திருமுறை 8 · 8.023 · 10

செத்திலாப் பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும் புதுமலர்க் கழலிணையடி பிரிந்தும்கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்ஐயனே அரசே அருட்பெருங் கடலே அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச்செய்யமே னியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
சொற்பிரிப்பு
பொய்யனேன் அகம் நெகப் புகுந்து, அமுது ஊறும் புதுமலர்க் கழல்-இணை-அடி பிரிந்தும் ,கையனேன், இன்னும் செத்திலேன்; அந்தோ ! விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்,ஐயனே! அரசே! அருள் - பெரும் கடலே! அத்தனே! அயன், மாற்கு, அறி ஒண்ணாச்செய்ய மேனியனே! செய்வகை அறியேன் ; திருப்பெருந்துறை மேவிய சிவனே !
உரை

தலைவனே ! மன்னனே ! அருட்பெருங்கடலே ! தந்தையே ! பிரமனும், திருமாலும்  தேடிக் காண முடியாத சிவந்த திருமேனியுடையவனே! திருப்பெருந்துறை மேவிய சிவனே !  பொய்யனாகிய எனது உள்ளம் நெகிழும்படியாக அதன்கண் புகுந்து அருள் செய்தாய்.  அவ்வாறு நீ அருள் செய்தும், அமுதம் சுரக்கின்ற அன்று அலர்ந்த தாமரை மலர் போன்ற வீரக்கழல் அணிந்துள்ள உனது இரண்டு திருவடிகளை அடியேன் பிரிய நேர்ந்தது. பிரிந்த பின்னர், வஞ்சகமுடைய யான் இதுவரை சாகாமல் இருக்கிறேன். ஐயோ! கண் விழித்துக் கவனமாக இருந்தும் என் மனத்தில் விரும்பிய எண்ணத்தை நிறைவேற்றாது கைவிட்டேன் . இனி அதனை அடைவதற்குச் செய்ய வேண்டிய முறையையும் அறிய மாட்டேன்.

2

புற்று மாய்மர மாய்ப்புனல் காலே உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்வற்றியாரும் நின்மலரடி காணா மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்பற்றினாய் பதையேன் மனமிக உருகேன் பரிகிலேன் பரியாவுடல் தன்னைச்செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
சொற்பிரிப்பு
புற்றும் ஆய், மரம் ஆய்ப் புனல், காலே , உண்டி ஆய்; அண்ட வாணரும், பிறரும்,வற்றி யாரும், நின் மலர் அடி காணா மன்ன! என்னை ஓர் வார்த்தையுள் படுத்துப்பற்றினாய்; பதையேன்; மனம் மிக உருகேன்; பரிகிலேன்; பரியா உடல் தன்னைச்செற்றிலேன்; இன்னும் திரி தருகின்றேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே !
உரை

திருப்பெருந்துறை வீற்றிருக்கும் சிவபெருமானே ! தாமரை மலர் போன்ற நின்  திருவடிகளைக் கண்டு வணங்கி அருள் பெறுவதற்காக விண்ணுலகில் வாழ்வோரும் , பிற அண்டங்களில் வசிப்போரும், மற்றும் அவ்வாறு விருப்பமுறும் பலரும் கடும் தவம்  இயற்றுகிறார்கள். அவ்வாறு உடல் அசையாது, இடம் பெயராது, காற்றைச் சுவாசித்துக் கொண்டு, மழை நீரால் நனைந்து கொண்டும் இருப்பதால் தம் உடம்பின் மேல் புற்றும், மரமும்  வளரப் பெற்று உடல் உலர்ந்து போயினர். இவ்வாறெல்லாம் கடுந்தவம் இயற்றியும், நினது  திருவடிகளைக் காணப் பெறாது நிற்கும் தன்மைத்தான அரசனே! சிவபெருமானே !  ஸ்ரீபஞ்சாக்கரமும், பிரணவப் பஞ்சாக்கரமுமாகிய ஒரே வார்த்தையை அடியேனுக்கு அறிவித்து அருள் செய்தாய். அவ்வுபகாரத்தை அறிந்தும் என் மனம் பதைபதைக்கவில்லை. உள்ளம் உருகவில்லை. அன்பும் செய்கிலேன். அன்பு செய்யாத இந்த உடலை அழித்து  இறக்காமல் உள்ளேன். ஊர் சுற்றி வருகின்றேன். இது எவ்வளவு இழிவானது ?

3

புலைய னேனையும் பொருளென நினைந்துன் அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத்தலையினால் நடந்தேன் விடைப்பாகா சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே அடையார்புர மெரித்தசிலையனே யெனைச் செத்திடப் பணியாய் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
சொற்பிரிப்பு
புலையனேனையும், பொருள் என நினைந்து, உன் அருள் புரிந்தனை; புரிதலும், களித்துத்தலையினால் நடந்தேன்; விடைப் பாகா! சங்கரா ! எண்-இல் வானவர்க்கு எல்லாம்நிலையனே! அலை நீர் விடம் உண்ட நித்தனே! அடையார் புரம் எரித்தசிலையனே! எனைச் செத்திடப் பணியாய்; திருப்பெருந்துறை மேவிய சிவனே !
உரை

திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! காளையை வாகனமாக  உடையவனே ! (சங்கரனே) அளவற்ற விண்ணவர்களுக்கு எல்லாம் ஆதாரமானவனே !  கடலில் எழுந்த நஞ்சை அமுது செய்தும் அழியாத் தன்மை உடையவனே ! பகைவர்களாகிய  திரிபுராதிகளின் முப்புரங்களையும் எரித்த வில்லை ஏந்தியவனே! கீழான அடியேனையும்  ஒரு பொருளாகத் திருவுள்ளம் பற்றி உனது ஈடு இணையற்ற திருவருளை வாரி வழங்கினை !  அவ்வாறு நீ வழங்கியும், யான் அதனை அறியமாட்டாது, செருக்குக் கொண்டு போலிக்  களிப்பெய்தி அவநெறியிலே சென்றேன் (தலையாலே நடந்தேன்), ஆதலால் நான் செத்துப் போகக் கட்டளை தருவாயாக.

4

அன்பராகிமற் றருந்தவம் முயல்வார் அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்என்பராய் நினைவார் எனைப்பலர் நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்வன்பராய் முருடொக்கும் என்சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிதுதென்பராய்த் துறை யாய் சிவலோகா திருப்பெருந்துறை மேவிய சிவனே.
சொற்பிரிப்பு
அன்பர் ஆகி, மற்று, அரும் தவம் முயல்வார், அயனும், மாலும்; மற்று, அழல் உறுமெழுகு ஆம்என்பர் ஆய், நினைவார் எனைப் பலர் ; நிற்க-இங்கு, எனை, எற்றினுக்கு ஆண்டாய் ?வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை; மரக்கண்; என் செவி இரும்பினும் வலிது;தென்பராய்த் துறையாய்! சிவலோகா ! திருப்பெருந்துறை மேவிய சிவனே !
உரை

அழகிய திருப்பராய்த்துறை என்னும் தலத்தை உடையவனே ! சிவலோகத்திற்கு உரியவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! எம் சிவபெருமானே! பிரமனும்  திருமாலும் உன்னிடத்தில் பேரன்பு கொண்டனர். கடுந்தவம் புரிந்தனர். நெருப்பினில் இட்ட மெழுகு போல் உருகி எலும்புக் கூடாய் நின்றனர். இவர்களைப் போன்று பிற அடியார்களும் உன் திருவடியைக் கண்டு வணங்க இவ்வாறு கடுந்தவம் புரிந்தனர். எனினும் அவர்களுக்கு நீ  காட்சி அளிக்கவில்லை (நான் எப்பேர்ப்பட்டவன் என்று உனக்குத் தெரியும்). என் மனம் வலிய பராய் மரத்தின் உலர்ந்த கட்டையைப் போன்றது. என் கண்ணோ காய்ந்த  மரக்கட்டையால் ஆனது. என்னுடைய செவி இரும்பைப் பார்க்கிலும் வலிமையானது.  இவ்வுலகின்கண் உள்ள இப்பேர்ப்பட்ட என்னை நீ எதற்காக ஆட்கொண்டு அருள்  செய்தாய்? (அவ்வாறு கிடைத்த சிவானந்த அநுபவத்தை முழுதும் பயன்படுத்த  உதவாத யான் இன்னும் செத்திலேனே!)

5

ஆட்டுத்தேவர் தம் விதியொழித் தன்பால் ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே நாதனே உனைப் பிரிவுறா அருளைக்காட்டித்தேவநின் கழலிணை காட்டிக் காயமாயத்தைக் கழித்தருள் செய்யாய்சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே.
சொற்பிரிப்பு
ஆட்டுத் தேவர்-தம் விதி ஒழித்து, அன்பால் 'ஐயனே' என்று, உன் அருள்வழி இருப்பேன் ;நாட்டுத் தேவரும் நாடு-அரும்பொருளே ! நாதனே! உனைப் பிரிவு உறா அருளைக்காட்டித், தேவ, நின் கழல் இணை காட்டிக், காய மாயத்தைக் கழித்து, அருள் செய்யாய்;சேட்டைத் தேவர்-தம் தேவர் பிரானே ! திருப்பெருந்துறை மேவிய சிவனே!
உரை

எல்லாவற்றையும் தொழிற்படுத்தும் காரணனே! சுரர்களுக்குத் தலைவரான  பெருமானே! திருப்பெருந்துறையில் வீற்றிருந்தருளிய பெருமானே ! தலைவனே !  வினைக்கேற்ப என்னை ஆட்டுவிக்கிற தேவர்களது கட்டளையின் நீங்கி மெய்யன்போடு  உனது திருவருள்வழி எப்போது இருக்கப் பெறுவேன்? உலகிலுள்ள தேவர் போன்ற  பெருமையுடையவரும் தேடி அறிதற்கரிய பரம் பொருளே! முதல்வனே ! ஒளியானே !  உன்னைப் பிரியாமைக்கேதுவாகிய திருவருளை எனக்கு வழங்கி, கழலணிந்த உனது  திருவடிகள் இரண்டையும் காண்பித்து, இந்த உடம்பாகிய சூழ்ச்சி வலையை ஒழித்தருளுக.

6

அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக் கார்கிலேன் திருவருள் வகையறியேன்பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன் போற்றி போற்றியென் போர்விடைப் பாகாஇறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க என்செய்கேன்இது செய்க என்றருளாய்சிறைக்கணே புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
சொற்பிரிப்பு
அறுக்கிலேன் உடல் துணிபடத் தீப் புக்கு ஆர்கிலேன்; திருவருள் வகை அறியேன்:பொறுக்கிலேன் உடல்; போக்கு இடம் காணேன்; போற்றி ! போற்றி ! என் போர் விடைப் பாகா !இறக்கிலேன் உனைப் பிரிந்து; இனிது இருக்க, என் செய்கேன் ? 'இது செய்க' என்று அருளாய் ;சிறைக் கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!
உரை

அழகிய, அறவடிவாகிய விடையின் தலைவனே ! வரம்பு வரை நீர் நிறைந்த  வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் வீற்றருளிய சிவபெருமானே! உன்னைப்  பிரிந்தமையால் எனது உடம்பானது துண்டு துண்டாகப் போகும்படி அதனை வெட்டும் துணிவு இல்லேன். எரியும் தீயில் புகுந்து இறக்கலாம் என்றால் அதுவும் செய்கிலேன். உன்  திருவருட் செயல் முறையும் அறிய மாட்டேன். உடம்பையும் தாங்க மாட்டாமல்  வருந்துகிறேன். புகலிடம் ஒன்றும் அறியேன். உன்னைப் போற்றி போற்றி என்று கூறும்  அடியார்க்கு உரிமையானவனே ! சாக மாட்டாத யான் உன்னைப் பிரிந்தும் நன்றாக  இருப்பதற்கு என்ன செய்ய முடியும் ? இன்னதைச் செய்க என்று நீ கட்டளையிட்டு அருள்வாயாக !

7

மாயனேமறிகடல்விடம் உண்ட வானவாமணி கண்டத்தெம் அமுதேநாயினேன் உனைநினையவும் மாட்டேன் நமச்சிவாய என் றுன்னடி பணியாப்பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய் பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோசேயனாகிநின்றலறுவ தழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே.
சொற்பிரிப்பு
மாயனே ! மறி கடல் விடம் உண்ட வானவா ! மணி கண்டத்து எம் அமுதே !நாயினேன், உனை நினையவும் மாட்டேன்; 'நமச்சிவாய' என்று உன் அடி பணியாப்பேயன் ஆகிலும், பெருநெறி காட்டாய்; பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனே! ஓ!சேயன் ஆகி நின்று, அலறுவது அழகோ ? திருப்பெருந்துறை மேவிய சிவனே!
உரை

மாயம் செய்ய வல்லவனே! அலைகள் மடங்கி விழுகின்ற கடலில் எழுந்த நஞ்சை அருந்தின தேவனே! அதனால் நீலமணி போன்ற நஞ்சமைந்த திருக்கழுத்தை உடையவனே !  எங்கள் அருமருந்தே ! இளம் சந்திரன் வாழ்கின்ற சடையோடு தலைக் கோலம் அணிந்தவனே !  நாயினை ஒத்த யான் உன்னை நினைக்கவும் வல்லமையில்லேன். 'நமச்சிவாய' என்ற  திருவைந்தெழுத்தை வாயினாற் கூறி உனது திருவடிகளை மெய்யினால் வணங்காத  பேய்த் தன்மை உடையேன். எனினும் எனக்கு உனது மாண்பு அமைந்த ஞானநெறியைக்  காட்டி அருளுவாயாக.

8

போது சேரயன் பொருகடற் கிடந்தோன் புரந்த ராதிகள் நிற்கமற்றென்னைக்கோதுமாட்டிநின் குரைகழல் காட்டிக் குறிக்கொள் கென்றுநின்தொண்டரிற் கூட்டாய்யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோசீதவார்புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
சொற்பிரிப்பு
போது சேர் அயன், பொரு கடல் கிடந்தோன் புரந்தர - ஆதிகள், நிற்க, மற்று என்னைக்கோதுமாட்டி, நின் குரை கழல் காட்டிக் 'குறிக்கொள்க' என்று, நின்தொண்டரில் கூட்டாய்;யாது செய்வது, என்று இருந்தனன்; மருந்தே ! அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ?சீதவார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே !
உரை

குளிர்ந்த நீர் நிறைந்த வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் தங்கி அருளிய  சிவபெருமானே! அமுதமே! என் மன நோய்க்கு மருந்து போன்றவனே ! உன்னைப் பிரிந்து  செய்வது யாதென மயங்கி இருந்தேன். உன் அடியனாகிய யான் துயரப்படுவது  நல்லதாகுமா? மலரில் உறைகின்ற பிரமனும், அலைகள் மோதுகின்ற திருப்பாற்கடல் நாதனும், இந்திரனும் முதலிய தேவர்களும் உன் அருள் நாடி நிற்கின்றனர். என்றாலும் எனது  குற்றங்களையெல்லாம் ஒழித்து என்னை ஆட்கொள்வாயாக. வீரக்கழல் ஒலிக்கின்ற உன்  திருவடிகளைக் காட்டி அருளிக் காட்டிய குறிப்பில் நிற்கவென்று பணித்து, உன் அன்பர் கூட்டத்தில் என்னைச் சேர்ப்பாயாக.

9

ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய் கங்கை யாய் அங்கி தங்கிய கையாய்மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே.
சொற்பிரிப்பு
ஞாலம் இந்திரன், நான் முகன், வானவர் நிற்க, மற்று எனை நயந்து, இனிது ஆண்டாய்;காலன் ஆர் - உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய்! அங்கி தங்கிய கையாய் !மாலும் ஓலம் இட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனையும் வந்திடப் பணியாய்;சேலும், நீலமும் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே!
உரை

கெண்டை மீன்களும், நீல நிறக் குவளைப் பூக்களும் விளங்கும் வயல்கள் சூழ்ந்த  திருப்பெருந்துறை சிவபெருமானே! யமனுடைய அரிய உயிரை வவ்விய அழகிய  திருவடியை உடையவனே ! கங்கையைத் தலையில் தரித்தவனே ! நெருப்பு அமர்ந்த  திருக்கையனே ! பூமியின்கண் உள்ளோரும், இந்திரனும், பிரமனும் மற்ற தேவர்களும்,  திருமாலும் உன் திருவடி கிடைக்கப் பெறாது ஓலமிட்டு அலறுகின்றனர். அத்திருவடித்  தாமரைக்கே மரக்கண்ணை ஒத்த கண்களையுடைய என்னையும் வந்து சேரும்படி அருள்புரிவாயாக !

10

அளித்துவந்தெனக் காவஎன்றருளி அச்சந்தீர்த்தநின் அருட்பெருங்கடலில்திளைத்துந்தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெருந்துறை மேவிய சிவனேவளைக்கை யானொடு மலரவன் அறியா வான வாமலை மாதொரு பாகாகளிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே.
சொற்பிரிப்பு
அளித்து வந்து, எனக்கு 'ஆவ' என்று அருளி அச்சந் தீர்த்த நின் அருள் பெருங்-கடலில்,திளைத்தும், தேக்கியும், பருகியும், உருகேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே !வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா! மலை மாது ஒரு பாகா !களிப்பு எலாம் மிகக் கலங்கிடு கின்றேன்; கயிலை மா மலை மேவிய கடலே !
உரை

திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அருளிய சிவனே ! பாஞ்ச சன்னியம் என்னும்  சங்கைக் கையில் உடைய திருமாலோடு பூ மேல் உறையும் அயனும் அறிய முடியாத தேவனே!  இமயமலை அரசன் மகளாகிய உமாதேவியை இடப்பாகத்தில் உடையவனே !  கயிலைமலைக்கண் வீற்றிருந்த கருணைக் கடலே ! நீ கருணை கொண்டு குருவாய்  எழுந்தருளி வந்து எனக்குக் கருணைக் குறிப்புக் காட்டிப் பாசப்பயம் ஒழித்தாய், நீ நல்கிய  பெரிய திருவருட்கடலுள் மூழ்கி உள்ளம் நிரம்பி, அதனை உண்ட பின்னும் நான் அன்பால் உருக மாட்டேன். செருக்கே மிகுதிப் படுதலால் நான் வீடு கிடைக்காதோ என்ற  அச்சத்தால் கலக்கமுறுகிறேன் (கலக்கத்தை நீக்குவாயாக).