திருமுறை 8 · 8.042 · 10

சென்னிப்பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான்யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான்தூயமாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிச் சுடருமே.
சொற்பிரிப்பு
தேவதேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன்,மூவராலும் அறி ஒணா, முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான்,யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறி ஒணா மலர்ச் சோதியான்தூய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னிச் சுடருமே!
உரை

விண்ணவர்கள் அனைவர்க்கும் தலைவன்; மெய்யான வீரன்; அழகிய திருப்பெருந்துறைத் தலைவன்;  பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் படைத்தல், காத்தல், அழித்தல் செய்யும் பொருட்டு இறைவனால்  நியமிக்கப் பெற்ற சகல வருக்க ஆன்மாக்கள் ஆவர். அவர்களாலும் அறியக்கூடாத ஆதியான பேரின்ப வடிவினன்.  சிவாகம விதிப்படிச் சிவ அநுபூதிமானாகிய ஆசாரியன் இருந்து காட்டி உபதேசிக்க அங்ஙனம் முறைமையில்  நிற்கும் மெய்யன்பர்களையன்றி, பிறர் எவராலும் அறிய முடியாத இதயத் தாமரையில் விளங்கும் ஒளி வடிவினன்.  அவனது பெருமைமிக்க தாமரை போலும் திருவடிகள் நமது தலையின் மீது நிலைபெற்று விளங்குவதாம்.

2

அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன்மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன்வட்ட மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே.
சொற்பிரிப்பு
அட்டமூர்த்தி, அழகன், இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான்,சிட்டன், மெய்ச் சிவலோக நாயகன், தென் பெருந்துறைச் சேவகன்,மட்டு வார் குழல் மங்கை யாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன்வட்ட மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே !
உரை

திருப்பெருந்துறைப் பெருமான் மண், புனல், கனல், கால், வளி, சூரியன், சந்திரன் , இயமானன் என்னும் எட்டு வடிவங்களை உடைய அழகன், இனிய அமுதமான பேரின்பப் பெருக்குடைய பெரியோன். சிவலோகத் தலைவனாகிய மெய்ப்பொருள். தேன் மணம் கமழும் நீண்ட கூந்தலையுடைய உமையம்மையைத் தன் இடப்பாகத்தில் வைத்த அழகன். அவனது வட்டவடிவமான தாமரை மலர் போலும் செய்ய பாதங்கள் நமது தலை மீது  நிலைபெற்று விளங்குவதாக.

3

நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன்மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே.
சொற்பிரிப்பு
நங்கை மீர்! எனை நோக்குமின்; நங்கள் நாதன், நம் பணி கொண்டவன்,தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன், நாயகன் ,மங்கைமார் கையில் வளையும் கொண்டு, எம் உயிரும் கொண்டு, எம் பணி கொள்வான்பொங்கு மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னிப் பொலியுமே !
உரை

பெண்களே! என்னைப் பாருங்கள்! நம் தலைவன் கங்கையை அணியாகக்  கொண்டவன். தென்னஞ்சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருந்த வீர முதல்வன். பெண்டீர் கைகளிலுள்ள வளையல்களைப் பறித்துக் கொண்டு, எம் உயிரையும்  கவர்ந்து கொள்வான். எம் பணிவிடைகளை ஏற்றுக் கொள்ளுவான். அவனது விளங்குகின்ற  தாமரை மலர்ப் பாதங்கள் நமது தலைமீது நிலைபெற்று விளங்குவதாக.

4

பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்எத்தனாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.
சொற்பிரிப்பு
பத்தர் சூழப் பரா-பரன் பாரில் வந்து, பார்ப்பான் எனச்சித்தர் சூழச் சிவபிரான், தில்லை மூதூர் நடம் செய்வான்,எத்தன் ஆகி வந்து, இல் புகுந்து, எமை ஆளுங் கொண்டு, எம் பணி கொள்வான்வைத்த மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே !
உரை

பராபரனாகிய சிவபெருமான் அடியவர் புடை சூழ அந்தணர் வடிவுடன் திருப்பெருந்துறையில் ஆசாரியனாக எழுந்தருளினான் . ஞானிகள் சூழ்ந்திருக்கத்  தில்லையம்பதியில் சபையிலே கூத்தியற்றுவான்; சாமர்த்தியம் உடையவனாகி எழுந்தருளி  எம் உள்ளத்தினுள் புகுந்து எம்மை அடிமையாக்கி எம் பணிவிடையை ஏற்றுக் கொள்ளுவான்.  அவ்விறைவனது திருவடித் தாமரை மலர்கள் நமது தலைமீது நிலைபெற்று விளங்குவதாக.

5

மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்தி டா வகை நல்கினான்வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான்காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டியசேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே.
சொற்பிரிப்பு
மாய வாழ்க்கையை, மெய் என்று எண்ணி, மதித்திடாவகை நல்கினான் ;வேய தோள் உமை பங்கன், எங்கள் திருப்பெருந் துறை மேவினான்;காயத்துள் அமுது ஊற ஊற, 'நீ கண்டு கொள்' என்று காட்டியசேய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னித் திகழுமே !
உரை

மூங்கிலை ஒத்த தோள்களையுடைய உமைபாகன் திருப்பெருந்துறையில் விரும்பி வீற்றிருப்பவன். பொய்யான வாழ்வை மெய்யெனக்கருதா வண்ணம் ஞானத்தை எனக்களித்தான்.  உடலில் ஆனந்த அமுதம் பொங்கிச் சுரக்கப் பேரின்ப நிலையை நீ அறிந்து கொள்ளுவாயென  அடையாளம் காட்டினான். அத்தகைய செம்மையான திருவடித் தாமரை மலர்கள் நமது தலைமீது  பொருந்தி விளங்குவனவாம்.

6

சித்தமே புகுந் தெம்மையாட் கொண்டு தீவி னை கெடுத் துய்யலாம்பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும்அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.
சொற்பிரிப்பு
சித்தமே புகுந்து, எம்மை ஆட்கொண்டு, தீவினை கெடுத்து, உய்யல் ஆம்பத்தி தந்து, தன் பொன் கழல்கணே பன் மலர் கொய்து சாத்தலும்முத்தி தந்து, இந்த மூ-உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும்அத்தன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே !
உரை

எமது மனத்துள் தாமே வலிய வந்து புகுந்து எமை ஆட்கொண்டான் சிவபெருமான். முன்பு யான் செய்த தீவினைகள் எல்லாம் கெட்டு ஒழிந்து யான் வாழ்வு  பெறும் வண்ணம் அவன்பால் வைக்கத் தக்கதாகிய அன்பினைத் தந்து அருளினான்.  அவ்வன்பினால் அவன் திருவடிகளில் நாம் பல மலர்கள் அருச்சனை செய்து  வழிபடுகின்றோம். அங்ஙனம் செய்த சாதாரணமான செயலுக்கு, மண், விண், பாதாளம்  எனும் மாயா காரிய உலகுகளுக்கு அப்பாலானதும், கிரியையும் யோகமும் கலந்த நெறியாய்  ஞானத்திற்கு வாயிலான பூசை செய்த ஞானிகள் அடைவதும் ஆன பேரின்பமாகிய  முத்தியை எனக்கு நல்கினான். அத்தகைய தலைவனாகிய சிவபெருமானுடைய திருவடித்  தாமரைகள் நம் தலைமீது நிலைபெற்று விளங்குவதாக.

7

பிறவி யென்னுமிக் கடலைநீந் தத்தன் பேர ருள்தந் தருளினான்அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல்உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே.
சொற்பிரிப்பு
பிறவி என்னும் இக் கடலை நீந்தத் தன் பேர்-அருள் தந்தருளினான்அறவை என்று அடியார்கள் - தங்கள் அருள் குழாம் புகவிட்டு, நல்உறவு செய்து, எனை உய்யக் கொண்ட பிரான் - தன் உண்மைப் பெருக்கம் ஆம்திறமை காட்டிய சேவடிக்கண், நம் சென்னி மன்னித் திகழுமே!
உரை

பிறவியெனும் இக்கடலை நீந்தி முத்தியாகிய கரைசேர்வதற்குத் தனது திருவருள்  என்னும் தெப்பத்தைத் தந்தருளினான் சிவபெருமான். என்னை ஆதரவற்றவன் எனக் கருதி  அடியார்களின் அருட்கூட்டத்தில் புகுவித்தான். அவர்களை எனக்குச் சுற்றத்தாராக்கி நான் உய்யும்படி ஆட்கொண்டான். அத்தகைய வள்ளலின் மெய்யான சிறந்த திறமைகளைக் காட்டியருளிய சேவடிகள் நம் தலைமீது பொருந்தி விளங்குவனவாகுக.

8

புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய்த னையொழி வித்திடும்எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்றுதொழுத கையின ராகித் தூமலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்குவழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே.
சொற்பிரிப்பு
புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய் தனை ஒழிவித்திடும்எழில் கொள் சோதி, எம் ஈசன், எம்பிரான், என்னுடை அப்பன்' என்று என்றுதொழுத கையினர் ஆகித் தூ மலர்க் கண்கள் நீர் மல்கும் தொண்டர்க்குவழு இலா மலர்ச் சேவடிக்கண், நம்சென்னி மன்னி, மலருமே !
உரை

புழுக்களினால் பொதியப்பெற்ற இவ்வுடலில் பொருந்தி நிற்கும் நிலையாத வாழ்வை நீக்கி விடும் அழகிய சோதி! எம் ஈசா! எம்பிரானே! என் அப்பனே! - என்று  சொல்லிச் சொல்லி, மலர்களைத் தூவித் தொழுகின்ற கைகளை உடையவர்களாய், கண்ணீர் பெருக நின்றனர் அடியவர்கள். அவர்களுக்குத் தவறாது நலம் பயக்கும் திருவடித் தாமரைகள் நம் தலைமீது பொருந்தி விளங்குவனவாம்.

9

வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும்உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்த னாய் நின்ற எம்பிரான்அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்கட் கின்பந் தழைந்திடுஞ்செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே.
சொற்பிரிப்பு
வம்பனாய்த் திரிவேனை 'வா' என்று வல்வினைப் பகை மாய்த்திடும்உம்பரான் உலகு ஊடு அறுத்து அப் புறத்தன் ஆய் நின்ற எம்பிரான்அன்பர் ஆன வர்க்கு அருளி, மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும்செம் பொன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னித் திகழுமே !
உரை

நிலையில்லாதவற்றை நிலையென நினைத்து, புல்லறிவாளனாய் வீணாய்த் திரிந்த என்னைக் கருணையால் குருவான திருமேனி கொண்டு எழுந்தருளித் திருநோக்கம் செய்து      'வா' என்று அழைத்து, எல்லா வினைகளுக்கும் காரணமான எனது வலிமையான ஆணவ  மலத்தை அழிக்கின்ற வானவன் சிவபெருமான். அவன் எல்லாத் தேவர் உலகங்களையும் கடந்து அவற்றுக்கு அப்பாலும் நின்ற எம் தலைவன். அவன், மனத்தால் அன்பு செலுத்தி வழிபடும் தனது அன்பர்களுக்கு அருள் செய்பவன். மனத்தால் தன்னை வழிபட்டும், உடலால் உயிர்களுக்குத் தொண்டு செய்தும் வாழ்வோராகிய மெய்யடியார்களுக்கு         அவர்கள் உள்ளத்தில் நின்று மேன்மேலும் பேரின்பத்தைத் தழைக்கச் செய்பவன்.  அத்தகைய பெருமானது செம்பொன் நிறமான திருவடித் தாமரைகள் எமது சென்னியின் மீது  நிலைபெற்று விளங்குவனவாம்.

10

முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தினைச்சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம் பாடித் திரிதரும்பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந் தீரப் பணிமினோசித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே.
சொற்பிரிப்பு
முத்தனை, முதல் சோதியை, முக்கண் அப்பனை, முதல் வித்தினை,சித்தனை, சிவலோகனை, திரு-நாமம் பாடித் திரிதரும்பத்தர்காள்! இங்கே, வம்மின், நீர்; உங்கள் பாசம் தீரப் பணிமினோ;சித்தம் ஆர் தரும் சேவடிக்கண், நம் சென்னி மன்னித் திகழுமே !
உரை

இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனும் சூரியன், சந்திரன், அக்கினி  என்னும் ஒளிப் பொருட்களுக்கு எல்லாம் ஒளி வழங்கும் ஆதியான ஒளியானவனும்  சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மூன்றையும் மூன்று கண்களாக உடையவனும் எல்லாப்  பொருட்களும் தோன்றுதற்கு முதலான இடமாக (வித்தாக) விளங்குபவனும் ஞான  வடிவானவனும் ஆக இருப்பவன் சிவபெருமான் ஆவான். இங்ஙனம் மனம், மொழிகளைக்  கடந்து நிற்கும் பெரியவனாயினும், எம் போன்றோர் கண்டு வாழச் சிவலோகம் எனப் பெறும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ளான் அச்சிவபிரான். அத்தகைய பெருமானுடைய  திருப்பெயர்களை இடைவிடாது துதிக்கும் சீரடியார்களே! விரைந்து இங்கே வாருங்கள்.  அவனை உங்களது பந்தங்கள் நீங்கும் பொருட்டு வணங்குங்கள். அங்ஙனம் வணங்கினால்  உள்ளத்தில் நிறைந்த அவனது சிவந்த திருவடிகள் நம் தலைமீது நிலை பெற்று விளங்கும். இது உறுதி.