திருமுறை 8 · 8.019 · 10

திருத்தசாங்கம்

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்எம்பெருமான் தேவர்பிரான் என்று.
சொற்பிரிப்பு
ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன்சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் - ஆரூரன் ,செம்பெருமான், வெண்மலரான், பாற்கடலான், செப்புவ போல்'எம் பெருமான், தேவர் பிரான்', என்று
உரை

அழகு பொருந்திய இளங்கிளியே! எம்முடைய திருப்பெருந்துறை மன்னனது சிறப்புப் பொருந்திய திருப்பெயரைத் தூய்மையான தாமரை மேலிருக்கும் பிரமன் பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் ஆகியோர் "எங்கள் தலைவனே! விண்ணவர்  தலைவனே” என்று வியந்து கூறுவார்கள். அதுபோன்று நீ பெருந்துறைக் கோமானது திருநாமங்கள் பலவற்றையும் ஆராய்ந்து "ஆரூரன்", "செம்பெருமான்", "எம்பெருமான்",  "தேவர்பிரான்" என்றெல்லாம் உரைப்பாயாக,

2

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்நாதன் நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்குஅன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்தென்பாண்டி நாடே தெளி.
சொற்பிரிப்பு
ஏதம் இலா இன்சொல் மரகதமே! ஏழ்பொழிற்கும்நாதன், நமை ஆளுடையான் நாடு உரையாய் - காதலவர்க்குஅன்பு ஆண்டு மீளா அருள் புரிவான் நாடு, என்றும்தென் பாண்டி நாடே தெளி
உரை

குற்றமில்லா இனிய மொழி பேசும் மரகதம் போன்ற பச்சைக் கிளியே ! ஏழுலகுக்கும் தலைவனாய் நம்மை அடிமை கொண்ட பெருமானது நாட்டைச் சொல்லுவாயாக. அன்பர்கள்பால் அவர்கள் அன்பினை ஏற்று அவர் மீண்டும் பிறவிக்கு வராதபடி திருவருள் செய்வானது திரு நாடு, எக்காலத்தும் தெற்கேயுள்ள பாண்டிய நாடென்று அறிவாயாக !

3

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதாட்டிப்பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்உத்தர கோசமங்கை யூர்.
சொற்பிரிப்பு
தாது ஆடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை ஆளும்மாது ஆடும் பாகத்தன் வாழ் பதி என்? - கோதாட்டிப்பத்தர் எல்லாம் பார்மேல், சிவபுரம்போல், கொண்டாடும்உத்தர கோசமங்கை ஊர்
உரை

மகரந்தம் நிலவுகின்ற அழகிய பொழிலின்கணுள்ள கிளியே! நம்மை  ஆட்கொண்டருளும் மங்கை சேர் பங்கினன் உறைகின்ற திருப்பதி யாது எனில், அது  அன்பர்களெல்லாம் நிலவுலக சிவலோகமெனப் பாராட்டிச் சிறப்பாகப் போற்றும்  திரு உத்தர கோச மங்கைப் பதி என்று சொல்லுவாயாக.

4

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்ஆனந்தங் காணுடையான் ஆறு.
சொற்பிரிப்பு
செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ ! நம் சிந்தை சேர்ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் - தையலாய் !வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும்ஆனந்தம் காண், உடையான் ஆறு.
உரை

சிவந்த வாயும், பசிய சிறகினையும் உடைய அழகீ! நமது உள்ளத்தே அமர்ந்த அப்பனாகிய திருப்பெருந்துறை உடையானது ஆற்றினைப் புகழ்ந்துரைப்பாயாக !  மனத்திலே குடிபுகுந்த ஆணவம் முதலாக உள்ள மும்மலங்களையும் கழுவுவதற்காக வந்து சேரும் மேன்மை பொருந்திய 'ஆனந்த வெள்ளமாகிய பேரின்பமே' நம்முடைய பெருமானின் ஆறு ஆகும் என்று உரைப்பாயாக.

5

கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்துஇருளகல வாள்வீசி இன்பமரும் முத்திஅருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.
சொற்பிரிப்பு
கிஞ்சுக வாய் அஞ்சுகமே! கேடு இல் பெருந்துறைக் கோன்மஞ்சன் மருவு மலை பகராய் - நெஞ்சத்துஇருள் அகல வாள் வீசி, இன்பு அமரும் முத்திஅருளும் மலை என்பது காண், ஆய்ந்து
உரை

முருக்கம் பூப்போலச் சிவந்த மூக்குடைய அழகிய கிளியே! கெடுதியற்ற,  திருப்பெருந்துறை மன்னனும் அழகனும் ஆகிய சிவபெருமானது மலையைப் புகல்வாயாக !  நமது மனத்திலே உள்ள அஞ்ஞானமாகிய இருள் நீங்கும்படி ஞானமாகிய ஒளியை வீசிப்  பேரின்பம் நிலைத்திருக்கும் வீடுபேற்றினை அளிக்கின்ற அவனது பேரருள் தான் அவனது மலை என்று ஆராய்ந்து சொல்லுவாயாக.

6

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியேஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்பவான்புரவி யூரும் மகிழ்ந்து.
சொற்பிரிப்பு
இப்பாடே வந்து, இயம்பு: கூடு புகல் என்? கிளியே !ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே? - எப்போதும்தேன் புரையும் சிந்தையர் ஆய்த், தெய்வப்பெண், ஏத்து இசைப்ப,வான் புரவி ஊரும், மகிழ்ந்து.
உரை

எனது கிளியே! கூட்டில் புகாதே ! இவ்விடத்தே வந்து ஒப்பற்ற சிறப்புடையான்  ஏறி வருகின்ற வாகனம் யாதென்று கேட்டுத் தெளிக. அறிவொளியுடைய நங்கையர்  எப்போதும் தேன் போலும் இனிய உள்ளத்தினராய் வாழ்த்துப்பாடி வர, சிவபெருமான் மகிழ்ச்சியோடு வேதமாகிய குதிரைமீது ஏறி வருவான் என்பதைப் புரிந்து கொண்டு அவ்வாறு சொல்லுவாயாக.

7

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன்மாற்றாரை வெல்லும் படைபகராய் - ஏற்றார்அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்கழுக்கடைகாண் கைக்கொள் படை.
சொற்பிரிப்பு
கோல் தேன் மொழிக் கிள்ளாய் ! கோது இல் பெருந்துறைக்கோன்மாற்றாரை வெல்லும் படை பகராய் - ஏற்றார்அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும்கழுக்கடை காண், கைக்கொள் படை
உரை

கொம்புத் தேன் போல இனிய சொல்லுரைக்கும் கிளியே ! குற்றமற்ற திருப்பெருந்துறை மன்னனாகிய சிவபெருமான், தன் கையில் கொண்டுள்ள ஆயுதம் யாதென்று தெரிந்து கொள். தன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மெய்யடியார்களை எவ்விதமான மலமும் வாதிக்காதபடியும், அவர்கள் மனமுருகி மகிழ்ந்திருக்கும் படியும் அவர்களுடைய ஆணவம், கன்மம், மாயை என்கின்ற மும்மலங்கள் மீது பாய்ந்து ஒழிக்கின்ற சூலமே அவனது திருக்கரத்தில் கொண்டுள்ள பகைவரை வெல்லும் ஆயுதம் ஆகும். இதனை அறிந்து சொல்லுவாயாக.

8

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்பருமிக்க நாதப் பறை.
சொற்பிரிப்பு
இன் பால்மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்முன் பால் முழங்கும் முரசு இயம்பாய் - அன்பால்பிறவிப் பகை கலங்கப் பேரின்பத்து ஓங்கும்,பரு மிக்க நாதப் பறை
உரை

இனிய பால் போலும் சொல்லுடைய கிளியே! நமது திருப்பெருந்துறையுறைப் பெருமான்  திருமுன்னே ஒலிக்கும் முரசு யாதென்று தெரிந்து கொள். அது யாதெனில் சிவனருளால் பிறவி என்னும்  பகைப் பொருள் கலங்கி ஒழியும்படி பேரின்பமயமான சுத்த தத்துவத்தே ஒலிக்கும் விரிவு மிகுந்த  மூல நாதமாகிய பறை என்பதைத் தெரிந்து கொண்டு அதனைப் புகழ்ந்து உரைப்பாயாக.

9

ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினைநாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்தாளிஅறு காம் உவந்த தார்.
சொற்பிரிப்பு
ஆய மொழிக்கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால்மேய பெருந்துறையான் மெய்த்தார் என்? - தீயவினைநாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்தாளி அறுகு ஆம், உவந்த தார்.
உரை

ஆராய்ந்து பேசும் அறிவுடைய கிளியே! எலும்பும் உருகும் வண்ணம் அன்பு செய்யும் மெய்யன்பர்களிடத்தில் விரும்பி அமர்ந்திருப்பவன் எங்கள் திருப்பெருந்துறைச் சிவபெருமான். அவன் தன் திருமேனிமீது அணிந்துள்ள மாலை யாது என்று கேட்பாயானால் யான் சொல்லுகிறேன் கேள். நாய் போன்றவனாகிய என்னைக் கொடிய தீவினைப் பயன்கள் அடையாதபடி நாள்தோறும் ஆட்கொண்டு அருளுபவன் விரும்புகின்ற  மாலை 'கொடி அறுகு' மாலை என்பதைத் தெரிந்து கொண்டு அதனைப் புகழ்ந்து பேசுவோமாக.

10

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும்ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்கோதிலா ஏறாம் கொடி.
சொற்பிரிப்பு
சோலைப் பசும் கிளியே ! தூ நீர்ப் பெருந்துறைக்கோன்கோலம் பொலியும் கொடிகூறாய் - சாலவும்ஏதிலார் துண் என்ன மேல் விளங்கி ஏர்காட்டும்கோது இலா ஏறு ஆம் கொடி
உரை

பொழில்களில் உறையும் பசிய நிறக் கிளியே! பரிசுத்தமான நீர் சூழ்ந்த  திருப்பெருந்துறையில் உறையும் பெருமானது அழகு விளங்கும் கொடியைப் புகழ்வாயாக ! அது யாதெனில் பகைவர் மிகுதியும் திடுக்கிட்டு அஞ்சும்படி, உயர்வாகத் தோன்றி அழகு  காட்டுகின்ற, குற்றமற்ற காளை வடிவம் எழுதப்பட்டு உளதாகிய கொடியே !