திருமுறை 8 · 8.026 · 10

அதிசயப் பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதேசெப்பு நேர்முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனைஒப்பிலாதான உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்துஅப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
சொற்பிரிப்பு
வைப்பு, மாடு, என்று, மாணிக்கத்து ஒளி என்று, மனத்திடை உருகாதேசெப்பு நேர் முலை மடவரலியர் - தங்கள் திறத்திடை நைவேனை -ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள்-மலர்த் திருப்பாதத்துஅப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே !
உரை

சிவபெருமான் ஒருவனே நாம் தேடி வைத்துள்ள சேம நிதிக்கு ஒப்பாக விளங்கி  அருள் செய்பவன். அவன் மாணிக்கத்தின் ஒளி போன்றவன். அவன் எந்த ஒரு பிற  பொருளுக்கும் நிகர் இல்லாத பெரியோன். பிறிதொரு பொருளுக்கு உவமானமாகச்  சொல்லப்படும் தன்மைக்கும் அப்பாற்பட்டவன். ஒளி பொருந்திய மலர் போன்ற  திருவடிகளை உடையவனும் அவனே. இப்பேர்ப்பட்ட என் தந்தை போன்ற  சிவபெருமானை எனது உள்ளத்தில் எக்காலும் எண்ணி எண்ணி மனம் உருக வேண்டிய  அடியேன் அவ்வாறு உருகாமல் இருந்து விட்டேன். உருகாமல் மட்டும் இருக்கவில்லை;  இளமாதரது கிண்ணம் (செப்பு) போன்ற மார்பிடம் மனத்தை நைவித்து மயங்கி நிற்கின்றேன். இப்பேர்ப்பட்ட இழிதகையேனாகிய அடியேனைச் சிவபெருமான் "நான் கெட்டது அசுத்த மாயையின் சகவாச தோசத்தால் ஏற்பட்டது" என்று எண்ணி என்னை நல்வழிப்படுத்தி, தனது அடியார்களாகிய நல்லாரோடு சேர்த்து ஆண்டு கொண்டு அருளிய அதிசயம் கண்டேன்.

2

நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன்ஏதமே பிறந்திறந்துழல்வேன்றனை என்னடி யானென்றுபாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்றஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
சொற்பிரிப்பு
நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவ ரொடும் கூடேன்;ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன்-தனை - 'என் அடியான்' என்றுபாதி மாதொடும் கூடிய பரம்பரன், நிரந்தரமாய் நின்றஆதி-ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
உரை

எம் தலைவனாகிய சிவபெருமான் அனாதியாகவே என்றும் உள்ள பொருளாய் விளங்கும் முதல்வன். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிற்கின்ற பொருளும் ஆவான். அவன் மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும் (பரம்பரன்), இடையீடு  இல்லாதிருப்பவனும் (நிரந்தரம்) ஆவான். அவன் தன் திருமேனியின் இடப்பாகத்தில் உமா தேவியாரைக் கொண்டு விளங்குபவன். அடியேன் வேதங்களிலும், சிவாகமங்களிலும் கூறப்  பெற்றுள்ள நீதிகளை மனத்தாலும் எண்ணாதவன். அந்த நீதிகளை உணர்ந்து செயல்படும்  அடியார்களோடு கூடிப்பழகி ஒழுகவும் செய்திலேன். காற்றாடியும், சக்கரமும் போல மாறி மாறித் திரும்பவும், திரும்பவும் பிறந்தும், இறந்தும், துன்பத்திலே உழன்று கிடக்கின்றேன்.  சிவபெருமான், இப்பேர்ப்பட்ட எனது அகப்பற்றையும், புறப் பற்றையும் நீக்கி, எனது  அறியாமையையும் அகற்றி, எனது ஆணவ மலத்தையும் வலி இழக்கச் செய்து, சிவமயமாக விளங்கும்  சிவனடியார் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட அதிசயம் புரிந்ததை அடியேன் கண்டேன்.

3

முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தைதன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதியதுவைத்தஅன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
சொற்பிரிப்பு
முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண் அது உடை எந்தை,தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன், எளியவன் அடியார்க்குப்,பொன்னை வென்றது ஓர் புரிசடை முடி-தனில் இளமதி - அது வைத்தஅன்னை, ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
உரை

எங்கள் தந்தை போன்றவனாகிய சிவபெருமான் சோம, சூரிய, அக்கினி ஆகிய  மூன்று கண்களை உடையவன் (இவை மூன்றும் காலக் கருவியாகிற சூரிய சந்திரர்களுக்கு  ஒளி தருவனவாயும், அக்கினிக்கு வலிமையும், சுடுகின்ற ஆற்றலும் அளிப்பதாயும், யாக சாட்சியாகவும், யாகாக்கினிக்கு மூலமாயும் அமைந்தவை என்பது சிவாகமக் கருத்து. ) பதமுத்தியிலும், பதவிகளிலும் இருப்பவர்களாகிய அயன் முதல் அனந்தாதியர் முடிய எத்தகையவராலும் அவன் அறிதற்கு அரியவன். ஆனால், சிவன் ஒருவனே தியானிக்கத் தக்கவன் என்பதை உணர்ந்து, அதற்குரிய உபாயங்களில் நின்று, உபதேசம் பெற்று,  ஐந்தெழுத்து அருமறை வழிநின்று சிவஞானம் பெற்ற தம் அடியார்கள் அறிந்து  அநுபவிப்பதற்கும் எளியனாய் உள்ளவன். இளம்பிறை (மூன்றாம் பிறைச் சந்திரன்) செய்த மாபாதகங்களை மறந்து, அதனை இரட்சித்து, தாயன்பு காட்டிப் பேரருள் செய்து பொன் ஒளியினும் மேம்பட்ட தனது ஒப்பற்ற சடாமுடியில் வைத்துக் கொண்ட சிவபெருமான் தாய்  போன்று விளங்குகின்றான். நான் முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் நசிக்கும்படிச் செய்து, தவம் மிக்காராகிய தன் அடியவர் கூட்டத்தில், வினையே மிக்கவனாகிய என்னையும்  அவன் சேர்த்தருளிய அதிசயம் கண்டோமே.

4

பித்த னென்றெனை உலகவர் பகர்வ தோர்காரணம்இதுகேளீர்ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும்உபாயம தறியாமேசெத்துப் போய்அருநரகிடை வீழ்வதற்கொருப்படு கின்றேனைஅத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டியஅதிசயங் கண்டாமே.
சொற்பிரிப்பு
பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம்-இது; கேளீர்;ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமேசெத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனைஅத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே
உரை

உலகத்தவர் என்னைப் பித்தன் என்று கூறும் காரணத்தினைச் சொல்லுகின்றேன்  கேளுங்கள். இறைவனது திருவருளோடு மனமொத்து நடந்து, அவ்வருளை விரைந்து  எய்தும் உபாயம் அறியாதவன் யான்; ஆகவே வீணாக இறந்து கொடிய நரகத்தில் வீழ  இருந்த அடியேனை என் அத்தனாகிய இறைவன் ஆட்கொண்டான். இவ்வாறு அருளித் தன்  அடியார் கூட்டத்தில் சேர்ப்பித்த இவ்வதிசயம் யாம் கண்டோமே.

5

பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன்குரவு வார் குழலார் திறத்தே நின்று குடிகெடு கின்றேனைஇரவு நின்றெரி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்றஅரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
சொற்பிரிப்பு
பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்;குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடிகெடு கின்றேனைஇரவு நின்று எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்றஅரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
உரை

எம் தலைவனாகிய சிவபெருமானது புகழ்களைச் சொல்லித் துதிப்பவர்கள் பக்கம் சென்று சேர மாட்டாதவன் யான். நிலப்பூ, நீர்ப்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூ (மரக் கொம்புகளில் தோன்றும் பூ (Flowers on branches) போன்ற பல மலர்களைப் பறித்துக் கொணர்ந்து  சிவபூசை செய்யேன். குரவ மலர் அணிந்த நீண்ட கூந்தலை உடைய பெண்கள் சார்பில் நின்று  பிழைப்புக்கே கேடு தேடுகின்றவன் யான். இத்தகைய என்னை, பேரூழிக்காலத்து இரவிலே  ஊழித்தீயில் நின்று ஓங்காரத் தாண்டவம் புரிகின்ற எம் இறைவனும், தீக்கொழுந்து போலும்  சிவந்த சடையிலே விளங்குகின்ற பாம்புகளை அணிந்தவனுமாகிய சிவபெருமான், ஆட்கொண்டு,  தன் அடியார்களோடும் கூட்டி வைத்த அதிசயம் அறிந்தோமே.

6

எண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலேநண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதேமண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படு கின்றேனைஅண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
சொற்பிரிப்பு
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்; என் ஏழைமை அதனாலேநண்ணிலேன் கலை ஞானிகள்-தம்மொடு; நல் வினை நயவாதே,மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படு கின்றேனை,அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
உரை

எனது அறியாமையினால் சிவபெருமானுடைய திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை  நினைந்திலேன். கலை ஞானத்தையும் நண்ணிலேன் . சிவஞானியர்களோடு கூடி, புண்ணியங்களாகிய  நற்செயல்களையும் செய்ய மாட்டேன். இம்மண்ணுலகில் பிறந்து, இறந்து மண்ணோடு மண்ணாகப்  போவதற்கு இருக்கின்றேன். இத்தகைய என்னைப் பெருமையில் சிறந்தவனாகிய சிவபெருமான்  ஆட்கொண்டருளித் தன் அடியார்களோடு கூட்டுதலாகிய பேரருளைச் செய்தான்.            இது அதிசயம் அன்றோ ? இந்த அதிசயத்தைக் கண்டேன்.

7

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரைஇத்தை மெய்யெனக் கருதிநின்று இடர்க்கடற்சுழித்தலைப் படுவேனைமுத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதிஅத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
சொற்பிரிப்பு
பொத்தை ஊன் சுவர்; புழுப்பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க்கூரை;இத்தை, மெய்எனக் கருதி நின்று, இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனைமுத்து, மாமணி, மாணிக்க, வயிரத்த, பவளத்தின் முழுச் சோதி,அத்தன்-ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
உரை

எனது உடம்பு ஒன்பது துவாரங்களை உடையது. பல மயிர்த் துவாரங்களையும்  கொண்ட ஓட்டைகளையும் உடையது. ஊனாலாகிய சதையைச் சுவராக உடையது.  புழுக்கள் பொதிந்து கிடப்பதால் உளுத்துப் போனதும், நிணநீர் கசிந்து வடிகின்றதுமான  நிறையற்ற தோலினால் ஆகிய கூரையைக் கொண்டது. அழிந்து போகும் இந்த உடம்பை  நிலைத்த பொருளாக எண்ணித் துன்பக் கடலின் சுழியில் அகப்பட்டுள்ளேன் .  இப்பேர்ப்பட்ட என்னைச் சிவபெருமான் ஆட்கொண்டு அருள் செய்தான். அவன்  எவ்வாறுள்ளான் என்பது தெரியுமா ? முத்து, வயிரம் போன்றவற்றின் ஒளி போன்று விளங்கும்  திருநீற்று ஒளி பிரகாசிக்கின்ற சோதியாய்த் தோன்றுபவன். மாணிக்கம், பவளம் என்பவற்றின்  ஒளி போன்ற திருமேனி உடையவன். இப்பேர்ப்பட்ட அருட்பெரும் சோதியாகிய சிவபெருமான்  என்னை ஆட்கொண்டு தன் அடியார் கூட்டத்தோடு சேர்த்துக் கொண்ட அதிசயம் கண்டோம்.

8

நீக்கி முன்னென்னைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்துநோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத்தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதிஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
சொற்பிரிப்பு
நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை, குரம்பையில் புகப் பெய்து;நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்துத்தூக்கி முன் செய்த பொய் அறத்துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதிஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
உரை

சிவபெருமானே! நீ என்னை ஆதியில் உன்னிடமிருந்து பிரிவித்தாய் (இவர் முன்பு திருக்கயிலையில் உள்ள சிவகணநாதர்களுள் ஒருவராய் இருந்து இறைவனது ஆணையாலே  இவ்வுலகில் தோன்றியவர் என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற்புரணம் கூறுகின்றது. இதை 'முன் என்னைத் தன்னொடு நில்லாவகை நீக்கி' என்பது தெளிவாகக் காட்டுகிறது).  பிரிந்தபின் பிறவியிற் புகுவித்தாய். இந்த உடம்பினுள் புகுந்த பின்னர் யான்  ஐம்பொறிகளின் துணைக் கொண்டு புலன்களைத் துய்த்துப் போகமே பெரிதெனக் கருதி பிறவிக்கடலின் கரை காணாது தவித்துக் கொண்டிருந்தேன். என் அறியாமைக்கு இரங்கி  என்னை உனது திருவடியில் சேர்க்கத் திருவுளங் கொண்டு குருவாக வந்து திருவருள்  நோக்கம் புரிந்து, நுண்ணியனவும், கைநொடியில் அமைந்தனவும் ஆகிய சின்முத்திரையைச்  சொல்லாகச் சொல்லி அருள் செய்தாய் . இருமாடுகள் உழுவதற்கு நுகத்தடி போன்ற கம்பு  வேண்டும். அவ்வாறன்றி, தொடர்பு ஏதும் இல்லாமல் என்னை உன் திருவடியில் சேர்த்துவிட்டாய்.  அதனால் நான் பிறவிக்கடலிலிருந்து மேலே தூக்கிவிடப்பட்டேன். இவ்வாறு தூக்கி விடப்படுவதற்கு  முன், யான் செய்த, பொய்யான பயனில்லாத செயல்கள் ஒழியும்படிப் பாசமாகிய குற்றத்தைத்  தொலைத்து, உன் வீட்டிற்கு உரியவன் ஆக்கினாய். இவ்வாறு என்னை ஆட்கொண்டு அருளி,  உன் அடியாருடன் சேர்ப்பித்த வியப்பினை அறிந்தோமே.

9

உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல்பற்றலாவ தோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதேபெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமேஅத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
சொற்பிரிப்பு
உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலர் எழுதரு நாற்றம் போல்,பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள் அப் பொருள் பாராதேபெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமேஅத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
உரை

மலர்களின் வாசனை கண்ணால் காண முடியாத ஒன்று. அதுபோல, ஐம்புலன்களால் பற்றப்படாமல் இருப்பது மேலாகிய மெய்ப்பொருள் (சிவபெருமான்).  பொறிபுலன்களால் பற்றக்கூடாத பரம்பொருளைச் சிவஞானம் ஒன்றினால்தான் பற்ற  முடியும். அவ்வாறு பற்றி அநுபவிப்பதே நாம் இந்தப் பிறவி எடுத்ததின் மேலான பயனாகும். அம்மெய்ப்பொருளைப் பற்றிக் கொண்டு அனுபவிக்க முயலாமல் கிடைத்த வினைப்பயனை  கிடைத்த முறையே அனுபவித்து ஒழிவது அறிவீனர்கள் (பித்தர்கள்) செயல். அத்தகைய  அறிவீனர்கள் சொற்கேட்டு கெட இருந்த என்னை, அவர்கள் சொல்லைக் கேளாத  வண்ணமாக்கிச் சிவபெருமான் என்னை ஆண்டுகொண்டு தன் அடியார்கள் கூட்டத்தோடு  சேர்த்த அதிசயம் கண்டோமே.

10

இருள்திணிந்தெழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடி லிதுவித்தைப்பொருளெனக்களித் தருநரகத்திடைவிழப்புகுகின்றேனைத்தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீஅருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே.
சொற்பிரிப்பு
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது இத்தைப்பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனைத்தெருளும் மும்மதில், நொடி வரை இடிதரச் சினப் பதத்தொடு செம்தீஅருளும் மெய்ந்நெறி - பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே!
உரை

இப்பாட்டில் "இருள்" என்ற முதல் வார்த்தை ஆணவ மலத்தைக் குறிப்பதாகும். அது ஆன்மாவின் அறிவு, இச்சை முதலியன கொண்டு நல்ல செயல்களைச் செய்ய விடாது  தடுத்து அறியாமையை விளைவிக்கும். ஆணவ மலம் தன்னையும் காட்டாது; தன்னிடமுள்ள  பொருளையும் காட்டாது. ஆதலால் ஆணவ மலத்தை 'இருள்' எனக் குறிப்பிட்டார்.   ஆன்மா தனது முற்பிறவிகளில் செய்து தொகுத்து வைத்துள்ள தொகை வினைகளை  (நல்வினையும் தீவினையும்) ஒரு பகுதியாவது நுகர்ந்து கழிப்பதற்காக இறைவனால் அருளப்பட்டது  இந்தப் பிறவி. ஆணவ மலம் அநாதியாகவே ஆன்மாவைச் சார்ந்த வண்ணமாகவே இருந்துவரும்.  இறைவன் கருணையால் மட்டுமே அது வலி இழந்து கிடக்கும்.   ஆணவ மலத்தின் வலிமையினால் அழிந்து போகக் கூடிய இந்த உடம்பை யான்  உயர்ந்த மெய்ப்பொருள் எனக் கருதி, களிப்போடு வாழ்ந்து வந்தேன். அதன் விளைவாக மீளுவதற்கு அரிதாகிய நரகத்தில் விழப்போகின்ற தருணத்தில் இருந்த என்னைச் சிவபெருமான் தடுத்து ஆட்கொண்டான்.   ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உருவகப்படுத்தும் மூன்று கோட்டைகள்  இரும்பு, வெள்ளி, பொன் ஆகியவற்றால் ஆகிய சுவர்களைக் கொண்டு ஆகாயத்தில் விளங்குவன.  பகைவர்களது முப்புரங்களையும், நொடிப்பொழுதில் இடிந்து நொறுங்கி விழும்படியாகக்  கோபக் குறிப்போடு சிவப்பு நிறமான தீயாகிய அம்பை விடுத்தார் சிவபெருமான்.  இது அவருடைய மறக்கருணையாகிய மெய்ந்நெறி ஆகும்.   எனது உடலையும், பொறி இன்பங்களையுமே சதம் என்று கொண்டு, இது பொய்ந்நெறி  என்று உணராது இருந்தேன். அது காலை, சிவபெருமான் மும்மல காரியமாகிய முப்புரத்தை  அழித்தது போன்று எனது பொய்ந்நெறியையும் நொடிப்பொழுதில் நீக்கி, என்னை  ஆட்கொண்ட அதிசயம் கண்டோம்.   (இப்பத்துப் பாடலாலும் பரம்பரனும், அன்னையும், அத்தனும், அண்ணலுமாகிய சிவபெருமான் மாணிக்கவாசகரை ஆட்கொண்டு திருவடி காட்டி அடியரிற்கூட்டியதும்,  புறச்சமயத்தாரின் பொய்யுரை கேட்டுப் பொய்ந்நெறி புகாமலும், நரகிடை விழாமலும் காத்ததும், 'இருவகைப் பற்றும் அற்று இறைவன் அடியே பற்றி நிற்க' என்னும் உபதேசமுமாகிய  முத்திக்குரிய இலக்கணம் மொழிந்தமை காண்க).