1
சொற்பிரிப்பு
உரை
ஆராயுமிடத்து, அண்டமாகிய பேருலகில் பகுதிகள் உருண்டை வடிவமாக விளங்குகின்றன. அவை எல்லையற்ற தன்னியல்புகளைக் கொண்டுள்ளன. பலவகை வளம் பொருந்திய பெருமை மிக்க தோற்றங்களும் ஒன்றுக்கொன்று மேலாகவும் வேறுபாடுகளுடனும் விளங்குகின்றன. அவ்வேறுபாடுகள் நூற்றொரு கோடிக்கதிகமாக அளவில்லாமல் பரந்து பெருகி உள்ளன. வீட்டின் பலகணி வாயிலாகப் புகும் கதிரவன் கதிர்களில் சிறியனவாக அணுப் போன்ற தூசிகள் தென்படுகின்றன. பேருலகங்கள் எல்லாம் அவ்வணுக்களைப் போன்று சிறியனவாகத் தோன்றும்படியாகத் தான் பெரியவனாக விளங்குகின்றான் முதல்வன். படைப்புக் கடவுளரின் கூட்டமும், காப்புக் கடவுளரின் அதிக எண்ணிக்கையும் அவனால் இயங்குகின்றன. தோன்றுதலும், நிலைத்தலும், வளர்தலும், ஒடுங்குதலும் நிகழ்தற்குரிய காலப்பகுதிகள் அவனுள் அடங்கும். மிகப் பெரும் ஊழிக் காலங்களின் தொடக்கமும், நிலைபேறும், முடிவும் அவனது இயக்கமே ஆகும்.சிறு சுழற்காற்றுகளாகிய நுண் பகுதிகள் பல கொண்ட பெரிய சூறாவளியின் வீச்சுக் காற்றைப் போல, இவை முழுவதையும் இயக்கும் இளைஞனாகவும் விளங்கும் முதல்வன் அவன். ஞாயிறு மண்டலத்திலே தினந்தோறும் திகழும் படியான ஒளியினை அமைத்தவன். அழகு பொருந்திய திங்கள் மண்டலத்தில் குளிர்ச்சியை பொருத்தினவன். மிகுந்த ஆற்றலுடைய நெருப்புக்கு வெப்பத்தை உண்டாக்கினவன். நிலையாகவுள்ள வானத்திலே, எல்லாவற்றுக்கும் இடம் கொடுத்து, தானும் கலந்து நிற்கும் இயல்பினை அமைத்தோன். மேலெழும் தன்மையுடைய காற்றிலே கிளர்ச்சியைப் பொருத்தினோன். பொருட்களின் தோற்றம் நிழலாய் விழும் நீரிலே இன்சுவை புலப்படுத்தும் தன்மையைப் படைத்தவன். நிலத்திலே கடினமாகிய திரட்சியை இயற்றினோன். இவ்வாறு எந்தக் காலத்திலும், எத்தனையோ கோடி பொருட்களிலும், ஏனைய பிறவற்றிலும் அவ்வவற்றின் தன்மையை அவ்வவற்றுக்கு இடமாகப் பொருத்தினோன். அஃதன்றியும் படைப்புப் பொருள் யாவற்றுக்கும் முன்னே உள்ளவன் அவன் என்றறிக. அவன் எல்லாவற்றையும் உடையவன் என்றறிக. யாரும் நிகரில்லாத தனக்குத்தானே ஒப்பானவன் என்றறிக. தாருகா வனத்து முனிவர் வேள்வி செய்து விடுத்த காட்டுப் புலியினைக் கொன்று அதன் தோலை உடையாக அரையில் அணிந்தவன் என்று அறிக. திருநீறணிந்த எம்பெருமான் அருள் திறத்தை எண்ணுந்தோறும் அவனின் பிரிவாற்றாது வருந்தி, பிரிவு அதிகப்பட, ஐயோ! நான் கெட்டழிவேன். இனிய ஓசையானது வீணையின் கண் நுட்பமாய்க் கலந்திருத்தல் போன்று அவன் நமது உயிரில் கலந்துளான் என்று அறிக. அத்தகைய இசை ஒன்றினை அதனிடத்தில் அறிந்து அருள் புரிந்தான் என்று அறிக. எவற்றுக்கும் மேலானவன் என்று அறிக. அயனும் அரியும் அளந்தறிய ஒண்ணாப் பெருமை உடையவன் என்று அறிக. வியத்தகு அதிசயங்கள் புரியும் பல்வேறு வடிவம் உடையோன் இறைவன். புகழ் பதவிகளைக் கடந்து நிற்கும் பழமையோன். சொல்லும் மனமும் சென்று அடைய ஒண்ணாத தொலைவில் உள்ளோன். அன்பாகிய வலையில் அகப்படுபவன், ஒப்பற்றவன் என்று சொல்லப்படும் அக்கடவுள், விரிந்த உலகமெங்கும் பரந்து நின்றவன். அணுவைக் காட்டிலும் வியத்தகு நுட்பம் கொண்டவன். ஒப்பிடுவதற்கரிய பெருமை உடையவற்றுள் தலைநின்றவன். ஆய்ந்து அறிதற்கும், பெறுதற்கும் அரிய பலவற்றுள்ளும் அருமையிலும் அருமையுடையோன் . எல்லாப் பொருட்களையும் தழுவி நின்று அவற்றை வளர்த்துக் காப்பவன். சுட்டியறியும் கல்வியறிவால் அறியப்படாத நுட்பமுடையோன் . மேலும் கீழுமாய் எங்கும் நிறைந்தவன். முடிவும் மூலமும் இல்லாதவன். பிறவிக் கட்டையும், பிறவி நீக்கத்தையும் உண்டாக்குவோன். இயங்காப் பொருள், இயங்கும் பொருள் யாவிலும் கலந்து அவையேயாய் நின்றவன். ஊழி முதலும் முடிவும் கண்டவன். பக்குவம் வந்த காலை எல்லாரும் தன்னை அடையும்படியாக வந்து ஆட்கொள்ளும் முதல்வன். மலம் நீங்காத எத்தகைய விண்ணவரும் காணவொண்ணாத மங்கலப் பொருளாவான். பெண்ணாகவும், ஆணாகவும், இரு தன்மையும் இல்லாதவனாகவும் உள்ள வடிவோடும் தன்மையோடும் தோன்றுகிறான். அவனை ஒன்றுக்கும் பற்றாத அடியேனும் கண்ணாற் காணப் பெற்று மகிழ்ந்தேன். அருள் மிகுதியாக முகிழ்க்கும் அமுத ஊற்றானவன் அவன். அவனது கருணையின் பெருமையை உணர்ந்தேன். என்னை இந்நிலவுலகில் ஆட்கொள்ள வேண்டி தன் செவ்விய பாதங்கள் பொருந்த வந்தவன். பேரின்பம் அளிக்கும் பரம்பொருள் ஆனவன் என்று சிறியேனும் தெளிந்தேன். அவன் குவளை மலர் போலும் கண்களை உடைய உமையொருபாகன் . திருவருட்சத்தியும், தானும் ஒருங்கு வந்து என்னைப் பிறவிக் கடலிலிருந்து எடுத்து, ஆட்கொண்டு, பேரருள் புரிந்தவன் அவன் என்று அறிக. மேன்மையான பேரின்பக் கடல் முழுதும் சூல் கொண்ட மேகம் போல வடிவெடுத்து அவனது ஞான ஒளி விளங்குகிறது. அழகு நிறை திருப்பெருந்துறை என்னும் மலை மேல் ஏறித் தக்க அருளாகிய மின்னல் வெளிச்சமானது எல்லாத் திசைகளிலும் பரவுமாறு அந்த ஞான ஒளி காணக் கிடைக்கிறது. ஐவகை வேட்கைப் பிணிப்பு எனும் வாள்போல் கொடிய பாம்புகள் கெட்டு விட வந்த ஞான ஒளி அது. பிறவித் துன்பம் என்னும் வெப்பமானது தனது விரிந்த தலையை மறைத்துக் கொள்ளுமாறு வந்த ஞான ஒளி அது. மிகுந்த அழகுடைய தோன்றிச் செடி போல என்னை ஆட்கொள்ளத் தோன்றிய ஆசிரியனது ஞான ஒளியாகும் அது. எங்கள் பிறவிகளோ தம்பலப் பூச்சிகள் போல் செறிந்து தேன்றுகின்றன. இறைவனின் கருணையோ முரசுபோலும் இன்முழக்கம் செய்கிறது. பூப்போன்ற அடியாரின் கூப்பிய கைகள் காந்தள் மலர் போலும் விளங்குகின்றன. குறையாத இன்பம் தரும் அருளானது சிறுதுளியாக வடிவம் கொள்ள, நேர்மையான பேரறிவாகிய வெள்ளம் திக்கெங்கும் திரண்டோங்கியது. ஒரு வரையறைப்படுமாறு மக்கள் தம்தம் சிற்றறிவிற்கு ஏற்பக் கொண்ட கொள்கைகளின் கூட்டம் எல்லையற்று உயர்ந்து பரந்துள்ளது. கானல் நீரை அணுகி, விடாய் தீரப் போந்த நீண்ட கண்களையுடைய மான் கூட்டம் போல, சிற்றறிவுடைய உயிர்கள் அறுசமயம் எனும் கானல் நீரைத் தேடிச் சென்றன. கதியடையும் விருப்பத்தால் ஆராய்ச்சியுடன் சென்ற அந்த சிற்றுயிர்கள் கானல் நீரைப் பருகிய மான்கள் போன்று தளர்ச்சியொடு நடந்து மிகக் கெடுதியான தாகம் நீங்கப் பெறாது உழன்றன. செஞ்சுடர் வெள்ளம் வானப் பேராற்றில் பெருக மான் கணம் பெருவிடாயால் அலமரும். அத்தருணத்தில் வான் ஆற்றிலே இறைவனாகிய மேகம் புகுந்து அருள்மழை பெய்விக்கும். பேரின்பமாகிய பெரிய சுழலினைச் சுழித்து, பாசக் கட்டாகிய கரைகளை மோதி அசைக்கிறது. வரிசை வரிசையாக மேன்மேலும் வளர்ந்து நின்ற நல்வினை தீவினை என்னும் இருவினைப் பெரு மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. மிகுந்து வந்த அழகு மிகுந்த அருள் வெள்ளத்தைச் செலுத்தியது. தொண்டராகிய பயிர்த்தொழிலோர் கடத்தற்கரிய எல்லையுடைய சாந்தம் எனும் பெரிய கால்வாயைக் கட்டியது. வாசனை வீசும் தேன் மலர் போன்ற இதயக் குளத்திற்கு உண்மையாகிய நீர் வாயினை அமைத்தது. பொறியடக்கம் என்ற சிறந்த அகிற்புகை சேரும்படி ஓங்காரம் என்னும் சங்கு ஒலிக்கும் உள்ளமாகிய குளத்தில் அருள் வெள்ளம் பெருகியது. அதனை மகிழ்வோடு பார்த்து, வழிபாடு என்னும் வயலுள் அன்பு என்ற வித்தை விதைத்து பயன் கொண்டு துய்க்கச் செய்த அருள் மழை அது. ஆகவே உலகெங்கும் பெறுதற்கு அரியவனாகிய முகில் போன்ற இறைவன் வாழ்க ! கரிய படத்தையுடைய பாம்பை அரைப் பட்டிகையாக அணிந்த கடவுள் வாழ்க! செய்தற்கரிய பெருந்தவத்தோர்க்கு அருள்புரியும் முதல்வன் வாழ்க! பாண்டியன் முதலியோருக்கு அபாயம் வந்தபோது, பயம் நீக்கி ஆட்கொண்ட வீரன் வாழ்க! (அல்லது) என் பிறவிப் பயத்தை நீக்கி ஆட்கொண்ட வீரன் வாழ்க! நாள்தோறும் வினையிற்படாது இழுத்து, என்னை ஆண்டு அருளுபவன் வாழ்க! எதிர்பாராது வந்து கவியும் பெரும் துயரத்தை அறவே ஒழிப்பவன் வாழ்க! தன்னை அடைந்தோருக்குக் கிடைத்தற்கரிய அமுதமாகிய பேரின்பம் வழங்குவோன் வாழ்க! மிகுந்த இருளிலே வளைந்தாடுவோன் வாழ்க! பெரிய மூங்கிலை ஒத்த தோளுடைய அருட்சத்தியின் கணவன் வாழ்க! தன்னைச் சார்தலில்லாதார்க்கு இயைபு காட்டாத எம் தலைவன் வாழ்க! அன்பர்கட்கு இளைப்புக்காலத்துப் பயன்படும் ஈட்டிய பொருள் போல்பவன் வாழ்க! திருப்புறம்பயத்தில் பாம்பு தீண்டி இறந்த ஒருவனை உயிர்ப்பிக்கக் கொடிய பாம்பொன்றை ஆட்டி வைத்து விடந்தீர்த்து உயிர்ப்பித்த எம்பெருமான் காத்தருளுக! விடத்தைத் தீர்த்தது போல எனக்கு மாலேற்றிய பெரியவன் காத்தருளுக! அகண்ட பொருளாக இருந்தும் அடியவரை ஆட்கொள்ளத் திருநீறு அணிந்த திருமேனியோடு தோன்றவல்லவன் அருளுக! நான்கு திக்கிலும் நடப்பனவற்றை நடப்பித்தும், கிடப்பனவற்றைக் கிடப்பித்தும் நிற்பனவற்றை நிற்பித்தும் இன்ன தன்மையன் எனச் சொல்லும் மொழியைக் கடந்த பழமையோன்; மனம் கொண்டு உணரும் உணர்வினால் பற்றப்படாதவன்; கண் முதலிய ஐம்பொறிகளாலும் காணப்பெறாதவன்; வான் முதலிய பூதங்கள் ஐவகையாகத் தோன்றும்படி அவற்றை முறையாக வகுத்தவன். மலரின் மணம் போல் எழுந்து நிறைந்தவன். உலகில் நீக்கமற நிறைந்து, எல்லாவற்றுக்கும் சார்பாய் பொருந்திய பெருந்தன்மையுடைய பெரியோன், இக்காலத்தே எனக்கு எளிதில் வந்து அறிவுறுத்தி அருளி, அழியும் தன்மை உடைய உடல் எடுக்கும் பிறவி நீங்கும்படி செய்த ஞான முதல்வன். இன்று என்பால் எளிதாக வந்து அமர்ந்தோன். அவனுக்கு வணக்கம். உருக்கம் மிகுந்த உடம்பைத் தந்தவனுக்கு வணக்கம். இன்ப ஊற்றாக உள்ளத்தில் அமர்ந்து அதை மகிழ்விப்பவனுக்கு வணக்கம். தாங்கமுடியாத பேரின்பப் பெரு வெள்ளம் பொங்கிப் பரந்து அலைவீச அதனைப் பேண இயலாத இந்த உடம்பை நான் தாங்க விரும்பமாட்டேன். பச்சை மணிக் குவியலும் மாணிக்க ஈட்டமும் சேர்ந்தால் காணப்படும் மின்னொளியைத் தன்னுள் கொண்டு, பொன்னொளி போல் சத்தியும் சிவமுமாகி விளங்குகிறான் அவன். நான்முகனும் திருமாலும் போய் முயன்று தேடியும் அவர்கட்குத் தன் மெய்யியல்பை மறைத்து நின்றான். முறையாக நூல் வழியிற் பொருந்தித் தன்னைக் காண முயன்றவருக்குத் தன்னை மறைத்தவன். உலகப் பொருள்களில் ஈடுபடாமல் அவனைக் காண விழையும் ஒருமைப்பாட்டுடன் நிற்பவரைக் கண்டு உலகத்தவர் வருந்துவர். ஆனால் இறைவனோ அவர்களுக்கும் தன்னை மறைத்து நிற்கிறான். மந்திர முறையினால் கடவுள் காட்சி காண வேண்டி, வருந்தி முயன்றவருக்கும் தன் மெய்த்தன்மையை ஒளித்து நிற்கிறான். இந்த உபாயத்தால் அவனைக் காண்போம் என எதிர்பார்ப்போருக்கு அந்த உபாயத்தில் அவ்விடத்திலேயே ஒளித்து இருக்கிறான். பரம்பொருளைச் சாந்தமாகப் பார்க்கவும் மிகுதியாகப் பற்றவும் முயன்றவருக்கு ஆண் வடிவோடு அல்லது ஒளி மிகுந்த பெண் வடிவோடு அல்லது இரண்டுமற்ற வடிவோடு தோன்றியும் தன் மெய் இயல்பைக் காட்டாமல் விளங்குகிறான். செயற்கரிய தவத்தினர் ஐம்பொறி அறிவினை நெடுந்தூரத்தில் போகும்படி நீத்தனர். கடத்தற்கரிய மலைகள்தோறும் சென்று நுகர்வனவற்றை எல்லாம் வெறுத்தனர். உயிர் மாத்திரமுள்ள தசையற்ற வெற்றுடம்புடையராய் உள்ள அவர்கள் பார்வையில் விளங்கினும் அவர்கள் திருத்தம் எய்தற்பொருட்டு முற்றிலும் தோற்றம் தராது ஒளிகிறான். "முன்னாட்களில் பயிலுந்தோறும், இந்நாட்களில் பயிலுந்தோறும் மறைந்து நிற்கிற கள்வனைக் கண்டோம். அனைவரும் கூடுங்கள்! அன்றலர்ந்த பின்னல் மாலையால் அவன் திருவடிகளுக்கு விலங்கிடுங்கள்! வலம் வாருங்கள்! சூழுங்கள் !பின் தொடருங்கள்! விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்!" என்று ஓலம் இடுபவர்களுடைய பிடிக்கு அகப்படாமல் முழுவதும் ஒளித்துக் கொண்டான். தன்னிகரில்லாத அவனே எல்லாவற்றோடும் அத்துவிதமாய்க் கலந்து அவையேயான தன்மை உடையவன். தன்னில் தானாய் உள்ள தனி இயல்பையும் என்னைப் போன்றவர்கள் கேட்கும்படி வந்து அறிவுறுத்தி அருளியவன். வலிய, போருக்கு அழைத்தாற்போல அழைத்து, அடிமையாக்கிக் கொண்டருளினான். அவ்வாறு அவன் அருளியதும் யான் சலிப்பில்லாத அன்பினாலே எலும்பும் உருகும்படி முறையிட்டேன். கொந்தளிக்கும் கடல்போலக் கூவிக்கூவி எழுந்து, தலை மயங்கி, கீழே விழுந்து உருண்டேன். பித்துக் கொண்டவர் போலக் கதறி, மால் கொண்டு, வெறி கொண்டது போலக் களித்து , நாட்டிலே பார்த்தவர் திகிலடையவும் கேட்டவர் அதிசயிக்கும்படியும் இருந்தேன். தன்மேல் பாகனை ஏற விடாத பெரு மதம் கொண்ட யானை போல இன்ப அன்பினைத் தாங்க இயலாதவன் ஆனேன். எனது உறுப்புக்களையெல்லாம் சுவைமிக்க கொம்புத் தேன் போன்ற இன்ப உணர்ச்சியால் செய்து அமைத்தனன் இறைவன். திரிபுரத்தினை அழகுமிகுந்த தன் புன்னகையில் எழுந்த நெருப்பால் சுட்டெரித்து முன்பு வீழ்த்தினான். அது போலவே தனது அருட் பெரும் தீயினால் அடியோங்கள் ஒருத்தரும் தவறாத படி எங்கள் அடிமை உடம்பு எனும் குடில்களை ஒடுங்குவித்தான். வளைந்த உள்ளங்கையில் விளங்கும் நெல்லிக்கனி போல் தவறிப் போகாத கைகண்ட அமுதம் ஆகினான் -அந்த எம்பெருமான் வாழ்க! அவன் எவ்வாறு எனக்குக் கிட்டினான் என்பதை பிறருக்கு எடுத்துரைக்க அறிய மாட்டேன். அவன் என்னை உருவாக்கிய விதத்தை நாய் போன்ற நான் தாங்க மாட்டேன். அதை அறியும் ஆற்றலும் இல்லேன் ஆ! ஆ!! செருக்கு ஒழியப் பெற்றேன். அடியேனுக்கு நல்கிய பேரின்பத்தை அளந்தறிய வல்லவன் அல்லேன். அதை அருந்தியும் நிறைவெய்தல் பெறமாட்டேன். மிகுதியாக விழுங்கும் ஆற்றலும் உடையவன் அல்லேன். முழுமதிக் காலத்தே கடல் நடுவிற்பொங்கும் நீர் போல உள்ளத்தில் பேரின்பம் நிறைந்தது. வளமிக்க பாற்கடலைப் போல உள்ளம் ததும்பச் செய்தது. சொல்லும் தன்மைகடந்த பேரமுதமானது உரோமத்தின் அடிதோறும் நிரம்பித் தங்கும்படி இறைவன் செய்தனன். நாய் போன்ற அடியேனின் உடம்பினகத்தே சிறு வீட்டிருக்கை கொண்டருளினான். தீயேனுடைய புலால் மிகுந்த உடம்பின் குருதிக் குழாய், நரம்புகளில் எல்லாம் இனிய தேனைப் பாய்ச்சினான். அதிசயிக்கத் தக்க நிறைவான அமுத ஒழுக்குகளை எலும்புத் துவாரங்களில் பாய்வித்தான். உருகும் தன்மையுள்ள உள்ளத்தினால் வடிவமைத்தது போல, ஒவ்வொரு பகுதிகளிலும் அமுதம் ஊறிக் கசிகின்ற உடம்பினைத் தந்தான். ஒளிமிக்க கற்கண்டின் இனிப்பினைக் கொண்ட கனியைத் தேர்ந்துண்கிறது இறுமாப்புடைய யானை. அதைப்போன்று முடிவான முறையாக தகுதியற்ற அடியேனும் இருக்குமாறு செய்தருளினான். அயன் அரி அறியாப் பெருந்தன்மையன் தனது மேலாம் திருவருள் தேனானது என்னில் கலக்கும்படி செய்து, அவ்வருளோடு மிக மேம்பட்ட பேரின்ப அமுதமும் அமைத்து அருளிச் செய்தான்.