திருமுறை 8 · 8.030 · 7

திருக்கழுக்குன்றப் பதிகம்

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கழுக்குன்றம்
நாடு
தொண்டைநாடு

1

பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
சொற்பிரிப்பு
பிணக்கு இலாத பெருந்துறைப் பெருமான் ! உன் நாமங்கள் பேசுவார்க்கு,இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும்; துன்பமே துடைத்து; எம்பிரான் !உணக்கு இலாதது ஓர் வித்து, மேல் விளையாமல், என் வினை ஒத்த பின்,கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே !
உரை

நல்லார் பொல்லார் என்ற வேறுபாடு நோக்காது எல்லார்க்கும் ஒப்பப் பெய்யும்  மழை போல, அன்பர்க்கும், வன்பர்க்கும் அவரவர் வினைக்குத் தக்க அருள்மாரி  பெய்துவரும் மாறுபாடில்லாதவனே! திருப்பெருந்துறையில் விளங்கும் பெருமானே ! உன்  திருநாமங்களையே பேசும் மெய்யன்பர்களுக்கு உண்டாகும் துன்பங்களை அறவே  துடைத்து அதனால் விளையும் இணையற்ற இன்ப வடிவாக இருப்பவனே! ஈரம் உலர்ந்து  போகாத தனித்தன்மையுடைய பிறவி விதையானது மேலும் விளையாமல் எனக்கு  இருவினை ஒப்பு வந்த பிறகு அளவில் அடங்காத் திருவடிவத்தைத் திருக்கழுக்குன்றத்தே  நீ காட்டி அருளினாய்.

2

பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனேசட்டநேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங் கடையாய வெங்கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
சொற்பிரிப்பு
பிட்டு நேர்பட, மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே!சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்;சிட்டனே சிவலோகனே! சிறு நாயினும் கடை ஆய வெம்கட்டனேனையும் ஆட்கொள்வான் ; வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!
உரை

மதுரை மாநகரில் பிட்டு செய்து விற்று வந்த வந்தி எனப்படும் பிட்டு வாணிச்சியிடம்  கூலி ஆளாய்ச் சென்று, அவள் கொடுத்த பிட்டை உண்டு, தன் தலையிலே மண்ணைச் சுமந்து  திருவிளையாடல் புரிந்தவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அன்பர்கள்பால் பேரன்பு  (பித்து) கொண்டவனே! உனது கட்டளைக்குட்படாத குறைவுடைய யான் உன்னைத்  தானாக வந்து அடையவில்லை. சிறந்த ஒழுக்க நெறியானவனே! சிவலோக நாதனே ! இழிந்த நாயினும் கொடிய துன்பமுடைய என்னையும் அடிமை கொண்டருளும் பொருட்டு  திருக்கழுக்குன்றத்து எழுந்தருளி உன் திருக்கோலம் காட்டி அருளினை. என்னே உனது பேரருள் ?

3

மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறைவிலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்இலங்குகின்ற நின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியேகலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
சொற்பிரிப்பு
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறைவிலங்கினேன்; வினைக்கேடனேன், இனி மேல் விளைவது அறிந்திலேன்,இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும், வைப்பிடம் இன்றியேகலங்கினேன்; கலங்காமலே, வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே !
உரை

பிறவித்துயரால் கலங்கிய என் கண்ணீரைத் துடைத்து, என் அறியாமைக்கு ஏதுவாகிய ஆணவ மலத்தையும் வலியிழக்கச் செய்த பெருந்துறைப் பெருமானாகிய  உன்னை விட்டு நீங்கினேன். நான் தீவினை எனும் கெடுதி உடையவன்; இனி நிகழப்  போகும் வினைப்பயன்களையும் அறியாதவன். (மனம் பரிசுத்தமின்மையால்) அறிவில்  விளங்குகின்ற உன் செய்ய பொற்பாதங்களிரண்டையும் வைத்து வழிபடும் இடமின்றி  மருண்டேன். அங்ஙனம் மயங்கா வண்ணம் திருக்கழுக்குன்றத்தில் நின் திருவருள்  கோலத்தைக் காட்டி அருளினாய்.

4

பூணொணாத தொரன்பு பூண்டு பொருந்தி நாள்தொறும் போற்றவும்நாணொணாத தொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்பேணொணாத பெருந்துறைப் பெருந் தோணிபற்றி யுகைத்தலுங்காணொணாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
சொற்பிரிப்பு
பூண்-ஒணாதது ஓர் அன்பு பூண்டு, பொருந்தி, நாள்தொறும் போற்றவும்நாண் ஒணாதது ஓர் நாணம் எய்தி, நடுக் கடலுள் அழுந்தி, நான்பேண் ஒணாத பெருந்துறைப் பெரும் தோணி பற்றி உகைத்தலும்,காண் ஒணாத் திருக்கோலம், நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே !
உரை

யாவராலும் எளிதாகக் கடைபிடிக்க முடியாத ஒப்பற்ற பேரன்பு பூண்ட உனது சீரடியார்கள் உனது திருவடியில் ஒரு நெறிய மனம் வைத்து நாள்தோறும் வணங்கி வருகிறார்கள். ஆனால் நானோ அதைக் கண்டு வெட்கமுடையவனாய் அவர்களைப்  போன்று போற்றாது பிறவியாகிய துன்பக்கடலில் அழுந்தினேன். அவ்வாறு அழுந்தித்  தவிக்கும்பொழுது திருப்பெருந்துறைப் பெருந்தோணி ஒன்று கிடைத்தது. அதனைப் பற்றிச் செலுத்தினேன். திருக்கழுக்குன்றம் வந்து சேர்ந்தேன். கழுக்குன்றிலே காண்பதற்கு மிக  அருமையான உனது திருக்கோலத்தை நீ வந்து காட்ட நான் அதைக் கண்டு மகிழ்வுற்றேன் .  உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே!

5

கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக் கொண்டலேசீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணிஞாலமே கரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
சொற்பிரிப்பு
கோல மேனி வராகமே! குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே !சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி !ஞாலமே கரி ஆக, நான்உனை நச்சி நச்சிட வந்திடும்காலமே! உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே !
உரை

பன்றிக்குட்டிக்கு முலையருளத் தோன்றிய அழகிய திருமேனியுடைய  பன்றியுருவனே! (வராகம் என்றால் பொன் என்ற பொருள் கொண்டு பன்றி என்ற பொருள் வராமல் பொன் போன்ற திருமேனி உடையவனே ! என்றும் பொருள் கொள்ளுவர்) திருப்பெருந்துறையில் வீற்றிருந்த நற்பண்பாகிய அருள் மேகமே! நல் ஒழுக்கமறியாத என்  உள்ளத்தில் வைக்கப்பட்ட தலைமணி போன்றவனே! உலகம் சாட்சியாக நான் உன்னை  விரும்ப, நீ என்னை விரும்பி எழுந்தருளிய கால வடிவானவனே ! உன்னை நான் துதிக்கும்படித்  திருக்கழுக்குன்றத்தில் உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய் ! உன்  பெருங்கருணை இருந்தவாறு என்னே !

6

பேதம் இல்லதோர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமேஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
சொற்பிரிப்பு
பேதம் இல்லது ஓர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே !ஏதமே பல பேச, நீ எனை ஏதிலார் முனம், என் செய்தாய் ?சாதல் சாதல், பொல்லாமை அற்ற, தனிச் சரண் சரண் ஆம் எனக்காதலால் உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே !
உரை

திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அருள் ஒளி வீசிவரும் கருணைக் கடலே ! உன்னையன்றிப் பிற தெய்வம் பேணாமையாகிய மாசில்லாத கற்பு நெறியை அடியேனுக்குக்  கொடுத்த அருள் வெள்ளமே ! கற்புடைய ஒருத்தியை அயலார் குறை சொல்லும்படி  தலைவன் அவளைப் பிரிந்து உறைதல் கூடாது. பிரிதலும் ஆகாது. அவ்வாறு இருக்கத்  திருப்பெருந்துறையில் அன்று நீ என்னைப் பிரிந்து ஏனையரோடு சிவலோகமாகிய இன்ப  உலகத்திற்குச் சென்று விட்டாய். அதனால் அயலவர் அவரவர் வாயில் வந்தபடி என்னைப்  பலவாறாகக் குறைவாகப் பேசினார்கள். இந்த நிலைக்கு நீ என்னை விட்டுவிடலாமா? ஏன்  அவ்வாறு செய்தாய் ? இருந்தாலும் நான் உன்னுடைய திருவடியே அடைக்கலமாகக்  கொண்டுள்ளேன். உனது திருவடியானது மரணமும், மரண காலத்தில் விளையும் தீமையும்  தீங்கும் இல்லாத ஒப்பற்ற திருவடி அல்லவா! ஆதலால் உன் திருவடியே எனக்குப்  புகலிடமாகும் என்று உணர்ந்து உன்னைப் புகழ்ந்து பாடினேன். அது போழ்து, நீயாகவே  திருக்கழுக்குன்றம் வந்து உனது ஒப்பற்ற திருவுருவத்தை அடியேனுக்குக் காட்டி என்னை  மகிழ்வித்தாய். என்னே உனது பெருங்கருணை இருந்தவாறு !

7

இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம் செய்த ஈசனேமயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனைக்கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.
சொற்பிரிப்பு
இயக்கிமார் அறுபத்து நால்வரை எண் குணம் செய்த ஈசனே !மயக்கம் ஆயது ஓர் மும்மலப் பழ வல் வினைக்குள் அழுந்தவும்,துயக்கு அறுத்து, எனை ஆண்டுகொண்டு, நின் தூய் மலர்க் கழல் தந்து, எனைக்கயக்க வைத்து, அடியார் முனே வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே !
உரை

தேவகணத்தவருள் ஒரு வகையினராகிய 'இயக்கர்' என்பவருள் பெண்பாலராகிய  64 இயக்கிமார்கள் உத்தரகோசமங்கையில் சிவபெருமானை ஒரு நெறிய மனம் வைத்து  இடைவிடாது தியானித்து வழிபட்டு வந்தனர். அவர்களுடைய ஆன்ம குணங்கள் அழியவும்  இறைகுணங்கள் எட்டனையும் அடையப் பெறவும் சிவபெருமான் ஞானோபதேசம் செய்து  அருள் புரிந்தார். அவ்வாறு ஆட்கொண்ட சிவபெருமானே! அறியாமைக்கேதுவாகிய  இருள், வினை, மருள் என்ற மும்மலங்களினால் உழலும் பண்டை வினைப் பயனில் யான்  ஆழ்ந்து கிடந்தேன். யான்பட்ட துன்பம் கண்டு இரங்கி அத்தளர்ச்சியைப் போக்கி நின் தூய  பூங்கழல்களைக் கொடுத்தருளினாய். இவையே மலச்சேற்றிலிருந்து கரையேறத்  துணையாம் என்று உதவினாய். அடியேனை இதுகாறும் கசக்க வைத்தாய். இப்பொழுது  அடியாரின் முன்னிலையில் குருவாக வந்து கழுக்குன்றில் எனக்கு உனது நின்ற  திருக்கோலம் காட்டினாய் .