திருமுறை 8 · 8.021 · 10

கோயில் மூத்த திருப்பதிகம்

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்திஅடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேன்உன்அடியார் நடுவுள் இருக்கும் அரு ளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம்முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.
சொற்பிரிப்பு
உடையாள், உன் தன் நடுவு இருக்கும்; உடையாள் நடுவுள், நீ இருந்தி;அடியேன் நடுவுள், இருவீரும் இருப்பதானால், அடியேன், உன்அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம் பலத்து எம்முடியா முதலே ! என் கருத்து முடியும் வண்ணம், முன் நின்றே !
உரை

பொன்னம்பலத்திலாடும் ஈறில்லாத முதல்வனே! எல்லாவற்றையும்  உடைமையாகப் பெற்றவளாகிய சக்தி, சிவமாகிய நினதுள்ளத்தில் இருக்கிறாள். சிவமாகிய  நீயும் அவளிடையே கலந்திருக்கிறாய். அடியேன் உள்ளத்து நீவிர் இருவரும் இருப்பது உண்மையாயின், என் நெடுநாளைய விருப்பம் நிறைவேறும் வண்ணம், அடியேன் நின்  அடியார் கூட்டத்தின் நடுவில் இருக்கின்ற திருவருளைச் செய்வாயாக. சிறப்புக் கருத்து: இத்திருப்பாடல் இருதலை மாணிக்கமாகிய 'சிவயசிவ' என்னும்  பெருமந்திரப் பொருளாக இருப்பதனால், திருவாசகம் என்னும் திருமறையின் இதய  மந்திரமாகப் பாராட்டப் பெறுவது ஆகும். 'சி' எனும் எழுத்து சிவத்தையும் 'வ' எனும்  எழுத்து சக்தியையும் குறிப்பதாகும். சிவ சிவ எனும் பொழுது சக்தி எழுத்தாகிய 'வ'  சிவத்தைக் குறிக்கும். 'சி' எனும் இரண்டு எழுத்துகளுக்கும் நடுவில் வருவது "உடையாள்  உன்தன் நடுவிருக்கும்" என்பதனைக் குறிப்பது ஆகும். சிவசிவ எனும் பொழுது இரண்டு 'வ' எனும் சக்தியைக் குறிக்கும் எழுத்துகளுக்கு நடுவே 'சி' வருவது "உடையாள் நடுவுள்  நீயிருத்தி" எனும் சொற்றொடரைக் குறிப்பதாகும். "அடியேன் நடுவுள் இருவரும்  இருப்பதானால்" என்ற சொற்றொடர் 'சிவசிவ' என்று என் நெஞ்சில் தியானப் பொருளாக  நீங்கள் இருவரும் விளங்குகிறீர்கள் என்ற மந்திரப் பூர்வமான கருத்தை உரைப்பதால் இப்பாடல் "இதய மந்திரம்" என்ற பெருமையைப் பெறுகிறது.

2

முன்னின் றாண்டாய் எனைமுன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப்பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானேஎன்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார்உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே.
சொற்பிரிப்பு
முன் நின்று ஆண்டாய், எனை முன்னம்; யானும், அதுவே முயல்வு உற்றுப்பின் நின்று, ஏவல் செய்கின்றேன்; பிற்பட்டு ஒழிந்தேன்; பெம்மானே!'என்?' இன்று, அருள் இவர நின்று, 'போந்திடு' என்னாவிடில், அடியார்,உன் நின்று, "இவன் ஆர்' என்னாரோ? பொன்னம்பலக் கூத்து உகந்தானே !
உரை

பொன்னம்பலத்துள் நின்று திருநடனம் புரிவதை உவக்கும் பெருமானே ! முன்பு அடியேனை ஆட்கொண்டாய். அடியேனும் நீ உபதேசித்த வழியில் ஆளாய் இருக்கவே முயன்று பணிபுரிந்து நிற்கிறேன். ஆயினும் உன் அடியார்களோடு உடன் செல்லாமல்  பின்தங்கிவிட்டேன். ஆகவே, பெருமானே என்னை உன்பால் வருமாறு அருளி நின்று  அழையாவிடில் முன்பு உன்னுடன் வந்த அடியார்கள் உன்பால் நின்று, இப்பொழுது இங்கு வருவதற்கு இவன் என்ன உரிமை உடையவன் எனக் கேட்கமாட்டார்களோ ? ஆதலால்  என்னை விரைந்து உன்பால் அழைத்துக் கொள்வாயாக. சிறப்புக் கருத்து: இத்திருப்பாடல் ஒரு தலை மாணிக்கம் என்று சைவசித்தாந்தம் பகரும் " சிவாய நம" என்ற மந்திரத்தை உள்ளடக்கிய பாடல் ஆகும் "சி' எனும் சிவத்தை  ' முன்னின்று ஆண்டாய்' என்ற தொடர் குறிக்கிறது. ' யானும் பின்னின்று அதுவே  முயல்வுற்று ஏவல் செய்கின்றேன்' என்ற தொடர் 'நான் பின்னே இருந்து நின் அருள்வழி  நின்றேன்' என்ற கருத்துடைய அருள் சக்தி - 'வ' என்பதையும், 'ய' எனும் ஆன்மா ஆகிய  நான் "பிற்பட்டு ஒழிந்தேன்" என்று கூறுவது, சிவசக்தி வியாபகத்தில் ஆன்மாவின் 'நான்'  எனும் ஆணவம் ஒழிந்தது என்பதாகும். தாய் தந்தை பராமரிப்பில் நிற்கும் பாலகன் போலத்  துன்பமின்றி இன்பவடிவாய் விளங்கி, ஏவல் புரிதலாகிய "நம" என்பதனை "அதுவே  முயல்வுற்றுப் பின்னின்று ஏவல் செய்கிறேன்" என்றும் தெரிவிக்கிறார் அடிகள்.

3

உகந்தானே அன்புடை அடிமைக் குருகா வுள்ளத் துணர்விலியேன்சகந்தான் அறிய முறையிட்டால் தக்க வாறன் றென்னாரோமகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே.
சொற்பிரிப்பு
உகந்தானே! அன்பு உடை அடிமைக்கு; உருகா உள்ளத்து உணர்வு இலியேன்,சகம் தான் அறிய முறையிட்டால், 'தக்க ஆறு அன்று' என்னாரோ ?மகம் தான் செய்து வழிவந்தார் வாழ, வாழ்ந்தாய்; அடியேற்கு உன்முகம் தான் தாராவிடின், முடிவேன்; பொன்னம் பலத்து எம் முழு முதலே !
உரை

பொன்னம்பலத்தில் எழுந்தருளியுள்ள முழுமுதற்பொருளே! அன்போடு கூடிய எனது அடிமைத் தொண்டை விரும்பி ஏற்றுக் கொண்டவனே! நின்பால் அன்பு கொண்டு  உருகாத மனத்தையுடைய அறிவற்றவன் யான். உலகம் அறிய யான் எனது துன்பத்தைச்  சொல்லி உன்னைக் கூவிக் குறையிரந்தால், உலகத்தவர் "நீ செய்வது முறையன்று" என்று  உன்னைக் கூற மாட்டார்களோ? வேள்வி இயற்றி, நல்வழி நிற்கும் முனிவர் வாழ்ந்துய்ய  எழுந்தருளியவனே! அடியேனுக்கு நின் திருமுகத்தைக் காட்டாவிடில் யான் இறந்துபட விரும்புகிறேன்.  ( இதன் கருத்து, 'இப்பயனற்ற பிறவி எதற்கு என்று எண்ணி இறப்பேன்' என்பதாம்).

4

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க் கும் என்தனக்கும்வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக்கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங் குங்கொல்லோ என்றுஅழுமதுவேயன் றிமற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே.
சொற்பிரிப்பு
முழு முதலே ! ஐம் புலனுக்கும், மூவர்க்கும், என்-தனக்கும்வழி முதலே! நின் பழ அடியார் திரள், வான் குழுமிக்கெழு முதலே ! அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ? என்றுஅழும் அதுவே அன்றி, மற்று என் செய்கேன்? பொன்னம்பலத்து அரைசே !
உரை

பொற்சபையில் ஆடுகின்ற மன்னனே ! எல்லாவற்றிற்கும் ஆதியான  பெருந்தலைவனே! மூவராகிய அயன், அரி, அரன் ஆகியோர்க்கும், ஐம்பொறி அறிவிற்கும், மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று அந்தக்கரணங்களுக்கும், புருடனாகிய எனக்கும்  வழிவழியாய் நின்ற தலைவனே, பழமையான நின் அடியார்கள் கூட்டத்திற்குப் பெரிதும்  அருள்புரிய எழுந்தருளும் முதல்வனே ! அடியேனுக்கு அருள் வழங்க இரங்குவையோ என அழுவதல்லாமல் உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்? (இத்திருப்பாடல் இறைவனுக்கும்  ஆன்மாவுக்கும் உள்ள ஆண்டான் அடிமைத் தொடர்பை வெளிப்படுத்துவதாக உள்ளது). குறிப்பு: 'மூவர்க்கும்' என்பது மனம், புத்தி, அகங்காரமெனும் மூன்று அந்தக்கரணங்கள் எனப் பொருள் கொள்வாரும் உண்டு.        

5

அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கிஇரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற் றிருந்தே வேசற்றேன்கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால்பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ.
சொற்பிரிப்பு
அரைசே! பொன்னம் பலத்து ஆடும் அமுதே !' என்று உன் அருள் நோக்கிஇரை தேர் கொக்கு ஒத்து, இரவு பகல், ஏசற்று இருந்தே வேசற்றேன்;கரை சேர் அடியார் களி சிறப்பக் காட்சி கொடுத்து, உன் அடியேன் பால் ,பிரை சேர் பாலின் நெய் போலப் பேசாது இருந்தால், ஏசாரோ?
உரை

மன்னனே ! பொற்சபையில் கூத்து இயற்றுகின்ற அருமருந்தே ! என்று உன்னை  வாழ்த்தி உன் அருளை எதிர்பார்த்துக் காத்திருந்து, அமைதியாகவும், குறிப்பாகவும் இரை  தேர்ந்தெடுக்கின்ற கொக்கினைப் போல இரவும் பகலும் கவலையோடு இருந்து  இளைப்புற்றேன் . முத்திக் கரையை அடைவதற்குரிய அடியார்களுக்கு மகிழ்ச்சி  மிகும்படியாக நீ காட்சி கொடுத்து அருளினாய். ஆனால் உன் அடியேனாகிய என்னிடத்தில்  பிரை ஊற்றிய பாலில் அடங்கியிருக்கும் நெய் போல் வெளிப்படாது இருக்கின்றாய்.  அவ்வாறு நீ உரையாடாதிருந்தால் உன்னை உலகத்தார் ஏச மாட்டார்களா? சிறப்புக் கருத்து: இறைவன் ஆன்மாக்களின் பரிபாக நிலைக்குத் தகுந்த மாதிரி, அவரவருள் கலந்தும், கண்டும், காட்டியும் நிற்கிறான் என்பதை இத்திருப்பாடல் விவரிக்கிறது .

6

ஏசா நிற்பர் என்னைஉனக் கடியான் என்று பிறரெல்லாம்பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளேதேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்கஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே.
சொற்பிரிப்பு
ஏசா நிற்பர், என்னை; உனக்கு அடியான் என்று, பிறர் எல்லாம்பேசா நிற்பர்; யான்-தானும் பேணா நிற்பேன், நின் அருளே;தேசா! நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க,ஈசா ! பொன்னம் பலத்து ஆடும் எந்தாய் ! இனித்தான் இரங்காயே!
உரை

ஒளி மயமானவனே, ஆண்டவனே! பொற்சபையில் கூத்து இயற்றும் எங்கள் அப்பனே! உலகத்தார் எல்லாரும் என்னை உனக்கு அடியவன் என்று சொல்லுவர். நான் உனது அருள் ஒன்றையே விரும்பி நிற்கின்றேன். ஆதலின் நான் உன்னை அடையாது அல்லல் உறின் யாவரும் இருவரையும் ஏசுவர். அவ்வாறாகாமல், மெய்யன்பர்கள் புடை சூழ நீ வீற்றிருக்கும் உனது திவ்விய சமூகத்தை வழிபடுவதற்கு இனியாயினும் இரங்கி அருள் செய்வாயாக. சிறப்புக் கருத்து: 'பிறர் என்ன கூறினாலும் யான் நின்னருளே வேண்டி நிற்பது எனக்கும்  உனக்குமுள்ள அநாதியான தொடர்பு. அதனால் நீ எனக்குத் திருவோலக்கச் சேவை  தந்தருள வேண்டும்' என்று மணிவாசக சுவாமிகள் வேண்டுகோள் விடுக்கிறார்.

7

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென்று ஏமாந் திருப்பேனைஅருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோநெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்று அருளாயே.
சொற்பிரிப்பு
இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்' என்று-என்று, ஏமாந்திருப்பேனை,அரும் கற்பனை கற்பித்து, ஆண்டாய்; ஆள்வார் இலி மாடு ஆவேனோ ?நெருங்கும் அடியார்களும், நீயும், நின்று, நிலாவி, விளையாடும்மருங்கே சார்ந்து வர, எங்கள் வாழ்வே, 'வா' என்று அருளாயே !
உரை

எமது வாழ்வாக உள்ளவனே ! பொன்னம்பலத்தே அருட்கூத்தாடும் பெருமான் நமக்கு இரங்கி அருளுவான் என்று எண்ணி எண்ணி அவாவுற்று இருப்பவனாகிய எனக்குப் பிறர் எவராலும் பெறற்கரிய அருமையான உபதேசத்தை வழங்கி, என்னை ஆட்கொண்டாய்.  அவ்வாறிருக்க, எவ்வாறு செல்வமானது ஒரு பயன்படும் பொருளானாலும், அதற்கு உரிமை உடையவர் இல்லாத பொழுது அது பயன் இல்லாதவாறு போல என்னை உடையவனாகிய நீ  என்னைப் புறக்கணித்தால் தான் கெடுவேன். ஆதலால், நீயும் உனது அடியார்களுக்கு நெருங்கி நிலைத்து விளங்கி மகிழ்கின்ற பக்கத்தில் அடியேனும் சார்ந்து வரும்படி 'இங்கே  வா' என்று சொல்லி அழைத்துக் கொள்வாயாக.

8

அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தாமருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன்தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ.
சொற்பிரிப்பு
அருளாது ஒழிந்தால், அடியேனை, 'அஞ்சேல்' என்பார் ஆர், இங்குப்பொருளா, என்னைப் புகுந்து, ஆண்ட பொன்னே ! பொன்னம்பலக் கூத்தா !மருள் ஆர் மனத்தோடு, உனைப் பிரிந்து, வருந்துவேனை, 'வா' என்று, உன்தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல், செத்தே போனால், சிரியாரோ ?
உரை

கனக சபையில் நடனமிடுவோனே! இவ்வுலகில் என்னையும் ஒரு பொருளாக மதித்து என் உள்ளத்தில் புகுந்து ஆட்கொண்டருளிய பொன் போன்றவனே! நீ வீடு அருள்  செய்யாது போனால் அடியேனை 'அஞ்சேல்' என அபயம் அளிப்பார் யார்? மயக்கம் நிறைந்த மனத்தோடு உன்னை விட்டுப் பிரிந்து வருந்தும் என்னை வா என்று அழைப்பாயாக. அவ்வாறு அழைத்துச் சிவஞானத் தெளிவுடைய அன்பர்கள் கூட்டத்தைக் காட்டாமல் புறக்கணிப்பின் மீளாப் பிறவியில் வீழ்வேன். அது கண்டு உன் அடியார்கள் ' அருள் பெற்ற பின்னரும் அதனைப் பேணாது பிறவியில் வீழ்ந்தான்; என்னே! இவனது அறிவு  இருந்தவாறு' என எள்ளி நகையாடுவர் அல்லரோ! சிறப்புக் கருத்து: "வருந்துவேனை வா என்று உன் தெருளார் கூட்டம் காட்டுக" என  வேண்டும் அடிகளார் எதிர்மறை வாய்ப்பாட்டால் "காட்டாயேல் செத்தே போவேன் ;  செத்தே போனால் சிரியாரோ" என்கிறார். ஆகவே அடியார் கூட்டத்தைக் காட்டி, சாவாப் பெருதெறியை அருளுக என்பது அடிகளாரது வேண்டுகோளாகும்.

9

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் திருவார்த்தைவிரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னேநரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே.
சொற்பிரிப்பு
சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்: திரண்டு, திரண்டு, உன் திருவார்த்தைவிரிப்பார்; கேட்பார்; மெச்சுவார்; வெவ்வேறு இருந்து உன் திருநாமம்தரிப்பார்: 'பொன்னம்பலத்து ஆடும் தலைவா' என்பார்; அவர் முன்னேநரிப்பு ஆய், நாயேன் இருப்பேனோ ? நம்பி ! இனித்தான் நல்காயே !
உரை

அடியார்கள், நின்னைக் கலந்துள்ள களிப்பு மிகுதியால் தாமே சிரிப்பார்கள், அகம் மகிழ்வார்கள்; நிட்டை கூடுவார்கள்; கூடிக்கூடி உன் புகழமைந்த வார்த்தைகளை  விரித்துரைப்பார்கள்; விரும்பிக் கேட்பார்கள்; வியந்து பாராட்டுவார்கள். தனித்தனியே இருந்து நின் திருநாமமாம் திருவைந்தெழுந்தை மனத்தில் தரிப்பார்கள். "பொற் சபையில் கூத்தாடும் தலைவனே” என்று அழைப்பார்கள்; அத்தகையோர்முன் நாய் போன்றவனாகிய  நான் இகழ்ச்சிக்கு உரியவனாய் இருப்பேனோ? நம்பி ! எனக்கு இனியாவது அருள் புரிவாயாக ! சிறப்புக் கருத்து: திருநாமம் 'தரித்தல்' என்பது திருவைந்தெழுத்தைக் காதலாகிக் கசிந்து  கண்ணீர் மல்கச் சொல்லும் விதம் மூன்று. (1) அருகில் இருப்போர் கேட்கும்படி ஒலி உண்டாக்கிச் சொல்லுவது; (2) ஒலி உண்டாக்காமல் நாவும் உதடும் அசைந்து ஆடுகின்ற  நிலையில் உச்சரிப்பது; (3) ஒலி உண்டாக்காமலும் நா உதடுகள் அசையாமலும்  மனத்திற்குள்ளே உச்சரிப்பது.

10

நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் பிதற்றி நயனநீர்மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப்பல்காலுன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றேஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே.
சொற்பிரிப்பு
நல்காது ஒழியான் நமக்கு' என்று உன் நாமம் பிதற்றி, நயன நீர்மல்கா, வாழ்த்தா, வாய்குழறா, வணங்கா, மனத்தால் நினைந்து உருகிப்பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப், 'பொன்னம்பலம்' என்றேஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி, அருளாய் ! என்னை உடையானே!
உரை

என்னை அடிமையாக உடைய முதல்வனே! இறைவன், அடிமையாகிய நமக்கு அருள் வழங்காதிரான் என நம்பி நின் திருநாமமாம் பஞ்சாக்கரத்தைப் பலகாலும் உரைத்தோம். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக, வாயால் வாழ்த்தி, உரை  தடுமாறி, மெய்யால் வணங்கி நின்றோம். மனத்தால் நினைந்து, நினைந்து உருகி நின்  திருமேனியைத் தியானித்து வணங்கினோம். பொன்னம்பலம் எனப் பலகாற் கூறித் தளரும்  உயிராகிய எனக்குத் திருவுள்ளம் இரங்கி அருள்புரிவாயாக. சிறப்புக் கருத்து: 'ஆண்டவன் அடிமையைக் காக்க என்றும் கடமைப்பட்டவன் ஆதலின் நமக்கு  அருள் வழங்காமலிரார்' என்று நம்பிக்கையுடன் கூறினார். இறைவனைத் தியானித்தும்,  துதித்தும் உரை தடுமாறியும், பலகால் பணிந்தும், 'பொன்னம்பலம்' எனப் போற்றியும்  சோர்கின்ற அடியேற்கு இரங்கி அருள வேண்டும் என்பது கருத்து. சிறப்பில் சிறப்பான திருநாமம் திருவைந்தெழுத்தாகும். இதனைச் “சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்" எனும் அப்பர் சுவாமிகள் திருமுறையால் அறியலாம் .  "நாமம் பிதற்றி" என்பது பசுபோதம் அழிந்த நிலையில், அருளனுபவ நிலையில், பார்ப்பாரும் , கேட்பாரும் பழிப்பார்களே என்ற உணர்வுமின்றி 'ஓதுதல்' ஆகும். மனத்தில் நிறைந்து ஒளிரும்  அன்பு கண்களில் நீர்ப்பெருக்காக வெளிப்படும் என்பதை உலகியலில் வைத்துத் திருவள்ளுவரும்  “புன்கணீர் பூசல் தரும்" என்றார். ஆகவே இறைவனிடம் வைத்த இடையீடில்லா அன்பால் கண்களில்  கண்ணீர் பெருகியதை "நயன நீர் மல்க" என்றார். அன்பனுபவம் அகம் நிறைந்து , வாயால்  வாழ்த்தும்போது மனவிரைவு சொல்லினும் மிகுவதால் குழறும் நிலையை “வாய் குழறா" என்றார். வாய் பேச முடியாத நிலையில் உடலை மரம் போலக் கீழே கிடத்தி வணங்க நேரும். அதனால் “வணங்க"  என்றார். இவ்வண்ணம் மனம், மொழி, மெய்களால் பரவினேன் என்பதைப் "பரவி” என்றும் கூறினார்.  இந்த மெய்ப்பாடுகளிலிருந்து தன்னுணர்வு மீளும்போது, "பொன்னம்பலம் பொன்னம்பலம்"  என்றே வாய் சோர்கின்றேன் என்று அருளினார்.