திருமுறை 8 · 8.002 · 1

கீர்த்தித் திருவகவல்

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

தில்லை மூதூர் ஆடிய திருவடிபல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகிஎண்இல் பல்குணம் எழில்பெற விளங்கிமண்ணும் விண்ணும் வானோர் உலகும்துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5என்னுடை இருளை ஏறத்துரந்தும்அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்மன்னு மாமலை மகேந்திரம் அதனில்சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10கல்லா டத்துக் கலந்து இனிது அருளிநல்லா ளோடு நயப்புறவு எய்தியும்பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15விராவு கொங்கை நல்தடம் படிந்தும்கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்துஉற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் 20நந்தம் பாடியில் நான் மறையோனாய்அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகிஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்மொக்கணி அருளிய முழுத்தழல் மேனிசொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்ஆண்டுகொண்டருள அழகுறு திருவடிபாண்டியன் தனக்குப் பரிமாவிற்றுஈண்டு கனகம் இசையப் பெறாஅதுஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளிஇந்திர ஞாலம் காட்டிய இயல்பும்மதுரைப் பெருநன் மாநகர் இருந்துகுதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45ஆங்கது தன்னில் அடியவட்காகப்பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்உத்தர கோச மங்கையுள் இருந்துவித்தக வேடங் காட்டிய இயல்பும்பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50தூவண மேனி காட்டிய தொன்மையும்வாத வூரினில் வந்து இனிது அருளிப்பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகிக்கருவார் சோதியில் கரந்த கள்ளமும் 55பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்பாவ நாசம் ஆக்கிய பரிசும்தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்துநன்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்குஅட்ட மாசித்தி அருளிய அதுவும்வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டுகாடது தன்னில் கரந்த கள்ளமும் 65மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டுதக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்ஓரியூரின் உகந்து இனிது அருளிபாரிரும் பாலகன் ஆகிய பரிசும்பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்கோவார் கோலம் கொண்ட கொள்கையும்தேன் அமர் சோலைத் திருவாரூரில்ஞானம் தன்னை நல்கிய நன்மையும்இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75படிமப் பாதம் வைத்த அப்பரிசும்ஏகம் பத்தில் இயல்பாய் இருந்துபாகம் பெண்ணோடு ஆயின பரிசும்திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்துமருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்பாவகம் பலபல காட்டிய பரிசும்கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90குற்றாலத்துக் குறியாய் இருந்தும்அந்தமில் பெருமை அழல் உருக் கரந்துசுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டுஇந்திர ஞாலம் போலவந்து அருளிஎவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் 95தானே ஆகிய தயாபரன் எம் இறைசந்திர தீபத்துச் சாத்திரன் ஆகிஅந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உருநீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105ஆனந் தம்மே ஆறா அருளியும்மாதில் கூறுடை மாப்பெரும் கருணையன்நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்தூய மேனிச் சுடர்விடு சோதிகாதலன் ஆகிக் கழுநீர் மாலைஏலுடைத்தாக எழில்பெற அணிந்தும்அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்மீண்டு வாராவழி அருள் புரிபவன்பாண்டி நாடே பழம்பதி ஆகவும்பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளியதேவ தேவன் திருப் பெயர் ஆகவும்இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்திஅருளிய பெருமை அருள்மலை யாகவும்எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் 125அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளிநாயினேனை நலம்மலி தில்லையுள்கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎனஏல என்னை ஈங்கு ஒழித் தருளிஅன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்எய்த வந்திலாதார் எரியில் பாயவும்மாலது வாகி மயக்கம் எய்தியும்பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135நாத நாத என்று அழுது அரற்றிபாதம் எய்தினர் பாதம் எய்தவும்பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்றுஇதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்எழில்பெறும் இமயத்து இயல்புடை அம்பொன் 140பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்குஅருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகைஇறைவன் ஈண்டிய அடியவ ரோடும்பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145ஒலி தரு கயிலை உயர்கிழ வோனே.
சொற்பிரிப்பு
தில்லை மூதூர் ஆடிய திருவடிபல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகிஎண் இல் பல்குணம் எழில் பெற விளங்கிமண்ணும், விண்ணும், வானோர் உலகும்துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்என்னுடை இருளை ஏறத் துரந்தும்அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்கல்லாடத்துக் கலந்து, இனிது அருளிநல்லாளோடு நயப்புறவு எய்தியும்பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்விராவு கொங்கை நல் தடம் படிந்தும்கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும்மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்மற்று, அவை தம்மை மகேந்திரத்து இருந்துஉற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும்நந்தம் பாடியில் நான்மறையோனாய்,அந்தம் இல் ஆரியனாய், அமர்ந்து அருளியும்வேறுவேறு உருவும், வேறுவேறு இயற்கையும்நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகிஏறுடை ஈசன், இப்புவனியை உய்யக்கூறுடை மங்கையும் தானும் வந்தருளிக்குதிரையைக் கொண்டு, குடநாடு அதன் மிசைச்சதுர்படச், சாத்து ஆய், தான் எழுந்தருளியும்வேலம்புத்தூர் விட்டேறு அருளிக்,கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்மொக்கணி அருளிய முழுத்தழல் மேனிசொக்கு அது ஆகக் காட்டிய தொன்மையும்அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்ஆண்டு கொண்டு அருள அழகு உறு திருவடிபாண்டியன் தனக்குப் பரிமா விற்றுஈண்டு கனகம் இசையப் பெறாஅதுஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத்தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்அந்தணன் ஆகி, ஆண்டு கொண்டருளி,இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்மதுரைப் பெருநல் மாநகர் இருந்துகுதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆகப்பாங்கு ஆய் மண் சுமந்தருளிய பரிசும்உத்தர கோச மங்கையுள் இருந்துவித்தக வேடம் காட்டிய இயல்பும்பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித்தூவண மேனி காட்டிய தொன்மையும்வாதவூரினில் வந்து, இனிது அருளிப்பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக்கருஆர் சோதியில் கரந்த கள்ளமும்பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளிப்பாவம் நாசம் ஆக்கிய பரிசும்தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்துநல் நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்குருந்தின் கீழ், அன்று, இருந்த கொள்கையும்பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்குஅட்டமா சித்தி அருளிய அதுவும்வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு,காடு அது தன்னில், கரந்த கள்ளமும்மெய்க் காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டுதக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்ஓரியூரில் உகந்து, இனிது அருளிப்பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்பாண்டுர் தன்னில் ஈண்ட இருந்தும்தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்கோஆர் கோலம் கொண்ட கொள்கையும்தேன் அமர் சோலைத் திருவாரூரில்ஞானம் தன்னை நல்கிய நன்மையும்இடைமருது அதனில் ஈண்ட இருந்துபடிமப் பாதம் வைத்த அப்பரிசும்ஏகம்பத்தில் இயல்பாய் இருந்துபாகம் பெண்ணோடு ஆயின பரிசும்திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்துமரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்பாவகம் பல பல காட்டிய பரிசும்கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்;ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;ஐயாறு அதனில் சைவன் ஆகியும்துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்புறம்பயம் அதனில் அறம் பல அருளியும்குற்றாலத்துக் குறியாய் இருந்தும்;அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்துசுந்தர வேடத்து ஒரு முதல் உருவுகொண்டுஇந்திர ஞாலம் போல வந்து அருளிஎவ்எவர் தன்மையும் தன்வயின் படுத்துத்தானே ஆகிய தயாபரன், எம் இறைசந்திர தீபத்துச், சாத்திரன் ஆகிஅந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்து அருளியும்மந்திர மாமலை மகேந்திர வெற்பன்அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்ஆற்றல் அது உடை அழகு அமர் திரு உருநீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்ஆனந்தம்மே, ஆறா அருளியும்மாதில் கூறு உடை மாப்பெரும் கருணையன்நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும்மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்தூய மேனி, சுடர்விடு சோதிகாதலன் ஆகிக், கழுநீர் மாலைஏல் உடைத்து ஆக, எழில்பெற, அணிந்தும்அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்மீண்டு வாரா வழி அருள் புரிபவன்பாண்டி நாடே பழம்பதி ஆகவும்பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்உத்தரகோச மங்கை ஊர் ஆகவும்ஆதி மூர்த்திகட்கு அருள் புரிந்தருளியதேவ தேவன் திருப்பெயர் ஆகவும்இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்திஅருளிய பெருமை அருள் மலை ஆகவும்எப்பெரும் தன்மையும், எவ்எவர் திறமும்அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டருளிநாயினேனை நலம் மலி தில்லையுள்கோலம் ஆர் தரு பொதுவினில் வருகெனஏல என்னை ஈங்கு ஒழித்து அருளிஅன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர்ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்எய்த வந்திலாதார் எரியில் பாயவும்மால் அது ஆகி, மயக்கம் எய்தியும்பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்கால் விசைத்து ஓடி, கடல்புக மண்டி.'நாத! நாத!' என்று அழுது அரற்றிபாதம் எய்தினர் பாதம் எய்தவும்'பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக' என்றுஇதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம்பொன்பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில்கனிதரு செவ்வாய் உமையொடு, காளிக்குஅருளிய திருமுகத்து, அழகு உறு சிறு நகைஇறைவன், ஈண்டிய அடியவரோடும்பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன்ஒலி தரு கயிலை உயர் கிழவோனே.
உரை

சிவபெருமான் தில்லை என்னும் பண்டைத் திருப்பதியின்கண் கூத்து  இயற்றுபவன். அவன் தனது பொற்பாதங்களைப் பல்வகைப்பட்ட உயிர்கள் எல்லாவற்றிலும் பொருந்துமாறு செய்த அருளாளன். கணக்கில் அடங்காத தனது பலகோடி  அருட்பண்புகளும் சிறந்து தோன்றுமாறு அவன் வெளிப்படுகிறான். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் அதற்கு மேற்பட்ட வானவர் உலகிலும் பொருந்திய பல கலைகளைத்  தோற்றுவித்தும் ஒடுக்கியும் விளங்குகிறான். என்னை மேற்கொண்ட அறியாமையை முற்றிலும் ஒழித்து அருளினான். அன்பர்கள் நெஞ்சத்தில் மெய்யன்பு பொங்கிப் பெருகும்  பொருட்டு அதனைத் தன் இருக்கையாகக் கொண்ட உறுதியும் தலைமையும் உடையவன்  அவன். புகழால் நிலைபெற்ற பெருமலையாகிய மகேந்திரம் என்னும் இடத்தில் உமையம்மையாருக்கு அருளிய வீட்டு நூலை உலகினர் நலன் பொருட்டு எமக்குக் காட்டி அருளினான். கல்லாடமென்னும் பதியில் இயற்கை நல்லியல்புடைய அம்மை வழிபட்ட  திருவடிவிற் கலந்து தோன்றினான். இன்னருள் புரிந்து அவளோடு பேரின்ப நட்புக்  கொண்டும் விளங்கினான். பஞ்சப் பள்ளி எனும் ஊரில் பால்போல் தூய மொழியளாம் உமையம்மையுடன் கலந்திருந்து அடியவர்கட்குக் குறையாது வளரும் இனிய கருணையைப்  பெருக்கினான். வேடன் வடிவம் கொண்டு முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயினையுடைய  அருட்சத்தியின் நெருங்கிய நகிலாகிய புனிதப் பொய்கையில் மூழ்கி இருந்தான். வலைஞர்  வேடம் பூண்டு வலை வீசிக் கெளிற்று மீன் ஒன்றை வலையில் வீழ்த்தினான். அதன் பாலிருந்த பெரிய ஏட்டின் உளவாகிய அருள்நூலை மீளப் பெற்றான். இருபத்தெட்டு ஆகமங்களாகிய அவைகளை மகேந்திர மலையில் ஐந்து திருமுகங்களோடு வீற்றிருந்து ஐந்து பெரும் முனிவர்களுக்கும் ஓதி அருளினான், நந்தம்பாடி என்னும் இடத்தில் நான்மறை உணர்த்தும் ஈறில்லாப் பேராசிரியனாகி வீற்றிருந்து அருளினான். அறமாகிய காளையை ஊர்தியாகக் கொண்டவன் எம் பெருமான். இவ்வுலகினரை உய்வித்தற்பொருட்டு, தன் திருமேனியில் ஒரு பகுதியாகச் சத்தியைக்  கொண்டனன். அடியாரின் பக்குவ வேறுபாட்டுக்கேற்ப மாதொருபாகன் வெவ்வேறு  திருவடிவமும், வெவ்வேறு தன்மைகளும் கோடிக்கணக்கில் அமையுமாறு தோன்றி அருளினான். வேலம்புத்தூர் என்னுமிடத்திலே உக்கிரகுமாரனுக்கு வேல் கொடுத்தருளித் தன் திருவடிச் சிறப்பைக் காட்டிய அருட்செயல் மிகப்பெரியது. சாந்தம்புத்தூரில் வில்லாற் போர்புரியும் வேடனுக்குக் கண்ணாடியில் தோன்றி அவன் செய்த தவப்பயனாக வாள் கொடுத்து அருள் செய்தான். குதிரைகளை நடத்திக் கொண்டு மேலை நாட்டிடத்தே வணிகர் கூட்டத்தினனாய்த் திறமையுடன் தானே புறப்பட்டு வந்தருளினான். இறைவனாகிய தலைவன் குதிரை வாயில் கொள்ளுப் பையைக் கட்டும் விதமாகக் கீழே இறங்கி நின்றனன். அவ்வமயம் நெருப்பையொத்த சிவந்த திருமேனியை அவன் அழகுறக் காட்டிய முறைமை மிகப் பழமையானதாகும். திருமாலோடு பிரமனும் அளந்தறிய இயலாத எம்பெருமான், நரிகளைப் பரிகளாக்கிய நற்செயல் செய்தவன். பாண்டியனை ஆட்கொண்டு, அழகு மிகுந்த திருவடிவுடன் அவனுக்குக் குதிரைகளை விற்று அவன் தந்த திரண்ட பொருளை ஏற்றுக் கொள்ள மறுத்தவன்; அதனால் பாண்டியன்  சற்றுநேரம் செயலற்று தன் திருவருள் வழி நிற்குமாறும் செய்தனன். அங்ஙனம், அவன் பாண்டியனது உள்ளத்தை ஊக்கும் அருளொளி காட்டி நின்றது பாண்டியன் பெற்ற பண்டைய பரிசாகும். அழகிய தண்ணருள் நிறைந்த முனி வடிவினனாகி என்னை ஆட்கொண்டு  அருளியவன்; உடனே மறைந்தமையாகிய இந்திர ஜாலம் போன்ற திருவிளையாடல் (மாயம்)  காட்டிய இயல்புடையவன்; சுந்தர சாமந்தன் என்ற அன்பனுக்காக மதுரைப் பெருநகரில் வீற்றிருந்தவன்; குதிரை வீரனாகி வெளிப்போந்த அருட்செயலுக்குரியவன்; அம்மதுரை  நகரில் தனது மெய்யன்பினள் செம்மனச் செல்வி என்னும் பிட்டு வாணிச்சி பொருட்டு உரிமையாக மண் சுமந்து அருளிய பண்பினன் அவன். உத்தர கோச மங்கை எனும் பதியில் எழுந்தருளி, போதக ஆசிரிய வடிவம்  காட்டி அருள் செய்தவன் எம்பெருமான், திருப்பூவணம் எனும் திருப்பதியில் சித்தர் வடிவம் கொண்டு அடியவர் வீட்டில் எழுந்தருளினான். ஆங்கு அவன், தன் பொன் வண்ணத்  திருவடிவத்தை அடியவருக்குக் காண்பித்து அருளினான். மேலும், பாண்டியனுக்குக்  குதிரை கொண்டு வரும் வழியில் திருவாதவூருக்கு வந்து, தங்கி, தன் திருவடிச் சிலம்பின்  ஓசையை நன்கு காண்பித்த நயமும் அவனது அருட்சிறப்பேயாகும்: அழகு நிரம்பிய திருப்பெருந்துறையில் கலைவல்லவனாகி அருள் புரிந்து பின் பெருமை பொருந்திய ஒளிப்பிழம்பில் மறைந்ததுவும் அவன் செய்த தந்திரமாகும். பூவலம் என்னும் திருப்பதியில் சிறப்புடன் விளங்கியருளி, தன் அடியவரின் தீவினை தொலைத்தது அவன் திறனாகும். பாண்டியன் ஒருவன் போர் செய்த காலத்து அவன் படைகளுக்குத் தாகவிடாய் தீர்த்தற்பொருட்டு, தானே தண்ணீர்ப் பந்தல்  அமைத்தான் இறைவன். அப்பந்தலில் அமர்ந்து நல்ல நீரை வழங்கி, பணியாளனாகப்  பேருபகாரம் செய்து பாண்டியனுக்கு வெற்றி கிடைக்கும்படியாகச் செய்தனன். முன்னொரு  காலம் திருவெண்காட்டில் விருந்தினனாய்க் குருந்த மரத்தடியில் அமர்ந்து அருள் செய்தான்; பட்ட மங்கை என்ற ஊரில் உரிமையுடன் வீற்றிருந்து ஆங்கு இயக்கிகள் அறுவருக்கு அட்டமா சித்திகளை அளித்த நயமும் அவனது அருட்திறமேயாகும். பாண்டியனுக்காக, சோழனுக்கு எதிராகப் போர் புரிதற் பொருட்டு குதிரைமேல் வேடனாக அச்சமயத்திற்கேற்ப வேடம் தரித்து வந்தான். மன்னன் அவனைத் தொடர்ந்து வர, காட்டினுள் சென்று மறைந்து விட்டது இறைவனது தந்திரச் செயலாகும். உண்மையைக் காட்டி விடுவதற்கு இறைவன் தான் வேண்டிய வடிவமெல்லாம் எடுக்கும் நீதிமானாகவும் விளங்குகிறான். ஓரியெனும் தலத்தில் அடியவள் ஒருத்தியை ஆட்கொள்ள விரும்பி  அவளுக்கு அருள் செய்த இனியவன்; அவள் மகிழ்ச்சியடையவும், இந்நிலவுலகம் பெருமை  அடையவும் தாலாட்டக்கூடிய பிறவாப் பெருமையுடைய குழந்தையாகிய பண்பும் அவனுடையது. பாண்டூர் என்னும் பதியில் அடியவர்க்கு விளங்குமாறு நெருங்கியிருந்து  அருள் செய்தனன். தேவூர்க்குத் தென்புறத்தே விளங்கும் தீவில் அரசியல் தன்மை  பொருந்திய திருவடிவம் கொண்டருளினான். வண்டுகள் தங்கும் பொழிலினையுடைய  திருவாரூரில் முனிவர் பலருக்கு உயர்ந்த பெரும் சிவஞானத்தைத் தந்தருளிய உபகாரி அவன். திருவிடைமருதூரில் அடியார்க்கு விளங்க வீற்றருளி தன் தூய திருவடிகளை அவர்  சென்னி மீது வைத்த கருணைத் திறம் அவனுடையதாகும். காஞ்சிபுரத்தில் தன்  இயற்கையான அருஉருவத் திருமேனியில் வீற்றிருந்தான். தம்மை வழிபட்ட உமையம்மையை இடப்பாகத்தில் அமர்த்தி வைத்துக் கொண்டது அவனது பெருஞ்சிறப்பாகும். திருவாஞ்சியம் என்னும் திருப்பதியில் சிறப்புடன் இருந்து இயற்கையில் மணமுடைய கூந்தலினையுடைய அம்மையோடு கலந்து மகிழ்ந்து இருந்ததுவும் அவன் திருவிளையாடல் ஆகும். பாண்டிய அரசன் ஒருவனுக்கு வெற்றி உண்டாக்குதற் பொருட்டு வில்வீரர் வடிவம் கொண்டு வலிமிக்க வில்லைக் கைக்கொண்டு, பல்வேறு இயல்புகளைத் தோற்றுவித்தனன் எம்பெருமான். திருக்கடம்பூரில் கோயில் கொண்டு வீற்றிருந்தனன். ஈங்கோய் மலையில் அழகுமிக்க மரகதத் திருமேனியைக் காண்பித்து அருளினான். திருவையாற்றில் பூசனைபுரியும் சைவ ஆசாரியன் வேடத்தில் தோன்றினான். திருத்துருத்தியில் அடியவர்க்கு அருள்புரியும் ஆசையுடன் வீற்றிருந்து அருளினான். திருப்பனையூரில் வேண்டுவார் வேண்டுவன ஈயும் விருப்பத்தினனாய் அமர்ந்திருந்தனன். சீகாழிப் பதியில் திருக்கோலம் காட்டி அருளினான். திருக்கழுக்குன்றத்தில் ஞானவடிவோடு தவறாது எழுந்தருளினான். திருப்புறம்பயத்தில் தருமச் செயல்கள் பல ஆற்றினான். திருக்குற்றாலத்தில் சிவலிங்க வடிவில் அருள் வழங்கினான். தனது அளவற்ற பெருமையுடைய சோதியுருவை மறைத்து அழகிய பிரணவ வடிவமான காதணியோடு ஒப்பற்ற ஞான முதல்வனாக வடிவம் கொண்டான். இந்திர ஜால  வித்தையில் பொருள்கள் எதிர்பாராது தோன்றுதல் போல திடீரென எழுந்தருளி வந்தான். எவ்வகைப்பட்டவர் இயல்பையும் தன்பாலாக்கித் தானே எல்லாமாய் விளங்கும் கருணையாளன் எம் தலைவன், சந்திர தீபமென்னும் பதியில் வானின்று இறங்கி அழகிய பாலை என்னுமிடத்தில் கலைவல்ல ஆசிரியனாய் வனப்பு நிறைந்த இயல்புடனே வீற்றிருந்து அருளினான். எல்லையற்ற ஆற்றலும் அருளும் உடைய எம்பெருமான் மந்திர நூலாகிய ஆகமம் வெளிப்பட்ட பெருமலையாகிய மகேந்திர மலையின் தலைவன். அத்தகையோன்  எங்களை ஆட்கொண்ட வகையைச் செப்பவேண்டும். வலிவும் வனப்பும் பொருந்திய  திருமேனியில் (நெற்றி, மார்பு, புயம் முதலிய இடங்களில்) திருநீற்றுக் கொடியினை  எடுப்பாக, இடையிட்டுத் தரித்து, தரிசனம் அளித்தனன். பாசமாகிய குற்றம் முழுவதையும்  ஒரு சேர, ஒரே காலத்தில் வேரறுத்துக் களையும் பேரின்பத்தையே ஆறாக அருளினான். உமையம்மையை ஒரு பாகத்தே உடைய, கைம்மாறு வேண்டாப் பேரருளாளன் அவன்.  நாத தத்துவமாகிய பெரும்பறை இடைவிடாது ஒலிப்பக் கொண்டுள்ளவன் அவன். வாசனா மலம் தாக்கா வண்ணம் அன்பர்களைத் தடுத்தாட் கொள்ளுபவன். மூவிலைச் சூலத்தைத்      திருக்கைகளிற் கொண்டருளி, உயிர்களை அநாதியே பற்றிய (இருள், வினை, மருள்), ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகைப் பாசங்களையும் வேரறுக்கவல்ல திருமேனியுடன் எழுந்தருளி உள்ளான். அறிவுக்கதிர் பரப்பும் ஒளியுருக் கொண்ட  முதல்வன். அடியாரிடம் அன்பு பூண்ட அருளாளன். அடியார் உள்ளங்கள் பக்குவமெய்தற்குப் பொருத்தமாக, அவருள்ளம் கவருமாறு செங்கழுநீர் மாலை சூடிக் காட்சி அளிப்பவன் அவன். செருக்கினால் திருமாலும் நான்முகனும் அடிமுடி தேடி  அளந்தறியவொண்ணாத சிறப்புடையவன் எம்பெருமான். தாழ்மனமுடைய அடியாரின் பொருட்டுக் குதிரையாகிய விலங்கின் மீது ஏறிவந்தது அவனது அருள் திறமேயாகும். வீடு பேற்றிற்குரிய அன்பர், திரும்பப் பிறவாத வகையாய் அருள் செய்யும் பெருமான்.  பாண்டி நாட்டைப் பழமை நாடாகக் கொண்டு மெய்யன்பராகிய பத்தர்களை பர, அபர  முத்திகளில் சேர்ப்பவன். உத்தர கோச மங்கையை ஊராகக் கொண்டவன். காரணேசுவரர்களாகிய முதல்வர்கட்குத் திருவருள் புரிந்து அதிகாரம் நல்கியதால் மகாதேவன் என்னும் திருநாமம் பெற்றவன் எம்பிரான். அடியார்க்கு ஆணவத்தை நீக்கி, பேரின்ப வாகனம் அருளிய அவனது அருட்பெரும் தன்மையே கருணை மலையாக உள்ளது. எவ்வகைப் பட்டவர்களையும், எத்தகைய பேரியல்பையும் பக்குவத்தையும் அறிந்து, அவரவர்க்கேற்ற முறைமையினால் அவரவர்களை ஆட்கொண்டு அருளுகிறான். நாய்போலும் கடையேனாகிய என்னை நன்மை மிகுந்த தில்லைப் பதியின் கண்ணே அழகு நிறை அம்பலத்தில் வந்து கலப்பாயாக என்று பணித்தான். என் வினைக்குப் பொருத்தமாக என்னை இந்நிலவுலகத்தே கழித்து ஒதுக்கி என்னை ஆட்கொண்டான். அன்றே, வீடுபேற்றுக்கு உரியவராய் தன்னுடன் போந்த அடியார்கள் தன்னுடன் வந்து சேரச் சேர அவர்களுடன் இரண்டறக் கலந்து அருளினான். அங்ஙனம் தன்னோடு கலக்கப் பெறாதவர் சிலர்  நெருப்பில் விழுந்து தன்னுடன் வந்து சேருமாறு அருளினான். சிலர் வீடெய்தும் ஆசையால் மயங்கி உயிர்நீத்து, தன்னை வந்தடைய அருளினான். இன்னும் சிலர் விரைந்து கடலிடைச் சேர்ந்து,  தலைவனே தலைவனே என்று அரற்றி, அழுது உடம்பை நீத்து, தன் திருவடி அடையவும் உதவினான்.  மற்றும் சிலர், "பதஞ்சலி முனிவர்க்கருள் புரிந்த மேலான அற்புதக் கூத்தனே" என்று தொழுது உள்ளம் ஏக்கமுற்று, அவ்வாறு ஏங்கியதன் மூலம் தன்னை அடைய வைத்து அருள் பாலித்தவன் அவன். எம்பெருமான், மந்திர ஒலிகள் பயிலும் புகழ்மிக்க கயிலை மலையின்  தலைவனாவான். எழுச்சிமிக்க பனிமலைபோல் அழகிய பொன்னொளி தவழும் புலியூராகிய  தில்லை அம்பலத்தின்கண் திருநடனம் புரிகின்றான். இனிமையான சிவந்த வாயினையுடைய உமையம்மையும், காளியம்மையும் அவனோடு கூத்து பயில்கின்றனர். அவர்கட்கு  அருள் புரிதல் பொருட்டு, தன் திருமுகத்தில் கவின் மிகுந்த புன்சிரிப்பைக் காட்டி நின்றனன். மெய்ஞ்ஞான விளக்கம் மிகுந்த தில்லைச் சிற்றம்பலத்துள் எம் வேந்தனாகிய இறைவன், தன்னை நெருங்கிய அடியாருடன் புகுந்தருளினான். எனக்கு இன்பம் மிகுமாறு பேரருள் புரிந்தருளினான்.