திருமுறை 8 · 8.035 · 10

அச்சப்பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம்மெய்யும் அஞ்சேன்கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணிமற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்குஅற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
சொற்பிரிப்பு
புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன் ;கற்றை வார் சடை எம் அண்ணல், கண்-நுதல் பாதம் நண்ணி ,மற்றும் ஓர் தெய்வம் - தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே!
உரை

புற்றில் வாழும் ஒளி பொருந்திய பாம்புக்கும் நான் அஞ்சமாட்டேன் . பொய்யர்கள்  கூறும் மெய் போன்ற கூற்றுகளுக்கும் அஞ்சமாட்டேன். ஆனால் நீள் சடையுடைய எம்  அண்ணலாகிய சிவபெருமானது திருவடிகளை அடைந்தும், வேறொரு தெய்வம்  உண்டென்று எண்ணி, எம் தலைவனாகிய சிவன் புகழைப் பேசாதவர்களைக் கண்டால்  அம்ம ! நாம் அஞ்சுகின்றோம்.

2

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்னஅருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
சொற்பிரிப்பு
வெருவரேன், வேட்கை வந்தால், வினைக் கடல்கொளினும், அஞ்சேன்;இருவரால் மாறு காணா எம்பிரான், தம்பிரான், ஆம்திருஉரு அன்றி, மற்று ஓர் தேவர், எத்தேவர்? என்னஅருவரா தவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே !
உரை

பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை, ஐம்புல ஆசைகள், இம்மாதிரியான  அடங்காத ஆசைகள் பலவும் என்னுள்ளத்தில் எழுந்தாலும், அதற்கு நான் அஞ்ச மாட்டேன். கடல் அனைய பிராரத்த வினை என்னை வந்து தாக்கினாலும் அதற்கும் நான் அஞ்சமாட்டேன். தம்முள் மாறுபட்ட அயனும் திருமாலும் காண முடியாத எம் தலைவனாகிய சிவன்  தனக்குத் தானே தலைவன் ஆவான். அப்பெருமானின் திருவுருவை அன்றி வேறொரு  தேவரைக் காண நேரின் அவர் எத்தேவர் என வெறுப்புக் கொள்ளாதவர்களைக்            கண்டால் அதுவே நாம் அஞ்சுகின்ற நெறியாம்.

3

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார்கடைக்கண் அஞ்சேன்என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்றஎன்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டாஅன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
சொற்பிரிப்பு
வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் ;என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்றஎன் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டாஅன்பு இலாதவரைக் கண்டால், அம்ம ! நாம் அஞ்சுமாறே!
உரை

எதிரிமீது பாய்ந்து அவர்கள் நெஞ்சைக் குத்தி மாமிசத்தைக் கொள்ளுவது  கூர்மையான வேலின் இயல்பு. அதனால் வேலின் நுனியில் புலால் நாற்றம் வீசிக்  கொண்டிருக்கும். அப்பேர்ப்பட்ட வலிய வேலைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். கைகளில்  வளையல் அணியப்பட்ட விலைமாதர்கள் வேல் போன்ற அழகிய கண்களை உடையவர்கள். அவர்களுடைய கடைக்கண் பார்வைக்கும் நான் அஞ்சேன். ஆனால் என் தலைவனாகிய சிவபெருமான் அம்பலத்தே ஆடுகின்றான். பொள்ளாத மாணிக்க மணியைப் போன்றவன் .  அவனைக் கண்ணாரக் கண்டால் என்பெல்லாம் உருகும். அவனைப் போற்றி மகிழ்ந்து அவனுடைய இனிய அருளைப் பெற வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்யமாட்டாதவர்களைக்  கண்டால் அம்ம நான் அஞ்சுகின்றேன் .

4

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்குஅளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
சொற்பிரிப்பு
கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர் கிறி முறுவல் அஞ்சேன்;வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்துளி உலாம் கண்ணர் ஆகித் தொழுது, அழுது, உள்ளம் நெக்கு, இங்குஅளி இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே !
உரை

கிளியை ஒத்த சொல்லுடைய விலை மகளிர் இனிமையாகப் பேசுகின்ற மொழிகளுக்கும் அஞ்சமாட்டேன். மயக்கத்தை விளைவிக்கும் அவர்களது சிரிப்பிற்கும்  அஞ்சமாட்டேன். ஆனால், வெள்ளிய திருநீறணிந்த திருமேனியை உடைய சிவபெருமானது  திருவடிகளையடைந்து, ஆனந்தக் கண்ணீர் ததும்பும் கண்களை உடையவராகிக், கைகளால் தொழுது, அழுது, மனம் கசிந்து, துதித்து மனம் கனியாதவரைக் கண்டால்  அம்ம ! நாம் அஞ்சுகின்றோம்.

5

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்துணிநிலா அணியினான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால்திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறுஅணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
சொற்பிரிப்பு
பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்;துணி நிலா அணியினான் - தன் தொழும்பரோடு அழுந்தி, அம்மால்,திணி நிலம் பிளந்தும் காணாச் சேவடி பரவி, வெண் நீறுஅணிகிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே !
உரை

நோய்கள் எல்லாம் ஒருங்கு திரண்டு வந்தாலும் யான் அஞ்சமாட்டேன். பிறப்பு இறப்பு இவைகட்கும் அஞ்சமாட்டேன். உறுதியான பூமியைப் பன்றி வடிவம் எடுத்து  திருமாலானவர் தேடியும் காண முடியாத திருவடி எங்கள் தலைவனாகிய சிவபெருமானின்  திருவடி . அப்பேர்ப்பட்ட அழகிய சிவபெருமான் பிறைச்சந்திரனைத் தனது சடாமுடியில்  கொண்டுள்ளான் . அவன் உடம்பெல்லாம் தூய்மையான வெண்ணீறு (விபூதி) அணிந்துள்ளான்.  அப்பெருமானின் அடியார்கள் கூட்டத்தில் கலந்து அவன் சேவடியைத் தொழுது  போற்றாதவர்களைக் கண்டால் அம்ம! நாம் அஞ்சுகின்றோம்.

6

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதம் கடந்த அப்பன்தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
சொற்பிரிப்பு
வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை புரண்டிடினும், அஞ்சேன்;தோள் உலாம் நீற்றன், ஏற்றன், சொல் பதம் கடந்த அப்பன்,தாள தாமரைகள் ஏத்தித் தட மலர் புனைந்து, நையும்ஆள் அலாத வரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே !
உரை

ஒளி வீசுகின்ற நெருப்புக்கும் அஞ்சமாட்டேன். மலையே புரண்டு வந்தாலும்  அதற்கும் நான் அஞ்சமாட்டேன். ஆனால் திருநீறு அணிந்த தோள்களை உடையவனும்  காளை வாகனமுடையவனும் சொல்லின் எல்லையைக் கடந்த தூயவனும் எம் தந்தையும் ஆகிய சிவபெருமானின் திருவடித் தாமரைகளைப் புகழ்ந்து வாழ்த்தி, அன்றலர்ந்த  பூக்களைக் கொண்டு அருச்சனை செய்து, மனம் நைந்து உருகி அப்பெருமானுக்கு அடிமை  ஆகாதவரைக் காணும்போது மட்டுமே நான் அஞ்சுவேன்.

7

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாத மேத்திஅகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
சொற்பிரிப்பு
தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை முன்னம் அஞ்சேன்;புகை முகந்து எரி கை வீசிப் பொலிந்த அம்பலத்துள் ஆடும்,முகை நகைக் கொன்றை மாலை, முன்னவன் பாதம் ஏத்தி,அகம் நெகாத வரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே!
உரை

நீக்க முடியாத பழிக்கும் அஞ்சமாட்டேன் . அகாலமாய் இறப்பதற்கும்  பயப்படமாட்டேன். புகை கொண்ட அனலைத் திருக்கையிலே ஏந்தி, பொலிவுமிக்க  சபையில் சிவபெருமான் கூத்தியற்றுகின்றனன். மொட்டுகள் மலர்ந்து உள்ள கொன்றை மலர் மாலையணிந்த அம்முதல்வனது திருவடிகளைத் துதித்து மனம் கசியாதவரைக்  கண்டால் அம்ம! நாம் அஞ்சுகிறோம்.

8

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்க மாட்டாஅறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
சொற்பிரிப்பு
தறி செறி களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்;வெறி கமழ் சடையன், அப்பன், விண்ணவர் நண்ண மாட்டாச்செறி தரு கழல்கள் ஏத்திச் சிறந்து, இனிது இருக்க மாட்டாஅறிவு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே !
உரை

கட்டுத்தறியில் கட்டுப்பட்டு இருக்கும் மதம் பிடித்த ஆண் யானைக்கும்  அஞ்ச மாட்டேன். நெருப்பைப் போலும் விழிகளை உடைய புலிக்கும் அஞ்ச மாட்டேன்.  இயற்கையாகவே மணம் வீசுகின்ற சடையை உடையவன் எங்கள் தந்தையாகிய  சிவபெருமான். அவன் தேவர்களாலும் காண முடியாத திருமேனியை உடையவன்.  அவன் திருவடிகளைத் துதித்து அவனுடைய திருவருளைச் சார்ந்து இன்பத்தோடு  சிறப்பாக வாழத் தெரியாத அறிவிலிகளைக் கண்டால் அம்ம! நாம் அஞ்சுகிறோம்.

9

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பி ரானாய்ச்செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாதுஅஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
சொற்பிரிப்பு
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்ன ரோடு உறவும் அஞ்சேன்;நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாதுஅஞ்சுவார்-அவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே !
உரை

மேகத்தில் உருவாகி உறுமுகின்ற இடியைக் கண்டு அஞ்சமாட்டேன் . எந்த  நேரத்திலும் அன்பாகப் பழகிய அரசன் தக்க சமயத்தில் கைவிடவும் செய்வான். அவ்வாறு இருந்தும் அந்த மாதிரியான அரசர்களோடு நெருங்கிப் பழகவும் அஞ்சமாட்டேன்.  பாற்கடலில் எழுந்த நஞ்சை அமுதமாக உட்கொண்டருளியவன் நம் தலைவனாகி என்னைச் செம்மையாக ஆட்கொண்டான்; அவன் அருள் விளக்கமாகிய திருவெண்ணீற்றை நெற்றியில் அணிவதற்குப் பயப்படுபவர்களைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுகிறோம்.

10

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்நீணிலா அணியினானை நினைந்துநைந் துருகி நெக்குவாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்த மாட்டாஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
சொற்பிரிப்பு
கோள் நிலா வாளி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்;நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து, உருகி, நெக்கு,வாள் நிலாம் கண்கள் சோர, வாழ்த்தி நின்று, ஏத்த மாட்டாஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சு மாறே!
உரை

வளையாத கொலைத் தன்மை கொண்ட அம்பிற்கு அஞ்சமாட்டேன். இயமனுடைய சினத்திற்கும் அஞ்சமாட்டேன். ஆனால், நீண்ட பிறைமதியை அணியாகக்  கொண்ட சிவபெருமானைத் தியானித்து நெக்குநெக்கு நைந்துருகி ஒளி பொருந்திய கண்களில் இருந்து நீர் சொரிய வாழ்த்தி திருமுன் நின்று துதிக்கமாட்டாத பேடிகளைக் கண்டால் அம்ம! நாம் அஞ்சுகிறோம்.