திருமுறை 8 · 8.040 · 10

குலாப் பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்துதேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்துகூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
சொற்பிரிப்பு
ஓடும், கவந்தியுமே, உறவு' என்றிட்டு உள் கசிந்து;தேடும் பொருளும் சிவன் கழலே எனத் தெளிந்து ;கூடும், உயிரும், குமண்டையிடக் குனித்து; அடியேன்ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே
உரை

அயலார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்ணத் திருவோடும், பிறர்கண்டு  நாணாதிருக்கக் கோவணமும் உறவாகக் கொண்டு மனம் கசிந்தேன். வேறு எதனையும்  எவரையும் உறவாகக் கொண்டிலேன். உள்ளம் உருகித் தேடுகின்ற பொருள் சிவனது  திருவடியே என்று தெளிந்தேன். விளங்குகின்ற தில்லை ஆண்டவனைப் பற்றிக் கொண்டு  என் உயிரும் அதன் கூடாகிய உடலும் ஆனந்தத்தில் நிறைந்து யானும் வளைந்து கூத்தாடுவேன்.

2

துடியேர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால்செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும்முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்தஅடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
சொற்பிரிப்பு
துடி ஏர் இடுகு இடைத் தூய் மொழியார் தோள் நசையால்செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும்முடியேன்; பிறவேன்; எனைத் தன தாள் முயங்குவித்தஅடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே
உரை

என்னைத் தனது திருவடியின் கண் கலப்பித்து இன்புறச் செய்த விளக்கமிக்க தில்லையாண்டவனை அடியேன் பற்றினேன். ஆதலால் உடுக்கையொத்த இடையும்  தூயமொழியும் உடைய மாதர்களின் தோள்கள் மீதுள்ள விருப்பத்தால் பாவமிகுவதற்குக்  காரணமான தீச்செயல்கள் எத்தனை முன்பு செய்திருந்தாலும் இனி நான் பிறக்கவும்  மாட்டேன், இறக்கவும் மாட்டேன்.

3

என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத்துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்துமுன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுந்தஅன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
சொற்பிரிப்பு
என்பு உள் உருக்கி, இரு வினையை ஈடு அழித்துதுன்பம் களைந்து, துவந்துவங்கள் தூய்மை செய்து,முன்பு உள்ளவற்றை முழுது அழிய, உள் புகுந்தஅன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே
உரை

அடியேன் சிவன்பால் செய்த அன்பு காரணமாக அவன் சஞ்சிதம், ஆகாமியம் இருவினைகள் மிகாதவாறு வலியடக்கினான். அவற்றால் வரும் துன்பங்களையும் களைந்தான். மாயா, கன்ம, மாயேயங்களைப் பிடுங்குவது போல உயிரைவிட்டு  அகலச்செய்து எனது ஆன்மாவைச் சுத்த ஆன்மாவாகச் செய்தான். அவன் என் உள்ளத்தில்  புகுந்து அநாதியே பற்றியுள்ள மலங்கள் அனைத்தையும் முழுதும் அழித்தான். இத்தனை பேரருள் செய்த தில்லையாண்டானை அன்றே நான் குலாவுதல் கொண்டேன்

4

குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப்பிரியும் மனத்தார் பிறிவரிய பெற்றியனைச்செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தைஅறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
சொற்பிரிப்பு
குறியும், நெறியும் குணமும், இலார் குழாங்கள்-தமைப்பிறியும் மனத்தார் பிறிவு-அரிய பெற்றியனை;செறியும் கருத்தில் உருத்து, அமுது ஆம் சிவ-பதத்தைஅறியும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
உரை

சிவபெருமான் சடை உடையவன், செம்மேனியன், வெண்ணீற்றன் என்ற  அடையாளங்களை (குறிகளை) உடையவன். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற  நால்வகை நெறிகள் அவனை அடைவதற்குரிய நெறிகளாகும் . இந்த நெறிகளைச்  சார்தற்குரிய ஆன்ம பரிபாகமே குணமாகும். இம்மூன்றும் இல்லாத கூட்டத்தார்  அஞ்ஞானத்தை உணர்த்துவார்கள். ஆதலால், மெய்யடியார்கள் இவர்களை விட்டுப்  பிரிந்து நிற்பார்கள். இந்த மெய்யடியார்களால் பிரிதற்கரிய தன்மையை உடையவன்  இறைவன். இத்தகைய பரிபாகம் உற்ற ஞானிகளை விட்டுப் பிரிய இயலாதவன்  இறைவன் ஆகின்றான் (என்ற இரு பொருளையும் உணர்த்துகின்றன).   'பிரிவறியப் பெற்றியன்' என்பதில் நயம் காண்க. மெய்யடியார்கள் இறைவனை  விட்டுப் பிரியார்கள்; இறைவன் அவர்களை விட்டுப்பிரிய மாட்டான்). மெய்யடியார்கள் மேலே  கூறிய குறிகளும், நெறிகளும், குணங்களும் செறிந்த மனத்தோடு ஞான வடிவாகிய  சிவசொரூபத்தை அநுபவிக்கும்போது அமுதமாகிய சிவபதத்தைக் கண்டுகளித்து உண்பது போல் ஓர் அநுபவம் பெறுவர். எல்லாவற்றையும் அறிகின்ற விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனுமாகிய  இறைவனை அடியேன் அவ்வாறு பற்றிக் கொண்டு பேரின்பத்தை அநுபவித்தேன்.

5

பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத்தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ்சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகிஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
சொற்பிரிப்பு
பேரும் குணமும், பிணிப்பு உறும் இப் பிறவி-தனைத்தூரும் பரிசு, துரிசு அறுத்து, தொண்டர் எல்லாம்சேரும் வகையால், சிவன் கருணைத்தேன் பருகிஆரும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
உரை

பெயராலும் குணங்களாலும் கட்டப்படுகின்ற இப்பிறவி தூர்ந்து போகும் வண்ணம் குற்றங்களைப் போக்குகிறவன் இறைவன். மெய்யடியார்கள் அனைவரும் சிவன் திருவடி  வந்தடையும்படி அவனது அருள் எனும் தேனைப் பருகினேன். தங்குதற்கு இடமாகிய  விளக்கமிக்க தில்லை ஆண்டவனை யான் பற்றிக் கொண்டேன்.

6

கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகிவம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமேநம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும்அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
சொற்பிரிப்பு
கொம்பில் அரும்பு ஆய்க் குவிமலர் ஆய்க் காய் ஆகிவம்பு பழுத்து, உடலம் மாண்டு, இங்ஙன் போகாமே;நம்பும் என் சிந்தை நணுகும் வண்ணம், நான் அணுகும்அம் பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே
உரை

ஒரு மரத்தின் கொம்பில் தோன்றுகின்ற அரும்பு, போதாய் விரிய ஆரம்பித்து  மலராய் விரிந்து, காயாய்ப் பின்னர் பழமாகி வீணாய்த் தரையில் விழுகின்றது. இம்மாதிரி  நான் வீணாக மாண்டு போகாத வண்ணம் இருக்க விரும்புகின்றேன். ஆதலால் என் மனமும்  நானும் சிவனை அணுக வேண்டிப் பொன்னாலாகிய அழகிய சிற்றம்பலத்தே ஆடுகின்ற  தில்லையாண்டவனைப் பற்றிக் கொண்டேன்.

7

மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரியமிதிக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
சொற்பிரிப்பு
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரியமிதிக்கும் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்'கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம்' எனக்களித்து, இங்குஅதிர்க்கும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே
உரை

எல்லாராலும் புகழ்தற்குரிய வலிமை வாய்ந்த மனவன்மையுடைய இராவணன்  கயிலையைத் தூக்க முயன்றபோது அதன்கீழ் அவன் நசுங்கும்படியாக எம்பெருமான்  வலதுகால் பெருவிரலின் நகத்தின் நுனியால் ஊன்றினான். அதனால் அவன் பெருமானின்  ஆற்றலை உணர்ந்து, ஆணவ மலம் கெட, அகந்தை ஒடுங்கிச் சாமகானம் செய்து இராவணன்  என்ற பெயரையும் வாளையும் பெற்று உய்ந்தான். அதுபோல சிவனது திருவடிகள் என்  தலைமேல் பொருந்தியதால் நம்மைப் பிணிக்கும் பசுபாச உணர்வுகள் இல்லாதவனாகி  மகிழ்ந்து ஆரவாரிக்கும்படித் தில்லையின் கண் உள்ள ஆண்டவனைப் பற்றிக் கொண்டேன்.

8

இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தேநடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால்கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டைஅடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
சொற்பிரிப்பு
இடக்கும் கரு முருட்டு ஏனப் பின், கானகத்தேநடக்கும் திருவடி என் தலைமேல் நட்டமையால்கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டைஅடக்கும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
உரை

பூமியைத் தோண்டும் இயல்புடைய கரிய வலிய பன்றியின் புறத்தே காட்டகத்தில் அருச்சுனனுக்காக நடந்த திருவடியை என் தலைமேல் நாட்டினான் இறைவன். அதனால்         என்னை வெல்லும் திறனுடைய ஐம்பொறிகளாகிய கொடியவர்களது வலிமையான  விளையாட்டை அடக்கவல்ல விளக்கமிக்கத் தில்லை ஆண்டவனை யான் பற்றிக்  கொண்டேன் (32ஆவது கதையைப் பார்க்கவும்).

9

பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
சொற்பிரிப்பு
பாழ்ச் செய் விளாவி, பயன் இலியாய்க் கிடப்பேற்குக்கீழ்ச்செய் தவத்தால் கிழியீடு நேர் பட்டுத்தாள் செய்ய தாமரைச் சைவனுக்கு, என் புன் தலையால்ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
உரை

பாழான வயலை உழுது பயன் பெறாது இருப்பவனாகிய எனக்கு முற்பிறவியில் செய்த தவத்தால் பொற்கிழி போலக் கிடைத்தவன் இறைவன். சிவந்த தாமரை மலர்  போலும் திருவடிகளையுடைய ஆதி சைவனாகிய சிவபெருமானுக்கு, என் இழிவான  தலையால் அடிமைத் தொழில் செய்ய வேண்டி, விளக்கமிக்கத் தில்லை ஆண்டவனாகிய  கூத்தப் பெருமானை யான் பற்றிக் கொண்டேன்.

10

கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச்செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்குஇம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
சொற்பிரிப்பு
கொம்மை வரிமுலைக் கொம்பு அனையாள் கூறனுக்குச்செம்மை மனத்தால் திருப் பணிகள் செய்வேனுக்குஇம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும்அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே
உரை

திரட்சியும் வனப்பும் கொண்ட தனத்தையுடைய பூங்கொடி போன்ற  உமாதேவியாரை ஒரு கூறாக உடைய சிவனுக்கு, நேர்மையான உள்ளத்தோடு பணிவிடை  செய்கிறவன் யான். ஆதலால் இப்பிறப்பில் எனக்கு நிகழக்கூடிய வினைப் பயன்கள்  அனைத்தையும் இவ்வுலகத்திலேயே ஒழிக்கச்செய்து மறுமை இன்பத்தை அளிக்கும்  விளக்கமிக்கத் தில்லை ஆண்டவனை, யான் பற்றிக் கொண்டேன்.