திருமுறை 8 · 8.024 · 10

அடைக்கலப் பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

செழுக்கமலத் திரளனநின்சேவடி சேர்ந்தமைந்தபழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலாஅழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.
சொற்பிரிப்பு
செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த,பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான் பாவியேன்:புழுக்கண் உடைப் புன்குரம்பைப் பொல்லாக் கல்வி-ஞானம் இலா,அழுக்கு மனத்து அடியேன்; உடையாய் ! உன் அடைக்கலமே.
உரை

இறைவா! உன் திருவடிகள் செழுமையான செந்தாமரை மலர் போலத் திகழ்கின்றன. ஆன்றவிந்து அடங்கிய அன்பு கனிந்த மனத்தினை உடைய அடியார்கள் கூட்டம், உன்னுடன் சென்று உனது வியாபகத்தில் கூடி இருப்பது வளமான செந்தாமரை மலர்க் கூட்டங்கள் போன்று காட்சி அளிக்கின்றது. அவர்கள் உன் திருவடி நிழலில் முத்திநிலை எய்திப் பேரின்பம் அனுபவித்து வருகிறார்கள். அடியேன் ஒரு பாவி. புழுக்கள் நிறைந்த  இழிந்த உடம்பை உடையவன். ஞானக் கல்வி ஒன்றையும் அறியாத அறிவிலி. என்  மனத்தில் காம, கோப, தாபங்களாகிய அழுக்குகள் நிறைந்துள்ளன. இருப்பினும் நீ என்னை  உன் உடைமையாக அநாதியே பெற்றுள்ளாய். ஆதலால் என்னை உன்னிடம் அடைக்கலப்  பொருளாக அளிக்கின்றேன். என் அழுக்குகளை அகற்றி அடியேனை உன் அடைக்கலப்  பொருளாக ஏற்று அருள்வாயாக ! (இறைவனது திருவடிகள் செழுமையான தாமரைக்  கூட்டங்கள் போலக் காட்சி அளிக்கின்றன என்ற பொருள் கொள்ளுவாரும் உளர்).

2

வெறுப்பனவே செய்யும் என்சிறு மையைநின் பெருமையினால்பொறுப்பவனே அராப் பூண்பவ னேபொங்கு கங்கைசடைச்செறுப்பவனே நின்திருவரு ளால்என் பிறவியைவேர்அறுப்பவனே உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
சொற்பிரிப்பு
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால்பொறுப்பவனே ! அராப் பூண்பவனே ! பொங்கு கங்கை சடைச்செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர்அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
உரை

என்னை உடைமையாக உடைய சிவபெருமானே! பாம்பை ஆபரணமாகப்  பூண்டுள்ளாய். பொங்கி வரும் கங்கை நதியை உன் திருச்சடையில் அடக்கி வைத்துள்ளாய்.  உன்னுடைய பெருங்கருணையினால் என் பிறவியை வேரோடு களைய வல்லாய். அடியேன் வெறுக்கத் தக்க பாவங்களையே செய்து வருகின்றேன். இருப்பினும் என்னுடைய சிறுமைக் குணங்களை எல்லாம், உனது பெருமைக் குணங்களால் பொறுத்து அருள்வாயாக. என்னை உன்னிடம் அடைக்கலப் பொருளாக அளிக்கின்றேன். ஏற்று அருள்வாயாக.

3

பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்தரும்பெருமான் சதுரப்பெரு மான் என் மனத்தினுள்ளேவரும்பெருமான் மலரோன் நெடு மாலறியாமல் நின்றஅரும்பெருமான் உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
சொற்பிரிப்பு
பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்துப் பெரும் பிச்சுத்தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளேவரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்றஅரும் பெருமான் ! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
உரை

எல்லாத் தேவர்களிலும் பெரியவனான தலைவனே! என் பிறப்பினை அடியோடு தொலைத்து, நான் உன் திருவடிக்கண் பெரும் பித்தனாக இருக்கும்படி வைத்த பெருமானே!  என் மனத்தினுள் எழுந்தருளும் பெருமானே! பிரமனும், திருமாலும் அறியாமல் அவர்களின் எதிரில் அண்ணாமலையாய் நின்ற அரிய பெருமானே! என்னை உடையவனே! அடியேன் உன் அடைக்கலமாவேன்.

4

பொழிகின்ற துன்பப் புயல்வெள் ளத்தில்நின் கழற்புணைகொண்டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச்சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறியஅழிகின்ற னன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
சொற்பிரிப்பு
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டுஇழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல் வாய்ச்சுழி சென்று, மாதர் திரை பொரக் காமச் சுறவு எறியஅழிகின் றனன்; உடையாய் ! அடியேன் உன் அடைக்கலமே.
உரை

என்னை உடையவனே! துன்பமாகிய மேகம் பொழிகின்ற மழையால் வெள்ளம்  ஏற்பட, அதில் இழிந்து செல்லுகின்ற உன் அடியார்கள், நின் திருவடியாகிய தெப்பத்தைத்  துணைக் கொண்டு வெள்ளத்தில் சிக்காமல் மேல் உலகம் ஏறி விட்டார்கள். ஆனால்  அடியேன் உன் திருவடியைப் பற்றாது ஒழிந்தேன். அதன் பயனாகத் துன்பமாகிய கடலின்  சுழியில் அகப்பட்டுத் தத்தளிக்கின்றேன். அங்கு மாதர்களாகிய அலைகள் என்மீது  மோதுகின்றன. காமமாகிய சுறா மீன் என்னை எதிர்த்து முட்டித் தள்ளுகின்றது. இவைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் கெடுகின்றேன். அடியேன் உன் அடைக்கலம்  ஆவேன். என்னைக் காத்து ஏற்று அருள்வாயாக.

5

சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்குஇருள்புரி யாக்கையிலே கிடந் தெய்த்தனன் மைத்தடங்கண்வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்கவிண் ணோர்பெருமான்அருள்புரி யாய்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
சொற்பிரிப்பு
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்குஇருள்புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத்தடம்கண்வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க, விண்ணோர் பெருமான்அருள் புரியாய்; உடை யாய் ! அடியேன் உன் அடைக்கலமே.
உரை

வெருட்சி கொள்ளும் இயல்பினை உடைய மானின் கண்களை ஒத்த அழகிய திருக்கண்களை உடைய உமையம்மையைத் தனது இடப்பாகத்தில் கொண்ட  சிவபெருமானே! தேவர்கள் தலைவனே! விருப்பத்தை விளைவிக்கின்ற அழகிய சுருண்ட  கருமையான கூந்தலையும், மை பூசிய விசாலமான கண்களையும் உடைய பெண்களின்  சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொண்டேன். உன் கருணைத் திறத்தை மறந்து ஒழிந்தேன்.  இக்கன்ம பூமியில் அறியாமையை வளர்க்கின்ற எனது உடம்பையே பிரதானமாகக் கருதி இளைத்துப் போனேன். அடியேன் உனக்கு அடைக்கலம். ஏற்று அருள்புரிவாயாக.

6

மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்துதாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்வாழியெப் போதுவந் தெந்நாள் வணங்குவன் வல்வினையேன்ஆழியப் பாவுடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
சொற்பிரிப்பு
மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து,தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த்தாள்;வாழி ! எப்போது வந்து, எந்நாள், வணங்குவன் வல் வினையேன் ?ஆழி அப்பா ! உடை யாய் ! அடியேன் உன் அடைக்கலமே.
உரை

கருணைக் கடலான தந்தையே ! என்னை உடைமையாகக் கொண்ட சிவபெருமானே! மிடா என்று கூறப்படும் தயிர்ப் பானையில் உள்ள தயிரை வலிய  மத்தினால் கடையும் பொழுது, தயிர் உடைந்து தயிர்ப் பானையைச் சுற்றிச் சுற்றி அலையும் .  அதே போன்று அடியேன், மாவடுவின் பிளவை ஒத்தனவாயும், மை தீட்டப்பட்டதாயும்  உள்ள அழகிய நீண்ட கண்களை உடைய மாதர்களின் வலையில் அகப்பட்டுத் தளர்ந்தேன். வலிய வினையேனாகிய யான், தடாகத்தில் உள்ள தாமரை மலர் போல் மிளிர்கின்ற உனது  அழகிய திருவடிகளை எந்தக் காலத்தில் எப்பொழுது வந்து வணங்கும் பேறு பெறுவேன்?  அருள் புரிவாயாக. அடியேன் உன் அடைக்கலம்.

7

மின்கணினார் நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப்புன்கண னாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளிஎன்கணி லேஅமு தூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும்அங்கண னேஉடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
சொற்பிரிப்பு
மின்-கணினார், நுடங்கும் இடையார், வெகுளி வலையில் அகப்பட்டுப்,புன்-கணன் ஆய்ப் புரள்வேனைப் புரளாமல் புகுந்து அருளிஎன்-கணிலே அமுது ஊறித் தித்தித்து, என் பிழைக்கு இரங்கும்அம் கணனே! உடையாய் ! அடியேன் உன் அடைக்கலமே.
உரை

சிவபெருமானே ! ஒளிவீசுகின்ற கண்களையும், துவளுகின்ற இடையினையும் உடைய பெண்களது ஊடலில் சிக்குண்டு, துன்பம் உடையவனாய் உழலுகின்றேன் .  அங்ஙனம் நான் உழலாத வண்ணம் நீ என் உடம்பில் புகுந்து எழுந்தருளி ஆண்டருள்வாயாக.  என் உள்ளத்தில் ஞான அமுதம் சுரந்து இன்பம் தரும்படிச் செய்வாயாக. என் குற்றத்திற்கு அவற்றைப் பொறுத்து அருள்வாயாக. அழகிய கருணைக் கண்களை உடையவனே ! உனது  அடியவனாகிய நானும் உன் அடைக்கலப் பொருளே! என்னைக் காத்தருள்வாயாக.

8

மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கேகூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன்பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம்ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
சொற்பிரிப்பு
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா! நின் மலர் அடிக்கேகூவிடுவாய்; கும்பிக்கே இடுவாய்; நின் குறிப்பு அறியேன்;பா இடை ஆடு குழல் போல், கரந்து, பரந்தது, உள்ளம்ஆ ! கெடுவேன்; உடையாய் ! அடியேன் உன் அடைக்கலமே.
உரை

என்னை ஆளாக உடைய சிவபெருமானே! மாவடுவின் பிளவை ஒத்த கண்களை  உடைய உமாதேவியாரை இடப்பாகத்தில் உடையவனே ! நின் திருவடித் தாமரையின் வியாபகத்தில் அடியேனை இருக்கும்படிக் கூவி அழைப்பாயாக; அல்லது கும்பி பாகம் என்னும் நரகத்தில் தள்ளுவாயாக; நின் திருவுள்ளக் கருத்து எதுவென்று நான் அறிகிலேன் .  என் மனமானது, நூற்பாவுக்குள் வலத்திலும் இடத்திலும் மாறிமாறி ஓடுகின்ற குழல் போன்று  ஒரு நிலைப்படாது அலமருகின்றது. ஆதலால் என்னை அவ்வாறு கெட்டுப் போகும்படி  விடாது காத்து உன் அடைக்கலப் பொருளாக என்னை ஏற்று அருள்புரிவாயாக!

9

பிறிவறி யாஅன்பர் நின்னருட் பெய்கழல் தாளிணைக்கீழ்மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார் உன்னை வந்திப்பதோர்நெறியறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னையே அறியும்அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
சொற்பிரிப்பு
பிறிவு அறியா அன்பர், நின் அருள் பெய் கழல் தாள் - இணைக் கீழ்,மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார், உன்னை வந்திப்பது ஓர்நெறி அறியேன்; நின்னையே அறியேன்; நின்னையே அறியும்அறிவு அறியேன்; உடை யாய் ! அடியேன் உன் அடைக்கலமே.
உரை

என்னை உடைய சிவபெருமானே! எக்காலத்தும் உன்னை விட்டுப் பிரிந்திராமல் நின் குறிப்பினையே ஒன்றி வாழும் அன்பர்கள் நின் அருள் வடிவாகிய வீரக்கழல் அணிந்த  திருவடியின் கீழ் மீளாச் செல்வமாகிய வீட்டின்பத்தினைப் பெற்றுள்ளனர். யானோ உன்னை வணங்குவதற்குரிய சிவாகம நெறிகளை அறிய மாட்டேன் . உன்னையே உள்ளவாறு  உணரமாட்டேன். எனினும் உனது அடியவனாகிய என்னை உன் அடைக்கலப் பொருளாக ஏற்று வீட்டின்பத்தைப் பெற அருள்புரிவாயாக !

10

வழங்குகின் றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டுவிழுங்குகின் றேன்விக்கி னேன்வினை யேன்என் விதியின்மையால்தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளாய்அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.
சொற்பிரிப்பு
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக் கொண்டு,விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்,தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய் !அழுங்குகின்றேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
உரை

என்னை உடைய சிவபெருமானே ! உன் அருளாகிய அமிர்தத்தை நீ எனக்குக் கொடுத்தாய். நீ கொடுத்ததற்காக நான் அதை ஆவலோடு வாரி வாயில் போட்டேன்.  தீவினையுடையவனாகிய நான் அதை உண்ணுவதற்கு நல்ல ஊழ் இல்லாத காரணத்தால், நீ  கொடுத்த அமிர்தமானது என் தொண்டையில் விக்கிக் கொண்டது. துயர் உறுகின்றேன்.  ஆதலால் என் துயரத்தை நீக்கத் தேன் போன்ற உன் கருணையாகிய தண்ணீரைக் குடிக்கக்  கொடுத்து அடியேனை உய்யக் கொண்டு அருள்புரிவாயாக. அடியவனாகிய நானும் உனது  அடைக்கலப் பொருளே. காத்தருள்க.