திருமுறை 8 · 8.017 · 10

அன்னைப் பத்து

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்நாதப் பறையினர் அன்னே என்னும்நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்நாதரிந் நாதனார் அன்னே என்னும்.
சொற்பிரிப்பு
வேத மொழியர், வெண்-நீற்றர், செம்-மேனியர்நாதப் பறையினர்; அன்னே ! -என்னும்;நாதப் பறையினர், நான்முகன் மாலுக்கும்நாதர், இந் நாதனார்; அன்னே ! என்னும்.
உரை

தோழியே ! நம் தலைவராகிய சிவபெருமான் ஞானம் உபதேசிக்கும் சொல் உடையவர்  என்று எப்பொழுதும் சொல்லுவாள் என்று தலைவியின் நிலையைத் தோழி, செவிலிக்குக் கூறினாள்.  இவரே நாதமாகிய ஓங்கார ஒலி முழக்குவதற்குப் பறையை உடையவராய் உள்ளார். இவர் அயனுக்கும்  அரிக்கும் தலைவராக உள்ளார் என்றும் தலைவி எப்பொழுதும் சொல்லுவாள் என்று தோழி மேலும் கூறினாள்.

2

கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்உள்நின் றுருக்குவர் அன்னே என்னும்உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.
சொற்பிரிப்பு
கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர்,உள் நின்று உருக்குவர்; அன்னே ! - என்னும்;உள் நின்று உருக்கி, உலப்பு இலா ஆனந்தக்கண்ணீர் தருவரால், அன்னே ! - என்னும்
உரை

எம்பெருமானாகிய சிவன் கண்ணில் தீட்டிய மையினையுடையர். அருளாகிய  கடலினை உடையவர்; உள்ளத்தில் நிலைபெற்று அதனை உருகுவிப்பவர். உள்ளத்தில்  நின்று அதனை உருகச் செய்து வற்றாத ஆனந்தத்தால் உளதாகும் கண்ணீரைப் பெய்விப்பவரும் அவரே, என்று எப்பொழுதும் என் தலைவி சொல்லுவாள் என்று தோழி கூறியதாகச் செவிலி நற்றாய்க்குக் கூறினாள் என்பதை வருவித்துப் பொருள் கொள்ளுக.

3

நித்த மணாளர் நிரம்ப அழகியர்சித்தத் திருப்பரால் அன்னே என்னும்சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறைஅத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும்.
சொற்பிரிப்பு
நித்த மணாளர், நிரம்ப அழகியர் ,சித்தத்து இருப்பரால்; அன்னே ! -என்னும்;சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறைஅத்தர், ஆனந்தரால்; அன்னே ! - என்னும்.
உரை

எம்பெருமானாகிய சிவன் என்றும் மணவாளராய் இருப்பவர்; நிறைந்த வனப்பு  உடையவர்; நினைவில் எப்பொழுதும் இருப்பவர். அங்ஙனம் நினைவிலே இருப்பவர் அழகிய  நல்ல திருப்பெருந்துறைக்குத் தலைவர்; பேரின்பவாணர்.

4

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்வேடம் இருந்தவா றன்னே என்னும்வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்வாடும் இதுவென்னே அன்னே என்னும்.
சொற்பிரிப்பு
ஆடு அரப் பூண்; உடைத் தோல்; பொடிப் பூசிற்று ஓர்வேடம் இருந்த ஆறு ! அன்னே! என்னும் ;வேடம் இருந்தவா, கண்டு கண்டு என் உள்ளம்வாடும்; இது என்னே ! அன்னே ! என்னும்.
உரை

எம்பெருமானாகிய சிவன் ஆடும் பாம்பாகிய ஆபரணமும் புலித்தோலும் அணிந்து , திருநீறாகிய துகள் அணிந்த ஒப்பற்றதொரு வேடம் உடையவர். அவ்வேடம் இருந்த வகையைப் பார்த்துப் பார்த்து எனது மனம் வாடுகின்றது. இது எதனால் ?

5

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையைஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும்.
சொற்பிரிப்பு
நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர்,பாண்டி நல் நாடரால்; அன்னே- என்னும்;பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையைஆண்டு அன்பு செய்வரால்; அன்னே! -என்னும்
உரை

எம்பெருமானாகிய சிவன் நெடிய கையினை உடையார்; திரட்சியுடைய  தலைமயிருடையார்; நன்மை பொருந்திய பாண்டிய நாட்டினர்; பாண்டி நாட்டை  உடையவர்; அலைந்து திரியும் உள்ளத்தை அடக்கி ஆட்கொண்டு அருள் புரிவார்.

6

உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்என்ன அதிசயம் அன்னே என்னும்.
சொற்பிரிப்பு
உன்னற்கு அரிய சீர் உத்தர மங்கையர்மன்னுவது என் நெஞ்சில்; அன்னே ! -என்னும்;மன்னுவது என் நெஞ்சில்; மால் அயன், காண்கிலார்;என்ன அதிசயம்! அன்னே! என்னும்.
உரை

எம்பெருமானாகிய சிவன், நினைத்து அளவிடமுடியாத பெரும் புகழை உடைய  திரு உத்தர கோச மங்கைப் பெருமான் நிலைபெற்று இருப்பது எனது உள்ளத்தில் ஆகும். சிறியேனாகிய எனது உள்ளத்தில் அவர் நிலை பெற்று இருப்பதும் (பெரிய) தேவராகிய திருமாலும் பிரமனும் அவரைக் காணும் ஆற்றல் இல்லாதார் என்பதும் எவ்வளவு வியப்பாக இருக்கிறது.

7

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்.
சொற்பிரிப்பு
வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர்,பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே !- என்னும்;பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரி மேல்கொண்டு, என்உள்ளம் கவர்வரால்; அன்னே ! - என்னும்.
உரை

எம்பெருமானாகிய சிவன் வெள்ளை நிறமுடைய ஆடை தரித்தவர்; திருநீற்றினால் வெண்மையாகிய திருநெற்றியை உடையவர்; அறச்சாலைக்குரிய மேற்போர்வை உடையவர்; அறப்போர்வை உடையோர் தாவிச் செல்லுகிற குதிரை மேல் எழுந்தருளி வந்து என் மனத்தைக் கவர்ந்து கொள்வார்.

8

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்தாள மிருந்தவா றன்னே என்னும்.
சொற்பிரிப்பு
தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர் ,ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! - என்னும்;ஆள் எம்மை ஆளும் அடிகளார்- தம் கையில்தாளம் இருந்த ஆறு ! அன்னே! - என்னும்.
உரை

எம்பெருமானாகிய சிவன் கொடி போல் நீண்ட அருகம்புல்லினால் ஆகிய மாலை  அணிந்தவர்; சந்தனக் கலவை அணிந்தவர்; நம்மை அடிமையாகக் கொண்டு ஆண்டு அருளுவார்.  நம்மை ஆட்கொள்ளும் முதல்வருடைய திருக்கையில் தாளம் இருந்த வகை யாதோ?

9

தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்ஐயம் புகுவரால் அன்னே என்னும்ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்நையுமிது வென்னே அன்னே என்னும்.
சொற்பிரிப்பு
தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர்,ஐயம் புகுவரால்; அன்னே !- என்னும்;ஐயம் புகுந்து அவர் போதலும், என் உள்ளம்நையும், இது என்னே ! ; அன்னே! -என்னும்.
உரை

எம்பெருமானாகிய சிவன் மாதொரு பாகத்தார் எனினும் தவ வடிவமுடையவர்; அவர் பிச்சை எடுப்பவர். அவர் பிச்சை ஏற்று மேற்செல்லுதலும் என் மனமானது பிரிவு பற்றி வருந்தும். இது என்ன காரணம் ?

10

கொன்றை மதியமும் கூவிள மத்தமும்துன்றிய சென்னியர் அன்னே என்னும்துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமேஇன்றெனக் கானவா றன்னே என்னும்.
சொற்பிரிப்பு
கொன்றை மதியமும், கூவிளம் மத்தமும்,துன்றிய சென்னியர்; அன்னே ! -என்னும் ;துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமேஇன்று எனக்கு ஆன ஆறு ! அன்னே! -என்னும்.
உரை

எம்பெருமானாகிய சிவன் கொன்றை மலரும், பிறையும், வில்வத் தளிரும்,  ஊமத்தம்பூவும் நெருங்கி அமைந்த தலையினை உடையவர். அவை நெருங்கிய தலையின்  கண் உள்ள ஊமத்த மலர் இப்பொழுது எனக்குப் பெரும் பித்தை உண்டு பண்ணி விட்டது.