1
சொற்பிரிப்பு
உரை
எம்பிரான் சிவபெருமானைப் படைப்புக் கடவுள் முதலாக உள்ள தேவர்கள் எல்லாம் வழிபட்டுத் தொழுகின்றனர். வாமன அவதாரத்தில் தனது இரண்டடிகளால் மூவுலகும் அளந்தான் திருமால். அதனால் நான்கு திசைகளிலும் உள்ள முனிவர்கள், ஒளி வீசும் திருமுடியினை உடைய பெருமை மிக்க திருமாலைத் தம் ஐம்புலன்களும் மகிழ்வடையும்படி வணங்கினர். இறைவன் அனல் பிழம்பாய் நின்ற அக்காலத்தில், திருமால் ஈசன் திருமேனியின் அடியின் முடிவைக் காணும் விருப்பம் உடையவன் ஆனான். எனவே வலிமை மிகுந்த பன்றி வடிவம் எடுத்து அயனுக்கு முற்பட்டு கீழ் ஏழு உலகினும் புகுந்தான் . ஆங்கு ஊடுருவித் தோண்டிப் பின்பு கீழே செல்ல இயலாது இளைப்படைந்து நின்றான். எம் பெருமானை நோக்கி உலக முடிவுக்கு முதல்வனாய் உள்ளவனே உனக்கே வெற்றி! வெற்றி ! என்று துதித்து வணங்கியும் காணப் பெறாத திருவடிகள், வழிபடுவதற்கு எளிதாக நெடுங்கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தில் வெளிப்படுகிறது. பெரிய யானை முதல் சிறிய எறும்பு ஈறாக, பிறவிகள் எத்தனையோ வடிவாக உள்ளன. இவ்வுயிர்கள் குற்றம் இல்லாத பொருந்திய கருப்பைகளில் நிகழக்கூடிய கெடுதிகளுக்கு இறைவனருளால் தப்புகின்றன. மனிதப் பிறவியில் தாயின் கருப்பையில் நிகழும் குறைவிலாத புழுக்களின் போரில் சிதைவுபடாது தப்புகிறது. தாயின் கருப்பையில் ஒரு மாதம் ஆனவுடன் கரு தான்றிக்காய் அளவு ஆகிறது. கருப்பையில் பொருந்தி ஒன்றுபடாது பிளவுபடுதலாகிய இருமையிலிருந்து தப்புகிறது. இறை அருளால் இரண்டாவது மாதத்தில் பிற புழுக்களின் இடர்ப்பாட்டு மிகுதியால் உருவெடாமையில் இருந்து பிழைக்கிறது .மூன்றாம் மாதத்தில் கரு வளர்தற்கென்று பெருகும் கொழுப்பான நீர் மிகுதியிலிருந்து தப்புகிறது. கரு நீரினால் நான்காம் மாதம் கருப்பையில் இருள் மிருந்த காலை அந்த இருளிலிருந்து தப்புகிறது. ஐந்தாம் மாதம் கருப்பை நீர் மிகுதியால், இருள் மிகுதியால் சாவதிலிருந்து தப்புகிறது. ஆறாம் மாதத்தில் கொலைக்குக் காரணமாகிய பழிச்சொல்லுக்குத் தப்புகிறது. ஏழாம் மாதம் கருப்பை தாங்காமல் காயாய்ப் பூமியில் விழுவதிலிருந்து தப்புகிறது. எட்டாவது மாதம் கருப்பையில் உண்டாகும் வளர்ச்சி நெருக்கத்தினின்றும் தப்புகிறது. ஒன்பதாம் மாதம் வெளிப்பட இயலாது வரும் துன்பத்தில் இருந்தும் தப்புகிறது. பத்தாவது மாதம் தாயும் தானும் வெளிப்படுவதற்குப் படும் துயரக் கடலிலிருந்து தப்பி, நிலவுலகில் பிறந்து வளருகிறது. நெருக்கியும் அழுத்தியும் துன்புறுத்தலாகிய எத்தனையோ பல இடையூறுகளில் இருந்தும் பிழைக்கிறது. காலையில் மலம் கழித்தல், நடுப்பகலில் கடும் பசி, நள்ளிரவில் துயில் ஆகியவற்றின் சார்பான எல்லா துன்பங்களிலிருந்தும் காக்கப்படுகிறது. ஊர்களுக்குப் போக்கு வரவு ஆகியவற்றால் வரும் இடையூறுகளினின்றும் தப்புகிறது. பெண்கள் கருதிறமுடைய கூந்தலையும் சிவந்த வாயினையும் வெள்ளிய பல்லினையும் கொண்டு விளங்குகின்றனர். இப்பெண்களின் நகிலானது கார்கால மயில் கண்டு அடங்குதற்கு ஏதுவாய் மென்மையுடையதாக உள்ளது. அவை ஒன்றையொன்று நெருங்கி உள்ளே திரட்சி எய்தி கச்சு அற்று விழும்படி மேலெழுந்து உள்ளன. ஒளி வீசி, மற்ற அங்கத்திலும் அதிகமாக முற்பட்டுப் பருத்து இருப்பதால் பாரந்தாங்காமல் இடைமெலிந்து வருந்தும்படி எழுச்சி பெற்று உள்ளன. பக்கத்தில் விரிந்து ஈர்க்கு (தென்னை இலையின் மெல்லிய நரம்பு) கூட இடையில் போகக் கூடாதபடி இளமை நயமிக்க நகிலையுடைய இந்தப் பெண்களுடைய வேல் போன்ற கூரிய கண்களால் கவரப்படும் கொள்ளைக்கும் தப்புகிறது. மயக்கம் கொண்ட உயிர், உலக வாழ்க்கையாகிய நீர்ப்பரப்பில் நின்று , அதனைக் கலக்கும் மதயானை போன்று உள்ளத்தில் எழும் பேராசையினின்றும் தப்புகிறது. கல்வி எனப்படும் பலவாகிய கடல்களிலிருந்தும் உயிர் தப்பிப் பிழைக்கிறது. செல்வம் என்ற துன்பத்தில் இருந்தும், வறுமை எனும் நஞ்சிலிருந்தும் சிறு எல்லைகளையுடைய பல்வேறு முயற்சிகளிலும் தப்பி வருகிறது. கடவுள் ஒருவன் உளன் என்ற நினைவு ஏற்பட்டு வெறுப்பற்றதொரு பெரிய பொருளை உயிர் நாடுகிறது. மயக்கம் தரவல்ல சட உலக ஆற்றல்கள் ஆறு கோடி என கணக்கிட்டுக் கூறப்படுகின்றன. அவை பல்வேறு திறப்பட்ட சூழ்ச்சிகளைக் காட்டத் தொடங்கி விட்டன. உண்மையான நண்பர்களும், பக்தர்களும் கடவுளை நாடாதிருக்கும்படி நாத்திகத்தைப் போதித்து அதனால் நாவில் தழும்பேறப் பெற்றனர் உறவினர் என்று சொல்லப்படுபவர்கள் பழமையான பற்றுக் காரணமாகக் கூட்டமிட்டுப் பதைபதைத்து ஒவ்வொரு பிறவியிலும் கடவுளை நாடச் செல்லாது தடுக்கிறார்கள். நோன்பிருத்தலே மேலான சாதனம் என்பதை மெய்ப்பித்தற் பொருட்டுக் கிரியை நூல் உணர்ந்த வேதியரும் நூல் பிரமாணங்களைக் காட்டினர். வெவ்வேறு சமய நூல் வல்லவர், தம்தம் சமயங்களில் முடிந்த உண்மை நிரம்பியிருப்பதாக முழங்கி எதிர்த்தனர். திண்ணிய மாயா வாதம் என்று சொல்லப்படும் மதம், வேகம் மிக்க சுழற் காற்றுப் போல சுழன்று வீசிய முழக்கமிடுகிறது. உலகாயதம் என்னும் மினுக்கங் காட்டும் வலிய கலை வேறுபாடுகள் உடைய கொடிய நஞ்சு வந்து சேர்ந்து, அதிலுள்ள எத்தனையோ வஞ்சனைகள் தம்மை வந்து சுற்றித் தொடர்ந்தன. அவ்வாறு தொடர்ந்தாலும் சிவபெருமானுடைய அடியார்களோ அவற்றால் நெறி பிறழாது நிற்கின்றனர். தாம் கொண்ட கடவுள் கொள்கையைக் கைவிட்டு விடாது நின்றனர். இறைவனை வழிபட்டு நெருப்பினில் பட்ட மெழுகு போல உள்ளம் உருகி குறை உணர்ந்து அழுது தொழுதனர். உடல் நடுக்கமுற, ஆனந்தக் கூத்தாடினர். ஓலமிட்டும் பாடல்களால் வாழ்த்தியும் உடம்பால் வணங்கியும் வழிபட்டனர். இடுக்கியும், மூடனும் தாம் பிடித்ததை நெகிழ விடாமை போலவே உறுதி கொண்டு பயன் கருதாத இடையறாத கடவுட் பக்தியில் திளைத்து நின்றனர். பசிய மரத்தில் அறைந்த ஆணி திண்மையாகப் பற்றி நிற்பது போல உறைத்து நின்றனர். அதே சமயம் உருக்கம் மிகுந்து, கடல் அலை போல அலைவுற்று மனம் வாடி அதற்கேற்ப உடல் அசைவுற்று இருந்தனர். இது கண்டு, உலகர் தம்மைப் பேயரென்று இகழ்ந்து சிரிப்பதைப் பொருட்படுத்தாது வெட்கம் என்பதைத் தவிர்த்து, நாட்டிலுள்ளோர் குறைச் சொற்களை அணியாக ஏற்றுக் கொண்டனர். அவற்றால் மனம் கோணாது யாம் எல்லாவற்றிலும் வல்லேம் என்னும் திறமை உணர்ச்சி இழந்து, சிவஞானம் பெறும் பேரவா மேலிடப் பெற்றனர் . அடைதற்குரிய வீடு பேற்றினையே மேலான வியப்பாகக் கருதினர். கன்றினையுடைய பசுவானது கன்றினைக் காணாதபோது மனம் அலறிப் பதைத்து நிற்கும். அதுபோல அடியார்களும் அலறி நடுங்கி, பிற தெய்வங்களைச் சொப்பனத்திலும் நினையாது முழு முதற் கடவுளை வழுத்தினர். எட்டுதற்கரிய மேலாம் வீட்டினையுடைய ஒரு பரம்பொருள் குருமூர்த்தியாகி இந்நிலவுலகில் தோன்றி வந்தது. அவ்வாறு ஆட்கொண்டருளிய திருவருளின் பெருந்தன்மையை எளிமையாக எண்ணி அசட்டை செய்யாமல் அடியவர்கள் மதித்துப் போற்றி வணங்கினர். குருமுதல்வனின் திருவடிகள் இரண்டையும், உருவை விட்டகலாத நிழல் போல், முன் வணங்கியும் பின்தொடர்ந்தும் பிரிவின்றி நின்றார்கள். இடையூறுகள் வந்த போது, வெறுப்புற்றுச் சலியாமல் குருபரன் அருளிய திசை நோக்கி வணங்கினர். அன்பால் எலும்பு மெலிவுற்று உருக, மிகக் கனிவுற்று இரங்கினர். பக்தியெனும் நதி இருகரையும் புரண்டோட நல்ல ஐம்பொறி அறிவுகள் அடங்கி ஒருமையுறப் பெற்றனர். எம் தலைவனே என்று கூவி அழைத்து, வாய் குழறி, மயிர் புளகங் கொண்டு விம்மி நின்றனர். கைம்மலர் குவித்து அகத்தாமரை எனும் நெஞ்சம் விரிய, கண்கள் மகிழ்ச்சி மிகுதியால் நீர்த்துளிகளைத் தோற்றுவிக்க, உருகி நின்றனர். நிலை தளராத பேரன்பை ஒவ்வொரு நாளும் வளர்ப்பவர்களுடைய அடியார்களின் ஒப்பற்ற தாயாகிப் பாதுகாத்தனை! இறைவா! உனக்கு வணக்கம். மெய்யுணர்ச்சி நல்கும் அறிவனாகி, வடிவு கொண்டு எழுந்தருளி வந்தனை . பண்டை வினையும், வருவினையும் ஒழிய உதவும் ஆற்றலுடைய தெய்வமே! வணக்கம். மதுரையில் விளங்கும் பொன் வண்ண மன்னனே வணக்கம். கூடலம்பதியில் விளங்கும் நன்னிற மாணிக்கமே வணக்கம் . அழகிய தில்லையம்பலத்தில் நடனமாடும் பெருமானே வணக்கம். இற்றை நாளில் எனக்குப் பெறுதற்கரிய அமுதமானவனே! வணக்கம். நான்மறைகளை வெளிப்படுத்திய மூப்பில்லாத் தலைவனே வணக்கம். நந்தி வடிவம் பொருந்திய வெற்றிக் கொடியுடைய சிவனே வணக்கம். மின்னலொளி பொருந்திய அழகிய பல்வேறு உருவங்கள் உடையவனே வணக்கம். கல்லில் நார் உரித்தாற் போல நெஞ்சினைப் பண்படுத்தி அதில் அன்பு எழுப்பும் கனிபோல மதுரமானவனே வணக்கம். பொன்மலை போன்றவனே காப்பாற்றுவாயாக, நினக்கு வணக்கம். ஆ! ஐயனே எனக்கு விரைவில் வீடு அருள்வாயாக! நினக்கு வணக்கம். எல்லாம் உண்டாக்குபவனே! நிலை நிறுத்துபவனே! ஒடுக்குபவனே! வணக்கம். துன்பத்தை நீக்கும் எங்கள் தந்தையே! வணக்கம், ஆண்டவனே! வணக்கம். எங்கும் நிறைந்தவனே வணக்கம். ஒளிகாலும் படிகப் பிழம்பே வணக்கம். மன்னனே வணக்கம், சாவா மருந்தே வணக்கம். மணம் பொருந்திய புகலிடமாம் திருவடிகளையுடைய நீதியாளனே, வணக்கம். அறிவனே வணக்கம். குற்றமற்றவனே வணக்கம். முதல்வா வணக்கம். ஞானமே வணக்கம். வீட்டுநெறியே வணக்கம். பழம்போன்ற இன்பனே வணக்கம். கங்கையணிந்த செவ்விய சடையுடைய நம்பெருமானே வணக்கம் . எம்மை உடைமைப் பொருளாய்க் கொண்டவனே வணக்கம். உணர்ச்சியானவனே வணக்கம். கீழ்ப்பட்ட என்னையும் நின்னடியவன் ஆக்கினவனே வணக்கம். ஐயனே வணக்கம். நுண்ணியனே வணக்கம். சைவனே வணக்கம். தலைவனே வணக்கம். அடையாளம் ஆனவனே வணக்கம். பண்பனே வணக்கம். நல்வழியானவனே வணக்கம் . என் நினைவிற் கலந்துள்ளவனே வணக்கம். செருக்குடைய விண்ணவர் அடைதற்கரிய அமுதமே வணக்கம். செருக்கில்லாத பிற அடியாருக்கு எளிவந்தருளும் அரசனே வணக்கம். இருபத்தோரு தலைமுறையில் வருகிற சுற்றத்தார் அல்லது மூவழியில் வரும் ஏழு தலைமுறை சுற்றத்தார் மாறுபட்ட நரகங்களில் அழுந்தி வருந்தாமே ஆட்கொள்ளும் வேந்தனே வணக்கம். நண்பனே வணக்கம். துணை புரிபவனே வணக்கம். இன்ப வாழ்க்கையானவனே வணக்கம். ஈட்டி வைத்த நிதியம் ஆனவனே வணக்கம். வீடாயவனே வணக்கம். தம்வயம் உடையவனே வணக்கம். அப்பனே வணக்கம், பாசத்தை அழிப்பவனே வணக்கம். மொழியையும் மனவுணர்ச்சியும் கடந்த ஒப்பற்றவனே வணக்கம். விரிந்த கடல் சூழ்ந்த உலக வாழ்வின் பயனே வணக்கம். அரிய பொருளாயிருந்தும் அன்பர்க்கு எளிதின் வந்தருளும் அழகனே வணக்கம். கார்மேகம் போல, அருள் புரிகின்ற கண் போன்றவனே வணக்கம். (தகுதியற்ற) அடியேனையும் அன்பருள் ஒருவனாக்கிப் பெருமையுடைய திருவடிகளை அடியேன் தலைமீது வைத்தருளிய பாதுகாப்பாளனே வணக்கம். கும்பிட்ட கையினரின் துயர் களைவோனே வணக்கம், கேடில்லாத இன்பக் கடலே வணக்கம். ஒடுக்கமும் தோற்றமும் இல்லானே வணக்கம். எல்லாவற்றையும் கடந்து அப்பாற்பட்டவனே வணக்கம். மான்போன்ற பார்வையுடைய உமையம்மையின் கணவனே வணக்கம். மேலுலகங்களிலுள்ள அடக்கமுடைய விண்ணவரின் தாயானவனே வணக்கம். நிலமாகிய பூதத்தின் கண் ஐந்து தன்மையனாய் விரிந்தவனே வணக்கம். நீரின் கண் நான்கு தன்மையனாய் விளங்கினவனே வணக்கம், நெருப்பின் கண் மூன்று தன்மையனாய்த் தெரிபவனே வணக்கம். காற்றின் கண் இரண்டு தன்மையனாய் விரும்பி நின்றாயே வணக்கம், வானின் கண் ஒரு தன்மையோடு தோன்றியவனே வணக்கம். உருகுபவர் உள்ளத்தே அமுதமாயுள்ளவனே வணக்கம் . உருகாத் தேவர்களுக்கு சொப்பனத்திலும் காண்பதற்கு அரியவனே வணக்கம். சாக்கிரமாகிய நினைவாலும் நாய் போன்ற எனக்கு அருள் புரிந்தவனே வணக்கம். திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் அப்பனே காத்தருளுக. தனது சடையில் கங்கையை ஏற்று அமைத்துக் கொண்டவனே காத்தருளுக. திருவாரூரில் தங்கி அருளிய மன்னனே காத்தருளுக! செம்மை பொருந்திய திருவையாறு உடையவனே காக்க . திருவண்ணாமலை உறையும் எமது மேலோனே காத்தருளுக. கண்ணில் நிறைந்த இன்பக் காட்சிக் கடலனையவனே காத்தருளுக. திருஏகாம்பரமாகிய காஞ்சிப்பதியில் வீற்றிருக்கும் எங்கள் தந்தையே காக்க. அவ்விடத்தில் ஒரு பாகத்தில் பெண் வடிவம் கொண்டவனே காத்தருளுக. திருச்சிராப்பள்ளி சிவபெருமானே காக்க. உன்னைத் தவிர வேறு ஆதரவு யாதுமிலாதேன், என்னைக் காத்தருளுக. திருக்குற்றாலத்தில் நடம்புரியும் கூத்தப்பெருமானே காத்தருளுக. திருவாவடுதுறையில் அன்பரை ஆட்கொள்ளப் பொருந்திய அரசே வணக்கம். ஈங்கோய் மலையில் எழுந்தருளிய எங்கள் அப்பனே வணக்கம். வனப்பு மிகுந்த திருப்பழனத்தில் இருக்கும் அழகனே வணக்கம். திருக்கடம்பூரில் விளங்கிய வீரனே வணக்கம். தன்னை அன்பாற் சேர்ந்தார்க்குப் பேரருள் புரியும் தந்தையே வணக்கம். கல்லால மரத்தின் கீழ்ப் பட்டமங்கையில் இயக்கிகள் அறுவருக்கும், கடம்பவனத்தில் வெள்ளானைக்கும் அருள்புரிந்த வேந்தே வணக்கம். தென் தமிழ் நாட்டினைத் தனது பழமையான பதியாக உடைய சிவபெருமானே வணக்கம், எந்த நாட்டினருக்கும் வழிபடு தெய்வமானவனே வணக்கம். பன்றிக் குட்டிக்குப் பாலூட்டி வளர்த்து அருளியவனே வணக்கம். பெருமை பொருந்திய கயிலை மலையை இடமாகக் கொண்டவனே வணக்கம். விரைவில் வீடு அருள் புரிந்திட வேண்டுகிறேன் அம்மானே வணக்கம் . உனக்கு அடிமைப்பட்டவனாகிய தனியேன் தளர்ச்சியுற்றேன். காத்தருளுக. நிலையான இடத்தைப் பெற எண்ணும்படி அருள் புரிவாய், நினக்கு வணக்கம். இவ்விடத்திலே அஞ்சாதேயென்று ஊக்கம் கொடுத்தருள்வாயாக. பெருமானே வணக்கம். விடத்தையே சாவா மருந்தாக விரும்பி உட்கொண்டாய் காத்திடுக. அப்பனே வணக்கம். தலைவனே வணக்கம். குற்றமற்றவனே வணக்கம். அன்பனே வணக்கம். எவற்றுக்கும் பிறப்பிடமானவனே வணக்கம். எப்பொருளிலும் பெரிய பிரமமே வணக்கம். வள்ளலே வணக்கம். அரியவனே வணக்கம். பாசமிலானே வணக்கம். அந்தணர் வடிவோடு வந்த நீதியே வணக்கம். என்னையாட் கொண்டது நீதியோ, யான் அதன் சிறப்பைத் தாங்க மாட்டேன். நீ காத்தருளுக. எனக்குச் சுற்றமானவனே வணக்கம். என் உயிர்க்குயிரே வணக்கம். சிறந்த பொருளே வணக்கம். மங்கலப் பொருளே வணக்கம். அழகனே வணக்கம். மணவாளனே வணக்கம். பஞ்சு போல் மெல்லிய அழகிய சிற்றடியை உடைய அம்மை பாகனே வணக்கம். உடல் ஒழித்து வீடு எப்போதருள்வாய் என்றெண்ணி ஏக்கமுற்றேன். அடிமையாகிய நாயேன் தன்னைக் காத்திடுக. விளக்கமிக்க பெருஞ்சோதியான எங்கள் ஆண்டவனே வணக்கம். கவைத்தலை என்னும் திருப்பதியில் விரும்பி எழுந்தருளிய கண் போன்றவனே வணக்கம். குவைப்பதி எனும் ஊரில் மகிழ்ந்திருந்த மன்னனே வணக்கம். மலை நாட்டினையுடைய வேந்தனே வணக்கம். கல்வி மிகுந்த அரிகேசரியெனும் ஊரினை உடையாய் வணக்கம் . திருக்கழுக்குன்றத்தில் மேவிய ஞானச் செல்வனே வணக்கம். திருப்பூவணத்திலே குன்றிலே அமர்ந்த ஒழுக்கக் கடவுளே வணக்கம். அருவமாய் நின்றும் உருவத் திருமேனி கொண்டவனே வணக்கம். அருள் நிறைந்த மலையே வணக்கம். நான்காம் நிலையைக் கடந்த பேரறிவே வணக்கம். அறிதற்கரிதாய் சிவஞானத்தால் தெளியப்பட்ட பொருளே வணக்கம். துளைக்கப்படாத தூய முத்தாகிய ஒளியே வணக்கம், ஆட்பட்டவர்க்கு ஆதரவானவனே வணக்கம். தெவிட்டாத அமுதமே, அளவிடப்படாத அருளே வணக்கம். ஆயிரம் பேருடைய அண்ணலே வணக்கம். தாளிக்கொடியின் தழையும், அருகம் புல்லும் கலந்து கட்டிய மாலை அணிந்தவனே வணக்கம். நெடிய சோதியாய கூத்தனே வணக்கம். சந்தனக் குழம்பை அணிந்த அழகனே வணக்கம். அடியேங்களாகிய எங்களை உய்யும்படி ஆட்கொள்பவனே வணக்கம் . புலியின் பாலானது மானிற்குப் பயன்படும்படி அருளினவனே வணக்கம். அலையுடைய கடலின் மேலிடத்தே நடந்தவனே வணக்கம். கரிக்குருவிக்குப் பண்டைக் காலத்தே அருள் புரிந்தவனே வணக்கம். வலிய ஐம்புல வேட்கைகள் அற்று ஒழியும்படி என் உள்ளத்தில் பொருந்தி அருளினாய்; உனக்கு வணக்கம். நிலத்தின் கண் பொருந்தப் பழகிய பல்வகைத் தோற்றம் உடையவனே வணக்கம் . முதலும் நடுவும் முடிவும் ஆனவனே வணக்கம். நரகம் விண்ணுலகம் நிலவுலகம் என்ற மூவிடத்தும் புகாதபடி மேலான வீட்டுலகைப் பாண்டியனுக்கு நல்கி அருளினாய்; உனக்கு வணக்கம். நீக்கமின்றி எங்கும் நிறைந்த ஒருவனே வணக்கம். செழுமை மிக்க மலர் நிறைந்த சிவபுரத்துத் தலைவனே வணக்கம் . செங்கழுநீர் மாலையணிந்த கடவுளே வணக்கம். வழிபடுவோரது மயக்கத்தை அறுப்பாய்; உனக்கு வணக்கம். தவறு யாது பொருத்தம் யாது என்று அறியா நாயேன் தொடுத்த மொழித் தொடரை ஏற்றுக் கொண்டருள்வாய்; வணக்கம். ஊர்கள் பலவற்றை அழித்த பண்டையோனே வணக்கம். மேலானவற்றுக்கு மேலான ஒளியுடைய மேலோனே வணக்கம். வணக்கம். வணக்கம். பாம்பணிந்த பெரியோனே பழமையின் காரணனே வணக்கம். வணக்கம். வணக்கம். வெற்றி வெற்றி மிக்கோனுக்கு வணக்கம் .