திருமுறை 8 · 8.005 · 100

திருச்சதகம்

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும்கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே.
சொற்பிரிப்பு
மெய்தான் அரும்பி, விதிர் விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்கை-தான் தலை வைத்துக், கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்பொய்-தான் தவிர்ந்து, உன்னைப் 'போற்றி, சய,சய, போற்றி' என்னும்கை-தான் நெகிழ விடேன்; உடையாய் ! என்னைக் கண்டு கொள்ளே.
உரை

என்னை அடிமையாக உடையவனே! உனது பெருங்கருணைத் திறத்தை நினைந்து  என் உடல் மயிர்க் கூச்செறிந்து நடுக்கமுற்றது. எனது கைகள் தாமாகவே தலை மேல் ஏறப் பெற்று உனது மணம் பொருந்திய திருவடிகளை வணங்கலாயின. ஆனந்தக் கண்ணீர்  என் கண்களினின்றும் அரும்பியது. எனது உள்ளத்து எழுந்த ஆராக்காதலால் என்  மனமானது குளிர்ந்த நிலையினின்றும் நீங்கியது. நிலை அல்லாதவைகளின் மீதிருந்த எனது பற்று, தானே நீங்கி ஒழிந்தது. உனக்கு வணக்கம்! வெற்றி! வெற்றி ! மீண்டும் வணக்கம்! இவ்வாறு ஓதும் ஒழுக்கத்தையே நழுவ விடாது சிக்கெனப் பிடித்து நிற்பேன். அடியேனை உனது திருவருள் நோக்கினால் பார்த்து, ஏற்றுக் கொள்ளுக.

2

கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர கம்புகினும்எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின்இறைவாஉள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே.
சொற்பிரிப்பு
கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு: குடிகெடினும்நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்எள்ளேன் திரு அருளாலே இருக்கப்பெறின்; இறைவா !உள்ளேன் பிறதெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!
உரை

எங்கள் இருள் கடந்த முதல்வனே, அரசனே, இந்திரன், பிரம்மன், திருமால்  என்போர் பதவிகளை ஒரு பொருளாகக் கொள்ள மாட்டேன், எனது வாழ்க்கைக்கு ஊறு வந்தாலும், உன்னுடைய அடியாரோடன்றிப் பிறரோடு நட்புக் கொள்ள மாட்டேன். நரகம்  புகுந்தாலும், அங்கே உனது திருவருள் உணர்ச்சியோடு இருக்கப் பெற்றால், அதனை இகழ மாட்டேன். உன்னை ஒழிந்த வேறு கடவுளரை மனத்தாலும் நினைக்க மாட்டேன் .

3

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்துருகிமத்த மனத்தொடு மால்இவன் என்ன மனநினைவில்ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்தெவரும்தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே.
சொற்பிரிப்பு
உத்தமன், அத்தன், உடையான் அடியே நினைந்து உருகிமத்த மனத்தொடு, 'மால்இவன்' என்ன, மனநினைவில்ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும்தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே?
உரை

தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவனும் என் தந்தையும் , எம்மை  உடையானுமாகிய இறைவா சிவபெருமானே! உன்னுடைய திருவடிகளையே எண்ணி  எண்ணிக் கசிந்து, மனக்களிப்பு மிக்கு உடையவனாகி இருக்கின்ற என் நிலையை ஊரார் பார்க்கின்றனர். எனது சிவானந்த அனுபவத்தைத் தெரிந்து கொள்ள அவர்களுக்கு ஆற்றல்  இல்லாமையால் அவர்கள் என்னை நோக்கி, தங்கள் தங்கள் மனம் போனவாறு பித்தன் என்றும், பேயன் என்றும், கள்ளன் என்றும், நல்லன் என்றும், அருளன் என்றும்  பேசுகிறார்கள். நான் ஊர் ஊராகச் சென்று ஆங்காங்கு உள்ள தலங்களில் இறைவழிபாடு செய்து வரும்பொழுது உலகவர் இவ்வாறு கூறுகின்ற இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் கேட்டு அவற்றால் சிறிதும் நலிவுறாது, செருக்கு என்னும் தன் முனைப்பு நீங்கப் பெற்று  இருக்கும் அத்தகைய நல்லநாள் என்று வருமோ?

4

சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம்அஞ்சிஆவஎந் தாய்என் றவிதா விடும்நம் மவரவரேமூவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண் ணாண்டுமண்மேல்தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந் திரிதவரே.
சொற்பிரிப்பு
சாவ, முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி'ஆவ! எந்தாய்! ' என்று அவிதா இடும் நம்மவர்-அவரேமூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு, மண்மேல்தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே!
உரை

தேவர்கள் முன்னொரு காலத்திலே தக்கன் இயற்றிய யாகத்திலே கொல்லப்பட்ட ஆட்டின் ஊனைத் தின்று, பின்னர் வீரபத்திரர் தம்மைத் தண்டிக்க வந்தபோது சாவதற்குப் பயந்து சிவனிடம் ஓடி ' அப்பனே காப்பாற்று' என்று ஓலமிட்டார்கள், அதே போன்று பின்னொரு சமயம் பாற்கடலில் நஞ்சு எழுந்த காலத்தே, நஞ்சு தங்களைக் கொன்று விடுமே என்று அஞ்சி, சிவபெருமான் இருக்கும் இடம் ஓடி, "ஐயோ! எங்கள் அப்பனே காப்பாற்று" என முறையிடும் தன்மை உடையவர்கள் இந்தத் தேவர்கள். இவர்கள் தங்களை 'பிரம்மா','விஷ்ணு', 'உருத்திரன்' என்ற மூவர்களோடு ஒப்பாக எண்ணிச்  செருக்கடைகிறார்கள். மேலும் மூவரில் ஒருவனாகிய உருத்திரன் குண ருத்திரனே அன்றி  மகா ருத்திரனாகிய சிவபெருமான் அல்லன் என்பதையும் உணரமாட்டார்கள். இதன் விளைவாக, தங்களைச் சிவபெருமானுக்கு இணையாகக் கருதி விண்ணுலகை ஆண்டு மண்ணுலகில்  செருக்கடைந்து திரிகின்றார்கள். தங்கள் வாழ்வில் முன்னே கூறிய இரு சந்தர்ப்பங்கள் போன்று பலமுறையும் தாழ்மைப்பட்டு வாழ்ந்தவர்கள் இவ்வாறு இறுமாந்திருந்ததற்குக் காரணம் என்னே? இது என்ன பாவம்!

5

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன்அவமே பிறந்த அருவினை யேன்உனக் கன்பருள்ளாஞ்சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின் திருவடிக்காம்பவமே யருளுகண் டாய்அடி யேற்கெம் பரம்பரனே.
சொற்பிரிப்பு
தவமே புரிந்திலன்; தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்அவமே பிறந்த அருவினையேன், உனக்கு அன்பர் உள் ஆம்சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம்பவமே அருளு-கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே!
உரை

எமது மேலோர்க்கும் மேலோனே! மெய், வாய், கண், மூக்கு,, செவி என்ற ஐம்பொறிகளைத் தம் தம் வழிச்செல்ல விடாமல் அடக்கி ஒடுக்கும் திறனும் பிறர்க்கு இன்னா  செய்யாமையுமாகிய தவத்தை அடியேன் மேற்கொள்ளவில்லை. நின் திருவடிகளில் குளிர்ந்த மலர்களைத் தூவிக் குறையில்லாத முறையில் வழிபாடு செய்யேன். இவ்வுலகில் தோன்றும் தீவினைகளை உடையவனாகி வீணாக வாழ்ந்து பிறவி என்னும் கடலை நீந்துதற்கு உரிய வழிகளைச் செய்யவில்லை. உனக்கு அன்பராக உள்ளவர்கள் நடுவில், இருப்பதற்கு வேண்டும் தூய நேர்மை உண்டோ எனின், அதுவும் இல்லை. சிவத்தைச் சார்வதற்கு வாயிலாக உள்ள 'திரு' என்ற சிவஞானத்தைப் பெற நல்வினைப் பயனும் இல்லாதவனாகிவிட்டேன், ஆதலால் இப்பிறவி வேண்டாம். அடியேனுக்கு நின்னுடைய  திருவடிக்கு அடிமையாகின்ற பிறவியையே நீ அருள்வாயாக.

6

பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் டாதடி யேஇறைஞ்சிஇரந்தஎல் லாம்எமக் கேபெற லாம்என்னும் அன்பர்உள்ளம்கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற் கன்பெனக்குநிரந்தர மாய்அரு ளாய்நின்னை ஏத்த முழுவதுமே.
சொற்பிரிப்பு
பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது, அடியே இறைஞ்சி'இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும் அன்பர் உள்ளம்கரந்து நில்லாக் கள்வனே! நின்-தன் வார் கழற்கு அன்பு, எனக்குநிரந்தரமாய் அருளாய்-நின்னை ஏத்த முழுவதுமே.
உரை

மெய்யன்பர்கள் உள்ளத்தில் மறைந்து நிற்காத கள்வனே! சிவபெருமானே! அந்த உனது மெய்யன்பர்கள் எல்லாத்தலங்களுக்கும் சென்று மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று  சொல்லப்படும் எல்லா இடங்களிலும் வீற்றிருக்கும் உன்னை , அசுத்தமாகாத பலவிதமான நன்மலர்களைக் கொண்டு இடைவிடாது அருச்சித்து வணங்குகிறார்கள். அவர்கள் தங்கள்  விருப்பங்களை இரந்து, விண்ணப்பித்து, நிச்சயமாக அவை அனைத்தையும் பெறமுடியும்  என்ற முழுநம்பிக்கையோடு வழிபட்டு வருகிறார்கள். அவர்கள் உள்ளத்தில் நீ வீற்றிருந்து  அவர்களுக்கு அருளுகின்றாய். அவர்களைப் போன்று அடியேனும் உன்னை வாழ்நாள்  முழுவதும் துதிக்கவும், உனது திருவடிகள் மீது என்றும் நீங்காத அன்பு வைத்திருக்கும் நிலையையும் அருள்வாயாக.

7

முழுவதுங் கண்டவ னைப்படைத் தான்முடி சாய்த்துமுன்னாள்செழுமலர் கொண்டெங்குந் தேடஅப் பாலன்இப் பால்எம்பிரான்கழுதொடு காட்டிடை நாடக மாடிக் கதியிலியாய்உழுவையின் தோலுடுத் துன்மத்தம் மேற்கொண் டுழிதருமே.
சொற்பிரிப்பு
முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடிசாய்த்து, முன்நாள்செழுமலர் கொண்டு எங்கும் தேட, அப்பாலன்: இப்பால், எம்பிரான்கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி-இலியாய்உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு உழிதருமே
உரை

முன்னாள் என்பதை முதலில் கொள்க. இப்பால் என்பதை 'கழுதொடு' என்பதோடு கூட்டுக. முற்காலத்திலே எல்லாவற்றையும் படைத்தவன் அயன் (பிரம்மா), அந்த அயனைப் பெற்றவன் அரி (திருமால்), இந்தத் திருமால் தலை வணங்கி, வளமிக்க பூக்களைக் கையிற் கொண்டு சிவனாரது திருவடியைத் தொழுவதற்காக எங்கும் தேடவும், அவனுக்குப் புலனாகாது அப்பாற்பட்டவன் எமது வள்ளல், சிவபெருமான். இவன் இவ்விடத்தே பிணந்தின்னும் பேயோடு சுடுகாட்டின் கண், கூத்து இயற்றி வறியனாய்ப் புலித்தோல் உடுத்தி, பித்தனைப் போல அலைந்து திரிவான். இஃதென்ன வியப்பு!

8

உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும்விண்ணும்இழிதரு காலம்எக் காலம் வருவது வந்ததற்பின்உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக்கழிதரு காலமு மாய்அவை காத்தெம்மைக் காப்பவனே.
சொற்பிரிப்பு
உழிதரு காலும், கனலும், புனலொடு மண்ணும், விண்ணும்இழிதரு காலம், எக்காலம் வருவது? வந்ததன் பின்,உழிதரு காலத்த ! உள் அடியேன் செய்த வல் வினையைக்கழி, தரு காலமும் ஆய் அவை காத்து, எம்மைக் காப்பவனே!
உரை

மகா சங்கார காலத்தில் பஞ்ச பூதங்களான (1) அசையுந்தன்மையுடைய காற்றும்  (2) நெருப்பும் (3) நீரும் (4) மண்ணும் (5) வானும் ஆகிய (இவ்வுலகம்) ஐந்தும் தத்தம் நிலையின்  நீங்கி ஒடுங்கும். அந்தக்காலத்தும் அழியாப் பெரும் பொருளாக இருந்து அருட்கூத்து ஆடுபவனே!  அடியேன் பல பிறவிகளில் ஈட்டிய வினைகள் யாவும் சருவ சங்கார காலத்தில்  காரணமாயையில் சூக்குமமாய் ஒடுங்கி நின்று மீண்டும் புனர் உற்பவத்தில் சூக்கும கன்மமாகக் கலந்து என்னைப் பற்றாத வண்ணம் அந்த வல்வினையைச் சுட்டு எரிப்பவனாக  இருந்து காப்பவனே! என்னைக் காத்து அருள்வாயாக.

9

பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான்சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும்அவன்எம் பிரான்என்ன நான்அடி யேன்என்ன இப்பரிசேபுவன்எம் பிரான்தெரி யும்பரி சாவ தியம்புகவே.
சொற்பிரிப்பு
பவன், எம்பிரான், பனி மாமதிக் கண்ணி விண்ணோர் பெருமான்,சிவன், எம்பிரான், என்னை ஆண்டு கொண்டான்-என் சிறுமை கண்டும்அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப் பரிசேபுவன், எம்பிரான், தெரியும் பரிசு ஆவது இயம்புகவே.
உரை

எங்கள் பெருமான், எல்லாம் தோன்றுவதற்கு இடமானவன். குளிர்ந்த சிறப்புடைய சந்திரனைத் தன் தலை மீது குறுங்கண்ணியாக அணிந்த தேவர் தலைவன். சந்திரனின் குற்றத்தைப் பொறுத்து, தனது திருமுடிக்கு அணி ஆக்கிய தன்மையால் அவன் எல்லோரையும் காப்பவன் ஆகின்றான். எல்லாவற்றையும் ஒடுக்குவானாகிய தூயோனும்  ஆகிய எம்பெருமான், எனது சிற்றறிவும் சிறு செயலுமுடைய சிறிய தன்மையை அறிந்தும் , அவனது கருணையினாலே என்னைத் தடுத்தாட் கொண்டான். என் வள்ளலாகிய அவன்  தானே தோன்றிய சுயம்பு. அவன் எங்கள் தலைவனாகவும், நான் அவன் அடியவனாகவும்  இருக்கின்ற இம்முறையே எனக்குத் தெரியும் வகையாக, யான் சொல்லுவேனாக.

10

புகவே தகேன்உனக் கன்பருள் யான்என்பொல் லாமணியேதகவே எனைஉனக் காட்கொண்ட தன்மைஎப் புன்மையரைமிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாஅமுதேநகவே தகும்எம் பிரான்என்னை நீசெய்த நாடகமே.
சொற்பிரிப்பு
புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்; என் பொல்லா மணியே!தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப் புன்மையரைமிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி: அண்ணா, அமுதே !நகவே தகும் எம்பிரான்! என்னை நீ செய்த நாடகமே.
உரை

தொளைபடாத என் முழு மாணிக்கமே! நான் உன் அடியார் கூட்டத்தில் புகுவதற்குத் தகுதி இல்லாதவன். அவ்வாறு இருந்தும் என்னை உனக்கு ஆளாக்கிக் கொண்ட தன்மை உன் பெருமைக்குத் தக்கதா? எத்தகைய இழிந்தோரையும் மிக உயரச் செய்கிறாய். மேலான தேவர்களைத் தாழ்த்துகிறாய்; அப்பனே! அமுதமே! எம் பெருமானே! நீ என்பால் செய்த நாடகம் சிரித்து நகையாடுவதற்கே உரியதாகும்.

11

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவேவீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.
சொற்பிரிப்பு
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து, நான் நடுவேவீடு அகத்தே புகுந்திடுவான், மிகப்பெரிதும் விரைகின்றேன்ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்பு உனக்கு என்ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள், எம் உடையானே!
உரை

எம்மை அடிமையாக உடையவனே! உன் மெய்யடியார் போலும் அன்புடையன்  அல்லன் யான். ஆயினும் நின் அன்பர், வீடு செல்லுங்கால், வஞ்சனையாக நடந்து காட்டி யானும் முத்தியடைய மிகவும் துரிதப்படுகிறேன். பொன்னின் நலமுடைய மாணிக்கமலை  போலும் ஐயனே! உன்பால் எப்போதும் நிகழும் அன்பை என் நெஞ்சகத்தில் நிலைபெறச் செய்து அதனால் என் நெஞ்சம் உருகவும் உதவி அருளுவாயாக.

12

யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேஎம் பெருமான்எம்மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே.
சொற்பிரிப்பு
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன் ?வானேயும் பெறில் வேண்டேன்: மண் ஆள்வான் மதித்தும் இரேன்தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்மானே! "உன் அருள் பெறும் நாள் என்று?' என்றே, வருந்துவனே.
உரை

இறைவா! அடியேன் பிறப்பதற்கும் இறப்பதற்கும் அஞ்சமாட்டேன். விண்ணுலகைக் கொடுத்தாலும் விரும்பமாட்டேன். உலகாளும் மன்னனைச் சார்ந்து நின்று வாழமாட்டேன், தேன் பொருந்திய கொன்றை மலரணிந்த மங்கலப் பொருளானவனே!  எம் தலைவா! பெரியோனே! உன்னோடு இரண்டறக் கலக்க ஏதுவான திருவருளை யான் பெறுங்காலம் எப்போது என்றெண்ணி மனம் உளைகின்றேன்.

13

வருந்துவன்நின் மலர்ப்பாத மவைகாண்பான் நாயடியேன்இருந்துநல மலர்புனையேன் ஏத்தேன்நாத் தழும்பேறப்பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம் புரியாயேல்வருந்துவனற் றமியேன் மற்றென்னேநான் ஆமாறே.
சொற்பிரிப்பு
வருந்துவன், நின் மலர்ப்பாதம் அவை காண்பான்; நாய்-அடியேன்இருந்து நலமலர் புனையேன்; ஏத்தேன் நாத்தழும்பு ஏற ;பொருந்திய பொன்சிலை குனித்தாய் ! அருள் அமுதம் புரியாயேல்,வருந்துவன் அத்தமியேன்; மற்று என்னே நான் ஆம்ஆறே?
உரை

நாய் போலும் அடியேன், நின் பெருமை மிகுந்த திருவடி மலர்களைக் காண  வருந்தி நிற்கிறேன். இவ்வுலகில் வாழ்ந்திருந்தும் உனக்கு ஒரு மலர் மாலை தொடுத்தும் சாத்த மாட்டேன். நாவில் தழும்பேறும்படி உன்னை வாழ்த்தவும் மாட்டேன். பொன்  பொருந்திய மேருமலையை வளைத்தவனே! நின் அருள் எனும் பேரின்ப அமுதம் நீ  தந்தருளவில்லை எனில், ஆதரவின்றித் தனியாய் நான் துன்பமுறுவேன். அவ்வாறு துன்பமுறாது நான் உய்யுமாறு ஏதும் செய்யவும் வல்லேன் அல்லன்.

14

ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்கோமான்நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன்சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.
சொற்பிரிப்பு
ஆம்ஆறு உன் திருவடிக்கே அகம் குழையேன்; அன்பு உருகேன் ;பூமாலை புனைந்து ஏத்தேன்; புகழ்ந்து உரையேன்: புத்தேளிர்கோமான்! நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்து ஆடேன்,சாம் ஆறே விரைகின்றேன்-சதுராலே சார்வானே!
உரை

தேவர் பிரானே! திறமையான பணிக்கு நின் ஆதரவை அளிப்பவனே! நின்  திருவடிப்பேறு அடையும் வண்ணம் மனம் நெகிழப் பெறமாட்டேன். அன்பால் உருக மாட்டேன். பூமாலை தொடுத்து, சாத்தி, வழிபட மாட்டேன். உன் புகழை எடுத்துப் பேச மாட்டேன்.  ஆனந்தமுற்று ஆட மாட்டேன். நற்செயலற்று, வீணே உயிர் விடுதற்கே துரிதப்படுகிறேன்.

15

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
சொற்பிரிப்பு
வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகிஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய்க்கோன் ஆகி, 'யான் எனது' என்று அவர் அவரைக் கூத்தாட்டுவான் ஆகி நின்றாயை, என்சொல்லி வாழ்த்துவனே!
உரை

விண், மண், காற்று, நெருப்பு, நீர், உடம்பு, உயிர் ஆகிய யாவற்றிலும் கலந்தும் அவையே ஆகியும் நின்றவனே! மெய்யர்க்கு மெய்ப் பொருளாயும், பொய்யர்க்குப் பொய்ப்பொருளாயும் விளங்குபவனே! அல்லது, தோன்றும் பொருளாகவும், தோன்றாப் பொருளாகவும், அப்பொருட்களின் வசப்படாது தன்வயமுடைய முதல்வனாகியும் திகழ்பவனே ! பல்வகைப்பட்ட உயிர்களும் யான் செய்தேன், என்னுடையது என்று புல்லறிவால் மயங்கி, கூத்தாடும்படி, அவ்வவற்றையும் இயக்கியும் நின்ற நின்னை யான் யாது சொல்லிப் புகழ முடியும்?

16

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால்தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந் தொழவேண்டிச்சூழ்த்தமது கரமுரலுந் தாரோயை நாயடியேன்பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானும்உன்னைப் பரவுவனே.
சொற்பிரிப்பு
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்தாழ்த்துவதும், தாம் உயர்ந்து, தம்மை எல்லாம் தொழ வேண்டி;சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை, நாய்-அடியேன்,பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான், யானும் உன்னைப் பரவுவனே.
உரை

வண்டுகள் ரீங்காரமிடும் மலர் மாலை அணிந்த நின்னை வானவர்கள் வாழ்த்துவது தாங்கள் குறைவின்றி வாழ்தற் பொருட்டே. தாங்கள் மேன்மை அடைந்து, தங்களை  மற்றவர் வழிபட விரும்பியே உன்னிடத்தில் உள்ளத்தைப் பணிவிக்கிறார்கள். நாய்போலும்  அடியேனின் பயனற்ற பிறப்பினை அழித்தல் பொருட்டு யானும் உன்னைப் போற்றித் துதிப்பேன் (வானவர்கள் ஆயுள் அதிகாரம் முதலிய பயன்கருதி இறைவனை  வழிபடுகிறார்கள். அடிகளைப் போன்ற ஞானிகள் பிறவி நீக்கத்திற்காக இறைவனை வழுத்துகிறார்கள் என்பது கருத்து)

17

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்குரவுவார் குழல்மடவாள் கூறுடையாள் ஒருபாகம்விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் மேன்மேல்உன்அரவுவார் கழலிணைகள் காண்பாரோ அரியானே.
சொற்பிரிப்பு
பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம் ;குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம் ;விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன்அரவுவார் கழல்-இணைகள் காண்பாரோ? அரியானே!
உரை

தேவர்கள் உன்னை வாழ்த்துகிறார்கள். அறிவுக்கு முதலாகிய நால்வகை வாக்காகிய நான்மறையும் உன் புகழையே ஒலிக்கின்றன. நறுமணம் பொருந்திய நீண்ட கூந்தலையுடைய இளம்பெண்ணான உமையம்மை உன்னுடைய ஒரு பகுதியான  இடப்பாகத்தைப் பெற்றிருக்கிறாள். உண்மை பக்தியுடைய அடியார்கள் அணி அணியாக  உன்னை வழிபடக் கூடுகிறார்கள். யாரும் அறிதற்கரியவனே! ஒலிக்கின்ற பெரிய கழல்கள் அணிந்த நினது இரு திருவடிகளையும் காண்பது யாரோ? ("நின்னை வழிபடுகிற இவர்கள் அனைவரும் திருவடியைக் காண்பார்களோ?" என்றும் பொருள் கொள்ளலாம் )

18

அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்தெம்பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழற்கீழ்விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன் நயந்துருகேன்தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான் சாவேனே.
சொற்பிரிப்பு
அரியானே யாவர்க்கும் அம்பரவா! அம்பலத்து எம்பெரியானே ! சிறியேனை ஆட்கொண்ட பெய்-கழல்கீழ்விரை ஆர்ந்த மலர்தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன் ;தரியேன்; நான் ஆம் ஆறுஎன்? சாவேன்; நான் சாவேனே!
உரை

எத்தகையோரும் அறிதற்கரியவனே! அருள் வாளினை உடையவனே! தில்லை அம்பலத்தில் நடனமாடும் எங்கள் பெருமானே! சிறுமை மிக்க அடியேனை ஆளாக்கிக்  கொண்டாய்! செறிந்த கழலினை உடைய நின் திருவடிகளில் மணம் நிறைந்த மலர்களிட்டு  வழிபட மாட்டேன்; புகழ்ந்து பாடித் துதியேன்; உள்ளம் விரும்பி உருகவும் மாட்டேன். இவ்வாறு கரணங்களால் வழிபடாது இருத்தலைப் பொறுத்துக் கொள்ளவும் மாட்டேன். நான் உய்வதற்குத் தகுதியாகும் வகைதான் யாது? நான் இறப்பேன், இறப்பேன், இறந்து படவே துணிந்தேன்.

19

வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரியபானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சேஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய்வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே.
சொற்பிரிப்பு
வேனில்-வேள் மலர்க்கணைக்கும், வெள்-நகை, செவ்-வாய்க் கரியபானல் ஆர் கண்ணியர்க்கும், பதைத்து உருகும் பாழ் நெஞ்சே !ஊன் எலாம் நின்று உருக, புகுந்து ஆண்டான்; இன்றுபோய்வான் உளான்; காணாய்; நீ, மாளா வாழ்கின்றாயே
உரை

இளவேனிலாகிய வசந்த காலத்தில் மன்மதன் பூவகைகளாகிய அம்பினை விடுகிறான். வெள்ளிய ஒளியுடைய பற்களையும், கருநிறக் குவளை போலும் கண்களும் உடைய மகளிருக்காக ஈடுபட்டுத் துடிக்கிற, நெகிழ்கிற என் பயனற்ற மனமே! எம்பெருமான்  நம் உடம்பெலாம் கனிந்து அமுதூறி உருகும்படியாக எழுந்து அருளினான். உள்ளத்தே  நிலைபெற்று ஆட்கொண்டருளிய அப்பெருமான் இப்போது சென்று ஞான ஆகாயத்தின்  கண் இருக்கிறான். அவனைக்காண நீ முயலமாட்டாய். நீ இறந்தொழியாது இன்னும் ஏன் நிலைத்திருக்கிறாய்? (உலகப் பற்றில் ஈடுபடக் கூடாதென நெஞ்சுக்கு அறிவுறுத்தும் பொருட்டு அடிகள் இங்ஙனம் புகன்றனர் போலும்)

20

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதேசூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும்வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே.
சொற்பிரிப்பு
வாழ்கின்றாய்! வாழாத நெஞ்சமே! வல்வினைப்பட்டுஆழ்கின்றாய்: ஆழாமல் காப்பானை ஏத்தாதே,சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன், பல்காலும்வீழ்கின்றாய் நீ, அவலக் கடல் ஆய வெள்ளத்தே.
உரை

பேரின்ப வாழ்க்கையைப் பெற்று வாழக் கருதாத மனமே! நீ வீணாக இவ்வுலகில் நிலைத்திருக்கிறாய். இதனால் கொடிய வினையில் அகப்பட்டுத் துயரத்தில் அழுந்துகிறாய். அங்ஙனம் அழுந்தாமற் காக்கின்ற கடவுளை வழிபடாமல் உனக்குக் கெடுதியையே  உண்டாக்கிக் கொள்ள எண்ணுகிறாய். பலமுறையும் உனக்கு அறிவுரை இயம்புகிறேன்! நீ  அதனைக் கேளாது துன்பக் கடலில் எழுந்த பெருவெள்ளத்தில் வீழ்ந்தொழிகின்றாய் என் செய்வது?

21

வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணாவெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம் கண்ணிணையும் மரமாம் தீவினையி னேற்கே.
சொற்பிரிப்பு
வெள்ளம் தாழ்விரிசடையாய்! விடையாய்! விண்ணோர்பெருமானே! எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்பள்ளம் தாழ்உறு புனலில், கீழ்மேலாகப்பதைத்து உருகும் அவர் நிற்க, என்னை ஆண்டாய்க்குஉள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால்உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா!வெள்ளம்-தான் பாயாதால், நெஞ்சம் கல் ஆம்கண்-இணையும் மரம் ஆம்-தீவினையினேற்கே.
உரை

வானின்று இறங்கிய கங்கை விழுந்து தங்குவதற்கேற்ற விரிந்த சடை உடையாய்! காளையை ஊர்தியாய் உடைய தேவர் தலைவனே! இவ்வாறு அன்பர்கள் சொல்லக்  கேட்டவுடன் நின் சிறந்த அடியார்கள் ஆர்வமிகுந்த மனத்தினராய் உன் அருளை  எதிர்பார்த்து நிற்கிறார்கள். பள்ளத்தில் விழுகிற நீர் போல மேல் கீழாக விழுந்து வணங்கி  நெஞ்சம் துடிதுடித்து உருக்கம் கொள்ளுகிறார்கள் அவர்களுக்கு உன் அருளைக்  கொடாமல் தகுதியற்ற என்னை நின் பெருங்கருணையால் ஆட்கொண்டாய் . என் உள்ளங்கால் முதல் உச்சிவரை உள்ளத்தின் இயல்பு போல உருகவேண்டும். ஆனால்  உருகவில்லை. மேலோனே! உடம்பு முழுவதும் கண்ணின் இயல்பு கொண்டு நீர்பெருக்கி வெள்ளம் பாய வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. ஆகவே, கொடிய வினையை உடைய  எனக்கு நெஞ்சம் கல்லால் ஆனது. இரு கண்களும் மரத்தாலானவையாம்.

22

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன் என்பாய் போலஇனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவைஅனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்முனைவனே முறையோ நான்ஆன வாறு முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே.
சொற்பிரிப்பு
வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று'போது, நான் வினைக்கேடன்' என்பாய் போல'இனையன் நான்' என்று உன்னை அறிவித்து, என்னைஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு, இரும்பின் பாவைஅனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ!அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்;முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு ?முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே.
உரை

தோற்றத்துக்கும் முடிவுக்கும் காரணமானவனே! வினைப் பாசத்தில் அகப்பட்டுக் கிடந்த என்னுள் புகுந்து வலிய எதிர்ப்பட்டு வந்து நின்றாய். நான் வினையை அழிக்கவல்லேன், நான் இத்தன்மையன் என உன் இயல்பை, எனக்கு அறிவுறுத்தி அருளினாய்.  என்னை அடிமையாக்கிய என் தலைவனாகிய உன்பால் இரும்புப் பதுமை போலும் யான்  நின் புகழினைப் பாட மாட்டேன். நிலைபெற்று ஆனந்தக் கூத்திடவும் மாட்டேன்.  ஐயோ! கதற மாட்டேன்! பதறி வற்ற மாட்டேன். உயிர் தளர மாட்டேன். முதல்வனே!  நான் இவ்வாறாம் முறை நியாயமாமோ? எனக்கு என்ன கதி வருமோ? அறிகிலேன். !

23

ஆயநான் மறையவனும் நீயே யாதல் அறிந்தியான் யாவரினுங் கடைய னாயநாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர்பேயனேன் இதுதான்நின் பெருமை யன்றே எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே.
சொற்பிரிப்பு
ஆய நான் மறையவனும் நீயே ஆதல்அறிந்து, யான் யாவரினும் கடையன் ஆயநாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்'நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன்' என்பேன்ஆயினேன்; ஆதலால், ஆண்டு கொண்டாய் ;அடியார் தாம் இல்லையே ? அன்றி மற்றுஓர்பேயனேன்? இது தான் நின்பெருமை அன்றே!எம்பெருமான்! என்சொல்லிப் பேசுகேனே?
உரை

தலைவனே! நான்கு வேதப் பொருளானவனும் நீயே! அங்ஙனம் நின் பெருமை  அறிந்து அடியேன் எல்லோரினும் கீழ்ப்பட்ட நாயியல்பு உடையேன் என்பதையும் ஆய்ந்து  பார்த்து உனக்கு ஒரு வகையான அன்பன் என என்னை சொல்லிக் கொள்ளுவேன்  ஆயினேன். அக்காரணம் பற்றி நீ என்னை ஆட்கொண்டு அருளினாய். மனித வடிவம்  கொண்ட பேயென்று சொல்லத் தக்கவனான என்னையன்றி, நீ ஆட்கொள்ளத் தக்க  அடியார்கள் தாம் வேறு இல்லையோ ? தகுதியில்லாத என்னை ஆட்கொண்ட  இக்கருணைதான் நின் பேராற்றலை உணர்த்தும் அல்லவா? எம்பெருமானே! யான் நின்  கருணைத் திறத்தை என்ன சொல்லிப் பாராட்டுவேன்?

24

பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்றென்றே பேசிப் பேசிப்பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசிப் போற்றியெம் பெருமானே என்று பின்றாநேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனைமாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே.
சொற்பிரிப்பு
பேசின், தாம் 'ஈசனே, எந்தாய், எந்தைபெருமானே!' என்று என்றே பேசிப்பேசிபூசின், தாம் திருநீறே நிறையப் பூசிபோற்றி எம்பெருமானே' என்று; பின்றாநேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார்-தம்மைஆண்டானே! அவா வெள்ளக் கள்வனேனைமாசு அற்ற மணிக்குன்றே! எந்தாய்! அந்தோ !என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே?
உரை

குற்றமற்ற மாணிக்க மலையே! எங்கள் அப்பனே! நின் அன்பர்கள் தாம் பேசுவதானால் ஆண்டவனே ! அப்பனே! எங்கள் அப்பனுக்கும் தலைவனே என்று  நின்னைத் துதித்துப் பேசுவார்கள். ஏதாவது பூசுவதானால் திருநீற்றினையே உடலெங்கும்  நிரம்பப் பூசி "எம் பெருமானே! காத்தருளுக" என்று மொழிவார்கள். பேரன்பு மிகுதியால்  பிறவியையும் சாவையும் கடக்கும் தகுதியடைந்தாரை ஆட்கொண்டவனே! உலக ஆசை  வெள்ளத்தில் அகப்பட்டு உன் அடியவன் போல் நடிக்கும் வஞ்சகனாகிய என்னை நீ ஆட்கொண்ட வகைதான் என்ன?

25

வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்ற னேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்கெண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமா றறியாத எந்தாய் உன்றன்வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே.
சொற்பிரிப்பு
வண்ணம் தான், சேயது அன்று; வெளிதே அன்று ;அனேகன்; ஏகன்: அணு அணுவில் இறந்தாய்; என்று அங்குஎண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம்எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன்-தன்வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டிமலர்க்கழல்கள் - அவை காட்டி, வழி அற்றேனைத்திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்;எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே?
உரை

வானவர் கூட்டம் நீ சிவப்பன்று, வெள்ளையன்று, நீ பலவாயும் ஒன்றாயும் அணுவாயும் இருப்பவன் என்று பேசுகிறது. பிறகு அணுவினையும் கடந்த அதிநுட்பமுடையோன் என்றெல்லாம் வியந்து தமது நினைவுதானும் தடுமாறப் பெற்று உன்னை அடையும் ஏது அறியாது நிற்கிறார்கள். எந்தையே! உன் மெய் இயல்பாகிய நுட்பத்தை, ஆட்கொள்ள வந்த திருமேனியை, பூப்போன்ற நின் திருவடிகளைக் காட்டி, கதியின்றி நின்ற என்னை ஆட்கொண்டாய். இனி உறுதியாகப் பிறவாதிருக்கும் படி தடுத்தாட் கொண்டருளினாய். எம் தலைவனே! உன் கருணைத் திறத்தை யாது கூறி வியப்பேன்?

26

சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கிவந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆரவந்தெனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத்தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.
சொற்பிரிப்பு
சிந்தனை நின்-தனக்கு ஆக்கி, நாயினேன்-தன்கண்-இணை நின்-திருப்பாதப் போதுக்கு ஆக்கிவந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்கு, உன்மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆரவந்தனை ஆட்கொண்டு, உள்ளே புகுந்த விச்சைமால் அமுதப் பெரும் கடலே! மலையே! உன்னைத்தந்தனை; செம்-தாமரைக்காடு அனைய மேனித்தனிச்சுடரே! இரண்டும் இல் இத்தனியனேற்கே
உரை

நாய் போலும் என் எண்ணத்தை மாற்றினாய். உன்னையே நினைக்கும்படி செய்து, என் இரு கண்களையும் உன் திருவடிகளில் சாத்தும் மலர்களாக்கினாய். உன் திருவடியினைப் பார்த்து இன்பமுறும்படிச் செய்து, எனது வணக்கமும் அத்திருவடிக்கே உரியதாகச் செய்தாய். எனது ஐம்பொறி அறிவும் உன்னையே துய்க்கும்படி எழுந்தருளி  வந்து என்னை ஆளாகக் கொண்டாய். எனதுள்ளத்தின் கண் புகுந்த அருஞ்செயலை உடைய  அன்பு மயமான ஞானப் பெருங்கடலே ! சத்தாகிய மலையே! சிவந்த தாமரைக் காடு  போலும் திருமேனியுடைய ஒப்பற்ற ஒளி உருவனே. கேடும் ஆக்கமும் (அல்லது)  இருவினையும் கெட்ட தனிமையன் ஆன எனக்கு நின்னையே தந்தருளினாய். உன்  பெருமை எத்துணைச் சிறப்புடையதாகும்!?

27

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனைமுனைவனே முதல்அந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.
சொற்பிரிப்பு
தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வத்தடம் திரையால், எற்றுண்டு, பற்று ஒன்று இன்றிக்கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்கலக்குண்டு, காம வான்சுறவின் வாய்ப்பட்டு'இனி,என்னே உய்யும் ஆறு?' என்று என்று எண்ணிஅஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனைமுனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல்கரை காட்டி ஆட்கொண்டாய், மூர்க்க னேற்கே
உரை

கேவல அவத்தையில் தனியனாய்க் கிடந்து, பிறவிப் பெருங்கடலில் விழுந்து இருவினையாகிய இன்ப, துன்பப் பேரலைகளால் தாக்கப்பட்டேன் . ஆதரவு  ஒன்றுமில்லாது கனிவாய்ப் பெண்டிர் என்று சொல்லப்படும் புயற்காற்றால் அலைக்கப் பட்டு மனக்குழப்பம் உற்றேன். ஆசையெனும் பெரிய சுறா மீனின் வாயில் அகப்பட்டு இனி உய்யும் வழி யாதோ என வாடினேன். திருவைந்தெழுத்தின் தெப்பத்தைப் பிடித்து அதை மேற்செலுத்தி, கரை சேர இயலாமல் தவித்தேன், முரண்பட்ட குணமுடைய எனக்கு, ஆதி  அந்தம் இல்லா முத்திக் கரையைக் காட்டி என்னை ஆட்கொண்டருளினாய்! உன் கருணைத் திறம் தான் என்னே?

28

கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான்நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கேகாட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னைமீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே.
சொற்பிரிப்பு
கேட்டு ஆரும் அறியாதான்; கேடு ஒன்று இல்லான்;கிளை இலான்; கேளாதே எல்லாம் கேட்டான்;நாட்டார்கள் விழித்திருப்ப, ஞாலத்துள்ளேநாயினுக்குத் தவிசு இட்டு, நாயினேற்கேகாட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும்கேளாதன எல்லாம் கேட்பித்து, என்னைமீட்டேயும் பிறவாமல் காத்து, ஆட்கொண்டான் -எம்பெருமான் செய்திட்ட விச்சை - தானே!
உரை

எவராலும் கேள்வியால் அறியப்படாதவன். அழிவும் இல்லாதவன். உறவினர் இல்லாதவன். கருவிகளின் உதவி இன்றிக் கேட்பனவெல்லாம் கேட்டவன். உலகத்தார் பார்த்திருக்க, உலகிற் புகுந்து, நாயேனுக்கு இருக்கையளித்து, சிறியவனான எனக்குக்  காட்டக் கூடாதனவெல்லாம் காட்டி, கேட்கக் கூடாதன எல்லாம் கேட்பித்து என்னை மீண்டும் பிறவாதபடி ஆட்கொண்டருளிய எம்பெருமான் செய்த மாய வித்தையாகும் இது.

29

விச்சைதான் இதுவொப்ப துண்டோ கேட்கின் மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கிஅச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுதம் ஊறி அகம்நெகவே புகுந்தாண்டான் அன்பு கூரஅச்சன்ஆண் பெண்ணலிஆ காச மாகி ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்றசெச்சைமா மலர்புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே.
சொற்பிரிப்பு
விச்சை தான் இது ஒப்பது உண்டோ ? கேட்கின்மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கிஅச்சம் தீர்த்து ஆட்கொண்டான்; அமுதம் ஊறிஅகம் நெகவே புகுந்து, ஆண்டான், அன்பு கூர;அச்சன், ஆண், பெண், அலி, ஆகாசம் ஆகிஆர் அழல்-ஆய், அந்தம்-ஆய், அப்பால் நின்றசெச்சை மா-மலர் புரையும் மேனி, எங்கள்சிவபெருமான், எம்பெருமான், தேவர்-கோவே!
உரை

இது போன்ற மாய வித்தைதான் உண்டோ ? தம்பால் மிகுந்த அன்புடைய அடியாருக்கு என்னை அடியனாக்கினான். பிறப்பு, இறப்பு பயத்தை நீக்கி என்னை  ஆட்கொண்டருளினான். பேரின்ப அமுதம் ஊற்றெடுத்து, நெஞ்சம் கரைந்து, அன்பு  மிகுதிப்படும் வண்ணம் என் உள்ளத்தில் புகுந்து ஆண்டருளினான் . அவன் யார் எனில்  யாவருக்கும் அப்பன். ஆண், பெண், அலி என்பவையாய் எல்லாவற்றுக்கும் இடம்  கொடுக்கும் வானாகி, கடத்தற்கரிய சோதி வடிவாகி, முடிந்த முடிவாய் அதற்கு  அப்பாற்பட்டு நின்றான். வெட்சிப் பூப்போல் செம்மேனி படைத்த எங்கள் சிவபரம்பொருள் எம் தலைவன் - அவனே விண்ணவர்க்கரசன் ஆவான்.

30

தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றைமூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தையாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்மேவினோம் அவனடியார் அடியா ரோடும் மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே.
சொற்பிரிப்பு
தேவர் கோ அறியாத தேவ தேவன்செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றைமூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்திமூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை;யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான்யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும் அஞ்சோம்மேவினோம் அவன் அடியார் அடியாரோடும்மேன்மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே.
உரை

விண்ணவர் தலைவனான இந்திரன் அறியாத மகாதேவன்; உலகங்களைப் படைத்துக் காத்து ஒடுக்குகின்ற அயன், அரி, அரன் என்பவர்க்குத் தலைவனாய் நின்ற ஈசன் எல்லாம் தன் வடிவாய்க் கொண்டவன்; எல்லோருக்கும் பாட்டன். உமையொரு பாகனான எம் அப்பன் யாவருக்கும் அரசன். கடையனான என்னை ஆட்கொண்டான். அடியேங்களாகிய நாங்கள் அவனைத் தவிர பிறருக்கு ஆட்பட மாட்டோம். எதற்கும் அஞ்ச மாட்டோம்.  அவனது அடியாருக்கும் அடியாரிடம் பொருந்தி நடப்போம். அவனது ஆனந்தக் கடலில் மேன்மேலும்  மூழ்கித் திளைத்துக் கூத்தாடுவோம்.

31

ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை என்புருகிப்பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சேதேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே.
சொற்பிரிப்பு
ஆடுகின்றிலை; கூத்து உடையான கழற்கு அன்பு இலை; என்பு உருகிப்பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாதமலர்சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை! துணை இலி பிண நெஞ்சே!தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வது ஒன்று அறியேனே.
உரை

யாதொரு துணையுமில்லாத சவம் போன்ற மனமே! நினது கூத்தாட்டினை இயற்றுவிக்கும் முதல்வனது திருவடிக்கண் அன்பில்லாது இருக்கிறாய் . அவன்பால் ஆனந்தக் கூத்தியற்ற மாட்டாய். எலும்புருகப் பாடவும் செய்கிறாயில்லை. அஞ்சி நடுங்குவதும் இல்லை. தாழ்ந்து வணங்குவதும் இல்லை. அவனது திருவடிக் கமலங்களைச் சென்னி மேல் அணிந்து கொள்கின்றாயில்லை. திருவடிகட்கு மலர் மாலை சாத்துவதும் செய்ய மாட்டாய். அவன் திருவடியிணைகளைத் தேடி நாடுவதும் இல்லை. தெருவுதோறும்  அலைந்து தேடிக் காணாத இடத்துக் கதறுவதும் இல்லை. நீ இவ்வாறு பிணம் போல் பயனற்றுக் கிடப்பின் செய்யத் தக்கதொன்றும் யான் அறிய மாட்டேன்.

32

அறிவி லாதஎ னைப்புகுந் தாண்டுகொண் டறிவதை யருளிமேல்நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப் பந்தனை யறுப்பானைப்பிறிவி லாதஇன் னருள்கள்பெற் றிருந்துமா றாடுதி பிணநெஞ்சேகிறியெ லாம்மிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத் தாய்என்னைக் கெடுமாறே.
சொற்பிரிப்பு
அறிவு இலாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி, மேல்நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையைப், பந்தனை அறுப்பானைப்பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி; பிண நெஞ்சே !கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய் என்னைக் கெடுமாறே.
உரை

இறைவனை அறியும் ஞானமில்லாத என்னை, வலிய வந்து தடுத்தாட் கொண்டான்.  இறைவன் தன்னை அறியும் ஞானத்தையும் வழங்கினான். வீட்டுவழி முழுதும் அறிவித்த என் அப்பன் பிறவித் தளையைத் தொலைப்பவன். அவனைப் பிரியாதிருக்க ஏதுவான  அருட்செயல்கள் என் பொருட்டுச் செய்யப் பெற்றும், அவனைப் பிரியாமைக்கு மாறாக  இயங்குகிறாயே, சவம் போன்ற மனமே! உன் மாறுபாட்டால் பொய்கள் மிகுதிப்பட  என்னைத் தாழ்த்திவிட்டாய். யான் கெட்டுப் போகும் வழியாகக் கெடுதிகளைச் செய்தனை.

33

மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையைஎம் மதியிலி மடநெஞ்சேதேறு கின்றிலம் இனியுனைச் சிக்கெனச் சிவனவன் திரள்தோள்மேல்நீறு நின்றது கண்டனை யாயினும் நெக்கிலை இக்காயம்கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது கேட்கவுங் கில்லேனே.
சொற்பிரிப்பு
மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை, எம் மதி இலி மட நெஞ்சே!தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கெனச் சிவன் - அவன் திரள் தோள் மேல்நீறு நின்றது கண்டனை; ஆயினும், நெக்கிலை; இக் காயம்கீறுகின்றிலை; கெடுவது உன் பரிசு-இது; கேட்கவும் கில்லேனே.
உரை

எம் அறிவிலாத மூட மனமே! என்னைப் பகைத்து நின்று யான் கெடும்படியாகக் கிடந்தாய். இனிமேல் திட்டமாக உன்னை நம்ப மாட்டோம். தூய முதல்வனது திரட்சிமிக்க தோள்களின் மேலே திருநீற்றுக்குறி நிலையாக இருந்ததை நீ பார்த்த போதும் உணர்வு கனிவடைந்து உருகவில்லை. கெட்டொழிவதே உன் தன்மை. இதைக் கேட்கவும் நான் பொறுக்க மாட்டேன்.

34

கிற்ற வாமன மேகெடு வாய்உடை யான்அடி நாயேனைவிற்றெ லாம்மிக ஆள்வதற் குரியவன் விரைமலர்த் திருப்பாதமுற்றி லாஇளந் தளிர்பிரிந் திருந்துநீ உண்டன எல்லாம்முன்அற்ற வாறும்நின் னறிவும்நின் பெருமையும் அளவறுக் கில்லேனே.
சொற்பிரிப்பு
கிற்றவா மனமே! கெடுவாய்; உடையான் அடி-நாயேனைவிற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர்த் திருப்பாதம்முற்று இலா இளம் தளிர் பிரிந்திருந்து, நீ உண்டன எல்லாம் முன்அற்ற ஆறும், நின் அறிவும், நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே.
உரை

இறைவனது மணம் பொருந்திய திருவடிக் கமலங்கள், முதிராத இளம் தளிர்போல்  உள்ளன. அடிமையான நாய் போன்ற நான் பிரிந்திருந்தாலும் என் உடல், பொருள், ஆவி  மூன்றும் கொண்டு என்னை முழுவதும் விலைப்படுத்தியாவது சிறப்பாக ஆளும் உரிமை  உடையவன். ஆயினும் உலகப் பாசங்களில் செல்வதில் ஆற்றல் கெடாத நெஞ்சமே! நீ  கெட்டு ஒழிதல் திண்ணம். நீ முன் நிகழ்ந்தன எல்லாம் கெட்டொழிந்த விதத்தையும், உன்  அற்ப அறிவையும், உன் போலிப் பெருமையையும் அளந்தறியும் ஆற்றல் இல்லாதவன் நான்.

35

அளவ றுப்பதற் கரியவன் இமையவர்க் கடியவர்க் கெளியான்நம்களவ றுத்துநின் றாண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந் திருந்தேயும்உளக றுத்துனை நினைந்துளம் பெருங்களன் செய்தது மிலைநெஞ்சேபளக றுத்துடை யான்கழல் பணிந்திலை பரகதி புகுவானே.
சொற்பிரிப்பு
அளவு அறுப்பதற்கு அரியவன், இமையவர்க்கு; அடியவர்க்கு எளியான்; நம்களவு அறுத்து நின்று ஆண்டமை, கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும்உள கறுத்து, உனை நினைந்து, உளம் பெரும்களன் செய்ததும் இலை; நெஞ்சே !பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை-பரகதி புகுவானே.
உரை

விண்ணோராலும் அளந்து முடிவு செய்ய இயலாத பெருமையனாகிய இறைவன் அடியவர்க்கு எளிதில் அருள்பவன். அவன் நம் வஞ்சப் பிறவியை ஒழித்து, ஆட்கொண்ட தன்மையை உருகி உணர்ந்திருந்த போதிலும், வீடு அடைதற்கு, உள்ளத்து உள்ளனவாகிய  காமம் முதலிய ஆறுபகைகளையும் கோபித்துத் தள்ளி, மனமே, உன் தகுதியை எண்ணி உள்ளத்தைச் சிவபெருமான் தங்குதற்குரிய பெரிய இடமாகச் செய்தாயில்லை. குற்றங்களை நீக்கி இறைவன் திருவடியை வணங்கினாயுமில்லை; என்னே உன் இயல்பு!

36

புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்குகுவ தாவதும் எந்தையெம் பிரான்என்னை ஆண்டவன் கழற்கன்புநெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டிமிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே.
சொற்பிரிப்பு
புகுவது ஆவதும், போதரவு இல்லதும் பொன் நகர் புகப் போதற்குஉகுவது ஆவதும், எந்தை, எம்பிரான், என்னை ஆண்டவன் கழற்கு அன்புநெகுவது ஆவதும், நித்தலும் அமுதொடு, தேனொடு, பால், கட்டிமிகுவது ஆவதும், இன்று எனின், மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே?
உரை

சென்று அடைதற்குரியவன் நிறைந்திருக்கும் இடமும் அடைந்தார் மீளுதல் இல்லாததும், பொன்னகரம் ஆகிய வீடாகும். அதனுள் செல்லுதற்குப் பற்று ஒழிவதும் எங்கள் அப்பனும் தலைவனுமாய் என்னை ஆட்கொண்டவனுடைய திருவடிக்கு அன்பினால் நெஞ்சம் உருகுதலும், நாள்தொறும் அமுதம், தேன், பால், கல்கண்டு இவற்றை விட அதிகமாகப் பேரின்ப உணர்ச்சி சிறப்பதும் இல்லையெனில், தீவினையுடையேன் இவ்விடையூற்றை நீக்க யாது செய்ய வல்லேன்?

37

வினைஎன் போல்உடை யார்பிறர் ஆர்உடை யான்அடி நாயேனைத்தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப் பன்றுமற் றதனாலேமுனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்துநான் முட்டிலேன் தலைகீறேன்இனையன் பாவனை இரும்புகல் மனம்செவி இன்னதென் றறியேனே.
சொற்பிரிப்பு
வினை என்போல் உடையார் பிறர் ஆர்? உடையான், அடி நாயேனைத்தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று ; மற்று அதனாலேமுனைவன் பாத நல்-மலர் பிரிந்திருந்தும், நான் முட்டிலேன், தலை கீறேன்இனையன் பாவனை, இரும்பு: கல், மனம், செவி, இன்னது என்று அறியேனே
உரை

என்னைப் போன்று தீவினைப் பயனுடையவர் யார் ? என் முதல்வனுக்கு  அடிமையாகிய நாய் போன்ற என்னைப் பிரியும் திருவுளக் குறிப்பு சிறிதுமில்லை . தினையளவு கூட இல்லை. ஆகவே பிரிந்து இருத்தல் என் தவறே! முன்னவனுடைய நல்ல திருத்தாள்களைப் பிரிந்திருந்தும், நான் தலையை மோதவும், பிளக்கவும் மாட்டேன். இத்தகைய எனது எண்ணம் இரும்பாலானது. மனம் கல்போன்றது. செவி இன்னதால் ஆயிற்று என்று அறிய மாட்டேன்.

38

ஏனை யாவரும் எய்திட லுற்றுமற் றின்னதென் றறியாததேனை ஆன்நெயைக் கரும்பின்இன் தேறலைச் சிவனைஎன் சிவலோகக்கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம்ஊனை யான்இருந் தோம்புகின் றேன்கெடு வேன்உயிர் ஓயாதே.
சொற்பிரிப்பு
ஏனை யாவரும் எய்திடல் உற்று, மற்று இன்னது என்று அறியாததேனை, ஆன் நெயைக், கரும்பின் இன் தேறலைச், சிவனை, என் சிவலோகக்கோனை மான் அன நோக்கி தன் கூறனைக் குறுகிலேன்; நெடும் காலம்ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன்; கெடுவேன் உயிர் ஓயாதே.
உரை

அன்பரல்லாத பிறர் இறைவனை அடைய முயன்றும் இத்தன்மையினன் என்று அறியப்படாத தேன் போல்பவன், பசு நெய் போல்பவன்; கருப்பஞ்சாற்றின் தெளிவு போல்பவன்; என் சிவலோக மன்னன். மானின் பார்வையொத்த அம்மையை ஒரு பாகம்  உடையவன். அவனை நீண்டகாலமாக நான் அடைந்திலேன். யான் இவ்வுலகில் தங்கி தசையாலாகிய இந்த உடம்பினைப் பாதுகாத்து இருக்கிறேன். கெட்டொழிகின்றேன்.  என் பிராணன் ஒடுங்காதோ?

39

ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்துநாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித்தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே.
சொற்பிரிப்பு
ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள்-மலர்த் தாள் தந்துநாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை , நல்-நெறி காட்டித்தாயில் ஆகிய இன்-அருள் புரிந்த, என் தலைவனை நனி காணேன் ;தீயில் வீழ்கிலேன் : திண் வரை உருள்கிலேன்; செழும் கடல் புகுவேனே?
உரை

அழிவற்றனவாய், உவமிக்கப்படும் பொருள் யாவும் கடந்தனவாய் இருக்கின்ற ஒளிமிக்க திருவடிக்கமலங்களைக் காட்டி அருளி, நாயெனும் படைப்பு வகையினும்  கீழ்ப்பட்ட எனக்கு நல்ல முத்தி நெறியைக் காண்பித்துத் தாய் போலும் இரக்கம் காட்டி  இன்னருள் புரிந்த எனது நாதனை நன்கு தரிசிக்கப் பெற்றேன். அவன் பிரிவினைக் கண்டு நெருப்பிலும் விழமாட்டேன்; மலையிலும் உருண்டு விழமாட்டேன். வளமிக்க கடலிலும் பாய்வனோ? அதுவும் செய்ய மாட்டேன்.

40

வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினையாதேமான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்தேன்நி லாவிய திருவருள் புரிந்தஎன் சிவன்நகர் புகப்போகேன்ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே.
சொற்பிரிப்பு
வேனில்-வேள் கணை கிழித்திட, மதி சுடும் அது-தனை நினையாதேமான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகித்தேன் நிலாவிய திரு அருள் புரிந்த, என்சிவன்-நகர் புகப் போகேன்;ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு, இனும் உண்டு உடுத்து இருந்தேனே
உரை

தேன் போலும் இனிமை நிலைக்கப் பெற்ற திருவருள் நல்கிய என் இன்பனின் வீட்டு  நகரத்தையடையச் செல்லமாட்டேன். மான் போலும் பார்வையுடைய மாதர் வஞ்சனையால் மத்தில் அகப்பட்ட தயிர் போலக் கலங்கினேன். இளவேனிற் காமனுடைய அம்பு நெஞ்சைப் பிளந்து உடம்பைச் சுடும். அக்கெடுதியை நினையாது உடலில் உயிரை வைத்துக் காக்க உணவுண்டு, உடையுடுத்து வாழ்ந்திருந்தேன். என்னே என் அறியாமை?

41

இருகை யானையை ஒத்திருந் தென்னுளக்கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமேவருக வென்று பணித்தனை வானுளோர்க்கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.
சொற்பிரிப்பு
இரு கை யானையை ஒத்து இருந்து என் உளக்கருவை யான் கண்டிலேன்; கண்டது எவ்வமே ;'வருக' என்று பணித்தனை: வான் உளோர்க்குஒருவனே! கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.
உரை

விண்ணவர்க்கெல்லாம் தலைவனாகிய ஒருவனே! பெரிய துதிக்கையுடைய  யானையைப் போன்று இருக்கிறேன். என்னுடைய உள்ளத்தின் மூலத்தை அடியேன்  காணாதிருந்தேன். யான் கண்டு அனுபவித்தது எல்லாம் துன்பமே. அங்ஙனம் ஆயினும் நீ  என்னை 'வா' என்று கட்டளை இட்டு அருளினை. நீ தரும் இன்பத்தை நுகர வல்லேன்  அல்லேன். துன்பத்தையே நுகர வல்லேன்.

42

உண்டொர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலைதொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே.
சொற்பிரிப்பு
உண்டு ஒர் ஒள் பொருள்' என்று உணர்வார்க்கு எலாம்பெண்டிர், ஆண், அலி, என்று அறி ஒண்கிலைதொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய் ;கண்டும் கண்டிலேன்; என்ன கண் மாயமே!
உரை

உலகிற்கு முதல்வனாகிய ஓர் அறிவொளிப் பெரும் பொருள் உண்டென்று உணர்ந்து அன்பர் உன்னை நாடுவர். நீ பெண்ணோ , ஆணோ, அலியோ என்று உறுதியாக அறிய முடியாமல் இருக்கின்றனர். ஆனால் அடியேனுக்கு நீ உண்மையாக இருக்கிறவாறே தானே வந்து காட்சி கொடுத்தாய். உன் திருவருட் காட்சி பெற்றும் உன்னை அனுபவிக்கப் பெற்றிலேன். இது என்ன கண் மயக்காக உள்ளது?

43

மேலை வானவ ரும்அறி யாததோர்கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனேஞால மேவிசும் பேஇவை வந்துபோம்கால மேஉனை யென்றுகொல் காண்பதே.
சொற்பிரிப்பு
மேலை வானவரும் அறியாதது ஓர்கோலமே, எனை ஆட்கொண்ட கூத்தனேஞாலமே, விசும்பே, இவை வந்து போம்காலமே !-உனை என்று-கொல் காண்பதே?
உரை

மேலான பதவிகளிலுள்ள வானவரும் அறியக் கூடாத ஒப்பற்ற திருவுருவனே! அடியேனை ஆட்கொண்ட வியத்தகு செயலுடையானே ! நில உலகானவனே ! வானானவனே! மண்ணும்-விண்ணுமாய் இவைகள் தோன்றி ஒடுங்குதலை வரையறுத்து  நிற்கும் கால தத்துவம் ஆனவனே! உன்னை எந்த நாள் இனி நான் காணக் கூடும்?

44

காண லாம்பர மேகட் கிறந்ததோர்வாணி லாப்பொருளே இங்கொர் பார்ப்பெனப்பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப்பூணு மாறறி யேன்புலன் போற்றியே.
சொற்பிரிப்பு
காணல் ஆம் பரமே, கட்டு இறந்தது ஓர்வாள் நிலாப் பொருளே, இங்கு, ஓர் பார்ப்பு எனப்பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, உனைப்பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே.
உரை

அடியார் காணும்படியான திரு உருவம் காட்டும் மேலான தன்மையனே! ஊனக் கண்ணால் அன்றி ஞானக் கண்ணாலே காண்பதற்குரிய பரஞ்சோதி நீ ! பறவைக் குஞ்சு கூட்டை விட்டுப் பறக்கமுடியாது இருப்பது போன்று, பாழாய்ப் போன நான் பொய்யுடலை விட்டுப் பிரிந்து உன்னோடு பொருந்தி இருக்கும் நெறியை அறியாது இருக்கிறேன்.  ஐம்புலன்களில் வைத்துள்ள பற்றுதலே இதற்குக் காரணம். பொறிவாயில் ஐந்தையும் எரிந்து போனவைகளாக ஒதுக்கி வைத்துப் பழகுவேனாக!

45

போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்றாற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன்ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங்கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே.
சொற்பிரிப்பு
போற்றி' என்றும், புரண்டும், புகழ்ந்தும் நின்றுஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும்கூற்றம் அன்னது ஒர் கொள்கை என் கொள்கையே.
உரை

காத்தருள்க என்று நினைந்தும், நிலத்தே புரண்டு வலம் வந்தும், நின் புகழ் பாடியும் செய்யக் கடவதாகிய உனது திருத்தொண்டிலே நிலைபெற்று, திண்மை மிகுந்த பேரன்பால்  உன்னைக் கூவுகின்றேனில்லை. மார்க்கண்டேயனைப் பிடித்தல் பொருட்டு உன்னை எதிர்த்து வந்த கூற்றுவன் உன் திருவடி அடைந்தான். என்னுடைய போக்கும் அத்தகையதாய் இருக்கும்.

46

கொள்ளுங் கொல்லெனை அன்பரிற் கூய்ப்பணிகள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும்எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே.
சொற்பிரிப்பு
கொள்ளுங்-கில், எனை அன்பரில் கூய்ப் பணிகள்ளும், வண்டும். அறா மலர்க் கொன்றையான் ;நள்ளும், கீழ் உளும், மேல் உளும், யா உளும்எள்ளும் எண்ணெயும் போல், நின்ற எந்தையே!
உரை

தேனும் வண்டும் நீங்காத கொன்றைப் பூவினையுடையான் சிவபெருமான். அவன்  எப்பொருளினுள்ளும் நடுவிலும், கீழும் மேலுமாய் எப்பக்கத்தும் எள்ளில் எண்ணெய் போல் வியாபித்து நின்றவனாகிய எம் அப்பன், அவனது மெய்யன்பர் போல என்னையும் வலிய அழைத்துப் பணி கொள்ளும் ஆற்றலுடையவன்.

47

எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்தந்தை தாய்தம்பிரான் தனக்கஃதிலான்முந்தி என்னுள் புகுந்தனன் யாவருஞ்சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே.
சொற்பிரிப்பு
எந்தை, ஆய், எம்பிரான் மற்றும் யாவர்க்கும்தந்தை, தாய், தம்பிரான்; தனக்கு அஃது இலான்;முந்தி என்னுள் புகுந்தனன்-யாவரும்சிந்தையாலும் அறிவு-அரும் செல்வனே
உரை

எங்கள் அப்பனாகவும் அன்னையாகவும் இருக்கும் எம் தலைவன் பிற  எல்லோருக்குமே தாயும் தந்தையும் ஆனவன். தலைவனும் ஆனவன். தனக்குத் தாய் தந்தையும் மேலோனும் இல்லாதவன். சொல்லாலன்றி மனத்தாலும் யாவரும் அறிதற்கரிய முத்திப் பெருஞ்செல்வனாகிய கடவுள், எனக்குப் பக்குவ காலம் வருமுன்னே என் உள்ளத்தே  பெருங் கருணையாற் புகுந்தருளினான்.

48

செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப்புல்வ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள்எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே.
சொற்பிரிப்பு
செல்வம், நல்குரவு இன்றி விண்ணோர், புழுப்புல் வரம்பு இன்றி; யார்க்கும் அரும் பொருள்எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன் ;கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே!
உரை

சிவபிரான் செல்வம், வறுமை, தேவர், புழு, புல் என்ற வரையறையின்றி எல்லோருக்குமே அறிதற்கரியவன், யானோ பரம்பொருளின் அளவற்ற திருவடிகளைக்  காணப்பெற்றும் அவற்றைப் பிரித்திருப்பேனாயினன் . கல்லின் இனத்தைச் சார்ந்த மனத்தினை உடையேன். நுகரக் கிடந்த துன்பம் எத்தன்மையது பாருங்கள்.

49

கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீறிட்ட அன்பரொ டியாவருங் காணவேபட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினைஎட்டி னோடிரண் டும்அறி யேனையே.
சொற்பிரிப்பு
கட்டு அறுத்து, எனை ஆண்டு, கண் ஆர, நீறுஇட்ட அன்பரொடு, யாவரும், காணவேபட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை -எட்டினோடு இரண்டும் அறியேனையே
உரை

பாசங்களை ஒழித்து என்னை ஆட்கொண்டு, கண்கள் பார்த்து மகிழும்படியாக நீ என்னை ஏற்றுக் கொண்டாய். திருநீறிட்ட பேரன்பரோடு எல்லோரும் பார்க்கும்படியாகவே நாயனைய என்னை உனது திருவோலக்க மண்டபத்தில் ஏற்றுவித்தாய். அகர உகரமாகிய  சிவம் சக்தி இயல்பு அறியேனாகிய என்னை ஏற்றுவித்தாய். இது நீதியோ?

50

அறிவ னேஅமு தேஅடி நாயினேன்அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டதுஅறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்அறிவ னோஅல்ல னோஅரு ளீசனே.
சொற்பிரிப்பு
அறிவனே! அமுதே! அடி நாயினேன்அறிவன் ஆகக் கொண்டோ , எனை ஆண்டது?அறிவு இலாமை அன்றே கண்டது, ஆண்ட நாள் ?அறிவனோ, அல்லனோ, அருள், ஈசனே!
உரை

எல்லாம் அறியும் முற்றறிவினனே! சாவா மருந்தே! அடிமையாகிய நாயனையேன் நினதுரையை அறிய வல்லவன் என்று கருதியோ என்னை ஆட்கொண்டது? ஆண்ட நாள்  அறிவில்லாமையை அல்லவா என்பால் நீ கண்டது? இனி உண்மைகள் அறிவேனோ அறியேனோ, ஆண்டவனே அருள் செய்ய வேண்டும்.

51

ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என்பிறவிநாசனே நான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயானநீச னேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயேதேசனே அம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே.
சொற்பிரிப்பு
ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவிநாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆனநீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே ;தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே.
உரை

அரசனே! என் தலைவனே! எங்கள் அப்பனாகிய பெரியோனே ! எனது பிறப்பினை ஒழிப்பவனே! நான் யாதானுமொரு சிறு பொருளுக்கும் ஈடாக மாட்டேன். தீய நாய்த் தன்மையுடைய இழி தகைமை உடையேன். என்னை ஆட்கொண்டருளிய உன்னை நன்றி உணர்வுடன் எண்ணித் துதிக்க மாட்டேன். அது நீ அறிந்தாயன்றே, ஒளி மேனியனே, மன்றில் ஆடுவோனே, செய்யத்தக்க ஒன்றையும் அறிகிலேன்.

52

செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலாமெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும்பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே.
சொற்பிரிப்பு
செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப்பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலாமெய்யர் வெறி-ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும்பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்; போர் ஏறே!
உரை

போரில் ஆண் சிங்கத்தை ஒப்பவனே! நிலையாதனவற்றில் பற்றில்லாத உண்மை  அடியார், தேனூறும் பூப்போன்ற உன் திருவடிகளைப் பொருந்தினமையைப் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன். ஆனால் பொய்த் தன்மையில் ஈடுபட்ட யான் இந்நிலவுலகத்தே வயிறார உணவு கொண்டு, உடை உடுத்தி வாளா வாழ்ந்திருப்பேன் ஆயினன். ஆதலிற்  செய்யத்தக்கன ஒன்றுமறியாத கீழ்ப்பட்ட நாயனையேன், நினது செவ்விய பொன்னடிக்  கமலங்களைக் காணப்பெறாத பொய்வழி நிற்பார் அடையக்கூடிய துன்பப் பேறு  அனைத்தும் அடைதற்குரியவன்.

53

போரே றேநின் பொன்னகர்வாய் நீபோந் தருளி யிருள்நீக்கிவாரே றிளமென் முலையாளோ டுடன்வந் தருள அருள்பெற்றசீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்டஊரே றாய்இங் குழல்வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே.
சொற்பிரிப்பு
போர் ஏறே! நின் பொன் நகர் வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி,வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்றசீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்டஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர்-தான் உலவாதே!
உரை

போரில் ஏறு போன்ற பெருமானே! நீ வீடாகிய உனது அழகிய ஊரிலிருந்தும் புறப்பட்டருளினாய். கச்சை மிஞ்சிய இளமையும் மென்மையும் உடைய நகிலினளாகிய திருவருட் சத்தியோடு ஒருங்கு எழுந்தருளினாய். அடியவர் ஆணவ இருளை ஒழித்தருள உன் திருவருள் பெற்ற சிறப்பு மிகுந்த அன்பர் நினது திருவடியை அடைதலை நேரே பார்த்திருந்தும் பார்வையற்ற ஊர்மாடு போன்று இவ்வுலகில் திரிவேனோ? தீவினையேனது ஆயுள் முற்றி ஒழியாதோ?

54

உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய்மலமாக் குரம்பை இதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான்அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண் டெழுகேன் எம்மானே.
சொற்பிரிப்பு
உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான்,பல மா முனிவர் நனி வாடப், பாவியேனைப் பணி கொண்டாய் ;மல மாக் குரம்பை - இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான் ,அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே?
உரை

எங்கள் தலைவனே! அளவில்லாத காலம் நற்றவம் கிடந்து உடம்பை ஒரு  பொருளாகப் போற்றாது பெரிய முனிவர் பலர் இருக்கிறார்கள். எடுத்த இப்பிறவியிலேயே உன்னைக் காணும் பொருட்டு அவர்கள் மிகவும் கவலையுற்றுத் தளர, அவர்கட்குப் போய்  அருள் புரியாது தீவினையேனை ஆட்கொண்டு அருளினாய். அழுக்கு மிகுந்த இவ்வுடலை அழித்தொழிக்க மாட்டேன். மாணிக்கமே ! உன்னைக் காண்பதற்குக் கவலையுற்று  ஆசைப்படும் அன்பில்லாதேன்; இனி அன்பொழிந்த பிற எதனைக் கருவியாகக் கொண்டு மேற் செல்ல வல்லேன்?

55

மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்டதேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூடஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே.
சொற்பிரிப்பு
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா! வந்து இங்கு ஆட்கொண்டதேனே! அமுதே! கரும்பின் தெளிவே! சிவனே! தென் தில்லைக்கோனே! உன்-தன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட,ஊன் ஆர் புழுக்கூடு - இது காத்து, இங்கு இருப்பது ஆனேன்; உடையானே!
உரை

மான் போலும் விழியுடைய உமை நங்கையை இடப்பாகம் கொண்டவனே! மேல்நின்று இழிந்து இந்நிலவுலகில் வந்து ஆட்கொண்டருளிய, தேன் போலும் கெடாத இன்பமளிப்பவனே! சாவா மருந்தே! கருப்பஞ்சாறு போலும் தித்திப்பவனே ! மங்கலப் பெருமானே! அழகிய தில்லை அதிபதியே! முதல்வனே! உன்னுடைய திருவுளப்பாங்கிற்கு ஏற்றவாறு நடந்து, உன் திருஉளக் குறிப்பிற் சார்ந்தவர்கள் உன் திருவடியைக் கூடினார்கள். ஆனால் யானோ தசை நிறைந்த புழுக்கூடாகிய இவ்வுடம்பை இவ்வுலகில் வீணே காத்திருத்தலை உடையவன் ஆனேன்.

56

உடையா னேநின் றனைஉள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்உடையார் உடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயிற்கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே.
சொற்பிரிப்பு
உடையானே! நின்-தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல்உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின்கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன்,முடை ஆர் புழுக் கூடு-இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே!
உரை

உயிர்கள் அனைத்தும், இறைவா! உனக்குச் சொந்தம் ஆயினும் பேரன்போடு உன்னையே நினைப்பவர் மட்டும் உன்னை அடைகின்றனர். இதை நான் கண்டிருந்தும் என் நெஞ்சம் உருகவில்லை. அதனைக் கண்ணுற்றும் அவர்களைப் போல் உன்னிடம் அன்பு கொள்ளவில்லை. மனம் கனிந்திடவில்லை. எனக்கு விவேகம் வரவில்லை. துர்நாற்றம் வீசும் உடலில் அபிமானம் வைத்து ஊர் நாய்க்கும் கீழ்ப்பட்டவனாய் இங்கு வாழ்ந்திருக்கிறேன் .

57

முடித்த வாறும் என்றனக்கே தக்க தேமுன் னடியாரைப்பிடித்த வாறும் சோராமற் சோர னேன்இங் கொருத்திவாய்துடித்த வாறும் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர்பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே.
சொற்பிரிப்பு
முடித்த ஆறும், என்-தனக்கே தக்கதே; முன், அடியாரைப்பிடித்த ஆறும், சோராமல் - சோரனேன்-இங்கு, ஒருத்திவாய்துடித்த ஆறும், துகில் இறையே சோர்ந்த ஆறும், முகம் குறு வேர்பொடித்த ஆறும், இவை உணர்ந்து, கேடு என்-தனக்கே சூழ்ந்தேனே
உரை

உன்னை நாடிய மெய்யடியாரை நீ தளர விடாமல் பற்றிக் கொண்டனை.  கள்வனாகிய என்னை இங்கு உடல் காத்திருக்க நீ முடிவு செய்தது தக்கதுதான் . உலகப்பற்றில் ஈடுபட்ட வஞ்சனேன் இங்கு மாயாசக்தியாம் பெண்ணின் கவர்ச்சியில்  ஈடுபட்டேன். பெண்ணின் இதழ்த்துடிப்பும், சிறிது நேர்ந்த ஆடைக்கலைவும், முகச்  சிறுவியர்வையின் தோற்றமும் நிகழ்ந்த முறையில் அவற்றில் ஈடுபட்டு, உலக உணர்ச்சி எய்தி, எனக்கே தீங்கு இழைக்கக் கற்றுக் கொண்டேன்.

58

தேனைப் பாலைக் கன்னலின் தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம்ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன்நானின் னடியேன் நீஎன்னை ஆண்டாய் என்றால் அடியேற்குத்தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாம்என் தன்மையே.
சொற்பிரிப்பு
தேனைப், பாலைக் கன்னலின் தெளியை, ஒளியைத், தெளிந்தார்-தம்ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன்'நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்,' என்றால், அடியேற்குத்தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே
உரை

தேன் போன்ற இனிமையும், பால் போன்ற தூய்மையும் கரும்பின் சாறு போன்ற அருட்செயலும் உடைய சோதியானவனே! நின் அருள் அறிவின் கண் தெளிந்த அடியார்களின் உள்ளம் மட்டுமன்றி உடம்பையும் உருகுவிக்கும் முதல்வனை  வேண்டியதெல்லாம் எளிதின் ஈயும் விண்பசுவாகிய காமதேனு ஒப்பானை நோக்கி , வீணனாகிய நான் உன் அடியேன், நீ என்னை ஆட்கொண்டாய். என்று நான் கூறினால்  அடியேனைப் பார்த்து அப்படியா நல்லது என்று அவன் இகழ்ந்து நகையாடி அருளுதற்குரிய இயல்பே என் இயல்பாயிற்று.

59

தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயானபுன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோஎன்னை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான்பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே.
சொற்பிரிப்பு
தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆனபுன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ ?என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்!பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே?
உரை

அன்பரன்றி, மற்றோரால் அறியப்படாத இயல்புடைய தலைவனே! தீய நாய்  போன்ற சிறியேனை ஆட்கொண்டு, ஐயனே! உன் அருளுக்குப் புறம்பாகச் செல்ல விட்டு  விடுவையோ? அங்ஙனமாயின் அடியேனைக் கண்பார்ப்பார் வேறு யார் ? எங்கள் பெரியோனே! நான் என்ன செய்வேன்? மாறில்லாத பொன்போல விளங்கும் அழகிய திருவுருவ முடையவனே! எந்தையே! நான் எங்கே அடைக்கலம் புகுவேன் ?

60

புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்றுநகுவேன் பண்டு தோள்நோக்கி நாண மில்லா நாயினேன்நெகும்அன் பில்லை நினைக்காண நீஆண் டருள அடியேனுந்தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.
சொற்பிரிப்பு
புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்றுநகுவேன், பண்டு தோள் நோக்கி, நாணம் இல்லா நாயினேன்நெகும் அன்பு இல்லை, நினைக்காண நீ ஆண்டு அருள, அடியேனும்தகுவனே? என் தன்மையே! எந்தாய்! அந்தோ! தரியேனே!
உரை

நீ காட்சி கொடுத்த முன்நாளில் உன்னை வணங்கும் அன்பர் நடுவே நின்று வெட்கமற்ற நாய் போலும் யான், நின் திருத்தோள்களைக் கண்டு நகையாடிக் கொண்டிருந்தேன். உன் திருக்காட்சி பெறுதற்குரிய உள்ளம் உருக்கும் அன்பு என்னிடம் இருந்ததில்லை. அங்ஙனமாயினும் ஆட்கொண்டு அருளும் தகுதி உடையவன் ஆயினேன்; எந்தையே, என் இயல்புதான் என்னே! அன்பற்ற என் இயல்பை நான் பொறுக்க மாட்டேன். நீ ஆண்டமையால் நின் பாதம் எனக்குரியதே! நான் அதன் கண் அடைக்கலம் புகுவேன்.

61

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வானவிருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லைநிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா, போற்றி ! வானவிருத்தனே போற்றி! எங்கள் விடலையே, போற்றி! ஒப்புஇல்ஒருத்தனே, போற்றி! உம்பர் தம்பிரான் போற்றி! தில்லைநிருத்தனே, போற்றி ! எங்கள் நின்மலா, போற்றி ! போற்றி!
உரை

இவ்வுடலோடு வாழ்ந்திருத்தலைப் பொறுக்க முடியவில்லை. சுகத்தைக்  கொடுப்பவனே! காத்தருளுக! சிதாகாசத்தில் உறையும் பழையோனே ! காத்தருளுக! அடியாருடைய அண்ணலே காத்தருளுக! ஒப்பற்ற ஒருவனே! காத்தருளுக! வானவர்  தலைவனே காத்தருளுக! தில்லை மன்றில் நடனமாடுவோனே காக்க! எங்கள் தூயவனே காக்க ! காக்க!

62

போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லைபோற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய்போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
போற்றி ! ஓ, நமச்சிவாய! புயங்கனே, மயங்கு கின்றேன் ;போற்றி ! ஓ, நமச்சிவாய ! புகல் இடம் பிறிது ஒன்று இல்லை ;போற்றி! ஓ, நமச்சிவாய! புறம் எனைப் போக்கல், கண்டாய்;போற்றி! ஓ, நமச்சிவாய ! சய! சய ! போற்றி! போற்றி!
உரை

ஓம் நமச்சிவாய ! பாம்பணிந்தவனே! அடியேன் திகைப்புறுகின்றேன்.  காத்தருளுக! ஓம் நமச்சிவாய! அடியேனுக்கு நின்னைத் தவிர தஞ்சமான இடம் வேறு எதுவுமில்லை. காத்தருளுக! ஓம் நமச்சிவாய! அடியேனைப் புறம்பே போக விடாதே காத்திடுக. ஓம் நமச்சிவாய! காத்தருளுக! நின் வெற்றி ஓங்குக! வணக்கம் ! வணக்கம்!

63

போற்றிஎன் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல்போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றிபோற்றிநின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக்காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவு ளானே.
சொற்பிரிப்பு
போற்றி ! என் போலும் பொய்யர்-தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்போற்றி ! நின்பாதம் போற்றி ! நாதனே, போற்றி ! போற்றி!போற்றி! நின்கருணை வெள்ளப் புதுமதுப் புவனம், நீர், தீக்காற்று, இயமானன், வானம், இருசுடர்க் கடவுளானே!
உரை

நிலையல்லாதவற்றில் பற்றுடைய என்னைப் போன்றவரையும் ஆட்கொள்ளும் ஈகை மிக்க பெருந்தகை நீ! உனக்கு வணக்கம்! உனது திருவடிக்கு வணக்கம். தலைவனே வணக்கம். வணக்கம். நிலம், நீர், நெருப்பு, காற்று, வான், உயிர், ஞாயிறு, திங்கள் ஆகிய எட்டினையும் வடிவாகக் கொண்டு அவையாகிய கடவுள் தன்மை கொண்டவனே ! உன்  கருணைக்குப் புதிய தேன் ஒப்பானது. அருள் வெள்ளம் எம்மைக் காக்க என்பது பொருள்.

64

கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண் டருளு போற்றிவிடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றிஉடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றிசடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி !விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி !உடல்-இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி !சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி!
உரை

மனம், மொழி, மெய்களைக் கடந்த பெருமானே! வணக்கம் அடியேனைக்  கண்பார்த்து இரங்குக வணக்கம். உலகப்பற்றை விடுதற்கு, என் உள்ளத்தை அன்பால் உருகுவித்து என்னை அடிமை கொண்டிட வேண்டுகிறேன். வணக்கம். இந்த உடலினை நீக்கி, விரைவாக வீட்டினைக் கொடுத்தருளுக வணக்கம். உலகினர்க்கு இரங்கி கங்கையானது உலகை அழிக்கவொட்டாமல் சடையின் கண்ணே கங்கையை ஏற்று அமைத்துக் கொண்ட இன்ப வள்ளலே! வணக்கம்! வணக்கம்!

65

சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப்பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரியவாட் கண்மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றிஇங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட் டேனே.
சொற்பிரிப்பு
சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண் இலேன்; போற்றி! கோலப்பொங்கு அரா அல்குல், செவ்வாய், வெள் நகைக் கரியவாள் கண்,மங்கை ஓர்பங்க, போற்றி ! மால்விடை ஊர்தி, போற்றி !இங்கு, இவ்வாழ்வு ஆற்றகில்லேன்; எம்பிரான்! இழித்திட்டேனே.
உரை

சுகம் கொடுப்பவனே வணக்கம். நின்னைத்தவிர வேறு ஒரு புகலிடம் இல்லேன் வணக்கம். சீற்றம் கொண்ட பாம்பின் அழகிய படத்தை ஒத்த நிதம்பத்தையும், சிவந்த இதழையும், வெள்ளிய பல்லினையும், ஒளியுடைய கருங்கண்ணையும் உடைய மங்கைப் பருவத்தினளாகிய உமையைப் பாகமாக உடையவனே வணக்கம் ! அரியைக் காளை வாகனமாகக் கொண்டவனே வணக்கம்! இவ்வுலகில் பொய் வாழ்வைச் சகிக்கிலேன்.  இதை அருவருத்து விட்டேன்.

66

இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றிபழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றிபிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றிஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர்நாட் டெம் பிரானே.
சொற்பிரிப்பு
இழித்தனன் என்னை யானே; எம்பிரான், போற்றி ! போற்றி !பழித்திலேன் உன்னை: என்னை ஆளுடைப் பாதம் போற்றி!பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை; போற்றி!ஒழித்திடு இவ்வாழ்வு: போற்றி ! உம்பர் நாட்டு எம்பிரானே!
உரை

யானே என்னை மிகவும் வெறுத்து விட்டேன். எங்கள் வள்ளலே வணக்கம்! வணக்கம்! உன்னை யான் குறை கூறேன். அடியேனை அடிமையாக உடைய திருவடிக்கு வணக்கம். இயற்றிய தவறுகளை எல்லாம் மன்னித்தல் பெரியோரின் கடப்பாடு ஆகும். ஆகவே பெரியோனான நீ சிறியோனான என் பிழையெல்லாம் பொறுத்தருளுக.  வீட்டுலகின் எங்கள் தலைவனே! இவ்வாழ்க்கையை விரைவில் தொலைத்தருள்க! வணக்கம்!

67

எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றிகொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றிசெம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றிஉம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி.
சொற்பிரிப்பு
எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி !கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள்-நீற, போற்றி !செம்பிரான் போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி !உம்பரா, போற்றி ! என்னை ஆளுடை ஒருவ, போற்றி!
உரை

எங்கள் வள்ளலே வணக்கம்! வானுலகிலுள்ள தேவர் பலருள் அவரவருக்குத் தக்கவாறு அருளும் சிங்கமே வணக்கம்! கொடி போன்ற இடையுடைய மாதினை ஒரு பாகம் உடையவனே! திரு வெண்ணீறுடையாய் வணக்கம்! செம்மேனியுடைய பெருமானே வணக்கம். அழகிய தில்லை ஞானப் பொதுவினையுடையாய் வணக்கம். வீடுடையானே வணக்கம். என்னை அடிமையாக உடைய ஒப்பற்றோனே வணக்கம்.

68

ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றிவருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றிதருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே.
சொற்பிரிப்பு
ஒருவனே போற்றி ! ஒப்புஇல் அப்பனே, போற்றி ! வானோர்குருவனே, போற்றி ! எங்கள் கோமளக் கொழுந்து போற்றி !'வருக' என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி !தருக நின் பாதம் போற்றி! தமியனேன் தனிமை தீர்த்தே.
உரை

கடவுளாகிய ஒருவனே வணக்கம். தன்னிகரில்லாத தந்தையே வணக்கம். தேவருடைய பரமாச்சாரியனே வணக்கம். அடியோமுடைய இளமைச் செவ்வி நிறைந்த  சோதியே வணக்கம். 'இங்கே வா' என்று அடியேனை உன்னிடம் நீ அழைத்து ஏற்றுக் கொள்ளவேண்டும். ஐயா வணக்கம், ஆதரவின்றித் தனிப்பட்ட எனது துணையின்மையை  ஒழித்து உன் திருவடித் துணையைக் கொடுத்தருளுக! வணக்கம்.!

69

தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றிபேர்ந்தும்என் பொய்மை யாட்கொண் டருளிடும் பெருமை போற்றிவார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதம்ஈ வள்ளல் போற்றிஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி.
சொற்பிரிப்பு
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப, போற்றி !பேர்ந்தும், என்பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை, போற்றி !வார்ந்த நஞ்சு அயின்று, வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல், போற்றி !ஆர்ந்த நின்பாதம், நாயேற்கு அருளிட வேண்டும், போற்றி!
உரை

முடிந்த அன்புருவமாகிய அடியாரிடத்தே அவரைப் பார்க்கிலும் மிகுந்த அன்புடையவனே வணக்கம் . எனது பொய்ம்மையை நீக்கியும் என்னை அடிமையாகக் கொண்டு அருள் செய்யும் பெருந்தன்மையனே வணக்கம். பாற்கடலில் பெருகிய விடத்தை உண்டு, விண்ணவர்க்கு அமுதத்தைக் கொடுத்த பேருதவியாளனே வணக்கம். எங்கும் நிறைந்த நின் திருவடிகளை நாயனைய எனக்கு ஈந்திட வேண்டுகிறேன், வணக்கம்!

70

போற்றியிப் புவனம் நீர்தீக் காலொடு வான மானாய்போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய்போற்றிஎல் லாஉயிர்க் கும்ஈ றாய்ஈ றின்மை யானாய்போற்றிஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே.
சொற்பிரிப்பு
போற்றி! இப்புவனம், நீர் தீ காலொடு, வானம் ஆனாய் ;போற்றி ! எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி, நீ, தோற்றம் இல்லாய் ;போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆய், ஈறுஇன்மை ஆனாய் ;போற்றி ! ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே.
உரை

இந்த நிலம், நீர், தீ, காற்று, வானம் எனும் ஐம்பூதத்திலும் கலந்து அவையானவனே வணக்கம். எல்லா உயிர்களும் பிறத்தற்குக் காரணமாகி, நீ பிறப்பில்லாது இருப்பவனே வணக்கம். எல்லா உயிர்களும் ஒடுங்கும் முடிவிடமாயும் நீ முடிவில்லாதவனும் ஆனவனே வணக்கம்! ஐம்புலன் ஆசை உன்னை அடையாத மாயமுடையவனே, உனக்கு வணக்கம்.

71

புணர்ப்ப தொக்க எந்தை என்னை யாண்டு பூண நோக்கினாய்புணர்ப்ப தன்றி தென்றபோது நின் னொ டென்னொ டென்னிதாம்புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின்க ழற்கணேபுணர்ப்ப தாக அங்க ணாள புங்க மான போகமே.
சொற்பிரிப்பு
புணர்ப்பது ஒக்க, எந்தை! என்னை ஆண்டு, பூண நோக்கினாய்:புணர்ப்பது அன்று இது என்ற போது, நின்னொடு என்னொடு, என் இது ஆம்புணர்ப்பது ஆக, அன்று இது ஆக, அன்பு நின் கழல்கணேபுணர்ப்பு அது ஆக, அம் கணாள, புங்கம் ஆன போகமே!
உரை

அழகிய கண்ணாளனே! நீ ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து அருள் புரிதற்குரிய  பக்குவம் ஒத்து வந்தது . என் அப்பனே! என்னை ஆட்கொண்டு நான் உன்னை அடையும்படி திருவருட் பார்வை நல்கினாய். இவ்வுடம்பானது நின்னோடு என்னை இணக்குவதன்று என்று அறிந்த பின்பு, இதனால் என்ன பயன்? இது ஒழிவதாக! நின் திருவடிக் கண்ணே அன்பானது என்னைச் சேர்ப்பதாக! உயர்ந்த சிவானந்த போகமானது என்னை நின்னோடு பொருத்துமாக!

72

போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த ராதி இன்பமும்ஏக நின்க ழல்லி ணைய லாதி லேனென் எம்பிரான்ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்ச லிக்கணேஆக என்கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே.
சொற்பிரிப்பு
போகம் வேண்டி, வேண்டிலேன் புரந்தர-ஆதி இன்பமும்ஏக! நின்கழல்-இணை அலாது இலேன், என் எம்பிரான் ;ஆகம் விண்டு, கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணேஆக, என்கை; கண்கள் தாரை-ஆறு அது ஆக; ஐயனே!
உரை

சிவபோகத்தை விரும்பி, இந்திரன் முதலிய இறையவர் பதவிக்குரிய இன்பங்களை விரும்ப மாட்டேன். ஒருவனே! என் தலைவனே! உன் திருவடி இரண்டுமன்றி வேறு யாதும் துணையில்லேன். அப்பனே! உடம்பு புளியம்பழ ஓடு போல என்னின் வேறாகப் பெற்று நடுநடுங்க, எனது கைகள் சிரமீது கும்பிடும் தொழிலின்கண் பொருந்துக. கண்களின் நின்று விழும் நீரொழுக்கு ஆறாகப் பெருகுவதாக.

73

ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர் பற்று வஞ்சனேன்பொய்க லந்த தல்ல தில்லை பொய்ம்மை யேன்என் எம்பிரான்மைக லந்த கண்ணி பங்க வந்து நின்க ழற்கணேமெய்க லந்த அன்ப ரன்பெ னக்கு மாக வேண்டுமே.
சொற்பிரிப்பு
ஐய, நின்னது அல்லது இல்லை, மற்று ஓர் பற்று, வஞ்சனேன்பொய் கலந்தது அல்லது இல்லை, பொய்மையேன், என் எம்பிரான்மை கலந்த கண்ணி பங்க, வந்து நின் கழல்-கணேமெய் கலந்த அன்பர் அன்பு, எனக்கும் ஆக வேண்டுமே.
உரை

ஐயனே, உன்னுடைய ஆதரவின்றி வேறொரு ஆதரவு இல்லை. அப்படியிருந்தும்  கள்வனேன் பொய்யினைச் சார்ந்திருப்பதன்றிப் பிறிதில்லை. என் தலைவனே! மை தீட்டிய  கண்ணையுடைய அம்மை பாகனே! நின் திருவடிக் கண்ணே மெய்யைச் சார்ந்த  அன்பர்களுடைய அன்பு, பொய்மை உடையேனாகிய எனக்கும் வந்து அமைதலை வேண்டுகிறேன்.

74

வேண்டும் நின்க ழற்க ணன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையேஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ என்ற ருளுநீபூண்டு கொண் டடிய னேனும் போற்றி போற்றி யென்றுமென்றும்மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின்வ ணங்கவே.
சொற்பிரிப்பு
வேண்டும், நின் கழல் கண் அன்பு: பொய்ம்மை தீர்த்து, மெய்ம்மையேஆண்டுகொண்டு, நாயினேனை, 'ஆவ' என்று அருளு, நீ ;பூண்டு கொண்டு அடியனேனும் 'போற்றி ! போற்றி! ' என்றும், என்றும்மாண்டு மாண்டு, வந்து வந்து, மன்ன ! நின் வணங்கவே.
உரை

அரசனே! பொய்யினை நீக்கி உண்மையாகவே ஆட்கொண்டருளி நாயனையேனுக்கு ஐயோ என்று இரங்கி அருள வேண்டும். உன் திருவடிகளைச் சென்னி மேற்கொண்டு கடையேனாகிய யானும் வணக்கம் வணக்கம் என்று எப்போதும் சொல்லவேண்டும். பிறவி வரினும் இறந்து இறந்து மீண்டும் உன்னையே வணங்குவதற்கு உன் திருவடிக் கண் அயரா அன்பினை வேண்டுகிறேன்.

75

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலமிட்டுணங்கு நின்னை எய்தலுற்று மற்றொ ருண்மை இன்மை யின்வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து நின்ற ருளுதற்கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ லோநினைப்பதே.
சொற்பிரிப்பு
வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டுஉணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஒர் உண்மை இன்மையின்வணங்கி, யாம் விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்குஇணங்கு கொங்கை மங்கை பங்க! என் - கொலோ நினைப்பதே?
உரை

நெருங்கிய நகில்களையுடைய மாதினை ஒரு பாகமாக உடையவனே ! உன்னையன்றி வேறொரு மெய்ப்பொருள் இல்லை. அதனால் மண்ணுலகமும் விண்ணுலகமும் உன்னை அடைய விரும்பி வழிபடுகின்றன. மறைகள் நான்கும் உன்னைக் காண ஓலமிட்டுக் காணப் பெறாமையால் வாடுகின்றன. அடியோங்களாகிய நாங்களும் உன்னை வணங்கி, 'விடமாட்டோம்' என்று கூறவும் நீ வெளிப்போந்து அருள் செய்வதற்குத்  தடையாக எதனை நினைக்கிறாய்? அவ்வாறு நினையாமல் இணங்குவாயாக.

76

நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை யேய வாக்கினால்தினைத்த னையு மாவ தில்லை சொல்ல லாவ கேட்பவேஅனைத் துலகு மாய நின்னை ஐம்பு லன்கள் காண்கிலாஎனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை பாத மெய்தவே.
சொற்பிரிப்பு
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை, ஏய வாக்கினால்தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல்; ஆவ கேட்பவேஅனைத்து உலகும்; ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா ;எனைத்து, எனைத்து அது, எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே?
உரை

நின்னை மனம் நினைத்து, அறிவதற்காக மேற்பட்டுச் செல்லும். அது செல்லும் அளவைப் பொருந்துவதற்கு, சொல்லினால் சிறிதும் கூடவில்லை. சொல்லக்கூடியன  எல்லாம் காதினாற் கேட்கப் பட்டவையே. எல்லா உலகுமான உன்னை இந்த உடம்பின் கண் உள்ள ஐம்பொறி அறிவுகள் அறியமாட்டா. எமது தந்தையாகிய நினது திருவடியை அடைய அது எவ்வளவினதோ, எவ்விடத்துள்ளதோ தெரிகிலேன் .

77

எய்த லாவ தென்று நின்னை எம்பி ரான்இவ் வஞ்சனேற்குய்த லாவ துன்க ணன்றி மற்றொ ருண்மை யின்மையின்பைத லாவ தென்று பாது காத்தி ரங்கு பாவியேற்கீத லாது நின்க ணொன்றும் வண்ண மில்லை யீசனே.
சொற்பிரிப்பு
எய்தல் ஆவது என்று நின்னை, எம்பிரான்? இவ் வஞ்சனேற்குஉய்தல் ஆவது உன்கண் அன்றி, மற்று ஒர் உண்மை இன்மையின்பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு; பாவியேற்குஈது அலாது, நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ; ஈசனே !
உரை

எம்பெருமானே! உன்னை அடைதல் என்பது எப்போது? இக்கள்வன் ஆகிய  எனக்கு உன்னிடமின்றி உய்யும் வழிக்கு வேறொரு மெய்ம்மை இல்லாமையால் ஆண்டவனே! சிறுவனென்று கருதி பாவியேனைக் காப்பாற்றி, இரங்கி அருளுக! நீ  இரங்கி அருள்கின்ற இச்செயலன்றி உன்பால் வந்து ஒன்றாகும் வழி வேறில்லை.

78

ஈச னேநீ அல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும்பேசி னேனொர் பேத மின்மை பேதை யேனென் எம்பிரான்நீச னேனை ஆண்டு கொண்ட நின்ம லாஓர் நின்னலால்தேச னேஓர் தேவ ருண்மை சிந்தி யாது சிந்தையே.
சொற்பிரிப்பு
ஈசனே! நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் ,பேசினேன் - ஒர்பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் !நீசனேனை ஆண்டு கொண்ட நின்மலா! ஒர் நின் அலால்,தேசனே! ஒர் தேவர் உண்மை சிந்தியாது, சிந்தையே
உரை

எமது தலைவனே! ஆண்டவனே! இகத்திலும் பரத்திலும் உன்னையன்றி யாதும் இல்லையென்பதும், நீ வேறுபாடின்றி யாண்டும் கலந்துள்ளாய் என்பதும் அறிவில்லாத யான் எடுத்துரைத்தேன். உரைத்தலாற் பயன் என்ன? புலையனேனை ஆட்கொண்ட மாசற்றவனே! ஒளியானவனே ! ஒப்பற்ற உன்னை அல்லாமல் பிறிதொரு கடவுள் உண்டென்பதை என் உள்ளம் நினையாது.

79

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில் ஐம்பு லன்களான்முந்தை யான காலம் நின்னை எய்தி டாத மூர்க்கனேன்வெந்தை யாவி ழுந்தி லேனென் உள்ளம் வெள்கி விண்டிலேன்எந்தை யாய நின்னை இன்னம் எய்த லுற்றி ருப்பனே.
சொற்பிரிப்பு
சிந்தை, செய்கை, கேள்வி, வாக்குச், சீர் இல் ஐம் புலன்களால்முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்வெந்து, ஐயா, விழுந்திலேன்; என் உள்ளம் வெள்கி விண்டிலேன்;எந்தை ஆய நின்னை , இன்னம் எய்தல் உற்று, இருப்பேனே.
உரை

நீ என்னை ஆட்கொண்ட முன்நாளில் மனம், வாக்கு, செயல், உலகக் கேள்வி,  நயமில்லாத ஐம்புலன்கள் முதலிய தடைகளாலே உன்னை அடைந்திடாத மூடன் யான். உடனேயே உடல் தீயிற் பொருந்தப் பெற்று இறந்து வீழ்ந்தேனில்லை. மனம் நாணி, நாண மிகுதியால் இறந்தேனில்லை. எங்கள் அப்பனாகிய உன்னை இன்னும் கூட வந்தடையாது,  அடையக் கருதி இங்கு இருப்பேன் ஆயினேன் (இது எவ்வளவு பரிதாபம்!)

80

இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை ஆண்டு கொண்ட நின்னதாட்கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க லந்து போகவும்நெருப்பு முண்டு யானு முண்டி ருந்த துண்ட தாயினும்விருப்பு முண்டு நின்கண் என்கண் என்ப தென்ன விச்சையே.
சொற்பிரிப்பு
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்ன தாள்கருப்பு மட்டு வாய் மடுத்து, எனைக் கலந்து போகவும்நெருப்பும் உண்டு; யானும் உண்டு இருந்தது, உண்டது-ஆயினும்,விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது, என்ன விச்சையே!
உரை

இரும்பு போலக் கடுமையான மனமுடைய கள்வனேனை ஆட்கொண்டருளினாய். நின் திருவடியில் எழும் கரும்புத்தேன் என்னை விழுங்கி உடன் கலந்து செல்லவும் (உடல் விடுவதற்கு) நெருப்பிருந்தது. அடியேனும் உணவு கொண்டு இங்கு இருந்தது உண்டு; எனினும் உடலை நீத்து  உன்னை அடையாத நான் உன் மீது அன்பும் உண்டென்று கூறுவது என் அறியாமையே.

81

விச்சுக் கேடு பொய்க் காகா தென்றிங் கெனைவைத்தாய்இச்சைக் கானா ரெல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார்அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆரூர்எம்பிச்சைத் தேவா என்னான் செய்கேன் பேசாயே.
சொற்பிரிப்பு
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று, இங்கு எனை வைத்தாய் ;இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து, உன்தாள் சேர்ந்தார் ;அச்சத்தாலே, ஆழ்ந்திடுகின்றேன்; ஆரூர் எம்பிச்சைத்தேவா, என் நான் செய்கேன்? பேசாயே.
உரை

பொய் என்னும் வித்து இவ்வுலகில் கெட்டொழிதல் கூடாது என்பதற்காக , பொய்யன் ஆகிய என்னை இவ்வுலகில் இருத்தினாய். உன் விருப்பத்துக்கு ஒத்தவர்கள்  போய் உன் திருவடிப்பேறு பெற்றார்கள். திருவாரூரில் வீற்றிருக்கும் எமது ஐயங்கொள்  பிரானே! நான் பயத்தால் அழுந்துகின்றேன். நான் உய்வதற்கு யாது செய்வேன், கூறி அருள்வாயாக!

82

பேசப் பட்டேன் நின்னடி யாரில் திருநீறேபூசப் பட்டேன் பூதல ரால்உன் அடியானென்றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால்ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன் அடியேனே.
சொற்பிரிப்பு
பேசப்பட்டேன் நின் அடியாரில்; திருநீறேபூசப்பட்டேன்; பூதலரால், உன் அடியான் என்றுஏசப்பட்டேன்; இனிப் படுகின்றது அமை யாதால்ஆசைப்பட்டேன்; ஆட்பட்டேன்; உன் அடியேனே
உரை

உனது அடியாருள் ஒருவனாகப் பெரியோரால் எடுத்துரைக்கப் பெற்றேன். திருநீறு பூசுதலைப் பொருந்தினேன். உலகரால் என் அமைச்சு நிலைமாறி உன் அடியான் என்று  இகழப்பட்டேன். இனி இவ்வுலகில் பொருந்தி இருத்தல் கூடாது என்று வீடு அடைய ஆசைப்பட்டேன். உனக்கு அடிமையானேன். உனக்கே ஆட்பட்டவன் ஆனேன். உன் அடியேனை நீ காத்திட வேண்டும்.

83

அடியேன் அல்லேன்கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை கொல்லோஅடியா ரானா ரெல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார்செடிசேர் உடலம் இதுநீக்க மாட்டேன் எங்கள் சிவலோகாகடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே.
சொற்பிரிப்பு
அடியேன் அல்லேன்-கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை-கொல்லோ?அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன்தாள் சேர்ந்தார்;செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா !கடியேன் உன்னைக், கண் ஆரக் காணும் ஆறு, காணேனே.
உரை

நான் உன் அடியான் அல்லனோ? நீ, தானே வந்து என்னை ஆட்கொள்ள  வில்லையோ? உன் அடியார்கள் யாவரும் உன் திருவடியைச் சேர்ந்து விட்டார்களே? சிவலோக முதல்வனே! தீவினை பொருந்திய இவ்வுடலை நீக்க மாட்டேன்; கடினமான  நெஞ்சுடையேன்; உன்னை நேரே கண் குளிரப் பார்க்கும் வழியை அறிய மாட்டேன்.

84

காணு மாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும்பாணே பேசி என்தன்னைப் படுத்த தென்ன பரஞ்சோதிஆணே பெண்ணே ஆரமுதே அத்தாசெத்தே போயினேன்ஏணா ணில்லா நாயினேன் என்கொண் டெழுகேன் எம்மானே.
சொற்பிரிப்பு
காணும் ஆறு காணேன்; உன்னை அந்நாள் கண்டேனும்பாணே பேசி, என்-தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி !ஆணே பெண்ணே, ஆர் அமுதே, அத்தா செத்தே போயினேன்ஏண் நாண் இல்லா நாயினேன், என்கொண்டு எழுகேன், எம்மானே?
உரை

எங்கள் பெரியோனே! அறியும் வழியாக உன்னை அறிய மாட்டேன். என்னை  ஆட்கொண்ட நாளில் உன்னை நான் காணப் பெற்றும் பாழானவற்றைப் பேச  என்னை ஆட்படுத்தியது எதுவோ? மேலான ஒளிப் பிழம்பே! ஆணாகவும் பெண்ணாகவுமான தெவிட்டாத அமுதமே! அப்பனே ! நான் பயனற்று ஒழிந்தேன். வலியும்  மானமுமில்லா நாயனையேன் எதனைத் துணையாகக் கொண்டு மேற்செல்வேன்?

85

மானேர் நோக்கி யுமையாள் பங்கா மறையீ றறியா மறையோனேதேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழை பொறுக்குங்கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுகப்போனா ரடியார் யானும் பொய்யும்புறமே போந்தோமே.
சொற்பிரிப்பு
மான்நேர் நோக்கி உடையாள் பங்கா, மறைஈறு அறியா மறையோனேதேனே, அமுதே, சிந்தைக்கு அரியாய், சிறியேன் பிழை பொறுக்கும்கோனே, சிறிதே கொடுமை பறைந்தேன்; சிவ மாநகர் குறுகப்போனார் அடியார்; யானும், பொய்யும், புறமே போந்தோமே.
உரை

மான் போலும் விழியுடைய, எம்மை உடையாளாகிய அருட்சத்தி பாகனே ! வேத  முடிவும், அறியவொண்ணா இரகசியப் பொருளாவானே! தேன் போல இனியவனே! அமுதம் போல் சாவா மருந்தே! மனத்தால் கிட்டுவதற்கு அரியவனே! சிறுமை உடையேனது  குற்றத்தை நின் பெருமையால் பொறுத்தருளும் அரசனே! அடியேன் ஒரு சிறிது கொடியவற்றைக் கூறினேன். அடியார் சிவபெரும்-புவனமடையச் சென்றனர். அடியேனும் பொய்யும் அவர்க்குப் புறம்பாக உலகில் தங்கினோம்.

86

புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்யன்புபெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன்யான்அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன் றறியாதார்சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே.
சொற்பிரிப்பு
புறமே போந்தோம் பொய்யும், யானும்; மெய் அன்புபெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் ;சிறவே செய்து வழிவந்து, சிவனே ! நின் தாள் சேர்ந்தாரே.
உரை

நிலையா உடம்பும் யானும் நினக்குப் புறம்பே போயினோம். உண்மையன்பு  பெறுதற்கே உரியன் அல்லா முறைமையை யான் அடைந்தேன். முற்றிலும் உன்னை அடைந்த அன்பர் உன்னைத் தவிர வேறொன்றையும் கருத்தில் கொள்ளாமல், சிறப்பாக  வீட்டுக்குரியதைச் செய்து, செந்நெறியில் சென்று, சிவபெருமானே உன்னடி அடைந்தனர்.

87

தாராய் உடையாய் அடியேற் குன்தா ளிணையன்புபேரா உலகம் புக்கா ரடியார் புறமே போந்தேன்யான்ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங் குன்தா ளிணையன்புக்காரா யடியேன் அயலே மயல்கொண் டழுகேனே.
சொற்பிரிப்பு
தாராய், உடையாய் ! அடியேற்கு உன் தாள்-இணை அன்பு:பேரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன்யான் ;ஊர் ஆ மிலைக்கக், குருட்டு ஆ மிலைத்தாங்கு, உன் தாள்-இணை அன்புக்குஆரா அடியேன், அயலே மயல்கொண்டு அழுகேனே.
உரை

என்னை உடையவனே! அடியேனுக்கு உனது இரண்டு திருவடிகளிலும் செய்ய வேண்டிய அன்பைத் தருவாயாக! மீளாத உலகமாகிய வீட்டினுள் உன் மெய்யடியார் போய்ப் புகுந்தனர். யான் வெளியே போய் ஒழிந்தேன். ஊரிலுள்ள நல்ல பசு நற்புலங்களில் புல் மேய்ந்திட அதனோடு சென்ற குருட்டுப் பசுவும் மேய்ந்தது. அடியார்கள் உன்னை அடைந்துவிட, அன்புக் கண் இல்லானாகிய யான், இனி யார் பக்கம் எப்படிச் சென்று பயனடைதல் கூடும்?

88

அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்தமெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டுதொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதேபழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே.
சொற்பிரிப்பு
அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்தமெழுகே அன்னார், மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டுதொழுதே, உன்னைத் தொடர்ந்தா ரோடும் தொடராதேபழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே?
உரை

உன்னிடத்தே அன்பு மயமான உள்ளத்தோடு அழுது தொழ மாட்டேன். தீயிடைப்பட்ட மெழுகுபோன்ற உள்ளத்தராய் அடியார், மின்னொளி போலும் அழகிய நின் திருவடிகளைக் கண்டு வணங்கிப் பின் தொடர்ந்தனர். அவரோடு தொடர்ந்து செல்லாது  வீணே பிறவியெடுத்த யான் இனி எத்துணை கொண்டு உன்னை வணங்குவேன்?

89

பணிவார் பிணிதீர்த் தருளிப் பழைய அடியார்க்குன்அணியார் பாதங் கொடுத்தி அதுவும் அரிதென்றால்திணியார் மூங்கி லனையேன் வினையைப் பொடியாக்கித்தணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர் மெய்யானே.
சொற்பிரிப்பு
பணிவார் பிணி தீர்த்தருளிப், பழைய அடியார்க்கு உன்அணி ஆர் பாதம் கொடுத்தி: அதுவும் அரிது என்றால் ,திணி ஆர் மூங்கில் அனையேன், வினையைப் பொடி ஆக்கித்தணி ஆர் பாதம், வந்து, ஒல்லை தாராய்; பொய்தீர் மெய்யானே!
உரை

பொய்ப்பற்றை ஒழிக்கின்ற மெய்ப்பொருள் ஆனவனே! வழிபடுவாரது நோயை  அகற்றி அருளி, பழமை மிக்க அடியாருக்கு அழகு நிறை நின் திருவடிகளை அளித்து அருள்வாய்.  எனக்கு அது செய்தல் அரிதாயின், வலிய மூங்கிலைப் போல உருக்கமற்ற என் வினையை  நாசமாக்கிப் பின், நின் தண்ணருள் பாதங்களை விரைவாக வலிய நீயே வந்து தர வேண்டும்.

90

யானேபொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும்பொய்ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமேதேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே.
சொற்பிரிப்பு
யானே பொய்; என் நெஞ்சும் பொய் ; என் அன்பும் பொய் ;ஆனால், வினையேன் அழுதால், உன்னைப் பெறலாமே ?தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும்மானே, அருளாய் அடியேன் உனைவந்து உறுமாறே
உரை

அடியார்களுள் யான் ஒருவனே பொய் மயமானவன். என் மனமும் வஞ்சகமானதே. என் அன்பும் களங்கமுற்றது. ஆனால் தீவினையேன் பிழை உணர்ந்து வருந்தி அழுவேனாயின் உன்னை அடையலாமே. தேனே! அமுதே! கரும்புச் சாறே! இத்துணை இனிமை பயக்கும் பெரியோனே! அடியேன் உனைக் கலக்குமாறு அருள் புரிவாயாக!

91

மாறி லாதமாக் கருணை வெள்ளமே வந்து முந்திநின் மலர்கொள் தாளிணைவேறி லாப்பதப் பரிசு பெற்றநின் மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்ஈறி லாதநீ எளியை யாகிவந் தொளிசெய் மானுட மாக நோக்கியுங்கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.
சொற்பிரிப்பு
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே!வந்து முந்தி நின்மலர் கொள் தாள்-இணைவேறு இலாப் பதப் பரிசுபெற்ற, நின் மெய்ம்மைஅன்பர், உன்மெய்ம்மை மேவினார்ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய்மானுடம் ஆக, நோக்கியும்கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன்; கடையன்ஆயினேன் பட்டகீழ்மையே.
உரை

என்றும் மாற்றமில்லாத பேரருட் கடலே! எனக்கு முன்பாகவே நின்பாற் சென்று  பூவின் தன்மையைக் கொண்ட நினது திருவடி இரண்டையும் விட்டு நீங்காத நிலையாகிய சிறப்பைப் பெற்ற நின் உண்மை அன்பர்கள் உன் மெய்த்தன்மை அடைந்தார்கள் . முடிவில்லாத பெருந்தகையாகிய நீ எளிவந்தருளி அருளொளி வீசும் மனித வடிவத்தோடு  திருக்கண் பார்வை நல்கியும், பிளவு பட்டுருகாத திண்ணிய மனமுடைய நாயினேன், கீழ்ப்பட்டவன் ஆனேன். நான் பட்ட இழிவை என்ன என்பது

92

மையி லங்குநற் கண்ணி பங்கனே வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்கையி லங்குபொற் கிண்ணம் என்றலால் அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார்பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ போவ தோசொலாய் பொருத்த மாவதே.
சொற்பிரிப்பு
மை இலங்கு நல் கண்ணி பங்கனே !வந்து எனைப் பணிகொண்டபின், மழக்கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்,அரியை என்று உனைக் கருது கின்றிலேன்;மெய் இலங்கு வெள்-நீற்று மேனியாய், மெய்ம்மைஅன்பர் உன் மெய்ம்மை மேவினார் ;பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு. நீ போவதோ?சொலாய், பொருத்தம் ஆவதே?
உரை

தீட்டிய மை விளங்கும் அழகிய கண்ணுடையாள் பாகனே! நீ குருவாய் எழுந்தருளி வந்து என்னைத் தொண்டனாக்கினாய். மெல்லிய கையில் விளங்கும் பொன்வட்டில் போல உன்னை எளியாய் என்று கருதினேன். எய்துதற்கரியவன் என்று எண்ணவில்லை. திருமேனியில் விளங்கும் வெண்மையான திருநீற்றின் ஒளியுடையாய்! உன் மெய்யன்பர்கள் உண்மை நிலையை அடைந்தனர். பொய்யனான என்னை இந்நிலவுலகில் கைவிட்டுப் போதல் பொருத்தமா என்று சொல்லியருளுக!

93

பொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையேன் போத என்றெனைப் புரிந்து நோக்கவும்வருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன் மாண்டி லேன்மலர்க் கமல பாதனேஅரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந் தருளி இங்கெனைஇருத்தி னாய்முறை யோஎ னெம்பிரான் வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே.
சொற்பிரிப்பு
பொருத்தம் இன்மையேன்; பொய்ம்மை உண்மையேன்;'போத' என்று எனைப் புரிந்து நோக்கவும்வருத்தம் இன்மையேன்; வஞ்சம் உண்மையேன்;மாண்டிலேன்; மலர்க் கமல பாதனே,அரத்த மேனியாய், அருள் செய் அன்பரும், நீயும்அங்கு எழுந்தருளி, இங்கு எனைஇருத்தினாய்; முறையோ? என் எம்பிரான்வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே?
உரை

உன் திருவருளைப் பெறுதற்குத் தகுதியில்லாதேன். நிலையாதவற்றில் பற்றுடையேன். அத்தகைய என்னை வருகவென்று அழைத்துத் திருவருட் பார்வை நல்கவும் உன்னொடு செல்லுதற்குரிய கவலையில்லாதிருந்தேன். உலகில் இருக்கும் கள்ள  எண்ணமுடையேன், உன்னை அடையும் பொருட்டு இறந்தேனில்லை . தாமரை மலர் போன்று திருவடி உடையாய் ! சிவந்த திரு வடிவமுடையாய்! அருள் செய்யப் பெற்ற உன் அடியாரும் நீயும் அவ்வுலகில் எழுந்தருளி இவ்வுலகில் என்னை அமர்த்தி விட்டாய்! இது நியாயமாகுமோ என் தலைவனே! வீணான எனது ஊழ்வினைக்கு ஒரு முடிவு காணவில்லையே?

94

இல்லை நின்கழற் கன்ப தென்கணே ஏலம் ஏலுநற் குழலி பங்கனேகல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண் டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான் ஏது கொண்டுநான் ஏது செய்யினும்வல்லை யேயெனக் கின்னும் உன்கழல் காட்டி மீட்கவும் மறுவில் வானனே.
சொற்பிரிப்பு
இல்லை நின் கழற்கு அன்பு-அது,என்-கணே; ஏலம்ஏலும் நல் குழலி பங்கனே!கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டுஎன்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் ;எல்லை இல்லை நின் கருணை; எம்பிரான்! ஏதுகொண்டு, நான் ஏது செய்யினும்வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டிமீட்கவும், மறு இல் வானனே?
உரை

குற்றமற்ற சிதாகாசத்தில் உள்ளவனே! மயிர்ச்சாந்தணிந்த அழகிய கூந்தலாள்  பாகனே! உன் திருவடிக்குச் சிறப்பாய அன்பு என்னிடம் இல்லை. கல்லை மெல்லிய  பழமாக்கும் வித்தையைக் கைக்கொண்டு என் கல் நெஞ்சம் நெகிழ்வித்து உன் திருவடிக்கு என்னை அன்பனாக்கினை. எங்கள் பெருமானே! நினது திருவருளுக்கோர் அளவில்லை. நான் எதனைக் கருவியாகக் கொண்டு எத்தீயசெயல் செய்தாலும், மீட்டும் உன் திருவடிகளை  எனக்குக் காட்டி, மீள ஆட்கொள்ளும் ஆற்றலுடையவன் அல்லவா?

95

வான நாடரும் அறியொ ணாதநீ மறையி லீறுமுன் தொடரொ ணாதநீஏனை நாடருந் தெரியொ ணாதநீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவாஊனை நாடகம் ஆடு வித்தவா உருகி நான்உனைப் பருக வைத்தவாஞான நாடகம் ஆடு வித்தவா நைய வையகத் துடைய விச்சையே.
சொற்பிரிப்பு
வான நாடரும் அறி ஒணாத நீ, மறையில்ஈறும் முன்தொடர் ஒணாத நீ,ஏனை நாடரும் தெரி ஒணாத நீ, என்னைஇன்னிதாய் ஆண்டு கொண்டவா,ஊனை நாடகம் ஆடுவித்தவா, உருகிநான் உனைப் பருக வைத்தவாஞான நாடகம் ஆடுவித்தவா நையவையகத்துடைய விச்சையே
உரை

விண்ணுலகோரும் அறியக் கூடாதவன் நீ ! மந்திரங்களில் முடிவான முதுமொழியும்  முன்னே தொடர்ந்து பற்ற முடியாதவன் நீயே! விண் தவிர பிறபுவனங்களில் உள்ளவரும் அறிய முடியாதவன் நீயே! அடியேனை எளிதாக வந்து ஆட்கொண்டவாறு உடம்பைப் புளகம் கொண்டு கூத்தாடச் செய்த வகையும், நான் உள்ளம் உருகி உன்னை நுகரும் படி ஏற்படுத்தியவாறும், உலகப் பற்று சிதைந்து ஒழிய ஞானக் கூத்து இயற்றுவித்தவாறும் நீயே அறிவாய்!

96

விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும் புலைய னேனைஉன் கோயில் வாயிலிற்பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக் குரிய னாக்கினாய் தாம்வ ளர்த்ததோர்நச்சு மாமர மாயி னுங்கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே.
சொற்பிரிப்பு
விச்சு அது இன்றியே, விளைவு செய்குவாய் ;விண்ணும், மண்ணகம் முழுதும், யாவையும்வைச்சு வாங்குவாய், வஞ்சகப் பெரும்புலையனேனை, உன் கோயில் வாயிலில்பிச்சன் ஆக்கினாய்; பெரிய அன்பருக்கு உரியன்ஆக்கினாய்; தாம் வளர்த்தது, ஓர்நச்சுமாமரம் ஆயினும், கொலார்: நானும்அங்ஙனே உடைய நாதனே!
உரை

வானுலகு, நிலவுலகு இன்னம் பிற எல்லாவற்றையும் நீ வித்தின்றியே தோற்றுவித்தாய். அவற்றைக் காத்து, ஒடுக்குவாய். களங்கமுற்ற, கீழ்ப்பட்ட என்னை நின்  திருக்கோயிலின் வாசலில் இருக்கும் பித்துடையனாக்கினை. பேரன்பர்க்கு அடியனாக்கினை. மக்கள் தாம் வளர்த்த மரம் எட்டி மரமானாலும் அதனை வெட்டி எறிய  மாட்டார்கள். அவ்வாறே யானும் ஆவேன். என்னை அடிமைகொண்ட தலைவனே! ஆதலால் என்னை அகற்றி விடாதே !

97

உடைய நாதனே போற்றி நின்னலால் பற்று மற்றெனக் காவ தொன்றினிஉடைய னோபணி போற்றி உம்பரார் தம்ப ராபரா போற்றி யாரினுங்கடைய னாயினேன் போற்றி என்பெருங் கருணை யாளனே போற்றி என்னைநின்அடிய னாக்கினாய் போற்றி ஆதியும் அந்த மாயினாய் போற்றி அப்பனே.
சொற்பிரிப்பு
உடைய நாதனே, போற்றி ! நின் அலால்பற்று, மற்று எனக்கு ஆவது ஒன்று இனிஉடையனோ? பணி ; போற்றி! உம்பரார்தம்பரா - பரா போற்றி! யாரினும்கடையன் ஆயினேன் போற்றி! என் பெரும் கருணையாளனே,போற்றி! என்னை, நின்அடியன் ஆக்கினாய் போற்றி !ஆதியும் அந்தம்ஆயினாய், போற்றி ! அப்பனே!
உரை

என்னை அடிமையாக உடைய தலைவனே! வணக்கம். உன்னை அல்லாமல் இனி வேறு ஆதரவு உடையேனோ? சொல்லுவாயாக! வானவர்களின் மேலோர்க்கு மேலோனே ! வணக்கம். எல்லோரினும் கீழ்ப்பட்டவன் ஆயினேன். காத்திடுக! என் பேரருளாளனே!  காத்திடுக, முதலும் முடிவுமானவனே அப்பனே! என்னை நினது அடியனாக்கினாய் காத்திடுக!

98

அப்ப னேயெனக் கமுத னேஆ னந்த னேஅகம் நெகஅள் ளூறுதேன்ஒப்ப னேஉனக் குரிய அன்பரில் உரிய னாய்உனைப் பருக நின்றதோர்துப்ப னேசுடர் முடிய னேதுணை யாள னேதொழும் பாள ரெய்ப்பினில்வைப்ப னேஎனை வைப்ப தோசொலாய் நைய வையகத் தெங்கள் மன்னனே.
சொற்பிரிப்பு
அப்பனே, எனக்கு அமுதனேஆனந்தனே, அகம் நெக அள்ளூறு தேன்ஒப்பனே, உனக்கு உரிய அன்பரில்உரியனாய், உனைப்பருக நின்றது ஓர்துப்பனே சுடர் முடியனே, துணையாளனே,தொழும்பாளர் எய்ப்பினில்வைப்பனே, எனை வைப்பதோ, சொலாய் நையவையகத்து, எங்கள் மன்னனே?
உரை

தந்தையே! எனக்குச் சாவா மருந்தானவனே! இன்பனே! உள்ளம் உருகும்படியாக நிறையச் சுரக்கின்ற தேன் போல்பவனே! உனக்கு உரிமையுடைய அடியாருள் யானும்  உரிமை உடையவனாய் உன்னை நுகரும்படி அருள் செய்து நின்றதொரு வல்லாளனே!  சோதி மகுடத்தனே! உதவியாளனே! தொண்டர்கள் தளர்வுற்று இருக்கும் பொழுது உதவும்  செல்வமே! எங்கள் வேந்தனே! உலகத்தில் துன்பப்படும் படி என்னை வைப்பது நீதியோ? சொல்லியருளுக

99

மன்ன எம்பிரான் வருக என்னெனை மாலும் நான்முகத் தொருவன் யாரினும்முன்ன எம்பிரான் வருக என்னெனை முழுதும் யாவையும் இறுதி யுற்றநாள்பின்ன எம்பிரான் வருக என்னெனைப் பெய்க ழற்கண்அன் பாயென் நாவினாற்பன்ன எம்பிரான் வருக என்னெனைப் பாவ நாசநின் சீர்கள் பாடவே.
சொற்பிரிப்பு
மன்ன எம்பிரான். 'வருக' என் எனை;மாலும், நான் முகத்து ஒருவன், யாரினும்முன்ன எம்பிரான், 'வருக' என் எனை;முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்பின்ன எம்பிரான், 'வருக' என் எனைப்பெய் கழற் கண் அன்பாய், என் நாவினால்பன்ன எம்பிரான், 'வருக' என் எனைப்பாவநாச; நின்சீர்கள் பாடவே
உரை

அரசனாகிய எம் தலைவனே! என்னை வருக என்று அழைப்பாயாக. அரியும் அயனுமாகிய தேவர் முதலிய எல்லோரினும் முற்பட்டவனே! என்னை வருக என்று  அழைத்தருள்க. எல்லாம் ஒடுங்கிய காலத்தில் ஒடுங்காது பிற்பட்டவனே! என்னை வருக  என்றழைத்திடுக. உனது செறிந்த கழலுடைய திருவடியின் கண் அன்பாய் எனது நாவினால் துதிக்கப் படுபவனே! பாவத்தை நாசம் செய்பவனே! நின்புகழை நான் பாடும் பொருட்டு என்னை வருக என்று அழைத்திடுக.

100

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்காட வேண்டும்நான் போற்றி அம்பலத் தாடு நின்கழற் போது நாயினேன்கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக் கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்வீட வேண்டும்நான் போற்றி வீடுதந் தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.
சொற்பிரிப்பு
பாடவேண்டும் நான் போற்றி! நின்னையே பாடிநைந்து - நைந்து உருகி, நெக்கு - நெக்குஆடவேண்டும் நான்; போற்றி! அம்பலத்துஆடும் நின் கழல்போது நாயினேன்கூடவேண்டும்நான்; போற்றி! இப்புழுக்கூடு நீக்கு எனைப்; போற்றி !பொய் எலாம்வீட வேண்டும் நான்; போற்றி! வீடுதந்து அருளு ;போற்றி! நின்மெய்யர் மெய்யனே
உரை

உன்னுடைய மெய்யன்பர்க்கு மெய்யானவனே! நின்னையே நான் வணங்கிப் பாடவேண்டும். பாடி, மனம் வருந்திக் கசிந்து, கனிந்து கனிந்து ஆனந்தக் கூத்தாட வேண்டும். நான் வணங்கி  நீ சிற்றம்பலத்தில் ஆடியருளும் போது, உன்னுடைய திருவடிக் கமலங்களை நான் அடைய வேண்டும். இந்தப் புழுக் கூடாகிய உடம்பை நீ தொலைத்து விட வேண்டும். உனக்கு வணக்கம். உலகப்பற்று யாவற்றையும் நான் கைவிட்டொழிக்கும்படி நீ செய்தருள  வேண்டும். உனக்கு வணக்கம். வீட்டின்பத்தைக் கொடுத்தருள வேண்டும். உனக்கு வணக்கம்.