திருமுறை 8 · 8.028 · 10

வாழாப்பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனேஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால்வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.
சொற்பிரிப்பு
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே ! பற்று நான்மற்று இலேன் கண்டாய்;சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே!ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்?- ஆண்ட நீ அருளிலை யானால் ,வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று அருள் புரியாயே.
உரை

பூமி முதல் ஆகாயம் வரையிலுமான எல்லாப் பூதங்களிலும் கலந்து விளங்கும்  எம்பெருமானே! உன்னைத் தவிர எனக்கு வேறு பற்றில்லை என்பதை நீ அறிவாய் .  புகழோடு விளங்குபவனே ! சிவலோக மன்னனே! என்னை ஆட்கொண்ட நீயே எனக்கு  அருளவில்லையானால், இக்குறையை நான் யார்க்கு எடுத்துச் சொல்வேன்? யாரிடம் நான்  நொந்து கொள்வேன்? கடல்சூழ்ந்து பரந்த இவ்வுலகில் என்னால் இனியும் வாழ இயலாது. (நீ அருளாவிடில் உனக்குத் தானே பழிவரும்? ஆதலால்) என்னை உன்னிடத்தில் 'வா' என்று அழைத்து அருள்புரிய வேண்டும்.

2

வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ்செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனேஎம்பெருமானே என்னையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே.
சொற்பிரிப்பு
வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே ! மற்று நான் பற்று இலேன் கண்டாய்;உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும்செம்பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!எம்பெருமானே! என்னை ஆள் வானே! என்னை, நீ கூவிக் கொண்டருளே.
உரை

ஒன்றுக்கும் ஆகாத என்னை ஆட்கொண்ட இரத்தினமே! நான் உன்னைத் தவிர  வேறு எதனிடத்தும் பற்று இல்லாதவன். தேவர்களும் அறியாத தனிமுதல்வனே! தம்  அறிவால் அளவிட்டுணர முயன்ற அயன், அரி ஆகியோரின் அறிவின் எல்லையைத் தாண்டி, எல்லா உலகங்களையும் ஊடுருவி அவற்றுக்கும் அப்பால் நிற்கின்ற சிவந்த திருமேனிப்  பெருமானே ! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையில் வாழும் சிவபெருமானே! என்னை  ஆள்பவனே ! (நான் உன்னைவிட்டு விலகித் தூரத்தில் நின்றாலும், கருணையால்) நீ என்னை  'வா' என்று கூவி அழைத்து அருள் செய்வாயாக !

3

பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனேஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதிவாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.
சொற்பிரிப்பு
பாடி மால் புகழும் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;தேடி, நீ ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே !ஊடுவது உன்னோடு; உவப்பதும் உன்னை; உணர்த்துவது உனக்கு; எனக்கு உறுதிவாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று, அருள் புரியாயே.
உரை

திருமால் பாடித் துதிக்கும் உன்னுடைய திருவடிகளே அல்லாமல் வேறு ஆதரவு  உடையவன் அல்லன் யான். சிவலோக மன்னனே ! நீயாகவே என்னைத் தேடி வந்து ஆட்கொண்டாய் . திருப்பெருந்துறையில் விளங்கும் சிவபெருமானே! நான் பிணங்குவதும்  உன்னோடுதான். மகிழ்வதும் உனைக் கண்டுதான். எனக்கு உறுதி அறிவிப்பது உன்  பொறுப்பு தான். வாட்டமடைந்த நான் இவ்வுலகில் வாழ மாட்டேன். உன்பால் வருக என்று அருள் செய்வாயாக !

4

வல்லைவாளரக்கர் புரமெரித்தானேமற்றுநான் பற்றிலேன் கண்டாய்தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனேஎல்லைமூவுலகும் உருவியன் றிருவர்காணும்நாள் ஆதியீ றின்மைவல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.
சொற்பிரிப்பு
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே! மற்று நான் பற்று இலேன் கண்டாய் ;தில்லை வாழ் கூத்தா! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!எல்லை மூ-உலகும் உருவி, அன்று, இருவர் காணும்நாள், ஆதி, ஈறு, இன்மைவல்லையாய் வளர்ந்தாய்; வாழ்கிலேன் கண்டாய்; ‘வருக' என்று, அருள் புரியாயே.
உரை

கொடிய வாளினை உடைய அசுரர்களது திரிபுரத்தை விரைவில் எரித்தவனே! தில்லையில் வாழும் கூத்தப்பிரானே! சிவலோக மன்னனே ! திருப்பெருந்துறையில்  உறைகின்ற சிவபெருமானே ! முன்னொரு காலத்து, அயனும் அரியும் அடிமுடி தேடிய  போது விண், நிலம், பாதாளம் எனும் எல்லைகளை உடைய மூவுலகங்களையும் ஊடுருவிக்  கடந்து, முதலும் முடிவும் இல்லாதவாறு வளர்ந்தவனே! எனக்கு வேறு பற்று ஒன்றும்  இல்லை. இவ்வுலகில் நான் வாழமாட்டேன். 'வருக' என்று அருள்புரிவாயாக.

5

பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனேஎண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றிவை நின்கணே வைத்துமண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.
சொற்பிரிப்பு
பண்ணின் நேர்மொழியாள் பங்க ! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய் ;திண்ணமே ஆண்டாய்; சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே !எண்ணமே உடல், வாய், மூக்கொடு செவி, கண், என்று இவை நின் கணே வைத்துமண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று அருள் புரியாயே.
உரை

பண்களை ஒத்த மொழியுடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டவனே !  நான் உன்னையன்றி வேறு ஆதரவில்லாதவன் . உறுதியாக என்னை ஆட்கொண்டாய்.  திருப்பெருந்துறை வாழ் சிவபெருமானே ! அந்தக்கரணம் என்று சொல்லப்படுவதும், எந்த  ஒரு பொருளையும் அறிவதற்கு உரிய ஆற்றல் கொண்ட மனத்தையும் (எண்ணத்தையும்)  பஞ்சேந்திரியங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவைகளையும் நின்பால்  வைத்து விட்டேன். அதன்பின் எவ்வாறு நான் மண்ணுலகத்தில் வாழ முடியும் .  வாழ முடியாது. வாழ மாட்டேன். ஆதலால், உன்பால் ' வருக' என்று அருள் புரிவாயாக !

6

பஞ்சின்மெல்லடியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனேஅஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்தவஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.
சொற்பிரிப்பு
பஞ்சின் மெல் அடியாள் பங்க ! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;செஞ்செவே ஆண்டாய்; சிவ புரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே !அஞ்சினேன் நாயேன்; ஆண்டு, நீ அளித்த அருளினை, மருளினால் மறந்தவஞ்சனேன், இங்கு வாழ்கிலேன் கண்டாய்; ‘வருக' என்று, அருள் புரியாயே.
உரை

பஞ்சினும் மென்மையான திருவடிகள் கொண்ட உமாதேவியாரை ஒருபாகமாக உடையவனே! உன்னையன்றி எனக்கு வேறு துணையில்லை (என்னிடம் எத்துணையோ  குறைகளிருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது) நீ என்னைச் செம்மையாக  ஆட்கொண்டாய். சிவலோக மன்னனே! திருப்பெருந்துறையில் வாழும் சிவபெருமானே ! அவ்வாறு ஆட்கொண்டு நீ அளித்த கருணையை அறியாமையால் மறந்த வஞ்சகனாகிய நாய்  போன்றவனாகிய நான் அஞ்சுகின்றேன். இவ்வுலகில் வாழமாட்டேன். வருவாய் என்று  அழைத்து அருள்புரிவாயாக.

7

பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனேகருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியாமருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்வருக என்றருள் புரியாயே.
சொற்பிரிப்பு
பருதி வாழ் ஒளியாய் ! பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;திருஉயர் கோலச் சிவ புரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே!கருணையே நோக்கிக் கசிந்து, உளம் உருகிக் கலந்து, நான் வாழும் ஆறு அறியாமருளனேன், உலகில் வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று, அருள் புரியாயே.
உரை

சூரியனின் ஒளிக்குக் காரணமாய் விளங்குகின்ற ஒளிவடிவானவனே ! (சூரிய ஒளி  கண் ஒளிக்கு ஆதாரம் ஆவதைப்போல, உன் திருவடியே எல்லாவற்றிற்கும் ஆதாரம்  என்பதை உணர்ந்து உன்னைப் பற்றத் தெரியாத எனக்கு ) உன் திருவடிகளையன்றி வேறு  பற்று ஒன்றும் இல்லை. ஞானமே உயர்ந்த வடிவினையுடைய சிவலோக மன்னனே!  திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! நான் உன் திருவருளையே எதிர்நோக்கி  வாழ வேண்டியவன். அவ்வாறு செய்யவில்லை. அதற்காக மனம் கசிந்து உருக வேண்டியவன் உருகவில்லை. அவ்வருளோடு கலந்து வாழக்கூடிய வகையறியாத  மயக்கம் உடையவன் நான். ஆதலால் இவ்வுலகில் இனி நான் வாழ மாட்டேன்.  (மயக்கம் உடையவனாயினும்) என்னை 'வருக' என்று அழைத்து அருள்புரிவாயாக!

8

பந்தணை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனேஅந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே ஆரமுதே அடியேனைவந்துய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.
சொற்பிரிப்பு
பந்து அணை விரலாள் பங்க ! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய் ;செம் தழல் போல்வாய், சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே !அந்தம் இல் அமுதே ! அரும் பெரும் பொருளே! ஆர் அமுதே ! அடியேனைவந்து உய, ஆண்டாய்; வாழ்கிலேன் கண்டாய் ; 'வருக' என்று, அருள் புரியாயே.
உரை

பந்து போலும் உருண்ட விரல்களையுடைய உமையம்மை பாகனே! உன்னையன்றி  வேறு துணை இல்லாதவன் யான் ! செவ்விய அனல் போலும் திருமேனி உடையவனே!  சிவலோக மன்னனே ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! முடிவில்லா நித்தியனே ! பெறுதற்கரிய பொருளே! கிடைத்தற்கு அரிய சாவா மருந்தே! அடியேன் உய்யும் குருவாய்  வந்து ஆட்கொண்டவனே! இவ்வுலகில் யான் வாழ மாட்டேன்! வருக என்று அருள் புரிவாயாக !

9

பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனேமூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானேமாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.
சொற்பிரிப்பு
பாவ நாசா , உன் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;தேவர் தம் தேவே, சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே !மூ உலகு உருவ, இருவர் கீழ்மேலாய் முழங்க, அழலாய் நிமிர்ந் தானே!மா உரியானே ! வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று, அருள் புரியாயே.
உரை

பாவங்களை அழிப்பவனே ! தேவர்களுக்கும் தேவனே ! உன் திருவடியன்றி வேறு  ஆதரவில்லாதவன் யான் . சிவலோக மன்னனே ! திருப்பெருந்துறையில் உறையும்  பெருமானே ! அயன், மால் எனும் இருவரும் மேலும் கீழுமாய்ச் சென்று தேடும்படி மூவுலகும்      ஊடுருவி ஒளிப்பிழம்பாய் உயர்ந்து நின்றவனே ! யானைத் தோல் போர்த்தவனே ! இவ்வுலகில் யான் வாழ மாட்டேன். நீ என்னை வருக என அருள் செய்வாயாக !

10

பழுதில்தொல் புகழாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனேதொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.
சொற்பிரிப்பு
பழுது இல் தொல் புகழாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;செழுமதி அணிந்தாய், சிவபுரத்து அரசே ! திருப்பெருந்துறை உறை சிவனே !தொழுவனோ பிறரைத் துதிப்பனோ? எனக்கு ஓர் துணை என நினைவனோ? சொல்லாய்;மழ விடை யானே! வாழ்கிலேன் கண்டாய்; 'வருக' என்று, அருள் புரியாயே.
உரை

குற்றங்கள் இல்லாத பழமையான புகழ் உடைய உமாதேவியைப் பாகமாகக்  கொண்டவனே! உன்னையன்றி வேறு ஆதரவில்லாதவன் யான். செழுமையான இளமதியை  அணிந்தவனே! சிவபுரத்தரசனே! திருப்பெருந்துறையுறை சிவனே! உன்னைத் தவிர வேறு  தேவர்களை வணங்குவேன் அல்லன்; வாழ்த்துவேன் அல்லன்; எனக்கு உதவி எனக்  கருதுவேன் அல்லன்; இதனை நீ அறிவாய்! காளையை வாகனமாகக் கொண்டவனே! இவ்வுலகில் நான் வாழ்ந்திருக்க மாட்டேன். உன்பால் வருக என அருள் புரிவாயாக !