திருமுறை 8 · 8.022 · 10

கோயில் திருப்பதிகம்

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதேஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காணவந்தருளாய்தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறையுறை சிவனேஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே.
சொற்பிரிப்பு
மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து, அமுதேஊறி நின்று, என் உள் எழு பரஞ்சோதி ! உள்ளவா காண வந்தருளாய்;தேறலின் தெளிவே ! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே !
உரை

தேனின் தெளிவு போன்ற தூய இனிமையானவனே ! சிவபெருமானே!  திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற மங்கலப் பொருளான சிவனே! முடிவற்ற பதவிகள் எல்லாவற்றையும் கடந்த ஆனந்தமானவனே ! என்னுடைய அன்பு உருவமே ! என்னைப்  பகைத்து நின்று எனது அறிவை மயங்கச் செய்யும் கள்ள ஐம்புலன்களின் வாயில்களை  அடைத்தவனே ! அவ்வாற்றால் எனது உள்ளத்தில் அமுதம் ஊற்றெடுத்து நிற்க, ஆங்கே  தோன்றுகின்ற மேலான ஒளியே ! நீ உண்மையாக இருக்கும் விதத்தை நான் காணும்படி வந்து அருள் செய்வாயாக !

2

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க் கசிந்துருகஎன்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம்மாறுமுன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலேதென்பெருந்துறையாய் சிவபெருமானே சீருடைச் சிவபுரத்தரைசே.
சொற்பிரிப்பு
அன்பினால், அடியேன் ஆவியோடு, ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்து உருகஎன் பரம் அல்லா இன் அருள் தந்தாய்; யான், இதற்கு இலன் ஓர் கைம்மாறு;முன்பும் ஆய்ப் பின்பு முழுதும் ஆய்ப் பரந்த முத்தனே ! முடிவு இலா முதலே!தென் பெருந்துறையாய்! சிவபெருமானே! சீர் உடைச் சிவபுரத்து அரைசே!
உரை

எல்லாப் பொருட்களுக்கும் முன்னர்த் தோன்றியவனே! உனக்குப் பின்னர் தோன்றிய அனைத்துப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து நிற்கும் மலமற்றவனே ! எல்லையில்லாத முதற்பொருளே! தெற்கே உள்ள திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே !  சிவபெருமானே ! சிறப்புடைய சிவலோக மன்னனே! உன்மீது செலுத்திய அன்பினால்  அடியேனின் உயிரும் உடலும் ஆனந்தமாய்க் கசிந்துருகும்படி எனக்குக் கிடைக்கத் தகுதியில்லாத இனிய பேரருளைத் தந்தாய். இத்தகைய பேருபகாரத்திற்கு அடியேன் உனக்குத் திரும்பச் செய்யக் கூடிய உதவி இல்லாதவனாய் இருக்கிறேன்.

3

அரைசனே அன்பர்க் கடியனே னுடைய அப்பனே ஆவியோ டாக்கைபுரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரேதிரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே திருப்பெருந்துறையுறை சிவனேஉரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.
சொற்பிரிப்பு
அரைசனே! அன்பர்க்கு; அடியனேன் உடைய அப்பனே! ஆவியோடு ஆக்கைபுரை புரை கனியப் புகுந்து நின்று, உருக்கிப் பொய் இருள் கடிந்த மெய்ச்சுடரே !திரை பொரா மன்னும் அமுதத் தெண்கடலே! திருப்பெருந்துறை உறை சிவனே !உரை, உணர்வு, இறந்து நின்று, உணர்வது ஓர் உணர்வே ! யான், உன்னை உரைக்கும் ஆறு உணர்த்தே .
உரை

அன்பர்களுக்கு மன்னனே! அடியேனுடைய தந்தையே! உயிரோடு கூடி நிற்கும்  உடம்பும், உடம்பிலுள்ள மயிர்க்கால்கள் தோறும் நெகிழ்ந்து உருகும்படி என் உள்ளத்தே எழுந்தருளி நின்று உருகுவித்தவனே! பொய்மையாகிய எனது அறியாமையைத் தொலைத்த  மெய்யொளியே! அலை மோதாது நிலையான அமுதமாகிய தெள்ளிய ஆனந்தக் கடலே !  திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அருளும் சிவபெருமானே! வாக்காலும் மனத்தாலும் அறிய முடியாதவனே! இவை இரண்டும் கலந்த சிவஞானத்தால் (பதி ஞானத்தால் மட்டும்) அறியக்கூடிய பேரறிவே ! நான் உன்னைப் புகழ்ந்து உரைக்கின்ற விதத்தை நீ எனக்கு அறிவுறுத்துவாயாக.

4

உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளேஇணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தேதிணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே திருப்பெருந்துறையுறை சிவனேகுணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே.
சொற்பிரிப்பு
உணர்ந்த மாமுனிவர், உம்பரோடு, ஒழிந்தார் உணர்வுக்கும், தெரிவு - அரும் பொருளே !இணங்கு இலி ! எல்லா உயிர்கட்கும் உயிரே ! எனைப் பிறப்பு அறுக்கும் எம் மருந்தே !திணிந்தது ஓர் இருளில், தெளிந்த தூ வெளியே ! திருப்பெருந்துறை உறை சிவனே !குணங்கள் தாம் இல்லா இன்பமே! உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே ?
உரை

கலைஞானம் உடைய பெரிய முனிவர்களும், தேவர்களும் பிற பெரியோர்களும்  தமது உணர்வாலும் உணர்ச்சியாலும் உணர முடியாத பரம்பொருளே! ஒப்பில்லாதவனே!  அனைத்து உயிர்கட்கும் உயிராக உள்ளவனே! என் பிறவிப் பிணியை நீக்கி உய்விக்கின்ற மருந்து போன்றவனே ! செறிந்த இருளில் கிடந்து அலமருவோர்க்கு அங்கு இனிது  தோன்றிய ஒளி போன்றவனே ! இது உவமை ஆகு பெயர் . உண்மைப் பொருள் :  அறியாமையில் மூழ்கி இருந்த என் முன் நீ பொருக்கெனத் தோன்றி என்னை அறிவன்  ஆக்கினாய். திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே! முக்குணங்களின்  தொடர்பற்ற பேரானந்தமே! உன்னை அடைந்த எனக்கு இனிப் பெறக்கடவதாய் எஞ்சி நிற்கும் பொருள் யாது உளது? ஒன்றுமில்லை என்றவாறு.

5

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றேமறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னேசிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும் திருப்பெருந்துறையுறை சிவனேஇறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை யென்னிரக் கேனே.
சொற்பிரிப்பு
குறைவு இலா நிறைவே ! கோது இலா அமுதே ! ஈறு இலாக் கொழும் சுடர்க் குன்றே !மறையும் ஆய், மறையின் பொருளும் ஆய், வந்து என் மனத்திடை மன்னிய மன்னே !சிறை பெறா நீர்போற் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே!இறைவனே! நீ, என் உடல் இடம் கொண்டாய்; இனி, உன்னை என் இரக்கேனே?
உரை

யார்பாலும் எதையும் வேண்டாத பூரணப் பொருளே! குற்றமற்ற அருமருந்தே !  இறுதியிலாத சோதிப் பிழம்பே ! வேதங்களுமாகி, வேதங்களில் விளம்பப் பெறும்  பொருளுமாகி எழுந்தருளி வந்து அடியேன் மனத்தில் இடம் கொண்ட அரசே! அணையற்ற  வெள்ளம் போல என் மனப்புலத்தில் வந்து பாய்கின்ற, திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள  சிவனே ! இறைவனே! நீ அடியேனுடைய தேகத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு இடம்  கொண்டாய் ! இனி யான் உன்னை யாது வேண்டி யாசிக்கக் கூடும்?

6

இரந்திரந் துருக என்மனத் துள்ளே எழுகின்ற சோதியே இமையோர்சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந்துறையுறை சிவனேநிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால் ஆயவை அல்லையாய் ஆங்கேகரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண்டின்றே.
சொற்பிரிப்பு
இரந்து இரந்து உருக, என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே ! இமையோர்சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய் ! திருப்பெருந்துறை உறை சிவனே !நிரந்த ஆகாயம், நீர், நிலம், தீ, கால், ஆய், அவை அல்லை ஆய் ஆங்கே ,கரந்தது ஓர் உருவே ! களித்தனன், உன்னைக் கண் உறக் கண்டு கொண்டு இன்றே.
உரை

உன்னுடைய திருவருளை வேண்டி வேண்டி என் உள்ளம் உருகும் காலத்தே  அங்கு தோன்றுகின்ற ஒளியே! விண்ணவர் சிரத்தின் மீது விளங்குகின்ற சிவந்த தாமரை      மலர் போன்ற திருவடிகளை உடையவனே ! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற      சிவபெருமானே! எங்கும் பரவியுள்ள விண்ணும், நீர், நிலம், தீ, காற்று ஆகிய ஐம்பூதங்களும் ஆனாய். அவை அல்லாதவனும் ஆகி, அந்தந்தப் பூதங்களில் மறைந்து அருள் உருவம் ஆனவனே! இப்பொழுது உன்னைக் கண்ணாரக் கண்டு உள்ளத்திற் கொண்டு மகிழ்ந்தேன் .

7

இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்றுநின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிது மற்றின்மைசென்றுசென்றணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம் திருப்பெருந்துறையுறை சிவனேஒன்று நீயல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற்பாரே.
சொற்பிரிப்பு
இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்றுநின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்: நீ அலால் பிறிது மற்று இன்மை ;சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே!ஒன்றும் நீ அல்லை; அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற் பாரே ?
உரை

இது பரம சித்தாந்தத்தை உள்ளடக்கிய மிகச்சிறந்த பாட்டு. இதையே திருவாசகத்தின் இருதயமான பாட்டு என்பர் அறிஞர். எனது ஆன்மா சிறிது சிறிதாகப்  பாசக்கூட்டங்களினின்றும் விடுபட்டுத் தேய்ந்து தேய்ந்து அணு வடிவில் முத்தி நிலையை அடைந்தது. அந்த நிலையில் பிறிதொரு பொருளை அறிதலும் இச்சித்தலும் , அனுபவித்தலும் இன்றி உலகையும் மறந்து என்னையும் மறந்து நிற்கின்றேன்.  திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே ! அந்நிலையில் உன்னையே  அனுபவித்து உனது திருவடி வியாபகத்துள் அடங்கி நிற்கின்றேன். எனக்கு அருளும் காலம்  எய்திய இந்நாளில் என்மீது கருணை கூர்ந்து காலையில் முளைத்து எழுந்து மேலே  செல்கின்ற கதிரவனைப் போன்று உனது பேரொளியை வீசி எனது அறியாமையாகிய  இருளை நீக்கி என் உள்ளத்துள் நின்றனை. இத்தன்மையால் உன்னையன்றிப் பிறிதொரு  பொருளும் மெய்ப்பொருளாகாது என்ற உண்மை ஞானத்தை நான் உணரப்பெற்றது உனது  திருவருள் வழியே அன்றிக் கருவிகளின் வழியாகவும் தற்போதத்தின் வழியாகவும் அல்ல  என்பதனையும் உணர்ந்தேன். அவ்வாறு அருளிய உனது பெருங்கருணையை என்னென்று புகழ்வேன். நீ இவ்வுலகப் பொருட்களுள் ஒன்றும் அல்லையாயினும், நீ இல்லாத பொருளே  இல்லை. ஆயினும் உன்னைக் காண்பவர் எவரேனும் உளரோ? இல்லை என்பதே ஆயிற்று.     

8

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பேநீருறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின்னருள் வெள்ளச்சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப்பெருந்துறையுறை சிவனேஆருற வெனக்கிங் காரய லுள்ளார் ஆனந்தம் ஆக்குமென் சோதீ.
சொற்பிரிப்பு
பார், பதம், அண்டம், அனைத்தும் ஆய் முளைத்துப் பரந்தது ஓர் படர் ஒளிப் பரப்பே !நீர் உறு தீயே! நினைவதேல் அரிய நின்மலா ! நின் அருள் வெள்ளச்சீர் உறு சிந்தை எழுந்தது ஓர் தேனே! திருப்பெருந்துறையுறை சிவனே!ஆர் உறவு எனக்கு, இங்கு? ஆர் அயல் உள்ளார்? ஆனந்தம் ஆக்கும் என் சோதி !
உரை

நிலவுலகமும் அதன்மேலே உள்ள வைகுந்தம் போன்ற பதங்கள் முதலியவையும் இவற்றை உள்ளடக்கிய பல்வேறு அண்டங்களுமாய்த் தோன்றி எங்கும் செறிந்து விளங்கும்  நிறைந்த பேரொளிச் செறிவே ! வெற்றிருள் மறைந்து ஊடுருவி நிற்கும் தீப்போன்றவனே ! நினைவுக்கு எட்டாத அழுக்கற்ற விழுப்பொருளே! நின்னுடைய திருவருள் வெள்ளச்சிறப்புப்      பொருந்திய மெய்யன்பர் திருவுள்ளத்து மேலோங்கி விளங்கும் பேரின்பத் தேனே !  திருப்பெருந்துறையில் திகழும் சிவபெருமானே! அடியேன்பால் பேரின்பம் பெருக்கும் பேரொளிப் பிழம்பே ! அடியேன் நின் திருவடியைச் சார்ந்தமையால் எளியோனுக்கு எவர்மாட்டும் உறவு, அயல் என்ற வேற்றுமை இல்லை.

9

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரியஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலேதீதிலா நன்மைத் திருவருட்குன்றே திருப்பெருந்துறையுறை சிவனேயாதுநீ போவதோர் வகையெனக்கருளாய் வந்துநின் இணையடி தந்தே.
சொற்பிரிப்பு
சோதியாய்த் தோன்றும் உருவமே ! அரு ஆம் ஒருவனே! சொல்லுதற்கு அரியஆதியே ! நடுவே ! அந்தமே! பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே !தீது இலா நன்மைத் திருவருள் - குன்றே ! திருப்பெருந்துறை உறை சிவனே !யாது நீ போவது, ஓர்-வகை? எனக்கு அருளாய் - வந்து நின் இணை - அடி தந்தே .
உரை

ஒளிப் பிழம்பாய்த் தோன்றும் திருவுடையானே ! ஒப்பில்லா அருவத்திருமேனி  உடைய முழு முதல்வனே! சொல்லொண்ணாத முதல், நடு, இறுதியாய் நின்று இலங்கும்  விழுப்பொருளே! ஆருயிர்களின் பிறவித் தளையை ஒழிக்கின்ற பேரின்பப் பெருங்கடலே !  எத்தகைய தீமையும் இல்லாத எல்லாவகை நன்மையும் நிறைந்த திருவருள் மலையே !  திருப்பெருந்துறை சிவபெருமானே ! நீ சிவக்குரவனாய் எழுந்தருளி வந்து எனக்கு உன் திருவடியைத் தந்து அருளினை. அங்ஙனம் தந்தருளிய நீ எளியேனைக் கைவிட்டுப் போகின்ற வகை எங்ஙனம்? அதை எனக்குச் சொல்வாயாக .

10

தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால்சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனேஎந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே.
சொற்பிரிப்பு
தந்தது, உன் - தன்னைக் கொண்டது, என் - தன்னை; சங்கரா! ஆர்-கொலோ, சதுரர் ?அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று, என்பால் ?சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே !எந்தையே ஈசா! உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!
உரை

எனது உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு வீற்றிருந்து அருளிய எங்கள் தலைவனே ! திருப்பெருந்துறை உறை பெருமானே ! அடியேனுக்கு அனுபோகப் பொருளாக உன்னைத் தந்தாய் ! அதற்குப் பதிலாக நீ என்னை ஏற்றுக் கொண்டாய் !  அடியேன் முடிவில்லாப் பேரின்பம் பெற்றேன் . நீ என்னிடத்தில் பெற்றுக் கொண்டது யாது ?  எதுவுமில்லை. சங்கரா! நம் இருவருள் திறமையுடையவர் யார்? அப்பனே ! ஆண்டவனே !  எனது உடலைக் கோயிலாகக் கொண்டவனே ! இந்த அருட்செய்கைக்கு உனக்கு அளித்தற்குரிய பிரதி உபகாரம் எதுவுமில்லாதவனாய் யான் இருக்கிறேன் .