திருமுறை 8 · 8.038 · 10

திருவேசறவு

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள்ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே.
சொற்பிரிப்பு
இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கிகரும்பு தருசுவை எனக்குக் காட்டினை உன் கழல்-இணைகள்;ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம்பெரும் குதிரை ஆக்கியவாறு அன்றே, உன் பேர்-அருளே !
உரை

அலைகளையுடைய கங்கையாறானது ஒரு சேர உலாவி வருகின்ற திருச்சடையை  உடைய எம்பெருமானே! இரும்பையொத்த மனத்தை உடைய அடியேனை இழுத்திழுத்து என் எலும்பையும் உருகச் செய்தாய். நினது திருவடிகள் இரண்டிலும் ஊறுகின்ற கரும்பை  ஒத்த சுவையினை எனக்குக் காண்பித்து அருளினை. நரிகள் அனைத்தையும் பெரிய  குதிரைகளாக்கிய வகை உனது பேரருளே அன்றோ ? (தகாத நரியைத் தகுதி வாய்ந்த பரியாக்கியது போலக் கனியாத மனத்தைக் கனிய வைத்தாய் என்பதாம்)

2

பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்குஉண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனைமண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய்நீ வாஎன்னக்கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே.
சொற்பிரிப்பு
பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்குஉண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனைமண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ, 'வா' என்னக்கண் ஆர உய்ந்தவாறு அன்றே, உன் கழல் கண்டே!
உரை

இசை போன்ற இனிய மொழிகளை உடைய உமாதேவியை ஒரு பாகத்தில்  உடையவனே! உன் அடிமையானவர்கள் நுகர்வதற்குரிய, நிறைந்த, கிடைத்தற்கரிய  அமுதமே! எம்மை ஆளாக உடையவனே ! இம்மண்ணுலகிற் பொருந்திய மனித்தப்  பிறவியைப் போக்கி அடியேனை ஆண்டருள்பவனே! நீ என்னை 'வா'வென்று சொல்லி  அழைத்து (வந்து) நீ காட்டிய திருவடியைக் கண்ணாரக் கண்டல்லவா நான் வாழும்  நிலை ஏற்பட்டது.

3

ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில்ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்றுஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன்பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே.
சொற்பிரிப்பு
ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு என்னும் அருநரகில்ஆர் தமரும் இன்றியே, அழுந்து வேற்கு, 'ஆ! ஆ!' என்றுஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்பாத மலர் காட்டியவாறு அன்றே, எம் பரம் பரனே !
உரை

பெரிய கடலினின்றும் எழுந்த விடத்தை உண்டதனால் ஏற்பட்ட கருத்த கழுத்தை  உடையவனே! எமது பெருமை மிக்க பெரியோனே ! ஆதரவில்லாதவனாய், பிறப்பும் இறப்புமாகிற கடத்தற்கு அரிய நரகில், உறவினர் யாரும் உதவுவதற்கில்லாமல் கிடந்து அழுந்தும் இயல்புடையவன் யான். எனக்கு 'ஐயோ' என இரங்கியருளி, உன் திருவடிக்  கமலங்களைக் காட்டி ஆட்கொண்ட விதமன்றோ யானடைந்த பேறு.

4

பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர்உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டுஎச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோஎன்சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே.
சொற்பிரிப்பு
பச்சைத் தால் அரவு ஆட்டீ ! படர் சடையாய் ! பாத மலர்உச்சத்தார் பெருமானே! அடியேனை உய்யக் கொண்டு,எச்சத்து-ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே, அச்சோ! என்சித்தத்தாறு உய்ந்தவாறு அன்றே, உன் திறம் நினைந்தே !
உரை

பசுமையான நாவினையுடைய பாம்பை ஆட்டியவனே ! படர்ந்த சடையை  உடையவனே! உன் திருவடி மலரைக் சூடியதால் உயர்ந்த அடியவர்களுக்குப் பெருமானே!  என் மனம் போன வழியில் குற்றம் பொருந்திய சிறு தெய்வங்களை நான் பணியாத வண்ணம்  என்னை ஆட்கொண்டாய். அந்த அருள்திறங்களை எண்ணி அந்தோ அடியேன் உய்ந்த வகையன்றோ எனக்குப் பெரு வியப்புத் தருகிறது.

5

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்துற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே.
சொற்பிரிப்பு
கற்று அறியேன் கலை-ஞானம்; கசிந்து உருகேன்: ஆயிடினும்மற்று அறியேன் பிறதெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்துஉற்று, இறுமாந்து இருந்தேன், எம்பெருமானே ! அடியேற்குப்பொன் தவிசு நாய்க்கு இடுமாறு அன்றே, நின் பொன் அருளே !
உரை

சிவாகமக் கலைஞானங்களைக் கற்றறியேன். உன்பால் உள்ளம் வைத்துக் கசிந்து உருகேன். ஆயினும் மற்ற தெய்வங்களை அறிய மாட்டேன். நின் உபதேச மொழிகளைத்  துணைக்கொண்டு உனது நீண்ட கழல்களைச் சார்ந்து இறுமாப்புற்றேன். எம் பெருமானே! நின் பொன்னான திருவடிகளை அடியேனுக்கு அருளியது பொன்னால் ஆகிய சிம்மாசனத்தில் நாயை இருத்தியது போலாகும்.

6

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டுநஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால்உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனைஅஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே.
சொற்பிரிப்பு
பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டுநஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால்உய்ஞ்சேன்; எம் பெருமானே! உடையானே! அடியேனை'அஞ்சேல்' என்று ஆண்டவாறு அன்றே, அம்பலத்து அமுதே !
உரை

எங்கள் பெரியோனே! நாதனே! அம்பலத்தில் ஆடுகின்ற அமுதமே! பஞ்சுபோல் மெல்லிய பாதங்களையுடைய மாதரது கடைக்கண் பார்வையால் இடர்ப்பட்டு நஞ்சினை  உண்பதால் வரும் துன்ப மிகுதியில் அஞ்சி நடுங்கும் இயல்பினன் ஆயினேன். ஆயினும் நின்  அருளால் தப்பி உய்வடைந்தேன். அடியேனை அஞ்சாதே என்று ஆட்கொண்ட வகைதான் என்னே?

7

என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க்கும் அறியவொண்ணாதென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான்அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்டதென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே.
சொற்பிரிப்பு
என் பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா,தென் பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்,அன்பால், நீ, அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது ,என்பாலே நோக்கியவாறு அன்றே, எம்பெருமானே!
உரை

பாலை நிலத்திற்கு ஒப்பான பசையற்ற என் பிறவியைப் போக்கினாய். தேவரும்  அறிய ஒண்ணாத சிவபெருமானே ! தென் பாலுள்ள திருப்பெருந்துறையில் எழுந்தருளியவனே!  நீ என் மீது வைத்த அன்பால் என் மனம் நெகிழ்ந்தேன். அதனுட்புகுந்து அடியேனை ஆட்கொண்ட  அருமையான செயல் நீ என் பால் கருணைத் திருநோக்கு செலுத்திய முறை அன்றோ ?

8

மூத்தானே மூவாத முதலானே முடிவில்லாஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப்பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே.
சொற்பிரிப்பு
மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லாஓத்தானே, பொருளானே, உண்மையும் ஆய், இன்மையும் ஆய்பூத்தானே, புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால்பேர்த்தே, நீ ஆண்டவாறு அன்றே, எம்பெருமானே !
உரை

காலத்திற்கும் அதற்குட்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் மூத்தவனே ! மூப்படையாத முதற் பொருளானவனே! அழிவற்ற வேத வடிவானவனே! அவ்வேதங்களின் பொருளும் ஆனவனே ! என்றும் அழியாது நிலைத்த பொருளாகியும், தோன்றி நின்று அழியக்கூடிய பொருளாகியும் நிற்கின்றவனே! உலக வாழ்வில் உழலும் என்னை நின்  திருவருளினால் அந்நிலை நீக்கி, ஆண்ட முறைதான் என்னே?

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப்பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமாறுஅருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே.
சொற்பிரிப்பு
மருவு இனிய மலர்ப்பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக,தெருவு தொறும் மிக அலறிச் 'சிவபெருமான்' என்று ஏத்தி,பருகிய நின்பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறுஅருள் எனக்கு, இங்கு-இடைமருதே இடம் கொண்ட அம்மானே !
உரை

திருவிடைமருதூர் என்கின்ற ஊரில் எழுந்தருளியுள்ள மகாலிங்க மூர்த்தியே!  அடைதற்கினிய மலர் போன்ற நின் திருவடிகள் என் உள்ளத்தில் வளர, அதனால் என்  உள்ளம் உருகினேன். அங்ஙனம் உருகிய நிலையில் தெருக்கள் தோறும் “சிவ சிவ” என்று  அலறிக்கொண்டு சிவபெருமானே என்று போற்றித் துதித்தேன். அவ்வாறு துதித்தும் உன் அருளைப் பருகக்கிடைத்ததே தவிர தோயக் கிடைக்கவில்லை. எனவே, அங்ஙனம்  கருணைக் கடலிலேயே மூழ்கித் திளைக்கும்படி அருள் புரிவாயாக.

10

நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.
சொற்பிரிப்பு
நானேயோ தவம் செய்தேன்? 'சிவாய நம' எனப் பெற்றேன்தேன் ஆய் இன் அமுதமும் ஆய்த் தித்திக்கும் சிவபெருமான்தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே!
உரை

நானோ தவம் புரிந்தேன்? சிவாயநம எனும் திருவைந்தெழுத்தைச் செபிக்கப்  பெற்றேன். தேனாகவும், இன்னமுதமாகவும் தித்திக்கும் சிவபெருமான் தானாகவே எளிவந்தருளி  என் மனதில் புகுந்து அடியேனுக்கு அருள் வழங்கினான். புலால் நிறைந்த உடலில் உயிர்  வாழ்ந்திருத்தலைக் கண்டித்து அதனை வெறுத்திருக்கும்படி அடியேனுக்கு அருள் செய்தான்.