திருமுறை 8 · 8.034 · 10

உயிருண்ணிப்பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகமதாய் என்மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகாசெந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே.
சொற்பிரிப்பு
பைந் நாப்பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என்மெய்ந் நாள் தொறும் பிரியா, வினைக் கேடா! விடைப் பாகா !செம் நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்!எந்நாள் களித்து, எந்நாள் இறுமாக்கேன், இனி, யானே ?
உரை

செம்மையான புலவர்கள் துதிக்கின்ற புகழையுடைய திருப்பெருந்துறையின்கண் உறைபவனே! பசிய நாவையுடைய பாம்பின் படத்தையொத்த முன் பகுதி உடைய  உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே! நாள் தோறும் எனது உடம்பை விட்டு  நீங்காது நிற்கும் என் வினையைத் தொலைப்பவனே! இடப வாகனனே! சிவானந்தம்  மேலிட்டதால் இனி நான் எந்நாளும் மகிழ்ந்து, எந்நாளும் இறுமாந்திருப்பேன்!

2

நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்குஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான்தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே.
சொற்பிரிப்பு
நான் ஆர், அடி அணைவான்? ஒரு நாய்க்குத் தவிசு இட்டு, இங்குஊன் ஆர் உடல் புகுந்தான்; உயிர் கலந்தான்; உளம் பிரியான்;தேன் ஆர் சடை முடியான்; மன்னு திருப்பெருந்துறை உறைவான்;வானோர்களும் அறியாதது ஓர் வளம் ஈந்தனன், எனக்கே.
உரை

நின் திருவடியைச் சேருவதற்கு நான் யார்? (யாதொரு தகுதியும் இல்லாதவன்) வண்டுகள் மொய்க்கும் சடைமுடி உடையவன். திருப்பெருந்துறை உறைபவன் சிவபெருமான்.  அவன் நாய்க்குத் தவிசு இட்டாற்போல், இவ்வூனுடலிற் புகுந்தான்; உயிரில் அத்துவிதமாய்க்  கலந்தான்; உள்ளத்தில் பிரியாது எழுந்தருளி இருந்தான்; அடியேனும், தேவரும் அறியாத  ஒப்பற்ற இன்பத்தை நல்கி அருளினான்.

3

எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கிச்சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்பனவன் எனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
எனை, நான் என்பது அறியேன்; பகல், இரவு, ஆவதும் அறியேன்,மன-வாசகம் கடந்தான், எனை, மத்த-உன்மத்தன் ஆக்கி;சின மால் விடை உடையான், மன்னு திருப்பெருந்துறை உறையும்பனவன், எனைச் செய்த படிறு அறியேன்; பரம் சுடரே!
உரை

திருமாலை வலிவுடைய காளையாக்கி அதனை ஊர்தியாக உடையவன்  சிவபெருமான். அவன் நிலைபெற்ற திருப்பெருந்துறையில் உறைகின்ற வேதியன்; என் மனத்தையும், சொல்லையும் கடந்து நின்றவனும் அவனே. அவன் என்னைக் களிப்புடைய பெரும்பித்தன் ஆக்க என்ன மாயச்செயல் செய்தானோ? எனக்குத் தெரியாது. அது முதல் எனது தற்போதம் அழிந்தது. அது முதல் சிவானந்தம் மேலிட்டது. அதன் விளைவாக நான்  வாதவூரன், அமாத்தியன், அமைச்சன், அரச பணியிலிருந்து துறந்தேன் ஆகியவற்றை உணர்ந்திலேன்! பகலாவதும், இரவாவதும் அறிந்திலேன் ! எல்லாப் பொருட்களையும் அவனுடைய பெரிய ஒளிக்காட்சியாகக் கண்டு களிக்கின்றேன்.

4

வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில்எனைத்தான்புகுந் தாண்டான்எனதென்பின்புரை யுருக்கிப்பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான்மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே.
சொற்பிரிப்பு
வினைக் கேடரும் உளரோ பிறர், சொல்லீர்? வியன் உலகில்எனைத் தான் புகுந்து, ஆண்டான்; எனது என்பின் புரை உருக்கிப்பினைத் தான் புகுந்து, எல்லே! பெருந்துறையில் உறை பெம்மான்,மனத்தான்; கண்ணின் அகத்தான்; மறு மாற்றத்திடை யானே!
உரை

எங்கள் தலைவனாகிய சிவன் திருப்பெருந்துறையில் விளக்கமாக உறையும்  பெருமான். அவன் தானாகவே வலிய வந்து திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில்  எழுந்தருளி, என் உடம்பில் புகுந்து என்னை ஆட்கொண்டான். என் மனத்தகத்தும்,  கண்ணிலும், அன்ன பிறவற்றிலும் புகுந்து என்னை மயங்கவைத்தான். என் தேகத்தில் உள்ள  எலும்பில் உள்ள துளைகள் உட்பட எல்லாப் பாகங்களையும், உள்ளத்தையும் உருகச் செய்தான்.  என் சொல்லின் இடையிலும் உள்ளான். என் உயிருடனும் ஒன்றி ஆண்டான்.  வினைச்சூழலில் சிக்கிய என்னை இவ்வாறு என் வினைகள் எல்லாவற்றையும் நீக்கி  ஆண்டு கொண்ட வினைக்கேடனாக அவன் விளங்குகின்றான். இவ்வுலகத்திலும் அவனைவிட  வினையைக் கெடுப்பவர் வேறு எவரும் உள்ளார்களோ? மானிடரே சொல்லுங்கள்.

5

பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றிநற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர்கற்றாங்கவன் கழல்பேணின ரொடும்கூடுமின் கலந்தே.
சொற்பிரிப்பு
பற்று ஆங்கு அவை அற்றீர், பற்றும் பற்று ஆங்கு அதுபற்றிநற்று ஆம் கதி அடைவோம் எனின், கெடுவீர், ஓடிவம்மின் ;தெற்று ஆர் சடை முடியான், மன்னு திருப்பெருந்துறை இறை, சீர்கற்று ஆங்கு, அவன் கழல் பேணினரொடும் கூடுமின், கலந்தே !
உரை

உலகப் பற்றுக்களாகிய மனைவி, மக்கள், சுற்றம் முதலியவர்களோடு உள்ள பற்றை  நீக்கி விட்டுள்ளீர்கள். நல்ல கதி அடையவேண்டும் என்று நீங்களாகவே முயலுகின்றீர்கள் . அவ்வாறு நல்ல கதி அடைவதற்குப் பற்றற்றான் பற்றினை அடைவதற்குரிய உபாயத்தைக்  கடைப்பிடிக்காமல் உலகப்பற்றைத் துறந்த அளவிலே நிற்பீர்களானால் இகம், பரம் என்னும்  இரண்டனையும் வீணே இழந்து நிற்பீர்கள். ஆதலால், பின்னிக் கிடக்கின்ற சடைமுடியை  உடையவனும், நிலை பெற்ற திருப்பெருந்துறையில் உறைபவனுமாகிய சிவபெருமானுடைய  மெய்யடியார்கள் அவனுடைய புகழைக் கற்று, அவனுடைய திருவடிகளையே வழிபட்டு வருபவர்களோடு கலந்து கூடி, அவர்கள் வழிநின்று செயல்பட்டால் ஒழிய சிவகதி அடைய முடியாது என்பதை உணருங்கள். ஆதலால், அந்த மெய்யடியார்கள் கூட்டத்தோடு கலக்க ஓடி வாருங்கள் .

6

கடலின்திரையதுபோல் வரு கலக்கமலம் அறுத்தென்உடலும்என துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான்சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே.
சொற்பிரிப்பு
கடலின் திரை - அது போல் வரு கலக்கம், மலம், அறுத்து; என்உடலும், எனது உயிரும், புகுந்து; ஒழியாவண்ணம், நிறைந்தான்சுடரும் சுடர்மதி சூடிய, திருப்பெருந்துறை உறையும்படரும் சடை மகுடத்து, எங்கள் பரன் தான் செய்த படிறே !
உரை

எம் பெருமானாகிய சிவபெருமான் ஒளி வீசும் கதிர்களையுடைய பிறைச்  சந்திரனைத் தன் தலையில் சூடியவன். அவன் திருப்பெருந்துறையில் தங்கி விரிந்த  சடையை மகுடமாகக் கொண்ட மேலோன். இப்பெருமான் செய்த மாயச் செயல் என்னவெனில், கடல் அலைபோல் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வருகின்ற,  துன்பம் செய்கின்ற எனது பாசங்களைத் தொலைத்து அருளியது தான். என் உடலிலும்  உயிரிலும் அவனே கலந்து நீக்கமற நிறைந்து விளங்கினான்.

7

வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்வேண்டேன் மண்ணும் விண்ணும்வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும்தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள்பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே.
சொற்பிரிப்பு
வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம்; வேண்டேன் மண்ணும் விண்ணும் ;வேண்டேன் பிறப்பு, இறப்புச் சிவம் வேண்டார்-தமை நாளும்தீண்டேன்; சென்று, சேர்ந்தேன், மன்னு திருப்பெருந்துறை; இறைதாள்பூண்டேன்; புறம் போகேன்; இனிப், புறம் போகல் ஒட்டேனே!
உரை

நிலை பெற்ற திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவ பரம்பொருளைச் சென்றடைந்தேன். அவன் திருவடிகளை அணியாகப் பூண்டேன். இனிமேல் அதனை  விட்டுப் புறம்போகேன்; அவன் என்னைவிட்டுப் புறம்போகவும் விடமாட்டேன். ஆகையால், நான் மண்ணுலக ஆட்சியையும், அதனால் விளையும் கீர்த்தியையும்  பொருளையும் விரும்பமாட்டேன். விண்ணுலக வாழ்க்கையையும் அதனால் உண்டாகும்  புகழையும் வேண்டேன். பிறப்பு, இறப்பு இவைகளையும் வேண்டேன். தூய மங்கலப்  பொருளான எங்கள் தலைவனாகிய சிவபெருமானைப் போற்றித் துதிக்காத புறச்சமயத்தாரோடு யாதொரு தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன்.

8

கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசேசேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும்நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே.
சொற்பிரிப்பு
கோல்-தேன் எனக்கு என்கோ-குரை கடல்வாய் அமுது என்கோஆற்றேன் எங்கள் அரனே! அரு மருந்தே ! எனது அரசே !சேற்று ஆர் வயல் புடை சூழ் தரு திருப்பெருந்துறை உறையும்நீற்று ஆர் தரு திருமேனி நின் மலனே! உனை யானே!
உரை

எங்கள் சிவனே! கிடைத்தற்கரிய அமுதே! என் மன்னவனே! சேறு மிகுந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் திருநீறு பொலியும் திருமேனியுடன் எழுந்தருளிய  மாசிலாதவனே! உன்னை அடியேன் எனக்குக் கிடைத்த கொம்புத் தேன் என்பேனோ? ஒலிக்கின்ற கடலில் இருந்து எழுந்த அமுதம் என்பேனோ?

9

எச்சம் அறிவேன் நான்எனக் கிருக்கின்றதை அறியேன்அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதேசெச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே.
சொற்பிரிப்பு
எச்சம் அறிவேன் நான்; எனக்கு இருக்கின்றதை அறியேன்;அச்சோ ! எங்கள் அரனே! அரு மருந்தே ! எனது அமுதே!செச்சை மலர் புரை மேனியன், திருப்பெருந்துறை உறைவான்;நிச்சம் என நெஞ்சில் மன்னி, யான் ஆகி நின் றானே!
உரை

எங்கள் சிவபெருமானே ! அருமையான மருந்தானவனே ! என்னுடைய அமுதமானவனே ! வெட்சி மலர் போலும் சிவந்த திருமேனியுடையவனே!  திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்றவனே! உறுதியாக என் உள்ளத்தில் நிலைபெற்று  அத்துவிதமாய் என்னோடு கலந்து, யானாகி நின்றவனே! எங்கள் பாசத்தை நீக்குபவனே!  எனக்குரிய வினை மிச்சத்தை யான் அறிவேன். இனி எனக்கு வரக்கூடிய வினை மூட்டைகளை அறிய மாட்டேன். இது என்ன வியப்பு !

10

வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமேஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன்தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே.
சொற்பிரிப்பு
வான் பாவிய உலகத்தவர் தவமே செய, அவமே ,ஊன் பாவிய உடலைச் சுமந்து, அடவி மரம் ஆனேன் ;தேன் பாய் மலர்க் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய் !நான் பாவியன் ஆனால், உனை நல்காய் எனல் ஆமே!
உரை

தேன் ஒழுகுகின்ற மலர்களை உடைய கொன்றை மரங்கள் நிறைந்து விளங்கும்  திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! ஞான வெளியில் பரவிய சிவஞானியர் தவம் செய்வர். யானோ ஊன் நிறைந்த இந்த உடம்பைச் சுமந்து வீணான காட்டு மரம்போல்  ஆனேன். உனது இன்பம் இவ்வாறு இருந்தது என்று சொல்ல வல்லேன் அல்லன். நான்  இவ்வாறு பாவியாகிப் போய்விட்ட பின்பு உன்னை அருளாதவன் என்று கூறுதல் பொருந்துமோ?