திருமுறை 8 · 8.018 · 10

குயிற்பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மைஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய்.
சொற்பிரிப்பு
கீதம் இனிய குயிலே ! கேட்டியேல், எங்கள் பெருமான்பாதம் இரண்டும் வினவின், பாதாளம் ஏழினுக்கு அப்பால்;சோதி மணிமுடி சொல்லின், சொல் இறந்து நின்ற தொன்மை ;ஆதி; குணம் ஒன்றும் இல்லான்; அந்தம் இலான்; வரக் கூவாய் !
உரை

இனிய குரலுடைய குயிலே ! நமது சிவபெருமானுடைய திருவடிகள் எங்குள்ளது  எனக் கேட்டால் அவை கீழுலகம் ஏழுக்கும் அப்பாலாயின. ஒளி பொருந்திய அழகிய  திருமுடி எங்கு முடிவதெனச் சொல்லப்புகின், அது சொல்லின் அளவைக் கடந்து நின்ற  பழமை உடையது. அவனது குணத்தைப்பற்றிக் கேட்பாயாயின் மாயையின் காரியமாகிய  சாத்வீகம், இராசதம், தாமதம் ஆகிய முக்குணங்களுள் ஒன்றேனும் இல்லாதவனும்  அநாதியாயும், முடிவு இல்லாதவனாயும் இருப்பவன். அத்தகையவன் என்னைச் சேரும்  வண்ணம் இங்கு வரும்படிக் கூவி அழைப்பாயாக.

2

ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய்ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய்.
சொற்பிரிப்பு
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த, எவ்உருவும் தன் உருவாய் ,ஆர்கலிசூழ் தென் இலங்கை, அழகு அமர் வண்டோதரிக்குப்பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானைச்சீரிய வாயால், குயிலே! தென் பாண்டி நாடனைக் கூவாய் !
உரை

எம்பெருமானாகிய சிவனை ஏழுலகத்தாரும் துதிக்கின்றனர் . அவன்  எப்பொருளிலும் அவையேயாய்க் கலந்திருக்கும் தன்மையானவன். முழக்கம் மிக்கக் கடல் சூழ்ந்த அழகிய நாடு இலங்கை. அதை ஆண்டு வந்த இராவணன் சிவபூசை விடாது செய்து  வந்தவன். அவன் மனைவி மண்டோதரியும் சிவனிடம் மிக்க அன்பு பூண்டு சிவ வழிபாடு செய்து வந்தவள். அவ்வாற்றால் சிவபெருமானைக் குழந்தை வடிவில் எடுத்து அணைத்து இன்புற வேண்டும் என்று மண்டோதரி சிவபெருமானிடம் வேண்டினாள். அவ்வாறே ஒரு நாள்  சிவபூசை முடிக்கும் தருணம் சிவபெருமான் குழந்தை வடிவில் காட்சி அளிக்க,  மண்டோதரி அக்குழந்தையை எடுத்து அணைத்து இன்புற்று இருக்கும்போது இராவணன் வந்தான். மண்டோதரி இராவணனிடம் சிவபெருமானின் திருவருட் செயலைக் கூறிக் குழந்தையை அவனிடம் கொடுத்தாள். அவன் குழந்தையை வாங்கி எடுத்து அணைத்து மகிழ்கையில் சிவபெருமான் மறைந்து அருளினார். எம்பெருமான் இவ்வாறு பெரும் கருணையோடு மண்டோதரிக்குப் பேரின்பத்தை அளித்தவர். அவன் திருப்பெருந்துறையில் விரும்பி உறைபவன். தென் திசையில் உள்ள பாண்டி நாட்டினை உடையவனும் அவனே.  குயிலே! அப்பெருமானை நீ உனது சீரிய வாயால் கூவி என்னிடம் வரும்படி அழைப்பாயாக.

3

நீல வுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவுங்கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில்சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கைஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய்.
சொற்பிரிப்பு
நீல உருவின் குயிலே! நீள் மணி மாடம் நிலாவும்கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில்சீலம் பெரிதும் இனிய திரு- உத்தரகோச மங்கைஞாலம் விளங்க இருந்த நாயகனை, வரக் கூவாய் !
உரை

நீல நிறம் பொருந்திய உடலைக் கொண்ட குயிலே! திருஉத்தர கோச மங்கையில்  இரத்தினங்கள் பதித்த பெரிய மாடங்கள் பல உள்ளன. இத்தலத்தில் நல்லொழுக்கம் மிகச்  சிறந்து விளங்குகின்றது. இங்குள்ள திருக்கோயிலின் உள்ளிடத்தே அழகிய திருமேனி  தாங்கி, பூங்கொடி போன்ற உமையம்மை உறைகின்றாள். அவ்வம்மை உடனாக இருந்து இவ்வுலகம் விளக்கம் அடையுமாறு இத்தலத்தில் அருள்புரிந்து வருகின்ற எம் தலைவனான  சிவபெருமானை என்னிடம் வரும்படிக் கூவி அழைப்பாயாக.

4

தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீவான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்மான்பழித் தாண்டமென்னோக்கி மணாளனை நீவரக் கூவாய்.
சொற்பிரிப்பு
தேன் பழச்சோலை பயிலும் சிறு குயிலே ! இது கேள் நீ ,வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு-அது ஆய ஒருத்தன்;மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை, நீ வரக் கூவாய் !
உரை

தேன் நிறைந்த பழங்களைக் கொண்ட மரங்கள் செறிந்த சோலையில் வசிக்கின்ற இளங்குயிலே ! இதை நீ கேட்பாயாக. வானிலுள்ளோரை ஆட்கொள்ளக் கருதாது  இம்மண்ணுலகிலுள்ள பருவம் மிகுந்த மக்களை ஆட்கொண்டருளிய அருட்கொடையாளன் இறைவன். அவன் என் பிறப்பை ஒழித்து என் நெஞ்சத்துள் புகுந்து என் அறிவில் அத்துவிதமாய்க் கலந்து நின்ற ஒப்பற்றவன்; என்னை ஆட்கொண்ட வள்ளல். மானினது பார்வையை இகழ்வதாயும், ஆளும் தன்மை உடையதாயும், இனிமையான குளிர்ந்த பார்வையையும் உடையவள் உமையம்மையார். அவளுடைய நாயகனான சிவபெருமான் என்னிடம் வரும்படி நீ கூவி அழைப்பாயாக !

5

சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போலஅந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான்முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச்சிந்துரச் சேவடி யானைச் சேவகனைவரக் கூவாய்.
சொற்பிரிப்பு
சுந்தரத்து இன்பக் குயிலே ! சூழ் சுடர் ஞாயிறு போலஅந்தரத்தே நின்று இழிந்து, இங்கு, அடியவர் ஆசை அறுப்பான்;முந்தும், நடுவும், முடிவும், ஆகிய மூவர் அறியாச்சிந்துரச் சேவடியானைச் சேவகனை, வரக் கூவாய் !
உரை

இசையால் இன்பந்தரும் அழகிய குயிலே ! ஒளிக்கதிர்கள் சூழ்ந்த கதிரவன்  போன்ற திருவுருவுடன் சிதாகாசத்திலிருந்து இறங்கி வந்து, இந்நிலவுலகில்  மெய்யடியார்களது பாசத்தை நீக்கியவன் எம்பெருமானாகிய சிவன். உலகத்தைப்  படைத்தல், காத்தல், துடைத்தல் ஆகிய முத்தொழிலுக்கும் உரிய மூவராகிய பிரமன்,  திருமால், உருத்திரன் ஆகிய மூவராலும் அறிய முடியாதவன் அவன். செம்பஞ்சுக்குழம்பின் நிறத்தைப் போன்ற சிவந்த திருவடிகளை உடையவன் அவன். நம்மை ஆட்கொள்ளும் அவ்வீரனை வரும்படி நீ கூவி அழைப்பாயாக !

6

இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளிஅன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன்நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக்கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய்.
சொற்பிரிப்பு
இன்பம் தருவன்; குயிலே ! ஏழ் உலகும் முழுது ஆளி ;அன்பன்; அமுது அளித்து ஊறும் ஆனந்தன்: வான்வந்த தேவன்;நன் பொன் மணிச்சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானைக்கொம்பின் மிழற்றும் குயிலே! கோகழி நாதனைக், கூவாய் !
உரை

ஏழுலகங்கள் முழுவதும் ஆளுகின்றவனும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு  உடையவனாய், இருக்கின்றவனுமான எங்கள் சிவபெருமானிடம் குயிலே ! நீ நிலையான பேரின்பத்தை வேண்டி விருப்பமுடன் கேட்பாயானால் அவன் முழுவதும் உனக்குத் தருவான். மெய்யடியார்களுக்கு மென்மேலும் மிகுந்த இன்பப் பொருளாய் விளங்குபவனும் அவனே.  அவன் சிதாகாசத்திலிருந்து எழுந்தருளிவந்த ஒளி உருவானவன். திருப்பெருந்துறை  முதல்வன் ஆனவன். தூய பொன்னும் இரத்தினமும் சேர்த்து அமைந்த கட்டமைந்த உருவம்  போன்ற நல்ல குதிரை மேல் எழுந்தருளி வந்தான். மரக்கிளையிலிருந்து கூவுகின்ற குயிலே !  அத்தகையவனை என்னிடம் வருமாறு நீ கூவி அழைப்பாயாக !

7

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்பொன்னை அழித்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன்மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேயதென்னவன் சேரவன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய்.
சொற்பிரிப்பு
உன்னை உகப்பன்; குயிலே ! உன் துணைத் தோழியும் ஆவன்;பொன்னை அழித்த நல் மேனிப் புகழில் திகழும் அழகன்மன்னன், பரிமிசை வந்த வள்ளல், பெருந்துறை மேயதென்னவன், சேரலன், சோழன், சீர்ப் புயங்கன், வரக் கூவாய் !
உரை

எம்பெருமானாகிய சிவன் உன்னை மிகவும் விரும்பி உனக்குத் துணையாய் ஒத்த தோழியாய் இருப்பான். பொன்னைப் பார்க்கிலும் சிறந்த ஒளி வீசும் திருமேனியை  உடையவன். அவன் தனது புகழையே அழகான உருவாகக் கொண்டு பேரரசன் போன்று விளங்குகின்றான். எனக்காக குதிரைச் சேவகன் போன்று உடை தரித்துக் குதிரைமேல்  ஏறிவந்து அருள்புரிந்த அருட்கொடையாளன். அவனே திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றான். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அரசு புரியும் தமிழகத்தைத்  தனது சிறப்பிடமாகக் கொண்டவனும் அவனே. அவன் சிறந்த பாம்புகளை அணிகலன்களாகப்  பூண்டு திகழ்கிறான். இத்தகைய பெருமானை என்னிடம் வரும்படி கூவி அழைப்பாயாக !

8

வாவிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடிஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கிமேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய்.
சொற்பிரிப்பு
வா, இங்கே, நீ, குயில்-பிள்ளாய் ! மாலொடு நான்முகன் தேடிஓவி, அவர் உன்னி நிற்ப, ஒண்தழல் விண் பிளந்து ஓங்கிமேவி, அன்று, அண்டம் கடந்து, விரி சுடராய், நின்ற மெய்யன்;தாவி வரும் பரிப்பாகன்; தாழ் சடையோன்; வரக் கூவாய் !
உரை

குயிற்பிள்ளையே! நீ என்னருகில் வந்து நான் சொல்லும் மறைப் பொருளைக் கேட்பாயாக. பண்டைக் காலத்தில் திருமாலும் பிரமனும் தாம்தான் பரம்பொருள் என்று  வாதாடி நின்றனர். அப்பொழுது எங்கள் சிவபெருமான் ஒளிமிக்க அனற்பிழம்பாய் ஆகாயத்தைப் பிளந்து உயர்ந்து பொருந்தி விண்ணுலகங்களைத் தாண்டி, பரந்த சுடர்களை  விட்டுக்கொண்டு உண்மைப் பொருளாய் அவர்கள் முன் நின்றான். சிவன் அவ்விருவரையும்  நோக்கி "எனது அடியையும் முடியையும் காண முயலுங்கள். அதன்பின் யார் பரம்பொருள்  என்று முடிவு செய்யலாம்" என்று கூறினார். திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி, பல்லாண்டுகள்  உழன்றும் காணமாட்டாது களைத்து, தங்கள் ஆணவம் ஒடுங்கப் பெற்றனர்.   இந்நிலையில் சிவபெருமான் அனற்பிழம்பாய் நின்ற காட்சி நீங்கி, சிவ லிங்க உருவில்  இருவருக்கும் காட்சி தந்து அருளினார். இருவரும் தம் பதைப்பு ஒடுங்கி, சிவபெருமானே பரம்பொருள் என்று உணர்ந்து வழிபட்டனர். அப்பேர்ப்பட்டவன் எனக்காக தாவிப்பாய்ந்து வருகின்ற குதிரை மீது ஏறி,  குதிரைப்பாகனாயும் வந்தான். அவன் நீண்ட சடையை உடையவனாகவும் இருக்கின்றான்.  இத்தகைய எம்பெருமானை என்னிடம் வரும்படிக் கூவி அழைப்பாயாக !

9

காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலேசீருடைச் செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன்பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்டஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய்.
சொற்பிரிப்பு
கார் உடைப் பொன் திகழ் மேனிக் கடி பொழில் வாழும், குயிலே !சீர் உடைச் செம்-கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன் ;பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்து, எனை ஆண்டஆர் உடை அம்பொனின் மேனி அமுதினை, நீ, வரக் கூவாய் !
உரை

மணம் நிறைந்த சோலையில் வாழ்கின்ற குயிலே ! கரிய நிறமுடைய ஆனால் பொன்னைப் போன்று ஒளி விளங்கும் உடம்பை உடையாய் ! நான் கூறுவதைக் கேள் . சிறப்புடைய செந்தாமரை போன்று விளங்கும் செம்மேனி கொண்ட முதல்வன் எம் சிவபெருமான். அவன் இந்நிலவுலகில் தனது திருவடிகளை எனக்குக் காட்டி, எனது பற்றுக்களை ஒழித்து, என்னை ஆட்கொண்டருளினான். அவன் ஆத்தி மலரால் ஆன மாலையை அணிந்துள்ளான். பொன்போன்ற திருமேனி உடையவன். அவன் சாவா மருந்தாகிய அமுதத்திற்கு ஒப்பானவன். அவனை என்னிடம் வரும்படிக் கூவி அழைப்பாயாக !

10

கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீஅந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டிஎந்தம ராம்இவ னென்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும்செந்தழல் போல்திரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய்.
சொற்பிரிப்பு
கொந்து அணவும் பொழில் சோலைக் கூம் குயிலே! இது கேள் நீ ;அந்தணன் ஆகி வந்து இங்கே, அழகிய சேவடி காட்டி,'எம் தமர் ஆம் இவன்' என்று, இங்கு, என்னையும் ஆட்கொண்டருளும்செம்-தழல் போல் திருமேனித் தேவர் பிரான், வரக் கூவாய் !
உரை

பூங்கொத்துகள் நிரம்பிய பெருஞ்சோலையில் தங்கிக் கூவும் குயிலே ! இதை நீ  கேட்பாயாக!. இவ்வுலகில் வேதியனாக எழுந்தருளி வந்து, அழகிய தன் செம்மையான  பொற்பாதங்களைக் காட்டியவன் சிவபெருமான். "எம் உறவினருள் ஒருவன் இவன்" என்று  என்னை யாவரும் கருதும் வண்ணம் இந்நிலவுலகில் தகுதியற்ற என்னையும் அடிமை  கொண்டு அருளினான். அனல் போல் சிவந்த திருமேனியுடைய விண்ணவர் தலைவனாகிய  எம்பெருமானை என்னிடம் வரும்படி நீ அழைப்பாயாக !