திருமுறை 8 · 8.015 · 14

திருத்தோள் நோக்கம்

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமேதீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம்.
சொற்பிரிப்பு
பூத்து ஆரும் பொய்கைப் புனல் இதுவே, எனக்கருதிபேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமேதீர்த்தாய்; திகழ் தில்லை அம்பலத்தே திரு நடம் செய்கூத்தா! உன் சேவடி கூடும் வண்ணம் தோள் நோக்கம் !
உரை

விளங்குகின்ற தில்லைப் பொதுவில் திருநடனமியற்றும் கூத்தப் பெருமானே ! மலர்  பூத்து நீர் நிறைந்த தடாகத்தின் தண்ணீர் இஃதாமெனக் கருதிக் கானல் நீரைத் தவறாக எண்ணி, அதனை மொண்டு கொள்ள விரும்பும் அறியாமையை நீக்கி எனது இயற்கைப் பண்பு ஆகாமல், அதனை ஒழித்தாய்! உன்னுடைய திருவடியைக் கூடும் வண்ணம், நாங்கள் திருத்தோள் நோக்கம் விளையாடுவோமாக !

2

என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரியகுன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித்துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ.
சொற்பிரிப்பு
என்றும் பிறந்து, இறந்து, ஆழாமே, ஆண்டு கொண்டான்:கன்றால் விளவு எறிந்தான். பிரமன், காண்பு அரியகுன்றாத சீர்த் தில்லை அம்பலவன்: குணம் பரவிதுன்று ஆர் குழலினீர்! - தோள் நோக்கம் ஆடாமோ!
உரை

நெருங்கிய நிரம்பிய கூந்தலை உடைய பெண்களே! தொடர்ச்சியாகப் பிறந்தும் இறந்தும், துன்பத்தில் அழுந்தாமல் ஆட்கொண்டு அருளினான் சிவபெருமான். கன்றுக்  குட்டியால் விளாங்கனியை எறிந்தவனான திருமாலும் அயனும் அறிதற்கரியவன் அவன். குறைவற்ற புகழ்படைத்த தில்லைப் பொதுவில் நடனம் ஆடுபவனின் அருட்பண்பைப்  போற்றி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக.

3

பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச்செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்குஅருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ.
சொற்பிரிப்பு
பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச்செருப்பு உற்ற சீர் அடி. வாய்க் கலசம் ஊன் அமுதம்விருப்பு உற்று வேடனார் சேடு அறிய மெய் குளிர்ந்து, அங்குஅருள் பெற்று, நின்றவா-தோள் நோக்கம் ஆடாமோ!
உரை

(மாணிக்கவாசகர் கண்ணப்பர் பெருமையைப் பற்றிப் பாடிய பாடல்கள் இரண்டில் இது ஒன்று. மற்றொரு பாட்டு 10ஆவது பதிகம் திருக்கோத்தும்பி 4ஆவது பாட்டு ) பூசனை  செய்வதற்குரிய ஆகம விதிகள் ஒன்றும் அறியாதவர் கண்ணப்பர். திருக்காளத்தி நாதர் மீது  ஈடுஇணையற்ற அன்பு கொண்டு தனக்கு நல்லன எனத் தோன்றியவாறு பூசனைகள் செய்தார்.      தனது செருப்புப் பொருந்திய பாதத்தால் இறைவன் சிரசின் மீதிருந்த நிர்மால்யமான  மலர்களை நீக்கினார். தனது வாயால் கொண்டு வந்த நீரை இறைவன் உச்சியின் மீது உமிழ்ந்து திருமஞ்சனம் ஆட்டினார். தன் தலை மீது சுமந்து கொண்டு வந்த பூக்களை இறைவன் முடிமிசை சாத்தி, கையால் கொண்டு வந்த திருஅமுதமாகிய இறைச்சியைப் படைத்து 'என் நாவில் சுவை பார்த்து நல்ல சுவையுள்ளதையே கொண்டு வந்து  அளித்துள்ளேன். நாயனீரே ! அமுது செய்து அருளுக' என்று வேண்டி நின்றார். இந்தச் செயலை ஆகமப் பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கும்படி விருப்பமாய் ஏற்று இறைவன் திருமேனி குளிர அப்பொழுதே அவர் திருவருள் பெற்று நின்ற வரலாற்றைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோமாக (கதை எண் 40ஐப் பார்க்கவும்)

4

கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால்நிற்பானைப் போலஎன் நெஞ்சினுள்ளே புகுந்தருளிநற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன்சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ.
சொற்பிரிப்பு
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருகக் கருணையினால்நிற்பானைப் போல, என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளிநல் பால் படுத்து என்னை , நாடு அறியத் தான் இங்ஙன்சொல்-பாலது ஆனவா-தோள் நோக்கம் ஆடாமோ!
உரை

கல்லைப் போலும் கடுமையான என் மனம் நைந்துருகும்படிச் செய்தான் இறைவன். இரக்கத்தினாலே என் முன்னே நிற்பவன் போலத் தோன்றி என் உள்ளத்திலும்  புகுந்தருளினான். இம்முறையில் என்னை நன்னெறியிற் பொருந்துமாறு புகுத்திய அருட்செயலை  உலகத்தார் தெரியும்படியாகச் செய்தான். இவ்வாறாகச் செய்தருளியதைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக !

5

நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமேபலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.
சொற்பிரிப்பு
நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு , நிலாப் பகலோன்புலன் ஆய மைந்தனோடு, எண் வகையாய்ப் புணர்ந்து நின்றான்உலகு ஏழ் எனத், திசை பத்து எனத் தான் ஒருவனுமேபல ஆகி நின்றவா-தோள் நோக்கம் ஆடாமோ!
உரை

இறைவன் ஒருவனே நிலம், நீர், தீ, காற்று, விரிந்த வான், மதி , ஞாயிறு, அறிவுருவாய  ஆன்மா ஆகிய எட்டுப் பொருட்களோடும், எட்டு வகையாய்க் கலந்து நிற்கின்றான் . தான்  ஒருவனே ஏழு உலகும் பத்துத் திசையும் எனப் பலவாகி, தான் அநேகன் என்று  சொல்லத்தக்க அனைத்திலும் நிற்கின்றான். இவ்வாறு பல பொருட்களாக நிற்கின்ற  விதத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக !

6

புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ.
சொற்பிரிப்பு
புத்தன் முதல் ஆய புல் அறிவின் பல் சமயம்தம் தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டு நிற்கச்சித்தம் சிவம் ஆக்கிச், செய்தனவே தவம் ஆக்கும்அத்தன் கருணையினால் தோள் நோக்கம் ஆடாமோ!
உரை

புத்த சமயி முதலிய சிற்றறிவுடைய சமயத்தினர் பலர் உள்ளனர். அவர்கள் தங்கள்  சமயங்களில் முடிவு காணாது தடுமாற்றம் எய்தி நிற்கின்றனர். இறைவன் எனக்குத் தோன்றியருளி,  என் உள்ளத்தைச் சிவமயமாக்கி விட்டான். அதனால் யான் செய்தவை எல்லாம் தவச் செயல்களாகும்படிப்  பணித்த அப்பன் கருணையைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக !

7

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.
சொற்பிரிப்பு
தீது இல்லை; மாணி, சிவகருமம், சிதைத்தானைச்சாதியும் வேதியன்-தாதை-தனைத், தாள் இரண்டும்சேதிப்ப, ஈசன் திருவருளால் தேவர் தொழப்பாதகமே சோறு பற்றினவா-தோள் நோக்கம்.
உரை

விசார சருமர் என்னும் அந்தணர் குற்றம் யாதும் நெஞ்சில் இல்லாத மாட்சிமை உடைய பிரம்மச்சாரி. ஆற்றின் கரையில் உள்ள மணலைக் கூட்டி, சிவலிங்கம் போல்  உருவாக்கித் தான் மேய்க்கும் மாடுகளின் பாலைக் கறந்து அந்தச் சிவலிங்கத்தின் மீது  ஊற்றித் திருமஞ்சனம் செய்து சிவபூசனை செய்து வருவது வழக்கம். இதை அறிந்த அவரது  தந்தை எச்சதத்தன் பூசனை செய்யும் இடத்திற்கு வந்து அவர் காலால் அபிஷேகப் பொருட்களை உதைத்துச் சிதைத்து அழித்தார். உடனே அவரது மகனார் விசார சருமர் தனது தாதைதான் இவ்வாறு செய்தார் என்று பொருட்படுத்தாமல் வேதியனாகிய தன்  தந்தையின் கால்கள் இரண்டையும் வெட்டி விட்டார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.   இறைவன் தேவியருடன் அவர் முன் தோன்றி 'தம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்; அடுத்த தாதை இனி உனக்கு நாம்' என்று அருள் செய்து உச்சி மோந்து தடவி 'நாம் உண்ட கலமும், உடுப்பனவும், சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதம் தந்தோம்' எனத் திருவாய் மலர்ந்தருளி, தன் தலையில் அணியப்பெற்றிருந்த கொன்றை மாலையை எடுத்துச்  சூட்டினார். விசார சருமர் இறைவனோடு சிவலோகம் எய்தினார். சண்டீசர் என்கின்ற  பதவியைப் பெற்றதிலிருந்து விசார சருமருக்குச் “சண்டீசர்" என்றே பெயர் வழங்கலாயிற்று. இவ்வாறு விசார சருமர் செய்த பாதகமானது இறையருளால் புண்ணியமாக மாறிய  விதத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக.

8

மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர்வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைந்தடியோம்ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமேஆனந்த மாகிநின் றாடாமோ தோணோக்கம்.
சொற்பிரிப்பு
மானம் அழிந்தோம்; மதி மறந்தோம்; மங்கை நல்லீர்!வானம் தொழும் தென்னன் வார்கழலே நினைந்து அடியோம்;ஆனந்தக் கூத்தன் அருள் பெறில், நாம், அவ்வணமேஆனந்தம் ஆகி நின்று ஆடாமோ தோள் நோக்கம்.
உரை

நல்ல மாதர்களே ! தற்பெருமை தொலையப் பெற்றோம். தற்போதங்கழலப்  பெற்றோம். இறையடியராகிய நாம் வானவர் வழிபடுகின்ற அழகானது நீண்ட, சிலம்பணிந்த  திருவடிகளை நினைவோம். ஆனந்த நடனம் செய்யும் இறைவனது பேரருளை நினைத்து, அவ்வாறே நாம் பேரின்பமுற்றுத் தோள் நோக்கம் ஆடுவோமாக !

9

எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம்.
சொற்பிரிப்பு
எண் உடை மூவர் இராக்கதர்கள், எரி பிழைத்துக்கண்-நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின்எண் இலி இந்திரர், எத்தனையோ பிரமர்களும்மண்மிசை மால்பலர் மாண்டனர் காண்-தோள் - நோக்கம்.
உரை

திரிபுரம் எரியுற்ற காலை, தவத்தால் மதிப்புடைய திரிபுரத்தசுரர் மூவரும் தப்பினர். நெற்றிக் கண்ணுடைய நம் அப்பன் வாயிலின் கண் அவர்கள் காவலாளராய் (துவார பாலகராய்) நின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் கணக்கற்ற இந்திரர்களும், எவ்வளவோ பிரமர்களும்,  பூமியை உண்டு வயிற்றடக்கிய அரிகள் பலரும் இறையருள் கிட்டாது இறந்தனர்.  இந்த அதிசயத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக !

10

பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமேசங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறுஎங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.
சொற்பிரிப்பு
பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக்குறையத்தம் கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமேசங்கரன், எம்பிரான், சக்கரம் மாற்கு அருளிய ஆறுஎங்கும் பரவி நாம் தோள் நோக்கம் ஆடாமோ
உரை

திருமால் சிவபெருமானிடம் சக்கரம் பெறுதற்கு நாள்தோறும் ஆயிரம் தாமரை  மலர்கள் கொண்டு அருச்சிப்பேன் எனக் கருதிக் கொண்டு நாள்தோறும் அவ்வாறு செய்து  வந்தான். அவ்வாறு இறைவனை அருச்சித்து வருகையில் ஒரு நாள் ஒரு மலரை  சிவ பெருமான் மறைத்து விட்டார். உடனே திருமால் தாமரை போன்ற தமது கண்களில்  ஒன்றைப் பறித்துத் திருவடியில் இட்டான். அதனால் அவன் சக்கரம் (சுதர்சனம்) பெற்றான். அன்பர்க்குச் சுகம் கொடுக்கும் எம்பெருமான் அரிக்குச் சக்கரம் கொடுத்தருளிய வரலாற்றை  எவ்விடத்தும் நாம் துதித்துத் தோள்நோக்கம் ஆடுவோமாக.

11

காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன்நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச்சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந்தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ.
சொற்பிரிப்பு
காமன் உடல், உயிர் காலன், பல் காய் கதிரோன்நாமகள் நாசி, சிரம் பிரமன், கரம் எரியைச்சோமன் கலை, தலை தக்கனையும் எச்சனையும்தூய்மைகள் செய்தவா தோள் நோக்கம் ஆடாமோ !
உரை

இறைவன் தக்க யாகத்தில் வீரபத்திரரைக் கொண்டு மன்மதனது உடம்பையும் யமனது உயிரையும் போக்கினான். வெய்ய பகலவனது பற்களையும், கலைமகள்  மூக்கையும், அயனது தலையையும் நீக்கினான். நெருப்புக் கடவுளின் கையையும், மதியின்  கலைகளையும், தக்கன் மற்றும் எச்சன் என்போர் தலைகளையும் நீக்கினான். இவ்வாறு தேவர்கள் குற்றம் செய்தமைக்காக அவர்கள் ஒறுக்கப்பட்டுப் பரிசுத்தப்படுத்தப் பட்ட விதத்தைப்      பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக ! 

12

பிரமன் அரியென் றிருவருந்தம் பேதைமையால்பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்கஅரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்துபரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.
சொற்பிரிப்பு
பிரமன், அரி, என்று இருவரும், தம் பேதைமையால்'பரமம், யாம் பரமம்' என்றவர்கள் பதைப்பு ஒடுங்கஅரனார், அழல் உருவாய், அங்கே, அளவு இறந்துபரம் ஆகி, நின்றவா-தோள் - நோக்கம் ஆடாமோ!
உரை

அயன், மால் என்னும் இரு தேவரும் தமது அறியாமையால், தாங்களே  எல்லோர்க்கும் மேலான முதற்கடவுள் எனத் தம்முள் வாதாடினர். அவர்களது ஆணவம் அடங்கும் வண்ணம் சிவபெருமான் அனற்பிழம்பாக உருக்கொண்டு, அவர்கள் பூசலிட்ட  இடத்தில் தோன்றி எல்லை கடந்து அவர்களுக்கு எட்டாத மேலான பொருளாய் நின்ற விதத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக !

13

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதேஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ.
சொற்பிரிப்பு
ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலம் எல்லாம்பாழுக்கு இறைத்தேன், பரம்பரனைப் பணியாதேஊழி முதல், சிந்தாத நல்மணி, வந்து, என் பிறவித்தாழைப் பறித்தவா-தோள் நோக்கம் ஆடாமோ!
உரை

அறிவில்லாத அடியேன், நெடுங்காலமாக மிக மேலான கடவுளான  சிவபெருமானைத் தொழாமல் , வீணான காரியங்களில் காலத்தைக் கழித்தேன்.  கற்பங்களுக்கு அதிபனாய், என்றும் அழியாத நல்மாணிக்கம் போன்ற சிவபெருமான்  எனக்கு ஆசானாக எழுந்தருளி வந்து, என் பிறவியின் அடிப்படையைப் பிடுங்கி  ஒழித்த விதத்தைப் பாடி நாம் தோள் நோக்கம் ஆடுவோமாக !

14

உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்கரைமாண்ட காமப்பெருங்கடலைக் கடத்தலுமேஇரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ.
சொற்பிரிப்பு
உரை மாண்ட உள்ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும்கரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமேஇரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஓடத்துரை மாண்டவா பாடி-தோள் நோக்கம் ஆடாமோ!
உரை

எனது ஆன்ம ஒளிக்கு, ஒளி கொடுக்கும் உள் ஒளியாக விளங்குகின்ற  முதல்வனாகிய சிவபெருமானது ஆற்றலை வாய்ச்சொற்களால் விவரித்துச் சொல்ல  முடியாது. (27 ஆவது பதிகம் புணர்ச்சிப்பத்து 4ஆவது பாட்டு 'சொல்லும் பொருளும் இறந்த சுடரை) இந்த உத்தமன் எழுந்தருளி வந்து என் நெஞ்சத்தில் புகுந்தான். உலகியல் பற்றித் தோன்றும் ஆசையானது ஒரு கட்டுக்குள் அடங்காது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும் இயல்புடையது. ('ஆசைக்கோர் அளவில்லை' - தாயுமானவர் ) அது இலகுவில் கரைகாண முடியாத ஒரு பெருங்கடலைப் போன்றது. இறைவன் என்னுள் புகுந்து அவன் திருவருளை நான் உணர்ந்தபின் ‘ஆசை' என்கின்ற கடலை நான் கடந்து விட்டேன். எனது உலகியல் ஆசை என்னிடம் இருந்து அறவே தீர்ந்து ஒழிந்தது. அவ்வாறு ஆசையற்றபின் எனது மனமானது மெய், வாய், கண், மூக்கு, செவி என்கின்ற இந்திரியங்களின் வழிப்படாது போயிற்று. அதன் காரணமாகப் புறவழியே செல்லும் அப்பஞ்சேந்திரியங்களாகிய பறவைகளுக்கு என்னிடம் உணவு இல்லாத நிலை ஏற்பட்டது. ஆகவே, அவைகள் என் உடலை விட்டு ஓடிப்போய் விட்டன. இவ்வாறாக எனது  தன்முனைப்பு நீக்கிய விதத்தைப் பாடித் தோள்நோக்கம் ஆடுவோமாக .