திருமுறை 8 · 8.033 · 10

குழைத்த பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் கொடுவினையேன்உழைத்தா லுறுதியுண்டோ தான் உமையாள் கணவா எனை ஆள்வாய்பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோவென்றழைத்தால் அருளா தொழிவதே அம்மானே உன்னடியேற்கே.
சொற்பிரிப்பு
குழைத்தால், பண்டைக் கொடுவினை, நோய் காவாய்; உடையாய்! கொடுவினையேன்உழைத்தால், உறுதி உண்டோ -தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்;பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ? பிறை சேர் சடையாய் ! முறையோ?' என்றுஅழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே, உன் அடியேற்கே?
உரை

என்னை ஆட்கொண்டவனே! மிகப்பழமையான கொடிய வினைகளால் நான்  துன்புறுவேன் ஆயின், உனக்காயினும், எனக்காயினும் யாதேனும் நன்மை உண்டா?  ஆதலால் அத்துன்பங்கள் என்னை வந்து சாராது என்னைக் காப்பாயாக. உமையம்மையின்  மணவாளனே! தீவினை உடையேனாகிய நான் உய்யும் பொருட்டு முயற்சி செய்தால் பயன்  உண்டோ? இல்லை . ஆதலால், நீயே நின் திருவுள்ளம் இரங்கி, என்னை ஆண்டு  அருள்வாயாக. இளமதி சூடிய சடையை உடையவனே! வினைப்பயன் வந்து என்னை  மீளவும் பற்றுவதற்கு ஏதுவாக யான் பிழை செய்துவிட்டேன் என்றாலும் கருணை செய்யாது  விடுவது உனக்குப் பொருத்தமான செய்கையாகுமா? இவ்வாறு பொருந்தாத செய்கையைச்  செய்து விட்டோமே என்று அடிமையாகிய யான் முறையோ என்று அழைத்தால் அதனைக் கேளாது ஒழிவது தந்தையே (அம்மானே) உனக்குப் பொருந்துவதோ? அருள்புரிவாயாக !

2

அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன்கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச்செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகாஉடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே.
சொற்பிரிப்பு
அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல ஆண்டாய், என்று இருந்தேன்;கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே, 'ஆ ! ஆ !' என்று அருளிச்செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா !உடையாய்! கூவிப் பணி கொள்ளாது ஒறுத்தால், ஒன்றும் போதுமே?
உரை

கொடி போலும் இடையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனே! எம் அரசே!  அடியேனது துன்பங்கள் அனைத்தும் தாமே விலகும்படி ஆட்கொண்டாய் என்று எண்ணியிருந்தேன்.  ஐயோ என என்மீது இரக்கம் கொண்டு வினைகள் சேர்வதற்குக் காரணமான எனது இவ்வுடலை  இன்னும் அழிக்காதது எதற்காக? எங்கள் சிவலோகா ! எம்மை உடையவா! அடிமைகளாகிய எம்மை  அழைத்துப் பணி கொள்ளாமல் தண்டித்தால் போதுமா? அருளவும் வேண்டாமா? அருள்புரிவாயாக !

3

ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணைஇன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவேகுன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால்என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே.
சொற்பிரிப்பு
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணைஇன்றே, இன்றிப் போய்த்தோ -தான்? ஏழை பங்கா! எம் கோவே!குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே, நீ கொண்டால்என் தான் கெட்டது? இரங்கிடாய்; எண் தோள், முக்கண், எம்மானே !
உரை

உமையொரு பாகனே! எம் இறைவா! எட்டுத் தோள்களும், மூன்று கண்களும்  உடைய தந்தையே! ஒன்றுக்கும் பற்றாத நாயனைய என்னை அன்று குருந்த மரத்தடியில்  உய்யக் கொண்ட உனது கருணை இப்போது இல்லாமற் போய் விட்டதோ? மலை போன்ற  எனது குற்றங்களை நீ குணங்களென்றே ஏற்றுக் கொள்ளுவாயானால் என்னதான் கெட்டுப்  போகும்? ஆகவே எனது குற்றங்களைப் பொறுத்து அருளுவாயாக!

4

மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய்ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்துகோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே.
சொற்பிரிப்பு
மான் நேர் நோக்கி மணவாளா மன்னே ! நின் சீர் மறப்பித்து, இவ்ஊனே புக, என்-தனை நூக்கி, உழலப் பண்ணு வித்திட்டாய்;ஆனால், அடியேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து,கோனே ! கூவிக் கொள்ளும் நாள் என்று? என்று, உன்னைக் கூறுவதே ?
உரை

மானின் பார்வையொத்த நோக்குடைய உமையவள் கணவனே! எம் அரசே! உன்  புகழை மறக்கச் செய்து, இவ்வுடம்பில் புகுந்துழலும் படி என்னைச் செலுத்தி விட்டாய் !  ஆனால் அடியேனது அறியாமையை யானறிந்து உய்யும் வண்ணம் நீயே அருள் வழங்கி  என்னை அழைத்துக் கொள்ளும் நாள் என்றைக்கு? கோவே! உன் புகழை நான் கூறும் நாள்  என்றைக்கு? அதை நான் எதிர்நோக்கி இருக்கின்றேன் என்பதை அறிந்து அருள்புரிவாயாக !

5

கூறும் நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம்நீதேறும் வகைநீ திகைப்புநீ தீமை நன்மை முழுதும்நீவேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ.
சொற்பிரிப்பு
கூறும்நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ!தேறும் வகைநீ! திகைப்புநீ ! தீமை, நன்மை, முழுதும் நீ!வேறுஓர் பரிசு, இங்கு ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின்தேறும் வகை என்? சிவலோகா ! திகைத்தால், தேற்ற வேண்டாவோ?
உரை

பேசும் நா முதலாகக் கூறப்படுகிற கரணங்கள் யாவும் நீயே! தெளிவதற்கான  உபாயங்களும் நீயே! மறதியும் நீயே! எனக்கு உளதாம் நன்மை தீமைகள் அனைத்தும் நீயே ! அடியேனுக்கென்று தனித்ததோர் தன்மை சிறிதும் இல்லை. இது சத்தியம். யான் கடைத்தேற உன்னையே புகழ்கின்றேன். அது கொண்டு திகைத்து என்னைத் தேற்ற  வேண்டாமா? தேற்றி அருள்புரிவாயாக !

6

வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீவேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே.
சொற்பிரிப்பு
வேண்டத் தக்கது அறிவோய்நீ ! வேண்ட முழுதும் தருவோய்நீ !வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ ! வேண்டி, என்னைப் பணிகொண்டாய்;வேண்டி, நீ, யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன்-தன் விருப்பு அன்றே?
உரை

யான் விரும்பத்தக்கனவற்றை யான் கேட்காமலே அறிபவன் நீயே! எனக்கு வேண்டுவன யாவும் முழுவதுமாக அருள்பவனும் நீயே! உன்னைக் காண வேண்டும் என்று  தேடிய அயனுக்கும் மாலுக்கும் அரியவனும் நீயே! அடியேனை விரும்பிப் பணியாளனாக  ஏற்றுக் கொண்டாய். நீ எதனை விரும்பி எனக்கு அருள் செய்கிறாயோ யானும் அதையே  விருப்பத்தோடு ஏற்றுக் கொள்ளுவேன். இன்னும் யான் விரும்பக் கூடியது யாதாகிலும்  இருக்குமாயினும், அதுவும் உனது விருப்பத்தின்படியே நிகழ்வதாகும்.

7

அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட போதே கொண்டிலையோஇன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானேநன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே.
சொற்பிரிப்பு
அன்றே, என்-தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்குன்றே அனையாய் ! என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ?இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ ? எண்தோள், முக்கண், எம்மானே !நன்றே செய்வாய்; பிழை செய்வாய்: நானோ இதற்கு நாயகமே?
உரை

எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடைய எங்கள் தலைவனே ! மலையை ஒத்தவனே! என்னை ஆட்கொண்ட அக்காலத்திலேயே என் உடல், பொருள், ஆவி இம்மூன்றையும் நீ ஏற்றுக் கொள்ள வில்லையோ? அவ்வாறிருக்க, இப்போது எனக்கு  இடையூறு ஏதேனும் உண்டோ ? எனக்கு நீ நன்மைதான் செய் அல்லது தீமைதான் செய் -  நான் இதற்கு உரிமையுடையவன் ஆவேன் அல்லேன். அது உன் விருப்பம் அல்லவா?

8

நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றிஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே.
சொற்பிரிப்பு
நாயின் கடைஆம் நாயேனை நயந்து, நீயே ஆட்கொண்டாய் ;மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி,ஆயக் கடவேன், நானோ-தான்? என்னதோ, இங்கு, அதிகாரம் ?காயத்து இடுவாய்; உன்னுடைய கழல்கீழ் வைப்பாய், கண் நுதலே !
உரை

நெற்றிக் கண்ணையுடைய பெம்மானே ! நாயினும் கீழான நாய்த்தன்மை உடைய அடியேனை, நீயே விரும்பி ஆட்கொண்டனை. இந்த மாயாகாரியமான பிறவியை உன் வசம்  ஒப்புவிக்காமல் நானோ இது பற்றி ஆராயும் தகுதி உடையவன்? அதைப்பற்றிய அதிகாரம்  என்னுடையதோ? (அல்ல - உன்னுடையதே) மீண்டும் என்னைப் பிறக்கச் செய்வாயோ ? அல்லது நின் திருவடி நிழலில் வைப்பாயோ? நீ எதுவேண்டுமானாலும் செய்க.

9

கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூரஎண்ணா திரவும் பகலும்நான் அவையே எண்ணும் அதுவல்லால்மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால அழகுடைத்தே.
சொற்பிரிப்பு
கண்ஆர் நுதலோய் ! கழல்-இணைகள் கண்டேன், கண்கள் களிகூர;எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும்-அது அல்லால்மண் மேல் யாக்கை விடும் ஆறும், வந்து, உன் கழற்கே புகும் ஆறும்அண்ணா! எண்ணக் கடவேனோ? அடிமை சால அழகு உடைத்தே!
உரை

விழி பொருந்திய நெற்றியை உடையவனே! தலைவனே! நின் திருவடிகள் இரண்டையும் கண் குளிரக் காணப் பெற்றேன். வேறு எதையும் எண்ணாமல் இரவிலும்  பகலிலும் யான் அந்தத் திருவடிகளையே நினைத்துக் கொண்டிருந்தேன். அவ்வாறு நினைக்காமல் உடம்பை மண்ணின் மீது கழித்து ஒழிக்கும் விதத்தையும், எப்போது உன் திருவடி சேரும் பேறு எனக்கு உண்டாகும் என்றும் எண்ணிக் கொண்டிருக்க நான் உரிமை உடையவன் அல்லன். அன்றி உரிமை உடையவன் என்று கருதினால் அது என்  அடிமைத்தனத்திற்கு அழகில்லாத செயலாகும்.

10

அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானேதிகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய்புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதந் தருளாதேகுழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே.
சொற்பிரிப்பு
அழகே புரிந்திட்டு, அடி நாயேன் அரற்றுகின்றேன்; உடையானே !திகழா நின்ற திருமேனி காட்டி, என்னைப் பணிகொண்டாய்;புகழே பெரிய பதம் எனக்கு, புராண! நீ, தந்தருளாதே,குழகா, கோல மறையோனே, கோனே, என்னைக் குழைத்தாயே !
உரை

என்னை உடையவனே! மிகப் பழமையானவனே! இளமை வடிவனே! அழகிய  வேதியனே! ஒளி பொருந்திய உனது திருமேனியைக் காட்டி என்னை உன் பணியாளனாக  ஏற்றுக் கொண்டாய். யானும் உனது திருவடிக்கு ஒப்பான தொண்டுகளைப் புரிந்தும்  இன்பம் பெறாது அதனை எதிர்நோக்கிப் புலம்புகின்றேன். உலகில் புகழத்தக்க பதவிகள்  யாவற்றினும் சிறந்த புகழத்தக்க பதவி நின் திருவடிப் பேறாகும். அந்தத் திருவடிப் பேறாகிய  பேரின்ப நிலையை எனக்கு நீ கொடுத்து அருள் செய்யாமல் என் மனம் குழையச்  செய்து விட்டாயே! இது உனக்கு அழகாகுமோ!