1
கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்டவிடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசேசடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.
சொற்பிரிப்பு
கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டுகொண்டவிடையவனே, விட்டிடுதி கண்டாய்? - விரல் வேங்கையின் தோல்உடையவனே, மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசேசடையவனே. தளர்ந்தேன்: எம்பிரான், என்னைத் தாங்கிக் கொள்ளே
உரை
பக்குவத்தில் கீழ்ப்பட்டோனாகிய என்னை, உனது இரக்க மிகுதியால் வந்து
அடிமைப் படுத்திக் கொண்ட காளையூர்தியானே! என்னைப் பாசத்தில் இருந்து நீக்கி
அருளுக! வலிமையான புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடையவனே!
புகழால் நிலைபெற்ற உத்தரகோச மங்கைப் பதிமன்னனே ! சடையுடையாய்!
தளர்வடைந்தேன். எம் தலைவனே, என்னைக் காத்து அருளுவாயாக.
2
கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்விள்ளேன் எனினும் விடுதிகண் டாய் விழுத்தொழும்பின்உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசேகள்ளேன் ஒழியவுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே.
சொற்பிரிப்பு
கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்விள்ளேன் எனினும் விடுதிகண்டாய்? - நின்விழுத் தொழும்பின்உள்ளேன்; புறம் அல்லேன்: உத்தர கோசமங்கைக்கு அரசே,கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எக்காரணமே?
உரை
உத்தரகோச மங்கைப் பதிமன்னனே! எழுச்சி கொண்ட இளமை நிறைந்த அழகு
நீங்காத பெரு நகிலை உடைய பெண்டிரது கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயினை
நீங்காது இருந்தேன். ஆயினும், உனது உயர்ந்த தொண்டினுக்கு உள்ளானவன் ஆயினேன்.
உன்னை எண்ணாது இருப்பவன் அல்லேன். என்னைப் பாசத்திலிருந்து நீக்குவாயாக. நான்
வஞ்சனை உடையவன். உன்னை நீங்கி நின்ற பொழுதிலும் கூட என்னைக் கண்டு வலிய
வந்து ஆட்கொண்டதன் காரணம் தான் என்ன?
3
காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவாரூருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசேவாருறு பூண்முலை யாள்பங்க என்னைவளர்ப்பவனே.
சொற்பிரிப்பு
கார் உறு கண்ணியர் ஐம்-புலன் ஆற்றங்கரை மரமாய்வேர் உறுவேனை விடுதி கண்டாய்? - விளங்கும் திருவாரூர் உறைவாய், மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசேவார் உறு பூண் முலையாள் பங்க, என்னை வளர்ப்பவனே
உரை
புகழால் திகழும் திருவாரூரில் வீற்றிருக்கும் சிவனே! நிலைபெற்ற உத்தரகோச
மங்கைக்கு அரசனே! கச்சினைப் பொருந்திய அணிகள் அணிந்த நகிலை உடைய
உமாதேவியை இடப் பாகமாகக் கொண்டவனே! என்னை வளர்த்து வருபவனே! அழகு
நிறைந்த கண்களை உடைய மாதரது ஐம்புல இன்பத்தை நுகரச் செல்கின்ற நான்,
ஆற்றங்கரையில் நிற்கின்ற மரம் போல, அந்த இன்பங்களில் வேரூன்றி நிலைத்து விடும்படி
விட்டுவிடுவாயோ? அவ்வாறு விடாமல் உன் கருணையினால் காத்து அருளுவாயாக.
4
வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால்மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண் மதிக்கொழுந்தொன்றுஒளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங் கைக்கரசேதெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச் செழுஞ்சுடரே.
சொற்பிரிப்பு
வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் - வெண் மதிக் கொழுந்து ஒன்றுஒளிர்கின்ற நீள்-முடி உத்தர - கோசமங்கைக்கு அரசேதெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே
உரை
வெள்ளிய இளம் பிறை ஒன்று விளங்குகின்ற நீண்ட சடைமுடி தரித்த உத்தரகோச
மங்கைப் பதி மன்னனே! தூய்மையான பொன்னின் ஒளியும், மின்னல் ஒளியும் போன்று
காட்சி அளிக்கும் சோதிப் பிழம்பே! அருளில் நான் வளர்வதற்கு ஏதுவாய் உனது
அருட் கையால் என்னை நீ வளைத்துப் பிடித்தாய். ஆனால் நான் அப்பிடியிலிருந்து
இவ்வுலகப் பற்றிலே விருத்தி அடைகிறேன். அப்பற்றிலிருந்து என்னை நீக்கி அருளுவாயாக!
5
செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள்விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாயறுகால்உழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசேவழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே.
சொற்பிரிப்பு
செழிகின்ற தீப் புகு விட்டிலின் சில் மொழியாரில் பல் நாள்விழுகின்ற என்னை விடுதி கண்டாய் - வெறி-வாய் அறுகால்உழுகின்ற பூமுடி உத்தர - கோசமங்கைக்கு அரசேவழிநின்று, நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.
உரை
தேன் உண்ணும் வாயினை உடைய வண்டுகள் கிண்டுகின்ற மலரைத் தரித்த
முடியினை உடைய உத்தரகோச மங்கைக்கு மன்னனே! நான் போகின்ற வழிகளிலெல்லாம்
இறைவன் ஆகிய நீ நின்று உனது திருவருளாகிய கிடைத்தற்கரிய அமுதத்தை ஊட்டவும்
நானோ அதனை வேண்டாமென மறுத்தேன். வளர்கின்ற தீயில் விழும் விட்டில்
பூச்சியினைப் போல மழலைச் சொல்லுடைய மங்கையர்பால் பலநாளும் விரும்பிக்
கிடக்கின்ற என்னை அந்த அபாயத்தினின்று நீக்கி அருளுவாயாக.
6
மறுத்தனன் யானுன் அருளறி யாமையின் என்மணியேவெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை யின்தொகுதிஒறுத்தெனை யாண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசேபொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம் பொய்யினையே.
சொற்பிரிப்பு
மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே;வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் - வினையின் தொகுதிஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தர - கோசமங்கைக்கு அரசே,பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் - தம் பொய்யினையே?
உரை
என் மாணிக்க மணியே! உத்தரகோச மங்கைக்கு அரசே ! சிறிய நாய்
போன்றவர்களது பொய்ச் செயல்களைப் பெருந்தகையோர் மன்னிப்பார்கள் அல்லவா!
அடியேனாகிய நான் உன் திருவருளின் பெருமையை அறியாமையால் அதனை
வேண்டாமென்று நீக்கினேன். அதற்காக நீ என்னை வெறுத்துக் கைவிட்டு விடுவாயோ! என்
வினை அனைத்தையும் கடிந்து ஒதுக்கி விட்டு என்னை ஆண்டு கொண்டருள்க.
7
பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்டமெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்றுமையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசேசெய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே.
சொற்பிரிப்பு
பொய்யவன் ஏனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்டமெய்யவனே விட்டு இடுதி கண்டாய் விடமுண்மிடற்றுமையவனே மன்னு உத்தர - கோச மங்கைக்கு அரசேசெய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே.
உரை
நஞ்சினை உண்டதால் கழுத்தில் கருமை நிறம் நிலைபெற்ற உத்தர கோச மங்கை
மன்னனே! சிவந்த திருமேனி உடையவனே! மங்கலப் பொருள் ஆனவனே!
சிறுமையேனுடைய பாவத்தை ஒழிப்பவனே! பொய்யனாகிய என்னையும் ஒரு பொருளாக
மதித்து அடிமையாக்கிக் கொண்ட எம்பெருமானே! முத்தியாகிய ஒன்றை மறைத்துக் கொண்ட
உண்மைப் பொருள் ஆனவனே! என்னைப் பந்த பாசங்களிலிருந்து நீக்கி அருள் புரிவாயாக.
8
தீர்க்கின்ற வாறென் பிழையைநின் சீரருள் என்கொ லென்றுவேர்க்கின்ற என்னை விடுதிகண் டாய்விர வார்வெருவஆர்க்கின்ற தார்விடை உத்தர கோசமங் கைக்கரசேஈர்க்கின்ற அஞ்சொடச் சம்வினை யேனை இருதலையே.
சொற்பிரிப்பு
தீர்க்கின்ற ஆறு என் பிழையை ' நின் சீர் அருள் என் கொல்?' என்றுவேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவஆர்க்கின்ற தார் விடை உத்தர கோசமங்கைக்கு அரசே,ஈர்க்கின்ற - அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே
உரை
பகைவர் அஞ்சும்படி கிண்கிணி மாலை அணிந்த இடப வாகனத்தை உடைய
உத்தரகோச மங்கைக்கு அரசே! ஐம்புல ஆசை ஒருபுறமும் அதற்கு மாறாகிய பயம்
ஒருபுறமுமாக தீவினையேனை இருபுறமும் இழுக்கின்றன. உனது சிறப்பாகிய திருவருள்
என் பிழையை எப்போது தீர்த்து ஆட்கொள்ளுமோ! என்று கவலை உற்று உள்ளம்
புழுங்குகின்ற என்னைக் கைவிட்டு விடாதே.
9
இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து நினைப்பிரிந்தவிரிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக்குஒருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசேபொருதலை மூவிலை வேல்வல னேந்திப் பொலிபவனே.
சொற்பிரிப்பு
இருதலைக் கொள்ளியின்-உள் எறும்பு ஒத்து, நினைப் பிரிந்தவிரிதலையேனை விடுதி கண்டாய் - வியன் மூ-உலகுக்குஒரு தலைவா, மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசேபொரு-தலை மூ-இலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே.
உரை
மேல், கீழ், நடு என்ற பெரிய மூவுலகங்களுக்கும் ஒப்பற்ற ஒரு தலைவனே!
நிலைபெற்ற உத்தரகோச மங்கைக்கு அரசே! போரிடும் நுனியுடைய மூன்று இலை
வடிவான வேலாகிய சூலத்தை வலப்பக்கம் ஏந்தி விளங்குபவனே! இருபுறமும் எரிகின்ற
கொள்ளிக் கட்டையின் உள் நடுவே அகப்பட்ட எறும்பு போன்று துயருற்று உன்னைப்
பிரிந்து, விரிந்த தலையுடன் அலங்கோலமாக நிற்கின்ற என்னை நீ கைவிட்டு விடாதே.
10
பொலிகின்ற நின்தாள் புகுதப்பெற் றாக்கையைப் போக்கப்பெற்றுமெலிகின்ற என்னை விடுதிகண் டாயளி தேர்விளரிஒலிநின்ற பூம்பொழில் உத்தர கோசமங் கைக்கரசேவலிநின்ற திண்சிலை யாலெரித் தாய்புர மாறுபட்டே.
சொற்பிரிப்பு
பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று, ஆக்கையைப் போக்கப் பெற்றுமெலிகின்ற என்னை விடுதி கண்டாய் - அளி தேர் விளரிஒலி நின்ற பூம்-பொழில் உத்தர - கோசமங்கைக்கு அரசேவலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம், மாறுபட்டே.
உரை
வண்டுகள் பழகித் தேர்ந்து பாடுவதால் விளரிப் பண்ணின் ஓசை சோலைகளில்
நிலைபெற்று உள்ளது. அந்தச் சோலைகளைக் கொண்ட பதியாகிய உத்தர கோச
மங்கைக்கு அரசே! வலிய திண்ணம் உடைய மேருவினை வில்லாக வளைத்து, முப்புரத்தை
எரித்து ஒழித்தாய். விளங்குகின்ற நின் திருவடியில் சரண் புகப் பெற்றும், உன்னை
அடையாமல் வாழ்நாளை வீணாகக் கழித்து, வருந்தி இளைக்கின்ற என்னைக் கைவிட்டு விடாதே.
11
மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யானுன் மணிமலர்த்தாள்வேறுபட்டேனை விடுதிகண் டாய்வினை யேன்மனத்தேஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசேநீறுபட் டேயொளி காட்டும்பொன் மேனி நெடுந்தகையே.
சொற்பிரிப்பு
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள்வேறுபட்டேனை விடுதி கண்டாய் - வினையேன் மனத்தேஊறும் மட்டே, மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே ,நீறுபட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.
உரை
பெருந்தன்மையனே! தீவினையேன் உள்ளத்தில் ஊறுகின்ற தேனே! நிலைபெற்ற
உத்தர கோச மங்கைக்கு அரசே! திருநீற்றினைப் பொருந்தி விளங்குகின்ற ஒளியினைக்
காட்டும் அழகிய திருமேனி உடைய பெருந்தன்மையனே! ஐம்புலன்களும் என்னைப்
பகைத்து வஞ்சித்தலால் அடியேன் உன் அழகிய தாமரை மலரை ஒத்த திருவடியை
நீங்கினேன். அத்தகைய என்னை அங்ஙனமே விட்டு விடாதே.
12
நெடுந்தகை நீஎன்னை யாட்கொள்ள யான்ஐம் புலன்கள்கொண்டுவிடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர வார்வெருவஅடும்தகை வேல்வல்ல உத்தர கோசமங் கைக்கரசேகடுந்தகை யேனுண்ணுந் தெண்ணீ ரமுதப் பெருங்கடலே
சொற்பிரிப்பு
நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான் ஐம்புலன்கள் கொண்டுவிடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ ,அடும்-தகை-வேல் வல்ல உத்தர கோசமங்கைக்கு அரசே ,கடும் தகையேன் உண்ணும் தெள்-நீர் அமுதப் பெருங் கடலே.
உரை
பகைவர் அஞ்சும்படி கொல்லும் தன்மை உடைய வேற்போரில் வல்லவனாகிய
திரு உத்தர கோச மங்கைக்கு அரசனே! மிகுந்த தாகம் உடையவன் ஆகிய நான் பருகுவதற்குரிய
தெள்ளிய தூய புனல் போன்ற அமுதப் பெருங்கடலே! பெருந்தன்மையனே ! நீ அடியேனை
ஆண்டு கொண்டு அருளவும் அடியேன் ஐம்புலன்களின் ஆசை கொண்டு அதனால் உன்
அருளைக் கைவிடும் தன்மையன் ஆகினேன். அத்தகைய என்னை விட்டுவிடாதே.
துன்பத்தினின்று நீக்கிக் காத்து அருள்வாயாக.
13
கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம்விடலரி யேனை விடுதிகண் டாய்விட லில்லடியார்உடலில மேமன்னும் உத்தர கோச மங்கைக்கரசேமடலின்மட் டேமணி யேயமு தேயென் மதுவெள்ளமே.
சொற்பிரிப்பு
கடலினுள் நாய் நக்கி - ஆங்கு, உன் கருணைக் கடலின் உள்ளம்விடல் அரியேனை விடுதி கண்டாய் - விடல் இல் அடியார்உடல் இலமே மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசேமடலின் மட்டே, மணியே, அமுதே, என் மது-வெள்ளமே.
உரை
உன் திருவடியை விடாது பற்றும் அன்பர்களின் உடம்பு எனும் இல்லத்தில் நிலை
பெறுகின்ற திரு உத்தரகோச மங்கைக்கு அரசே! பூவிதழ்த் தேன் போல் இனியவனே!
மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! கடல் போன்ற பெரிய நன்னீர் நிலைகளிலும்
நீரை நாய் சிறிது சிறிதாக நக்கித் தான் குடிக்க இயலும். அது போல உன்
கருணைக் கடலுக்குள்ளே உள்ளத்தைச் செலுத்தி நன்கு பருக இயலாத என்னைக்
கைவிட்டு விடாதே!
14
வெள்ளத்துள் நாவற்றி யாங்குன் னருள்பெற்றுத் துன்பத்தினின்றும்விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும் பும்அடியார்உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசேகள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத களியெனக்கே.
சொற்பிரிப்பு
வெள்ளத்துள் நா வற்றி - ஆங்கு, உன் அருள் பெற்றுத் துன்பத்தின் நின்றும்விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் - விரும்பும் அடியார்உள்ளத்து உள்ளாய். மன்னும், உத்தர - கோச மங்கைக்கு அரசே,கள்ளத்து உளேற்கு, அருளாய் களியாத களி, எனக்கே .
உரை
நிலைபெற்ற உத்தரகோச மங்கைக்கு அரசே! நீர்ப்பெருக்கின் நடுவே இருந்து
ஒருவன் நீர் பருகாது தாகத்தால் நாவுலர்ந்து போனாற்போல உன் அருள் வெள்ளத்தைப்
பெற்றும், துயரத்தில் இருந்து நீங்குவதற்கு ஆற்றலில்லாத என்னைக் கைவிட்டு விடாதே.
உன்னைக் காதலிக்கும் அன்பரின் உள்ளத்தில் நிலைத்திருப்பவனே! ஐம்புல வஞ்சனை
உள்ள எனக்கு இதுவரை நான் பெற்று மகிழாத பேரின்பத்தைக் கொடுத்து அருளுக!
15
களிவந்த சிந்தையோ டுன்கழல் கண்டுங் கலந்தருளவெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம்ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசேஎளிவந்த எந்தைபி ரான்என்னை யாளுடை என்னப்பனே.
சொற்பிரிப்பு
களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும், கலந்தருளவெளி வந்திலேனை விடுதி கண்டாய் - மெய்ச் சுடருக்கு எல்லாம்ஒளிவந்த பூம் கழல் உத்தர - கோசமங்கைக்கு அரசேஎளிவந்த எந்தை பிரான், என்னை ஆளுடை என் அப்பனே!
உரை
உண்மையான ஒளிகட்கெல்லாம் ஒளியைத் தந்த அழகிய திருவடியை உடைய
உத்தர கோச மங்கைப் பதி மன்னனே ! எனக்கு எளிதில் வந்தருள் செய்த தந்தையும்
தலைவனும் ஆகியவனே! என்னை அடிமையாக உடைய என் ஞானத் தந்தையே! மகிழ்ச்சி
மிகுந்த மனத்தோடு உன் திருவடிகளைக் காணப்பெற்றும் நீ என்னோடு கலந்து அருள்
செய்யுமாறு, பற்றிலிருந்து வெளிவந்து அருள் ஒளியில் புகாத என்னைக் கைவிட்டு விடாதே!
16
என்னைஅப் பாஅஞ்ச லென்பவர் இன்றிநின் றெய்த்தலைந்தேன்மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாய்உவ மிக்கின்மெய்யேஉன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசேஅன்னையொப் பாயெனக் கத்தனொப் பாயென்னரும் பொருளே.
சொற்பிரிப்பு
என்னை 'அப்பா, அஞ்சல்', என்பவர் இன்றி, நின்று எய்த்து அலைந்தேன்மின்னை ஒப்பாய், விட்டிடுதி கண்டாய் - உவமிக்கின், மெய்யேஉன்னை ஒப்பாய்; மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே ,அன்னை ஒப்பாய்; எனக்கு அத்தன் ஒப்பாய்; என் அரும் பொருளே!
உரை
உனது திருமேனிக்கு உவமை சொல்லின் மின்னலை ஒப்பாய். உனக்கு நீயே
நிகராவாய். நிலைபெற்ற உத்தரகோச மங்கைக்கு அரசே! எனக்குத் தாய் போல் ஆவாய் !
தகப்பனை ஒப்பாய்! கிடைத்தற்கரிய அரும்பொருளே! என்னை நோக்கி 'ஐயா பயப்படாதே'
என்று சொல்லுவார் இல்லாமல் நின்று வருந்தி இளைத்து அலைந்தேன்.
என்னைக் கைவிட்டு விடாதே!
17
பொருளே தமியேன் புகலிட மேநின் புகழிகழ்வார்வெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்ம்மை யார்விழுங்கும்அருளே அணிபொழில் உத்தர கோசமங் கைக்கரசேஇருளே வெளியே இகபர மாகி இருந்தவனே.
சொற்பிரிப்பு
பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்வெருளே, எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும்அருளே, அணி பொழில் உத்தர - கோசமங்கைக்கு அரசேஇருளே, வெளியே, இகபரம் ஆகி இருந்தவனே.
உரை
உண்மை அன்பர் முற்றிலும் அனுபவிக்கும் அருளமுதே! அழகிய சோலை சூழ்ந்த
உத்தர கோச மங்கைப் பதிக்கு மன்னவனே! மறையாயும், வெளியாயும் இருப்பவனே!
இம்மை மறுமைகளாகி இருந்தவனே என்றும் மாற்றமே இல்லாத மெய்ப்பொருளே !
தனியேனாகிய யான் சரண் புகும் இடமே ! உன் பெருமையை நிந்திப்பார்க்கு
அச்சமானவனே! அடியேனைக் கைவிட்டு விடாதே!
18
இருந்தென்னை யாண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னினல்லால்விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க நஞ்சமுதாஅருந்தின னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசேமருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே.
சொற்பிரிப்பு
இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்: ஒற்றி வை; என்னின் அல்லால்,விருந்தினனேனை, விடுதி கண்டாய் - மிக்க நஞ்சு அமுதாஅருந்தினனே, மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசே,மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே
உரை
பாற்கடலில் எழுந்த கொடிய பெருவிடத்தை அமுதமாக உண்டவனே!
நிலைபெற்ற உத்தர கோச மங்கைக்கு அரசே! பிறவியாகிய நோயில் சிக்கி
முடக்கமுற்றவர்களுக்கு நல்ல மருந்து ஆனவனே! அடியேன் முன்பு எழுந்தருளியிருந்து
ஆட்கொள்ள வேண்டும். வேண்டுமாயின், என்னை விற்றுக் கொள்ளுக அல்லது ஒற்றி
வைப்பாய் என்று கூறுவதல்லாமல் வேறொன்றும் அறியாத என்னை உன் திருவருட்குப்
புதியதாய் உடையவன் என்று என்னை நீக்கி விடாதே!
19
மடங்கவென் வல்வினைக் காட்டைநின் மன்னருள் தீக்கொளுவும்விடங்கஎன் தன்னை விடுதிகண் டாயென் பிறவியைவேரொடுங்களைந் தாண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசேகொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக் கொம்பினையே.
சொற்பிரிப்பு
மடங்க என் வல் வினைக் காட்டை, நின் மன் அருள் தீக் கொளுவும்விடங்க, என்-தன்னை விடுதி கண்டாய் என் பிறவியைவேரொடும் களைந்து ஆண்டுகொள்; உத்தர கோச மங்கைக்கு அரசேகொடும் கரிக்குன்று உரித்து, அஞ்சுவித்தாய், வஞ்சிக் கொம்பினையே.
உரை
எனது பிறவி மாமரத்தை வேரோடு வெட்டி எறிந்து என்னை ஆட்கொண்டு
அருளும் உத்தர கோச மங்கைக்கு அரசே! மலைபோன்று கொடுமை மிக்க யானை வடிவை
உடைய கயாசுரனைக் கொன்று தோலுரித்துப் போர்த்தனை. அதுகண்டு வஞ்சிக் கொடி
போன்ற உமையம்மை அஞ்சும்படிச் செய்தனை. எனது கொடிய வினைகளின்
தொகுதியான காட்டினை முற்றிலும் அழிக்க உனது நிலைபெற்ற அருளாகிய பெருந்தீயினை
மூட்டிக் கொளுத்தும் வீரனே! அடியேனைக் கைவிட்டு விடாதே!
20
கொம்பரில் லாக்கொடி போல்அல மந்தனன் கோமளமேவெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர் நண்ணுகில்லாஉம்பருள்ளாய் மன்னும் உத்தர கோசமங் கைக்கரசேஅம்பர மேநில னேயனல் காலொடப் பானவனே.
சொற்பிரிப்பு
கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமேவெம்புகின்றேனை விடுதி கண்டாய் - விண்ணர் நண்ணுகில்லாஉம்பர் உள்ளாய்; மன்னும் உத்தர - கோசமங்கைக்கு அரசேஅம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு ஆனவனே
உரை
தேவர்களும் அணுக முடியாத மேலிடத்தில் இருப்பவனே! நிலைபெற்ற
உத்தரகோச மங்கை மன்னனே! வான், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்னும்
ஐம்பூதங்களையும் வடிவமாகக் கொண்டு அவையானவனே! என்றும் மாறாத இளமைச்
செவ்வி உடையவனே! படர்தற்குக் கொழு கொம்பில்லாத கொடிபோன்று திரிந்து
சுழன்றேன். வீட்டை அடைதற்குத் தவிக்கின்ற என்னை விட்டு விடாதே!
21
ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல னாலலைப்புண்டேனையெந் தாய்விட் டிடுதிகண் டாய்வினை யேன்மனத்துத்தேனையும் பாலையுங் கன்னலை யும்மமு தத்தையு மொத்துஊனையு மென்பினை யும்உருக் காநின்ற ஒண்மையனே.
சொற்பிரிப்பு
ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய் - வினையேன் மனத்துத்தேனையும், பாலையும், கன்னலையும் அமுதத்தையும், ஒத்துஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே
உரை
எனது அப்பனே! தீவினையேனது உள்ளத்தின்கண் தேனும், பாலும்
கருப்பஞ்சாறும், இனிய அமுதமும் போன்று தித்தித்து என் தசையையும் எலும்பையும் உருக
வைத்த ஒளி வண்ணனே! கருமையான ஆனைச் சண்டையில் அகப்பட்ட சிறு செடி போல
ஐம்புல ஆசைப் போரில் அகப்பட்டுத் திரிவுற்றுத் துயருறும் என்னைக் கைவிட்டு விடாதே!
22
ஒண்மைய னேதிரு நீற்றையுத் தூளித் தொளிமிளிரும்வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய் யடியவர்கட்குஅண்மைய னேயென்றுஞ் சேயாய் பிறர்க்கறி தற்கரிதாம்பெண்மைய னேதொன்மை ஆண்மைய னேயலிப் பெற்றியனே.
சொற்பிரிப்பு
ஒண்மையனே, திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்வெண்மையனே, விட்டிடுதி கண்டாய் - மெய் அடியவர்கட்குஅண்மையனே, என்றும் சேயாய் பிறர்க்கு; அறிதற்கு அரிது ஆம்பெண்மையனே, தொன்மை ஆண்மையனே, அலிப் பெற்றியனே
உரை
ஒளிப்பிழம்பாய் உள்ளவனே! திருவெண்ணீற்றை நிறையப் பூசி ஒளி மிளிரும்
வெண்மை நிறம் உடையவனே! மெய்யடியார்களுக்குப் பக்கத்தில் இருப்பவனே! அடியார்
அல்லாத ஏனையோர்க்கு எக்காலத்தும் தூரத்தில் இருப்பவனே! அறிதற்கு அரிய
பொருளாய் இருப்பவனே! இன்ன வடிவம் என்று அறிய முடியாதவனே! பெண்ணாய்
இருப்பவனே! பழமையானவனே ! ஆணாய் இருப்பவனே ! அலித்தன்மையாய்
இருப்பவனே! என்னை விட்டு விடாதே!
23
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின்வெற்றடி யேனை விடுதிகண் டாய்விடி லோகெடுவேன்மற்றடி யேன்தன்னைத் தாங்குநர் இல்லையென் வாழ்முதலேஉற்றடி யேன்மிகத் தேறிநின் றேன்எனக் குள்ளவனே.
சொற்பிரிப்பு
பெற்றது கொண்டு, பிழையே பெருக்கிச், சுருக்கும் அன்பின்வெற்று அடியேனை, விடுதி கண்டாய் - விடிலோ கெடுவேன் ;மற்று, அடியேன் -தன்னைத், தாங்குநர் இல்லை; என் வாழ் - முதலே;உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன், எனக்கு உள்ளவனே.
உரை
எனது வாழ்க்கைக்குக் காரணமான முதற்பொருளே! எனக்குப் பற்றுக் கோடாய்
உள்ளவனே! அடியேன் இவ்வுலகம் இத்தன்மையது என்று அறியாது உன்னை விட்டு
விலகியதால் வரும் துன்பத்தை அனுபவித்து மிகவும் தெளிவாக நின்றேன். எனது
உள்ளத்தினனாய் இருப்பவனே! அடியேனுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைப்
பற்றிக்கொண்டு தவறுகளையே வளர்த்து, சுருங்கிய அன்புடைய பயனற்ற அடியேனைக்
கைவிட்டு விடாதே! நீ கைவிடின் அடியேனைத் தாங்குபவர் வேறில்லை. அதனால் கெட்டொழிவேன்.
24
உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யற்றுழனிவெள்ளன லேனை விடுதிகண் டாய்வியன் மாத்தடக்கைப்பொள்ளல்நல் வேழத் துரியாய் புலனின்கட் போதலொட்டாமெள்ளன வேமொய்க்கு நெய்க்குடந் தன்னை எறும்பெனவே.
சொற்பிரிப்பு
உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல் துழனிவெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்பொள்ளல் நல்வேழத்து உரியாய், புலன், நின்கண் போதல் ஒட்டாமெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே
உரை
மிகவும் பெரிய நீண்ட துதிக்கையின்கண் துளையினை உடைய அழகிய
யானையின் தோலை உடையவனே! ஐம்புலன்களும் உன்பால் செல்லவொட்டாமல்
நெய்க்குடத்தை எறும்பு மொய்ப்பது போல என்னை நெருங்கி மொய்க்கின்றன. அதனால்
உண்மையானவை செய்வதை விடுத்து பொய்யானவற்றையே செய்யும் மயக்கத்தையும்
ஆரவாரத்தையும் உடையவன் ஆயினேன். அவ்வாறு தூயவன் அல்லாதவன் ஆகிய
என்னைக் கைவிட்டு விடாதே !
25
எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப் புண்டலந்தவெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய கூற்றொடுங்கஉறுங்கடிப் போதவை யேயுணர் வுற்றவர் உம்பரும்பர்பெறும்பத மேயடியார்பெய ராத பெருமையனே.
சொற்பிரிப்பு
எறும்பிடை நாங்கூழ் எனப், புலனால் அரிப்புண்டு, அலந்தவெறும் தமியேனை விடுதிகண்டாய் வெய்ய கூற்று ஒடுங்கஉறும் கடிப்போது -அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்பெறும்பதமே, அடியார் பெயராத பெருமையனே
உரை
கொடிய இயமன் ஒடுங்கும்படி அவன்மேல் மணம் நிறைந்த தாமரை மலர்களை
ஒத்த உன் திருவடிகள் பொருந்தின. அந்தத் திருவடிகளையே அழுந்தி வழுத்திய
அடியார்கள் தேவர்க்கும் மேலான பதவியை உடையவனாகிய உன்னைப் போற்றிப்
பெற்றனர். அந்த அடியார்கள் உன்னை விட்டு நீங்காத பெருமை உடையவனே! எறும்புகள்
பலவற்றினிடையே அகப்பட்ட நாங்கூழ்ப்புழு அரிக்கப்பட்டு வருந்தினாற்போல் அடியேன்
ஐம்புலன்களால் அரிக்கப்பட்டு, துன்புற்று பயனில்லாத நிலையில் உள்ளேன். அடியேனைக்
கைவிட்டு விடாதே!
26
பெருநீ ரறச்சிறு மீன் துவண் டாங்கு நினைப்பிரிந்தவெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கைபொங்கிவரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின்வெள்ளைக்குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே.
சொற்பிரிப்பு
பெரு நீர் அறச், சிறுமீன் துவண்டு - ஆங்கு, நினைப் பிரிந்தவெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கிவரும் நீர்மடுவுள், மலைச்சிறு தோணி வடிவின், வெள்ளைக்குருநீர்மதி பொதியும் சடை, வானக் கொழு மணியே!
உரை
மேல் உலகில் உள்ள சிறந்த இரத்தினம் போன்றவனே! வெண்மை நிறமும்
குளிர்ச்சியும் பொருந்திய பிறைச்சந்திரன் விளங்குகின்ற சடையினை உடையவனே! பெரிய
கங்கை நீர்ப் பெருகுகின்ற குளத்துள் எதிர்த்து நிற்கின்ற சிறிய தோணியின் தோற்றம் போல்
உள்ளது அப்பிறைச் சந்திரன். மிகுதியான நீரை உடைய குளத்தில் நீர் வற்றி வாடிய நிலை ;
அதுசமயம் அக்குறைந்த நீரில் சிறிய மீன்கள் வாடினாற்போல நான் உள்ளேன். உன்னை
விட்டு நீங்கிய என்னை விட்டுவிடாதே!
27
கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றிவிழுமடியேனை விடுதிகண் டாய்மெய்ம் முழுதுங்கம்பித்துஅழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக்கழுமணி யேயின்னுங் காட்டுகண் டாய்நின் புலன்கழலே.
சொற்பிரிப்பு
கொழுமணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றிவிழும் அடியேனை விடுதி கண்டாய் மெய்ம் முழுதும் கம்பித்துஅழும் அடியாரிடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டருளி, என்னைக்கழுமணியே, இன்னும்காட்டு கண்டாய் நின் புலன் கழலே.
உரை
உடல் முழுதும் புளகம் கொண்டு நடுநடுங்கி அழுது தொழும் அடியார் நடுவே
என்னைப் பொருத்தி வைத்து ஆட்கொண்டருளிய மாணிக்கமே! மீண்டும் என்னைத்
தூய்மை செய்த மாணிக்கமே! இன்னும் ஒருமுறை உன்னுடைய அறிவு மயமாகிய
திருவடியைக் காட்டி அருளுக. முத்துப் போன்ற பல்லினை உடைய மாதரது நகிலென்னும்
மலைமிசை அறிவு குறைந்து போய் விழுகின்ற அடியேனைக் கைவிட்டு விடாதே! இனியும்
முன்போல உனது ஞானமாகிய திருவடியை அடியேனுக்குக் காட்டுவாயாக.
28
புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கேவிலங்குகின் றேனை விடுதிகண் டாய்விண்ணும் மண்ணுமெல்லாம்கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு ணாகரனேதுலங்குகின் றேன்அடி யேனுடை யாயென் தொழுகுலமே.
சொற்பிரிப்பு
புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு ஒர் பொய்ந் நெறிக்கேவிலங்குகின்றேனை விடுதி கண்டாய் விண்ணும், மண்ணும், எல்லாம்கலங்க, முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்; கருணாகரனே !துலங்குகின்றேன் அடியேன்; உடையாய், என் தொழுகுலமே.
உரை
விண்ணுலகமும், மண்ணுலகமும் முழுவதும் அஞ்சிக் கலக்கமுற்ற போது கடலில்
எழுந்த ஆலகால விடத்தை அமுதமாக உண்டவனே! அருட்கடலே! பாசத்திற்கு அஞ்சி
நடுங்குவேனாகிய அடியேனை அடிமையாக உடையவனே! யான் வணங்கும்
இனத்தவனாய் வந்தவனே! ஐம்புலன்கள் என்னைத் திகிலடையும்படி செய்ய யானும்
திகிலடைந்து இங்கு ஒரு நிலையற்ற வழியிலே விலகித் திரிகின்ற என்னைக் கைவிட்டு விடாதே!
29
குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றம்கொற் றச்சிலையாம்விலங்கலெந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின் மின்னுகொன்றைஅலங்கலந் தாமரை மேனியப் பாஒப்பி லாதவனேமலங்களைத் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு மத்துறவே.
சொற்பிரிப்பு
குலம்களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம்விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றைஅலங்கல் அம்-தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனேமலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே
உரை
பொன் போல மின்னுகின்ற கொன்றை மாலை அணிந்த அழகிய செந்தாமரை
மேனி உடைய அப்பனே! யாரும் தனக்கு நிகரில்லாதவனே! கடைகின்ற மத்து பொருந்திய
உடன் தயிர் சுழலுகின்றது. அவ்வாறு என்னைப் பற்றிய ஐந்து பாசங்களாலும் அலைவுற்று
வருந்துகிறேன். எனது குற்றங்களை எல்லாம் ஒழித்தவனே! எனது பசுபோதத்தையும்
நீக்கினாய். வெற்றி வில்லாக மேருவை உடைய எந்தையே! எனைக் கைவிட்டு விடாதே!
30
மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கிவித்துறு வேனை விடுதிகண் டாய்வெண் டலைமிலைச்சிக்கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித்தத்துறு நீறுட னாரச்செஞ் சாந்தணி சச்சையனே.
சொற்பிரிப்பு
மத்து உறு தண் தயிரின், புலன் தீக் கதுவக் கலங்கிவித்து உறுவேனை விடுதி கண்டாய் வெண்தலை மிலைச்சிக்கொத்துஉறு போது மிலைந்து, குடர் நெடுமாலை சுற்றித்தத்துறு நீறுடன் ஆரச்செம்-சாந்து அணி சச்சையனே.
உரை
வெள்ளிய தலையை அணிந்து, திரட்சியுடைய கொன்றைப் போதினைச் சூடினாய்.
குடர் போலும் நீண்ட தோல் மாலையைக் கழுத்தினைச் சுற்றி அணிந்து, அசைந்து
விளங்குகின்ற திருநீறும் சந்தனத்தின் சிவந்த குழம்பும் அணிந்த இளமையான தலைவனே !
மத்துப் பொருந்திய குளிர்ந்த கட்டித் தயிர் உடைதல் போல, ஐம்புலனாகிய தீப்பற்ற
அதனாற்கலங்கி வித்தின் தன்மை அடைவேனைக் கைவிட்டு விடாதே !
31
சச்சைய னேமிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம்விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி யாய்கரியாய்பச்சைய னேசெய்ய மேனிய னேயொண் படஅரவக்கச்சைய னேகடந் தாய்தடந் தாள அடற்கரியே.
சொற்பிரிப்பு
சச்சையனே, மிக்கதண் புனல், விண், கால், நிலம், நெருப்பு, ஆம்விச்சையனே, விட்டிடுதி கண்டாய் வெளியாய், கரியாய்பச்சையனே, செய்ய மேனியனே, ஒண் பட அரவக்கச்சையனே - கடந்தாய் தடம் தாள அடல் கரியே
உரை
வெண்ணிறம் உடையோய்! கருநிறம் உடையோய்! பச்சை நிறம் உடையோய் !
சிவந்த திருமேனியாய்! ஒளி விளங்கும் படமுடைய பாம்பினைக் அரைக்கச்சாக
அணிந்தவனே! அகன்ற அடியினை உடைய வலிமிக்க யானை வடிவுடைய கயாசுரனை
வென்றவனே! மிக நுட்பமான மெய்ப் பொருளாகிய தலைவனே! வெளிப்படையான நீர்,
வான், காற்று, நிலம், நெருப்பு என்பனவற்றோடு கலந்து அவையாய வியப்புச்
செயலுடையவனே! என்னைக் கைவிட்டு விடாதே!
32
அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி அழிந்தஎன்னைவிடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லால்தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு தீச்சுழலக்கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே.
சொற்பிரிப்பு
அடல் கரிபோல், ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னைவிடற்கு அரியாய், விட்டிடுதி கண்டாய் விழுத் தொண்டர்க்கு அல்லால்தொடற்கு அரியாய், சுடர் மாமணியே, சுடுதீச் சுழலக்கடல் கரிது ஆய்எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக் கண்டனே
உரை
மேன்மையான அடியார்களுக்கல்லது ஏனையோர்க்கு பற்றுதற்கரியவனே!
ஒளிகாலும் பெரிய மாணிக்கமே ! கடல் சுடும் தீயாகிய வடவையும் நிலை கலங்க,
திருப்பாற்கடலிலே எதிர்பாராதபடி அருமையாய் எழுந்த விடத்தை அமுதமாக்கிய
நீலகண்டப் பெருமானே! தவிர்தற்குக் கூடாதவனே! வலிய யானை போன்ற ஐம்பொறிப்
பற்றுக்குப் பயந்து உள்ளம் ஒடுங்கிய என்னைக் கைவிட்டு விடாதே!
33
கண்டது செய்து கருணைமட் டுப்பரு கிக்களித்துமிண்டுகின் றேனை விடுதிகண் டாய்நின் விரைமலர்த்தாள்பண்டுதந் தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக்கொண்டெனெந் தாய்களை யாய்களை யாய குதுகுதுப்பே.
சொற்பிரிப்பு
கண்டது செய்து, கருணை-மட்டுப் பருகிக் களித்துமிண்டு கின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர்த்தாள்பண்டு தந்தால் போல் பணித்துப், பணிசெயக் கூவித்து, என்னைக்கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குது குதுப்பே.
உரை
என் தந்தையே! உனது அருளாகிய தேனை மிகுதியாகப் பருகியதால் களிப்பு
உண்டாயிற்று. அக்களிப்பின் காரணமாக மனம் போனவாறு எல்லாம் போய் நல்லது
செய்யாமல் அல்லது செய்து வருகின்றேன். இவ்வாறு போகின்ற என்னைக் கைவிட்டு
விடாமல் தடுத்து அருள் புரிவாயாக. மணம் நிறைந்த தாமரை மலர் போன்ற உன்
திருவடியை அடியேன் காண்பதற்கு முன் காட்டினாற் போல மீண்டும் காட்டி அருள்
புரிவாயாக. பிராரத்த வினையாகிய நிகழ் வினைக்கு நான் அஞ்சி நிற்பதால் "நான் எனது"
என்ற தற்போதம் தலை தூக்கியது. அதன் காரணமாக இறைபணி ஆற்றாது பரபரப்பு
அடைகின்றேன். வீடு பேற்றுக்குத் தடையாக உள்ள அந்தத் தற்போதத்தை வேரறக்
களைந்து என்னைக் காத்தருள்வாயாக.
34
குதுகுதுப் பின்றிநின்று என்குறிப் பேசெய்து நின்குறிப்பில்விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை யார்ந்தினியமதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின் மனங்கனிவித்துஎதிர்வதெப் போது பயில்விக் கயிலைப் பரம்பரனே.
சொற்பிரிப்பு
குது குதுப்பு இன்றி நின்று, என் குறிப்பே செய்து, நின் குறிப்பில்விது விதுப்பேனை விடுதி கண்டாய் ? விரை ஆர்ந்து, இனியமது - மதுப் போன்று, என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்துஎதிர்வது எப்போது? பயில்விக் கயிலைப் பரம்பரனே!
உரை
மிகுதியான மலர்களை உடைய தூய்மையான கயிலையில் வாழ்கின்ற மிக
மேலானவனே! உன் திருவுள்ளக் கருத்தை அறிந்து அதன்படி நடக்காமல் என் மனத்தில்
தோன்றியதை எல்லாம் செய்து வருகின்றேன். ஆனாலும் உனது திருக்குறிப்பை அறிவதில்
ஆசை கொண்டு அதனை நாடி விரைந்து வருகின்றேன். என்னைக் கைவிட்டு விடாமல்
ஆட்கொள்ளுவாயாக. வாழைப்பழத்தைப் போல என் மனத்தைக் கனியச் செய்து, மனம்
நிறைந்த தெளிந்து இனிதாய் இருக்கின்ற தேனோடு மற்றோர் இனிமை கலந்தாற் போல நீ
என்னிடம் கலந்து கொள்ளுவது எப்போது என்று கூறுவாயாக.
35
பரம்பர னேநின் பழவடி யாரொடு மென்படிறுவிரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின்அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம்பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே.
சொற்பிரிப்பு
பரம்பரனே, நின்பழ அடியாரொடும் என் படிறுவிரும்பு அரனே, விட்டிடுதி கண்டாய் மென் முயல் - கறையின்அரும்பு, அர, நேர் வைத்து அணிந்தாய், பிறவி ஐவாய் அரவம்பொரும், பெருமான் - வினையேன் மனம் அஞ்சிப், பொதும்பு உறவே
உரை
மெல்லிய, முயல் போன்ற களங்கத்தை உடைய இளம்பிறையையும், பாம்பையும்
சமமாகச் சடையில் அமர்த்தி அவற்றைத் தலைக்கணியாய்க் கொண்டவனே!
தீவினையுடையேன் உள்ளம் நடுங்கி ஒரு புகலிடத்தை அடையும்படி, பிறவிக்கேதுவான
ஐம்புலன் எனும் ஐந்து வாயுடைய பாம்பானது தாக்குகிறது . பெருந்தகையோனே!
மேலோர்க்கும் மேலோனே! உனது பழவடியாரோடு வஞ்சனை உடைய என்னையும்
ஆட்கொள்ள விரும்பிய பாச நீக்க முதல்வனே! என்னைக் கைவிட்டு விடாதே!
36
பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன் தீக்கதுவவெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை யார்நறவம்ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டுஅதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத்து அடலரைசே.
சொற்பிரிப்பு
பொதும்பு உறுதீப்போல் புகைந்து எரியப், புலன் தீக் கதுவவெதும்புறுவேனை விடுதி - கண்டாய் விரைஆர் நறவம்ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று, மந்தம் முரல் வண்டுஅதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே
உரை
வாசனை பொருந்திய தேன் நிறைந்த மந்தார மலரில் தங்கி ஏழிசையில் தாரம்
என்னும் வல்லிசையை முதலில் எழுப்பிப் பின் மெல்லோசையை ஒலிக்கின்ற வண்டுகள்
அழுந்தித் திளைக்கும் வளம்மிக்க தேன் பொழியும் மின்னும் சடையுடைய சிதாகாய
நாட்டின் வலிமைமிக்க வேந்தே! மரச்செறிவில் பற்றிய நெருப்புப் போல புகை வீசியெரியும்
ஐம்புலன்களாகிய தீ என்னைப் பற்றுதலால், உள்ளத்துயராகிய வெப்பமுறுகின்ற என்னை
விட்டு விடாதே !
37
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்சல் என்னினல்லால்விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண் ணகைக்கருங்கண்திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்காவரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந்து அடர்வனவே.
சொற்பிரிப்பு
அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு 'அஞ்சல்' என்னின் அல்லால்விரைசேர் முடியாய், விடுதிகண்டாய் வெள்-நகைக், கரும்-கண்திரைசேர் மடந்தை மணந்த திருப்பொன் பதப்புயங்கா,வரைசேர்ந்து அடர்ந்து என்ன, வல்வினை தான்வந்து அடர்வனவே
உரை
வெண்மையான பற்களையும், கருமையான கண்களையும் உடைய
திருப்பாற்கடலில் தோன்றிய திருமகள் வணங்கிப் பயன்பெற்ற பொன் போன்ற அழகிய
திருப்பாதங்களை உடைய பாம்பணிந்த பெருமானே! மலைகள் ஒன்று சேர்ந்து
தாக்கினாற்போன்று, கொடிய வினைப் பயன்கள் என்னை வந்து தாக்குகின்றன. அரசனே!
அறிவில்லாத சிறியேனின் குற்றத்தைப் பொறுத்து 'அஞ்சாதே' என்று நீ அருள்
செய்தாலன்றி உய்யேன். மணங்கலந்த சடைமுடியாய்! என்னைக் கைவிட்டு விடாதே!
38
அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொனல் லாரவர்தம்விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேயெரியுஞ்சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதேதொடர்வரி யாய்தமி யேன்றனி நீக்குந் தனித்துணையே.
சொற்பிரிப்பு
அடர் புலனால், நின்பிரிந்து அஞ்சி, அம்-சொல் நல்லார் - அவர் - தம்விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும்சுடர் அனையாய், சுடுகாட்டு அரசே, தொழும்பர்க்கு அமுதேதொடர்வு அரியாய், தமியேன் தனி நீக்கும் தனித் துணையே
உரை
பெருக்கமாய் விளங்குகின்ற சோதிப் பிழம்பைப் போன்றவனே! சுடுகாடாகிய
சங்கார முடிவின் முதலே! அடியார்க்கு அமுதமானவனே! அடியார் அல்லாதவர்கள்
உன்னைப் பற்றுதற்கு அருமையானவனே! அடியேனின் தனிமையை நீக்கும் ஒப்பற்ற
துணைவனே! என்னைத் தாக்குகின்ற ஐம்புல வேட்கையால் உன்னைப் பிரிந்து பயந்து
அழகிய மொழி உடைய பெண்டிர் குழுவாகிய காட்டினைக் கடந்து வருவதற்கு இயலாத
என்னைக் கைவிட்டு விடாதே!
39
தனித்துணை நீநிற்க யான்தருக் கித்தலை யால்நடந்தவினைத்துணை யேனை விடுதிகண்டாய்வினை யேனுடையமனத்துணை யேஎன்தன் வாழ்முத லேயெனக் கெய்ப்பில்வைப்பேதினைத்துணை யேனும் பொறேன்துயர் ஆக்கையின் திண்வலையே.
சொற்பிரிப்பு
தனித்துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்தவினைத்துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடையமனத்துணையே, என்-தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் - வைப்பேதினைத்துணையேனும் பொறேன். துயர் ஆக்கையின் திண்வலையே
உரை
தீவினையேனது உள்ளத்திற்கு உறுதி கொடுக்கும் துணையானவனே! எனது
வாழ்வுக்கு அடிப்படையான முதற்பொருளே! எனக்கு, இளைத்த காலத்தில் பயன்படும்
சேமநிதி போன்றவனே! ஒப்பற்ற துணைவனாகிய நீ நிலையாக இருக்கும் காலத்தில்
தற்போத உணர்ச்சியுற்று முறைமாறாக ஒழுகின இருவினையேனைக் கைவிட்டு விடாதே !
துயரத்தைத் தரும் உடம்பு என்னும் திண்ணிய வலையில் கிடப்பதைத் தினையளவு நேரம்
கூட யான் பொறுக்க மாட்டேன்.
40
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டுமிலைத்தலைந் தேனை விடுதிகண் டாய்வெண் மதியினொற்றைக்கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி லாயமென்னும்மலைத்தலை வாமலை யாள்மண வாளஎன் வாழ்முதலே.
சொற்பிரிப்பு
வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு,மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெள்மதியின் ஒற்றைக்கலைத்தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும்மலைத்தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே.
உரை
வெண்மையான சந்திரனது ஒற்றைக் கலையைத் தனது சடாமுடியில் தரித்தவனே!
கருணைக்கு இருப்பிடமானவனே! கயிலாயம் என்கின்ற மலைக்குத் தலைவனே!
மலைமகளாகிய பார்வதி தேவியின் மணவாளனே! எனது வாழ்விற்கு மூல காரணமாக
உள்ளவனே! வலையிடை அகப்பட்ட மான் போன்ற மருட்சிப் பார்வை உடைய
பெண்களின் கண் வலையில் சிக்கி அவர் வழியை மேற்கொண்டு திரிவேனைக் கைவிட்டுவிடாதே!
41
முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற் கடிப்பமூழ்கிவிதலைசெய் வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைந்தசிதலைசெய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோதிதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன் சிவகதியே.
சொற்பிரிப்பு
முதலைச் செவ்-வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கிவிதலைச் செய்வேனை விடுதி கண்டாய்? விடக்கு ஊன் மிடைந்தசிதலைச் செய் காயம் பொறேன்; சிவனே, முறையோ? முறையோ?திதலைச் செய் பூண்முலை மங்கை பங்கா, என் சிவகதியே!
உரை
தேமல் விளங்கும் நகையணிந்த நகிலை உடைய உமையம்மை பாகனே! எனது
இன்ப நெறியே! சிவபெருமானே! ஐயோ! ஐயோ! புலால் நாற்றம் உடைய தசை நிறைந்த
நோய்க்கு இடமாகிய உடம்பைத் தாங்க மாட்டேன். ஆசையாகிய வெப்பமுடைய நீர்நிலையில்
சிவந்த வாயினை உடைய மாதராகிய முதலைகள் கடிக்கும்படி மூழ்கித்
துன்பப்படுவேனைக் கைவிட்டு விடாதே!
42
கதியடி யேற்குன் கழல்தந் தருளவும் ஊன்கழியாவிதியடி யேனை விடுதிகண் டாய்வெண் டலைமுழையிற்பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச்சுருங்க அஞ்சிமதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே.
சொற்பிரிப்பு
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும், ஊன் கழியாவிதி அடியேனை விடுதி-கண்டாய் வெள்-தலை முழையில்பதிஉடைவாள் அரப் பார்த்து, இறை பைத்துச் சுருங்க, அஞ்சிமதிநெடு நீரில் குளித்து, ஒளிக்கும் சடை மன்னவனே
உரை
ஒளி பொருந்திய பாம்பானது சிவனது சடாமுடியை நெருங்கி உள்ள
வெண்மையான மண்டை ஓட்டைப் புற்றாகக் கொண்டு தங்கியிருக்கும். ஓரோர் சமயம்
பாம்பானது புற்றினின்றும் வெளிப்பட்டு, தனது படத்தை விரித்து அங்கும் இங்கும் பார்க்கும்.
சடாமுடியில் மற்றோர் பாகத்தில் தங்கியிருக்கும் பிறைச்சந்திரன் பாம்பின் விரிந்த
படத்தைப் பார்த்தவுடன் பயந்துபோய் தன் பக்கத்தில் இருக்கும் கங்கை நதியில் குதித்து,
தன்னை மறைத்துக் கொள்ளும். இவ்வாறு பாம்பையும் சந்திரனையும் கங்கை நதியையும்
அடக்கிக் கொண்டுள்ள சடாபாரத்தைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தலைவனாகிய
சிவபெருமானே! அடியேனுக்கு உன் திருவடிகளின் காட்சியைத் தந்து உயர்ந்த
ஞானநெறியை அடையும்படி அருள்புரிவாயாக. ஊழ்வினையின் பயனால் அடியேனது
உடல் இதுகாறும் நீங்கப் பெறவில்லை. என்னை விட்டுவிடாமல் ஆட்கொள்வாயாக.
43
மன்னவ னேயொன்று மாறுஅறி யாச்சிறி யேன்மகிழ்ச்சிமின்னவ னேவிட் டிடுதிகண் டாய்மிக்க வேதமெய்ந்நூல்சொன்னவ னேசொற் கழிந்தவ னேகழி யாத்தொழும்பர்முன்னவ னேபின்னும் ஆனவனேஇம் முழுதையுமே.
சொற்பிரிப்பு
மன்னவனே, ஒன்றும், ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சிமின்னவனே, விட்டிடுதி கண்டாய் மிக்கவேத மெய்ந்நூல்சொன்னவனே, சொல்கழிந்தவனே, கழியாத் தொழும்பர்முன்னவனே, பின்னும் ஆனவனே, இம் முழுதையுமே.
உரை
மேலாகிய வேதமாம் உண்மை நூலினைப் பக்குவர்க்கு உணர்த்தியவனே !
சொல்லினுக்கு அப்பாற்பட்டவனே! உன்னை விட்டு நீங்காத தொண்டர்க்கு
முன்னிற்பவனே! அவர்கட்குத் தோன்றாத் துணையாகவும் உதவுபவனே! இப்படைப்பு
முழுவதும் ஆனவனே! அரசனே ! உன்னை வந்து கலக்கும் விதத்தை அறியாத
சிறியேனுக்குக் களிப்பு விளைக்கும் சோதியனே! என்னைக் கைவிட்டு விடாதே!
44
முழுதயில் வேற்கண் ணியரென்னு மூரித் தழல்முழுகும்விழுதனை யேனை விடுதிகண் டாய்நின் வெறிமலர்த்தாள்தொழுதுசெல் வான்நல் தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்பழுதுசெய் வேனை விடேல்உடை யாய்உன்னைப் பாடுவனே.
சொற்பிரிப்பு
முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரித் தழல் முழுகும்விழுது அனையேனை விடுதி-கண்டாய் நின்வெறி மலர்த்தாள்தொழுது செல்வானத் தொழும்பரில் கூட்டிடு; சோத்தெம் பிரான்;பழுது செய்வேனை விடேல்; உடையாய், உம்மைப் பாடுவனே
உரை
கூரிய வேல் போன்ற கண்களை உடைய மாதரார் என்கிற வலிமையுடைய தீயிலே
முற்றிலும் விழுந்து உருகி அழிந்து போகும் வெண்ணெய் போன்ற என்னைக் கைவிட்டு
விடாதே! மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற உன் திருவடியை அடைவதற்கு
வணங்கிச் செல்லும் சிதாகாயத் தொண்டருடன் என்னைச் சேர்த்து விடு, இழிந்தேன்,
தலைவனே! உனக்கு வணக்கம். குற்றம் செய்யும் என்னைக் கைவிட்டு விடாதே!
முதல்வனே! உன்னை நான் பாடுவேன்.
45
பாடிற்றி லேன்பணி யேன்மணி நீயொளித் தாய்க்குப்பச்சூன்வீடிற்றி லேனை விடுதிகண் டாய்வியந் தாங்குஅலறித்தேடிற்றி லேன்சிவன் எவ்விடத் தான்எவர் கண்டனர்என்றுஓடிற்றி லேன்கிடந் துள்ளுரு கேன்நின்று உழைத்தனனே.
சொற்பிரிப்பு
பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து, ஆங்கு அலறித்தேடிற்றிலேன்: 'சிவன் எவ்இடத்தான்? எவர் கண்டனர்?' என்றுஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.
உரை
மாணிக்கமே! நின் புகழைப் பாட மாட்டேன். நின்னை வணங்க மாட்டேன்.
எனக்கு முதலில் காட்சியளித்துப் பின்னர் மறைந்து விட்டாய். உன் பொருட்டுப் பசிய
ஊனுடம்பைத் தொலைத்திடாத என்னைக் கைவிட்டு விடாதே! அதிசயமுற்று, கதறித்
துதித்து, சிவபெருமான் எங்கு உள்ளான், யார் அவனைக் கண்டார்கள்? என்று
தேடமாட்டேன். நாடி ஓட மாட்டேன். வாடிச் செயலற்று உள்ளம் கசிந்து அன்பு செய்ய
மாட்டேன். வீணே நின்று மனம் வருந்தினேன்.
46
உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய்விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின் வேலைநஞ்சுண்மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்பழைதரு மாபரன் என்றென்று அறைவன் பழிப்பினையே.
சொற்பிரிப்பு
உழை தரு நோக்கியர் கொங்கைப் பலாப் பழத்து ஈயின் ஒப்பாய்விழை தருவேனை விடுதிகண்டாய்? விடின், 'வேலை நஞ்சு உண்மழை தரு கண்டன், குணம் இலி, மானிடன், தேய்மதியன்பழைதரு மா பரன்' என்று என்று அறைவன், பழிப்பினையே
உரை
மான் போலும் பார்வையுடைய பெண்டிரின் மார்பில் பலாப்பழத்தில் மொய்க்கும்
ஈயைப் போல ஆசைப்படுவேனைக் கைவிட்டு விடாதே! நீ கைவிடிலோ, விடத்தை
உண்கின்ற மேகம் போன்ற கரிய கழுத்தை உடையவன், குணமில்லாதவன், மனிதன் ,
குறைந்த அறிவுடையோன், பண்டைப் பெரிய ஆண்டி என்று இவ்வாறெல்லாம் அடிக்கடி
உன் இகழ்ச்சியை எடுத்துரைப்பேன். “என்னைக் கைவிட்டு விட்டால் இப்பெயர்கள்
எல்லாம் இங்ஙனம் கூறும் பொருளையே உடையனவாய் விடும்" என்றபடி இங்ஙனம்
இச்சொற்கள் வேறு பொருள்பட வைத்தமை அடிகளது புலமைத் திறத்தையும்
உணர்த்துகிறது.
புலமைத்திறன் கண்டு இன்புறுக. நஞ்சுண்ட மழைக்கண்டன் = கண்டத்தில்
கறுப்பு உடல் அழகிற்கு ஒரு மரு. பேரறிவு இல்லாதாரது செயல். நஞ்சுண்டதால்
பேரழிவினின்று உலகத்தைக் காத்த பேரிரக்கம் உடையவன் . குணமிலி = பண்புகள்
அற்றவன், குணம்+இலி = மாயா குணங்களாகிய முக்குணங்களுள் ஒன்றும் இல்லாதவன்.
மானிடன் = தேவன் அல்லன், மனிதன். மான்+இடன்= பெண்ணை அல்லது மானை
இடப்பாகத்தில் கொண்டவன். தேய்மதியன் = குறைந்த அறிவுடையவன். தேய் + மதியன்=
தேய்ந்த சந்திரன் அழிந்து ஒழியாதபடி அடைக்கலம் கொடுத்து, தன் சடாமுடியில் அணிந்து
கொண்டவன். பழைதரு மாபரன் = பண்டைப் பெரிய ஆண்டி. பழை + தரு + மா + பரன்=
அநாதியான பெரிய மேலானவன். இவையே, இச்சொற்கள் குறிக்கும் உண்மைப் பொருள்.
47
பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்துவிழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண் மணிப்பணிலம்கொழித்துமந் தாரமந் தாகினி நுந்தும்பந் தப்பெருமைதழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவனே.
சொற்பிரிப்பு
பழிப்பு இல் நின் பாதப் பழம் தொழும்பு எய்தி, விழப் பழித்துவிழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண் மணிப் பணிலம்கொழித்து, மந்தாரம் மந்தாகினி நுந்தும், பந்தப் பெருமைதழிச் சிறைநீரில், பிறைக்கலம் சேர்தரு தாரவனே
உரை
கங்கை நீரில் வெள்ளி மணியாகிய முத்தும் சங்கும் கொழிக்கின்றன. மந்தார
மலரைத் தள்ளிக்கொண்டு அழகும் பெருமையும் தழுவி வரும் சடையை இடமாகக்
கொண்டது வான் கங்கை. இந்நீரில் மதியாகிய பிறைத் தோணி சேர்கின்ற வெற்றி
உடையவனே! இகழ்ச்சிக்கு இடமில்லாத நினது திருவடிப் பழமைத் தொண்டினை
அடைந்து அது நழுவ, உன்னை இகழ்ந்து யாதும் செய்யத் தெரியாது விழித்துக்
கொண்டிருந்த என்னைக் கைவிட்டு விடாதே!
48
தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண்வீரஎன் தன்னை விடுதிகண் டாய்விடி லென்னைமிக்கார்ஆரடி யானென்னின் உத்தர கோசமங் கைக்கரசின்சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே.
சொற்பிரிப்பு
தாரகை போலும் தலைத்தலை-மாலைத், தழல் அரப்பூண்வீர, என்-தன்னை விடுதி கண்டாய் விடின், என்னை மிக்கார்'ஆர் அடியான்?' என்னின், 'உத்தரகோச மங்கைக்கு அரசின்சீர்அடியார் அடியான்' என்று, நின்னைச் சிரிப்பிப்பனே.
உரை
விண்மீனாகிய நட்சத்திரம் போலும் வெண்டலை மாலையையும், நெருப்பைப்
போன்ற கொடிய விடத்தை உடைய பாம்பையும் தலையில் பூண்ட வீரனே! என்னைக்
கைவிட்டு விடாதே! என்னைக் கைவிட்டால் பெரியோர் 'நீ யாருடைய அடிமை' என்று
என்னைக் கேட்டால் 'உத்தரகோச மங்கை மன்னனின் சிறந்த அடியார்க்கு அடிமையேன்'
என்று விடைகூறி , உன்னை அவர்கள் சிரிக்கும்படி செய்வேன்.
49
சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கென்றுவிரிப்பிப்பன் என்னை விடுதிகண் டாய்விடின் வெங்கரியின்உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ் சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டுஎரிப்பிச்சன் என்னையும்ஆளுடைப் பிச்சனென் றேசுவனே.
சொற்பிரிப்பு
சிரிப்பிப்பன், சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கு என்றுவிரிப்பிப்பன்; என்னை விடுதி கண்டாய் விடின், 'வெம் கரியின்உரிப்பிச்சன், தோல் உடைப்பிச்சன், நஞ்சு ஊண்பிச்சன், ஊர்ச்சுடுகாட்டுஎரிப்பிச்சன், என்னையும் ஆளுடைப்பிச்சன்' என்று ஏசுவனே
உரை
சிவனே! என்னை நீ விட்டுவிடாதே! விட்டுவிட்டால் என்னை நீ சினந்து தள்ளிய
குற்றத்தைப் பிறர் நகையாடும்படி செய்வேன். எனது தொண்டும் இறைவனுக்கே என்று
யாவர்க்கும் கூறி அதனை யாவரும் அறியும்படி பரவச் செய்வேன். கொடிய யானையின்
தோலைப் பூண்ட பித்தன், புலித்தோலாடை அணிந்த பித்தன், விடத்தை உண்கின்ற பித்தன்,
ஊருக்குப் பொதுவான ஊர்ச்சுடுகாட்டு நெருப்போடு ஆடும் பித்தன், தகாத என்னையும்
அடிமை கொண்ட பித்தன் என்று உன்னை இகழ்ந்து உரைப்பேன்.
50
ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக் கேகுழைந்துவேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பின்தேசுடை யாயென்னை யாளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக்காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக் கடையவனே.
சொற்பிரிப்பு
ஏசினும், யான், உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைந்துவேசறுவேனை விடுதிகண்டாய்? செம்பவள வெற்பின்தேசு உடையாய்; என்னை ஆளுடையாய்; சிற்றுயிர்க்கு இரங்கிக்காய்சின ஆலம் உண்டாய்; அமுது உண்ணக் கடையவனே.
உரை
செந்நிறமுடைய பவளமலை போன்ற ஒளியுடைய திருமேனியனே! என்னை
அடிமையாக உடையவனே! சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய வானவர் முதலிய
உயிர்களுக்கு இரங்கி, பாற்கடல் கடைந்தவனாகிய திருமால் அமுதத்தை உண்ண ,
கொல்லும் வேகத்தோடு எழுந்த ஆலகால விடத்தை உண்டவனே! யான் உன்னை இகழ்ந்து
பேசினாலும் வாழ்த்தினாலும் எனது தவறுக்கே மனம் வாடி துக்கப்படுவேன். அவ்வாறு
உள்ள என்னைக் கைவிட்டு விடாதே!