திருமுறை 8 · 8.041 · 10

அற்புதப்பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத்தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமேபொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யிணைகாட்டிமெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே.
சொற்பிரிப்பு
மையல் ஆய், இந்த மண்ணிடை வாழ்வு என்னும் ஆழியுள் அகப்பட்டுத்தையலார் எனும் சுழித்தலைப் பட்டு, நான் தலை தடுமாறாமே,பொய் எலாம் விடத் திருவருள் தந்து, தன் பொன் அடி-இணை காட்டிமெய்யன் ஆய், வெளி காட்டி, முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே.
உரை

இப்பூமியில் மயக்க உணர்ச்சி உடையவனாய், உலக வாழ்வு என்னும் கடலில் அகப்பட்டு, பெண்கள் என்னும் சுழியில் சிக்கி, நான் நிலை கெட்டுப் போகாதபடி  தடுத்தாட்கொண்டான் சிவபெருமான். அதனால் நிலையற்ற பொருட்களின் மேல் வைத்த  பற்று எல்லாம் ஒழிந்தன. அவன் திருமேனி தாங்கி வந்து பரவெளியாகிய ஞானாகாயத்தைக்  காட்டித் தனது பொன் போன்ற திருவடிகளையும் காட்டினான். முன்னே மானுட வடிவில்  வெளிப்பட்டு நின்றதாகிய ஒப்பற்ற அதிசயச் செயலின் பெருமையை யான் சொல்ல  வல்லேன் அல்லன்.

2

ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதேசாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப்போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலிணைகாட்டிவேந்த னாய் வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே.
சொற்பிரிப்பு
ஏய்ந்த மாமலர் இட்டு, முட்டாதது ஓர் இயல் பொடும் வணங்காதே,சாந்தம் ஆர் முலைத் தையல் நல்லாரொடும் தலை தடு மாறு ஆகிபோந்து, யான் துயர் புகா வணம் அருள் செய்து, பொன் கழல் இணை காட்டி,வேந்தன் ஆய், வெளியே, என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே!
உரை

சிவாகம முறைப்படி நால்வகை மலரால் நியமம் தவறாது அன்பு விதியோடும்  அருட்பணியாகிய பூசனையை இடையீறின்றிச் செய்வதற்கு அருள் புரிந்தாய். சந்தனச் சாந்தணிந்துள்ள தனங்களை உடைய பெண்களோடு கூடித் தலை தடுமாறிச் சென்று, நான்  துன்பக் கடலில் புகாத வண்ணம் தடுத்தாட்கொண்டாய். உன் பொன்னடிகளை எனக்குக்  காட்டி, இராசனைப் போல வடிவு கொண்டு எழுந்தருளி என் கண் காண என் முன் நின்றதாகிய ஒப்பற்ற அற்புதத்தை யான் சொல்லவல்லேன் அல்லன்.

3

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக்கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனைஅடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே.
சொற்பிரிப்பு
நடித்து, மண்ணிடை பொய்யினைப் பல செய்து "நான், எனது' எனும் மாயம்கடித்த வாயிலே நின்று முன் வினை மிகக் கழறியே திரிவேனைப்பிடித்து, முன் நின்று, அப் பெரு மறை தேடிய அரும் பொருள், அடியேனைஅடித்து அடித்து, அக்காரமும் தீற்றிய அற்புதம் அறியேனே !
உரை

இப்பூமியில் யான் பொய்யான வாழ்வுகள் பலசெய்து மெய்யடியார் போல  நடித்தேன். 'நான்', 'எனது' என்னும் பற்றுகளாகிய பாம்புகள் என்னைக் கடித்த பொழுது,  என் பழவினைகளால் இது நேர்ந்தது என்று பேசிக் கொண்டு திரிந்து வந்தேன். ஆனால் இறைவனாகிய சிவபெருமானோ, அவ்வாறு நான் ஆழ்ந்து போகாத வண்ணம் என்னைப்  பிடித்து, என் முன்னே குருவாக மானுட வடிவம் தாங்கி நின்று திருவருள் அமுதத்தை  எனக்கு ஊட்டி நின்றான். இந்த அற்புதத்தை யான் சொல்ல வல்லேன் அல்லன்.

4

பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க்கருங் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடும் அகலாதேஅருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.
சொற்பிரிப்பு
பொருந்தும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது பொய்களே புகன்று போய்கரும்குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப் பேனைத்திருந்து சேவடிச் சிலம்பு-அவை சிலம்பிடத் திருவொடும் அகலாதேஅரும் துணைவன் ஆய், ஆண்டு கொண்டு, அருளிய அற்புதம் அறியேனே !
உரை

நான் செய்த வினைகளுக்கு ஏற்பத் தொடர்ச்சியாக வந்து என்னைப் பொருந்தும்  பிறப்பு, இறப்பு என்னும் நிலைகளைப் பற்றி நான் நினைக்கவேயில்லை. பொய்யான  இவ்வுலக இன்பங்களையே விரும்பினேன். கருங்கூந்தலையுடைய பெண்களின் நஞ்சு  தோய்ந்த வேல் போன்ற கண்களால் நான் தாக்கப்பட்டுக் கிடந்தேன் . இத்தகைய என்னையும் அவன் தனது திருந்திய சிலம்பு பொருந்திய சேவடிகளில் உள்ள சிலம்புகள்  ஒலி எழுப்பிட, உமையம்மையோடு சேர்ந்து வந்து ஆட்கொண்டருளினான். இந்த  அற்புதத்தை யான் சொல்ல வல்லேன் அல்லன்.

5

மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனைவீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டிஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே.
சொற்பிரிப்பு
மாடும், சுற்றமும், மற்று உள போகமும், மங்கையர் தம்மோடும்கூடி, அங்குள குணங்களால் ஏறுண்டு, குலாவியே திரிவேனைவீடு தந்து, என்-தன் வெம் தொழில் வீட்டிட, மென் மலர்க் கழல் காட்டிஆடு வித்து, எனது அகம் புகுந்து, ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே !
உரை

செல்வமும் சுற்றமும் ஏனைய போகப் பொருள்களும் ஆகிய இன்பங்களைப்  பெண்களோடு அடைந்து, அங்குள்ள இன்பங்களால் தாக்குண்டு குலாவித் திரிந்தேன்.  சிவபெருமான் இத்தகைய என்னை, மெல்லிய மலர்களை ஒத்திருக்கும் திருவடிகளைக்  காட்டி, எனது தீய தொழில்களை அழியச் செய்தான். என்னைப் பரவசமாய் ஆடச்செய்தான்.  என் நெஞ்சமே கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான். உயர்ந்த வீட்டின்பத்தைத் தந்து  ஆண்டருளிய ஒப்பற்ற அற்புதத்தை யான் எவ்வாறு சொல்வேன்?

6

வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும்பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக்குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடிஅணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.
சொற்பிரிப்பு
வணங்கும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, மங்கையர் - தம்மோடும்பிணைந்து, வாய் இதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி, நான் பித்தனாய்த் திரிவேனைக்குணங்களும், குறிகளும், இலாக் குணக் கடல் கோமளத் தொடும் கூடிஅணைந்து வந்து, எனை ஆண்டு கொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!
உரை

நாம் பிறப்பு இறப்பு என்னும் மக்கட்பிறவி எடுத்தது கடவுளை வணங்கி முத்தி  இன்பம் பெறும் பொருட்டேயாம். இந்த நோக்கத்தை யான் மறந்து மாதர் வாய் எச்சில்  வெள்ளத்தில் அழுந்த இருந்தேன். அவ்வாறு பித்தனாகித் திரிகின்ற நிலைக்குப்  போகவிடாமல் தடுத்து ஆட்கொண்டான் எம்பெருமான். இறைவன் குணங்களுக்கெல்லாம்  ஒரு கடல் போல்பவன். சுட்டறிவால் உணரத்தக்க குணங்களும் அடையாளங்களும்  இல்லாத குணமேயான கடலாகிய சிவபெருமான் அழகே வடிவாய் தமக்கென வேறு  வடிவின்றித் தன்னோடு ஒன்றி நிற்கும் பராசக்தியோடு சேர்ந்து வந்து அடியேனை  ஆட்கொண்டருளிய அற்புதத்தை யான் அறியேன்; எவ்வாறு புகல்வேன்?

7

இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித்தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள்மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டிஅப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.
சொற்பிரிப்பு
இப்பிறப்பினில், இணை மலர் கொய்து, நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதித்தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது, நான் தட முலையார் தங்கள்மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை, மலர் அடி இணை காட்டி,அப்பன், என்னை, வந்து, ஆண்டு கொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!
உரை

(மேல் பாட்டில் பிறவி எடுத்ததின் பயன் சிவபெருமானை வணங்குதல் என்று கூறியவர், எவ்வாறு வணங்க வேண்டும் என்று சற்று விரிவாக இப்பாட்டில் கூறுகின்றார் )  எனக்குக் கிடைத்த இந்த மானுடப் பிறவியிலேயே நான் சிவனை முறையாக வணங்க வேண்டும்.  ஆதலால் அவனை அருச்சிப்பதற்குப் பொருத்தமான புட்ப விதிகளில் கூறிய பூக்களைக் கொய்ய  வேண்டிய முறைப்படி நீராடித் தோய்ந்து உலர்ந்த ஆடை உடுத்து வாய் பேசாமல்  திருவைந்தெழுத்தைத் தியானித்துக் கொண்டே கொய்து, அருச்சிக்கும்போது  பூக்களை வீசி எறிதலும், மேனியில் மேல் எறிதலும் இல்லாது திருவடிகளுக்கு இட்டு  வணங்குதல் வேண்டும். யான் அவ்வாறு செய்யாது பருத்த தனங்களை உடைய பெண்களின்  கருமை தவழும் கண்களால் தாக்குண்டு நொந்து கிடந்தேன். அது சமயம், எம்பெருமான்  வலிய வந்து தனது குஞ்சித சேவடியைக் காட்டி என்னை ஆண்டு கொண்டு அருளினான். இந்த அற்புதத்தை இன்னதென்று உரைக்க என்னால் முடியவில்லை.

8

ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னைஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளியாக்கிப்பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால்ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே.
சொற்பிரிப்பு
ஊசல் ஆட்டும் இவ்வுடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து, என்னை ,ஓசையால் உணர்வார்க்கு உணர்வு - அரியவன், உணர்வு தந்து, ஒளி ஆக்கிப்பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம்பெருங் கருணையால்ஆசை தீர்த்து, அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே!
உரை

சிவபெருமான், ஓசை ஒலி வடிவாய வேதங்களைத் துணையாகக் கொண்டு, தம்மை ஒருவாறு உணர முற்படுவார்க்கும் உணர முடியாதவன். உடலையும் உயிரையும் ஊசலாட்டுகின்ற  நல்வினை தீவினை என்கின்ற இருவினைகளையும் என்னிடம் இருந்து அறுத்து நீக்கி விட்டான்.  சிவஞானத்தையும் எனக்கு நல்கினான். அதனால் நான் அறியாமை நீங்கி அறிவு வடிவம் ஆனேன். (ஒளியாக்கி) அங்ஙனம் அறிவு வடிவம் ஆனதின் பயன் எனது உலகியல் ஆசையும் நீங்கியது.  தனது மேலான கருணையால் மெய்யடியார்களின் திருவடிகளிலேயே என்றும் நான் தோயும்  வண்ணம் பூட்டி வைத்தான். இந்த அற்புதத்தை எங்ஙனம் நான் சொல்வேன் ?

9

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போலஇச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனைஇச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டிஅச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.
சொற்பிரிப்பு
பொச்சை ஆன இப் பிறவியில் கிடந்து, தான், புழுத்து அலைநாய் போலஇச்சை ஆயின ஏழையர்க்கே செய்து, அங்கு இணங்கியே திரிவேனை,இச்சகத்து, அரி, அயனும் எட்டாத, தன் விரை மலர்க் கழல் காட்டிஅச்சன், என்னையும் ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே !
உரை

பிறவி என்கின்ற காட்டில் சிக்கிக் கிடந்து, வினைப் போகத்தில் ஆழ்ந்திருந்தேன். பெண்களுக்கு விருப்பமானவற்றையே செய்து, அவர்களிடத்தேயே இணங்கிப் புழுத்து  அலைகின்ற நாய் போன்று அடியேன் திரிந்து வந்தேன். அப்போது திருமாலுக்கும்  பிரமனுக்கும் காணுதற்கெட்டாத என் தந்தையாகிய சிவபெருமான் தனது தெய்வ மணம்  கமழுகின்ற திருவடிகளைக் காட்டி என்னை ஆட்கொண்டு அருளினான். இந்த அற்புதத்தை  யான் எவ்வண்ணம் சொல்வேன் ?

10

செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங்கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனைஇறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டிஅறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே.
சொற்பிரிப்பு
செறியும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, செறி குழலார் செய்யும்கிறியும், கீழ்மையும், கெண்டை அம் கண்களும், உன்னியே கிடப்பேனை ,இறைவன், எம்பிரான், எல்லை இல்லாத தன் இணை மலர்க் கழல் காட்டிஅறிவு தந்து, எனை ஆண்டு கொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!
உரை

இறைவன் திருவடியில் சேர்வதற்குக் காரணமாக இப்பிறப்பும் இறப்பும் உதவப்  பெற்றன என்பதை யான் உணராத நிலையில், அடர்ந்த கூந்தலை உடைய பெண்கள் செய்கின்ற வஞ்சனை, கீழான செயல்கள், அவர்களின் கெண்டை மீன் போன்ற கண்கள்  இவற்றையே எண்ணிக் கிடந்து அலைந்தேன். எல்லா உயிர்களுக்கும் இறைவனும் என்  தலைவனுமாகிய சிவபெருமான் தனது கருணையால் அவை நிலையற்றவை எனக் காட்டி,  திருவடியே நிலையான பேரின்பம் என அருளி, சிவஞானத்தையும் உதவி என்னை ஆண்டு கொண்ட இந்த அற்புதத்தை யான் எவ்வாறு கூறுவேன்?