை, பெருந்துறை ஆதி, அன்றுகேவலம் கேழல் ஆய், பால் கொடுத்த கிடப்பு அறிவார் - எம்பிரான் ஆவாரே
உரை

திரிபுரங்களும் வெந்து போகும்படி கோபித்த வில்லாளன் ஆகிய சிவபெருமான் வேட வடிவம் கொண்டான். காவல் நாய்கள் சூழ்ந்து வரத் தாம் ஏவும் பணியைச் செய்யும்  விண்ணவர் முன் செல்ல, எம்பிரான் தாம் செல்லுகின்ற காட்டில் அம்பு தைத்து இறந்த  பன்றிக்கு இரங்கினான். எம் அப்பன், ஆண்டவன், பெருந்துறை முதல்வன் அந்நாளில்  தானே பன்றி வடிவம் எடுத்துப் பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்த திருவுள்ளக் கருத்தை      அறியும் தன்மையரே எம் தலைவராவார்.

7

நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்ஓதிப் பணிந்தலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே.
சொற்பிரிப்பு
நாதம் உடையது ஓர் நல் கமலப் போதினில் நண்ணிய நல் நுதலார்ஓதிப் பணிந்து, அலர் தூவி, ஏத்த, ஒளி வளர் சோதி, எம் ஈசன்; மன்னும்போது அலர் சோலைப் பெருந்துறை எம் புண்ணியன்; மண்ணிடை வந்து தோன்றிப்பேதம் கெடுத்து, அருள் செய்பெருமை அறியவல்லார் - எம்பிரான் ஆவாரே.
உரை

வண்டின் ரீங்கார ஒலியுடைய தாமரை மலரில் அழகிய நெற்றியை உடைய  திருமகளும், கலைமகளும் முறையே திருவாரூரிலும் திருக்கண்டியூரிலும் இறைவனை வழிபட்டு  மாண்ட தத்தம் கணவர்கள் உயிர்பெற்று எழும் வரத்தைப் பெற்றனர். அவர்கள் வாழ்த்தி  வணங்கி மலர்தூவி வழிபடும்படி ஒளி மிகுந்த சோதி வடிவாகி விளங்குகிறான் இறைவன்.  மலர்கள் விரிகின்ற பொழில் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எம் புண்ணிய மூர்த்தி மண்ணுலகத்தே குருவாய்த் தோன்றி அருளினான். சீவன் (ஆன்மா) சிற்றறிவும்  சிறுதொழிலும் மலபந்தமும் உடையவன்; சிவன் முற்றறிவும் அருட்செயலும் அளவிலாத  ஆற்றலும் இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய தன்மையும் உடையவன். சிவனுக்கும்  சீவனுக்கும் உள்ள இந்த வேற்றுமைகளை நீக்கி, அடியோமுக்கு அருள் செய்தான். நிறைவாய் விளங்க  அருள் செய்கின்ற அவன் பெருமையை அறிய வல்லவரே எம் தலைவராவார்.

8

பூவலர் கொன்றையம் மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன்மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே.
சொற்பிரிப்பு
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன், போர் உகிர் வன் புலி கொன்ற வீரன்மாது நல்லாள், உமை மங்கை பங்கன், வண் பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்ஏது இல் பெரும் புகழ் எங்கள் ஈசன், இரும் கடல் வாணற்குத் தீயில் தோன்றும்ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் - எம்பிரான் ஆவாரே.
உரை

அழகிய கொன்றைப் பூவினாலாகிய மாலையணிந்த மார்பை உடையவன்; போர் செய்வதற்குரிய நகங்கள் கொண்ட, வல்லமை மிக்க புலியைக் கொன்ற வீரன்; உமை நங்கை பாகன்;  வளம் மிக்க சோலைகள் சூழ்ந்த அழகிய திருப்பெருந்துறை மன்னன். குற்றமற்ற பெரும் புகழுடையவன் எம் இறைவன். பெரிய கடலரசனுக்கு நெருப்பில் தோன்றிய சித்திரம் போன்ற அழகிய நங்கையான  உமாதேவியின் தோள்களைப் புணரும் அவன் திருவுருவை அறிபவரே எம் தலைவராவார்.

9

தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்துதேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை யாளிஅன்றுகாதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக்கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே.
சொற்பிரிப்பு
தூவெள்ளை நீறு அணி எம்பெருமான், சோதி மகேந்திர நாதன், வந்துதேவர் தொழும் பதம் வைத்த ஈசன், தென்னன், பெருந்துறை ஆளி, அன்றுகாதல் பெருகக் கருணைகாட்டித் தன் கழல் காட்டிக் கசிந்து உருகக்கேதம் கெடுத்து, என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் - எம்பிரான் ஆவாரே.
உரை

தூய வெண்மையான திருநீற்றையணிந்த எம் பெருமான், ஒளி வடிவான மகேந்திர  மலையின் தலைவனாவான். தாமே வலிய வந்து தேவர்கள் தொழும் திருவடி என் தலைமீது  சூட்டிய ஈசன், பாண்டியன்; திருப்பெருந்துறையைத் தலைநகராகக் கொண்டு ஆள்பவன்.  அவன் குருநாதனாக எழுந்தருளிய அந்நாளில், எனக்கு அன்பு மிகும்படி அருள்காட்டித் தன்  திருவடியையும் காட்டி அருளினான். உள்ளம் கசிந்து உருகும்படி என் துன்பங்களைக் கெடுத்து என்னை ஆண்டருளும் திருவுள்ளக் கருத்தை அறிபவரே எம் தலைவராவார்.

10

அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்தஎங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச்சங்கங் கவர்ந்து வண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை யாளிஅன்றுமங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே.
சொற்பிரிப்பு
அம்-கணன் எங்கள் அமரர் பெம்மான், அடியார்க்கு அமுதன், அவனி வந்தஎங்கள் பிரான், இரும் பாசம் தீர இக-பரம் ஆயது ஓர் இன்பம் எய்தச்சங்கம் கவர்ந்து, வண் சாத்தினோடும், சதுரன், பெருந்துறை ஆளி, அன்றுமங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகை அறிவார் - எம்பிரான் ஆவாரே.
உரை

எங்கள் பெருமான் அழகிய அருட்கண்களை உடையவன். விண்ணவர் தலைவன், அடியார்களுக்குச் சாவா மருந்தானவன். இந்நிலவுலகில் குருவாகி வந்த எங்கள் பெருமான் மிக்க திறமையை உடையவன். திருப்பெருந்துறை மன்னன். அவன் அடியார்களது வலிமை மிக்க மும்மலப் பற்று நீங்கவும், இம்மை மறுமையில் பேரின்பம் அடையும் பொருட்டும்  அந்நாளில் சங்கினாலாகிய வளையல்களை எடுத்துக் கொண்டு வளையல் விற்பதற்குப் பெண்கள் நிறைந்த மதுரையம்பதி அடைந்த விதத்தை அறிய வல்லவர் எம் தலைவராவார்.