திருமுறை 8 · 8.032 · 11

பிரார்த்தனைப் பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்புலர்ந்து போன காலங்கள் புகுந்து நின்ற திடர்பின்னாள்உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான்அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே.
சொற்பிரிப்பு
கலந்து, நின் அடியாரோடு, அன்று, வாளா, களித்திருந்தேன்;புலர்ந்து போன காலங்கள்; புகுந்து நின்றது இடர், பின்னாள்;உலர்ந்து போனேன்; உடையானே! உலவா இன்பச் சுடர் காண்பான்அலந்து போனேன்; அருள் செய்யாய், ஆர்வம் கூர, அடியேற்கே!
உரை

நீ என்னை ஆட்கொண்ட அந்நாளில் உன் அடியாருடன் கூடிச் சும்மா மகிழ்ந்திருந்தேன்.  என் ஆயுட்காலங்கள் வீணாகக் கழிந்தன. பின்னாளில் துன்பமே நிலை பெற்றது. அதனால்  யான் வாடிப் போனேன். என்றும் கெடாத பேரின்பம் அருளும் சோதியைப் பார்க்க விரும்பிப்  பார்க்கப் பெறாது வருந்தினேன். என்னை ஆளாக உடையவனே! அடியேனுக்கு அன்பு மிகும்படி  அருள் செய்வாயாக.

2

அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமேமுடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்கடியேனுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்கஉடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே.
சொற்பிரிப்பு
அடியார் சிலர், உன் அருள் பெற்றார், ஆர்வம் கூர; யான் அவமே,முடை ஆர் பிணத்தின், முடிவு இன்றி, முனிவால், அடியேன், மூக்கின்றேன்;கடியேனுடைய கடுவினையைக் களைந்து, உன் கருணைக் கடல் பொங்க,உடையாய்! அடியேன் உள்ளத்தே ஓவாது உருக, அருளாயே.
உரை

முதல்வனே! மெய்யடியார் சிலர் உன்மேல் அன்பு மிகுதியால் நின் திருவருளைப் பெற்று  உய்ந்தார்கள். யானோ புலால் நாற்றம் நிறைந்த பிணத்தைப் போல உடம்பிற்கு ஒரு முடிவின்றி  இருக்கிறேன் . அதில் இருக்கப் பெற்ற வெறுப்பினால் அடியேன் மூப்படைகின்றேன். கடுமையான  குணமுடைய எனது கொடிய வினைகளைத் தொலைத்து உன்னுடைய அருட்கடல் அடியேன் உள்ளத்தில்  பொங்கி என்மீது பாய அடியேன் மனத்தகத்து அன்பைத் தந்து யான் உனது அருளையே  பற்றிப் பணிந்து மனமுருக அருள்வாயாக !

3

அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்தஇருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானேமருளார் மனத்தோர் உன்மத்தன் வருமால் என்றிங் கெனைக்கண்டார்வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டுமே.
சொற்பிரிப்பு
அருள் ஆர் அமுதப் பெரும் கடல் வாய், அடியார் எல்லாம் புக்கு அழுந்த,இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய்; எம்மானே !'மருள் ஆர் மனத்து ஓர் உன் மத்தன் வருமால்' என்று, இங்கு, எனைக் கண்டார்வெருளா வண்ணம், மெய் அன்பை, உடையாய்! பெற நான் வேண்டுமே!
உரை

அடியார் அனைவரும் திருவருளாகிற அமுதக் கடலில் புகுந்து திளைக்க, அடியேன்  அஞ்ஞானமென்னும் இருள் நிறைந்த இவ்வுடலைச் சுமந்து இளைத்தேன். இதனை நீ  கண்டருளுவாயாக. எம் தலைவனே! மருட்சி நிறைந்த மனத்தை உடைய ஒரு பித்தன்  வருகின்றான் என இவ்வுலகில் உள்ளவர்கள் சொல்ல அதற்கு நான் அஞ்சா வண்ணம் வீடுபேறு அடையும் மெய்யன்பைப் பெற அருளுவாயாக!

4

வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால்ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதேஅருமா மணிமுத்தேதூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே.
சொற்பிரிப்பு
வேண்டும், வேண்டும், மெய் அடியார் - உள்ளே, விரும்பி, எனை அருளால்ஆண்டாய்; அடியேன் இடர் களைந்த அமுதே! அரு மா மணி முத்தே!தூண்டா விளக்கின் சுடர் அனையாய்! தொண்டனேற்கும் உண்டாம் கொல்வேண்டாது ஒன்றும் வேண்டாது, மிக்க அன்பே மேவுதலே
உரை

நின்னை மிகவும் விரும்பி நின்ற மெய்யடியார்கள் நடுவே என்னை வைக்க  விரும்பிக் கருணையால் என்னை ஆட்கொண்டவனே! அடியேனுடைய பிறவித் துன்பத்தை  நீக்கிய அருமருந்தே! கிடைத்தற்கரிய மாணிக்கமே! முத்தே! தூண்டா விளக்கின் சுடர் போன்றவனே ! நீ விரும்பாத எதையும் நானும் விரும்பாமல் நின்பால் மிக்க அன்பு  கொள்வதே எனக்கு வேண்டும். அவ்வாறு இருக்க அருள் செய்வாயாக.

5

மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையேகாவி சேருங் கயற்கண்ணாள் பங்கா உன்றன் கருணையினால்பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே.
சொற்பிரிப்பு
மேவும் உன் தன் அடியாருள் விரும்பி, யானும், மெய்ம்மையே,காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா, உன் - தன் கருணையினால்பாவியேற்கும் உண்டாமோ - பரம ஆனந்தப் பழம் கடல் சேர்ந்துஆவி, யாக்கை, யான் எனது, என்று யாதும் இன்றி, அறுதலே.
உரை

குவளை மலரைச் சேர்ந்து விளங்கும் கயல் மீன் போன்ற கண்ணை உடைய  உமையம்மை பாகனே! உன் அடியார்கள் உன்னை வந்து அடைய வேண்டுமென்று  பெருவிருப்பம் கொண்டு உன்னை அடைந்தார்கள். யானும் அவ்வாறு, உனது அடியார் கூட்டத்துள் ஒருவனாக இருக்க வேண்டும் என்று உண்மையாகவே விரும்பித் தொழுது  வந்தேன். எனது உடல், உயிர், யான், எனது என்னும் பற்றுக்களை எல்லாம் அறவே  நீக்கிவிட்டுச் சிவானந்தம் ஆகிய பரமானந்தத்தில் சேர்ந்திருக்கும் நிலை பாவியாகிய  எனக்கும் உன் கருணையினால் உண்டாக அருள் புரிவாயாக.

6

அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும்புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானேபெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாப் பிரிவில்லாமறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே.
சொற்பிரிப்பு
அறவே பெற்றார், நின் அன்பர் அந்தம் இன்றி, அகம் நெகவும்,புறமே கிடந்து, புலை-நாயேன் புலம்புகின்றேன்; உடையானே !பெறவே வேண்டும், மெய் அன்பு; பேரா, ஒழியாப், பிரிவு இல்லா,மறவா, நினையா, அளவு இலா, மாளா, இன்ப மா கடலே !
உரை

உடையானே! நின் அன்பர்கள் இன்பத்தை மிகப் பெற்று விட்டார்கள். அவர்கள்  கூட்டத்துக்கு வெளியே பயனின்றிக் கிடந்து கீழ்த்தன்மையுடைய நாயேன் பேரின்பம்  வேண்டுமெனப் புலம்புகிறேன். இடம் பெறாது, நீங்காது, பிரிவில்லாது மறக்கவும்  நினைக்கவும் இல்லாத தொலையாத பேரின்ப சாகரமே! யானும் உன்னைப் பெறுதற்குரிய  உண்மை அன்பைக் கட்டாயம் பெற அருள்புரிவாயாக.

7

கடலே அனைய ஆனந்தம் கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ணஇடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன்உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே.
சொற்பிரிப்பு
கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ணஇடரே பெருக்கி, ஏசற்று, இங்கு, இருத்தல் அழகோ, அடி-நாயேன் ?உடையாய்! 'நீயே அருளுதி' என்று, உணர்த்தாது ஒழிந்தே, கழிந்து ஒழிந்தேன் ;சுடர் ஆர் அருளால், இருள் நீங்கச், சோதீ ! இனித்தான் துணியாயே !
உரை

முதல்வனே! கடல் போலும் பேரின்பத்தைக் கண்டவர்கள் எல்லாம் வலிதிற்பெற்று  அனுபவிக்கிறார்கள். அடிமையாகிய நாயேன் துன்பத்தையே பெற்றுத் துயருற்று இங்கு  இவ்வுலகில் இருப்பது உனக்கு அழகாகுமா? என்னை உடைய நாதனே! நான் கேளாமல்  நீயே அந்தப் பேரின்பத்தை அருளுவாய் என்று எண்ணி இதுவரை உன்னிடம் என் விருப்பத்தைத்  தெரிவிக்காமல் காலம் கழித்து ஒழிந்தேன். ஒளிவண்ணனே! இனியாவது பிரகாசம் நிறைந்த  நின் அருள் எனும் வாளினால் எனது அறியாமையைச் சேதித்து அருள் புரிவாயாக !

8

துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்டரிடைப்புகுந்துதிணியார் மூங்கிற் சிந்தையேன் சி வனே நின்று தேய்கின்றேன்அணியா ரடியா ருனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத்தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே.
சொற்பிரிப்பு
துணியா, உருகா, அருள் பெருகத் தோன்றும் தொண்டர் இடைப் புகுந்துதிணி ஆர் மூங்கில் சிந்தையேன், சிவனே! நின்று தேய்கின்றேன்;அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய்; அருள் அளியத்தணியாது, ஒல்லை வந்தருளித் தளிர் பொன் பாதம் தாராயே!
உரை

சிவபெருமானே ! நீயே ஆதரவென்று துணிவுற்று மனம் உருகி, நின் அடியார்கள்  திருவருள் பொலிவுமிக்கு விளங்குகிறார்கள். அவர்கள் நடுவே, திண்மையுள்ள கல் மூங்கிலைப்போல, உருகாத நான் இவ்வுலகில் நிலையற்றுத் தளர்வுறுகிறேன். உன்னை  நெருங்கிய உன் அடியார்கள் உன்பால் வைத்துள்ள மெய்யன்பை நானும் அடைவதற்கு  அருள்புரிவாயாக! தாமதம் செய்யாமல் விரைவில் வந்து உன் உள்ளத்தில் தளிர் போன்ற  பொன்மயமான நின் திருவடிகளை எனக்குத் தந்து அருள்புரிவாயாக.

9

தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோசீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகாபேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே.
சொற்பிரிப்பு
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய்' என்று, உன் தமர் எல்லாம்ஆரா நின்றார்; அடியேனும், அயலார் போல, அயர்வேனோ?சீர்ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா!பேர்-ஆனந்தம் பேராமை வைக்க வேண்டும், பெருமானே !
உரை

சிவபெருமானே! உன் உறவினராகிய அடியார்கள் அனைவரும் உன் அருளை  எவ்வித மீதமும் இன்றி முழுமையாக அடைந்து, அகக்களிப்போடு உன் பேரானந்தத்தைத் துய்த்து வருகின்றார்கள். ஆனால் நான் உன் அடியாரைப் போன்று இல்லாமல் ஓர் அயலவனைப் போல் உன் அருளை நுகராது இருந்து வருத்த வேண்டுமா? சிறந்த உன்  அருளால் என் மனத்தைத் திருத்தி ஆட்கொண்ட சிவலோக நாதனே, நின் பேரானந்தத்தை  என்றும் நீங்காத வண்ணம் துய்த்துக் கொண்டே இருக்கும் நிலையை எனக்கு அருளுவாயாக.

10

மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகாநானோர் தோளாச் சுரையொத்தால்நம்பி இத்தால் வாழ்ந்தாயேஊனே புகுந்த உனையுணர்ந்தே உருகிப் பெருகும் உள்ளத்தைக்கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடுவதே.
சொற்பிரிப்பு
மான் ஓர் பங்கா! வந்திப்பார் மதுரக் கனியே! மனம்நெகாநான் ஓர் தோளாச் சுரை ஒத்தால், நம்பி ! இத்தால் வாழ்ந்தாயே ?ஊனே புகுந்த உனை உணர்ந்தே, உருகிப் பெருகும் உள்ளத்தைக்கோனே! அருளும் காலம் தான், கொடியேற்கு என்றோ கூடுவதே ?
உரை

மான் போன்ற பார்வை உடைய உமையம்மை பாகனே! உன்னை வணங்குகின்ற  மெய்யன்பர்களுக்கு இனிமையான கனியை ஒத்தவனே! தலைவா! அடியேனது மனம்  இன்னும் நெகிழவில்லை. துளை (ஓட்டை) இல்லாத காய்ந்து போன சுரைக் குடுக்கை  வெள்ளத்தில் மிதக்குமே அன்றி நீரில் ஆழ்ந்து நீரை முகர்ந்து கொள்ளும் தன்மை  உடையதன்று. அதைப் போன்று அடியேன் நின் அருள் வெள்ளத்துள் ஆழ்ந்து மூழ்கித்  திளைத்து, அடங்கியும் அருளின் கொள்கலமாய் உனது பேரருளை ஏற்றும், பேரானந்தத்தில்  திளைக்க வேண்டிய வாய்ப்பையும் பெறாமல் விட்டிருக்கின்றேன். மனம் குன்றாத என்னை  இந்த நிலையில் வைத்து விட்ட நீ வாழ்ந்து விட்டாயோ? எனது உடலில் புகுந்த உன்னை  நன்றாக உணர்ந்து, உருகி, அதனால் ஆக்கத்தை அடையும் மனத்தை நீ அருளும் காலம்  கொடியேனாகிய எனக்கு என்று கூடும்? சொல்லி அருள்வாயாக.

11

கூடிக்கூடி உன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாராவாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோஊடி ஊடி உடையாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்குஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே.
சொற்பிரிப்பு
கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார், சிரிப்பார், களிப்பாரா ;வாடி வாடி, வழி அற்றேன், வற்றல் மரம் போல் நிற்பேனோ ?ஊடி ஊடி, உடையாயொடு கலந்து, உள் உருகிப், பெருகி, நெக்குஆடி-ஆடி, ஆனந்தம் அதுவே ஆக, அருள் கலந்தே!
உரை

நின் மெய்யடியார் பலரும் கூடிக்கூடிக் கூத்தாடுபவர்களாகவும், மகிழ்ந்து ஆனந்த  அனுபவத்தில் செருக்கி நிற்க, யான் மட்டும் காய்ந்த மரம் போல வாடிவாடி உய்யும்  வழியற்று இருப்பேனோ? உன்னோடு பலகால் ஊடியும் கூடியும் இரண்டறக் கலந்து உள்ளம் உருகி, ஆனந்தம் பெருகி நெகிழ்ந்து பரவசமாய் ஆடிப்பாடி ஆனந்தமே யானாக  நின் திருவருளில் கலந்து நிற்பேனோ? நீ திருவருள் புரிவாயாக!