திருமுறை 8 · 8.001 · 1

சிவபுராணம்

அருளியவர்
மாணிக்கவாசகர்
தலம்
திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு
பாண்டியநாடு

1

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்கஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்ககோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்கஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்கஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்கபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்கபுறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்ககரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்கசிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றிதேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றிநேயத்தே நின்ற நிமல னடிபோற்றிமாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றிசீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15ஆராத இன்பம் அருளுமலை போற்றிசிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னைமுந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்திஎண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சிவிண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்றமெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலாபொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளிமெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரேஎஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானேஅஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானேமாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்றுபிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்தமறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50மறைந்திட மூடிய மாய இருளைஅறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடிமலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலைமலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55விலங்கு மனத்தால் விமலா உனக்குக்கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்நலந்தான் இலாத சிறியேற்கு நல்கிநிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டிநாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60தாயிற் சிறந்த தயாவான தத்துவனேமாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரேதேசனே தேனா ரமுதே சிவபுரனேபாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனேநேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65பேராது நின்ற பெருங்கருணைப் பேராறேஆரா அமுதே அளவிலாப் பெம்மானேஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானேநீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானேஇன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனேஆதியனே அந்தம் நடுவாகி அல்லானேஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானேகூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வேபோக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனேகாக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியேஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்றதோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்ஊற்றான உண்ணா ரமுதே உடையானேவேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்பஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமேகள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானேநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனேதில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்றுசொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
சொற்பிரிப்பு
நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க !ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்கவேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க !புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க !கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க !ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி!நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி !ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,சிந்தை மகிழச், சிவபுராணம் தன்னைமுந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்.கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்திஎண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சிவிண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்,எண் இறந்து எல்லை இலாதானே! நின் பெரும்சீர்,பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்புல் ஆகிப் , பூடு ஆய், புழுவாய் , மரம் ஆகிபல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பு ஆகிக்கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,வல்லசுரர் ஆகி ,முனிவராய், தேவராய்செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!மெய்யே உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றமெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்"ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற நுண்ணியனே!வெய்யாய் ! தணியாய் ! இயமானனாம் விமலா !பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே!எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்நாற்றத்தின் நேரியாய் ! சேயாய் ! நணியானே !மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்றுபிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் !நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் ! விண்ணோர்கள் ஏத்தமறைந்து இருந்தாய், எம்பெருமான் ! வல்வினையேன் தன்னைமறைந்திட மூடிய மாய இருளைஅறம், பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிபுறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடிமலம் சோரும் ஒன்பது வாயில் குடிலைமலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்யவிலங்கு மனத்தால், விமலா! உனக்குக்கலந்த அன்பு ஆகிக், கசிந்து உள் உருகும்நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,நிலம் தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காஅட்டிநாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெடபேராது நின்ற பெரும் கருணைப் பேராறே !ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!நீராய் உருக்கி, என் ஆர் உயிராய் நின்றானே!இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே !அன்பருக்கு அன்பனே! யாவையுமாய், அல்லையுமாம்சோதியனே! துன் இருளே தோன்றாப் பெருமையனே!ஆதியனே! அந்தம், நடு ஆகி, அல்லானே!ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!கூர்த்த மெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே !காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்றதோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவாம்தேற்றனே ! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்ஊற்றான உண் ஆர் அமுதே! உடையானே!வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்பஆற்றேன்; "எம் ஐயா! அரனே! ஓ! " என்று என்றுபோற்றி, புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமேகள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே !நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!அல்லல் பிறவி அறுப்பானே! 'ஓ' என்றுசொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,பல்லோரும் ஏத்தப் பணிந்து.
உரை

தலைவனது பெருமையை உணர்த்தும் நாமமாகிய நமச்சிவாய என்னும்  திருவைந்தெழுத்தானது என்றும் நிலை பெறுக. தலைவனது திருவருட் சத்தியானது என்றும்  விளங்குக. கண்ணை மூடி விழிக்கும் நேரமளவுங்கூட அடியேனுடைய உள்ளத்தை விட்டு  அகலாதவனுடைய திருவடிகள் வாழ்வனவாக. திருவாவடுதுறை அல்லது  திருப்பெருந்துறையில் எழுந்தருளி அடியார்க்கு மெய் உணர்த்தி ஆட்கொண்டு அருளிய  தலைமை அருட் பேராசிரியராகிய முதல்வனின் திருவடிகள் என்றும் விளங்குக. வீட்டு நூல் கூறும் தனிப்பொருளாய் நின்று இனிமை தருவானுடைய திருவடிகள், உள்ளத்தில் என்றும்  நிலை பெறுக. தன்னிலையில் ஒருவனாய், அன்பர் நினைக்கும் பல வடிவம் உடையவனாய் உலகுயிரெங்கும் தங்குவானுடைய திருவடிகள் என்றும் பொலிவு பெறுக. உய்தி கூடுதற்கு அருட்குரவனை நாடி அலைந்த மனத்தின் விரைவைத்  தொலைத்துத் திருவருள் தந்து ஆட்கொண்ட மன்னனது திருவடிகள் மேம்படுக. பிறவியை வேரறுக்க வல்ல தலைக்கோலப் பெருமானுடைய வீரச் சிலம்பு நிறைந்த திருவடிகள் சிறந்து  விளங்குக. அன்பிற்குப் புறமாய் உள்ளவர்கள் அணுக ஒண்ணாத தூரத்தில் உள்ளவனுடைய அழகிய மெல்லடிகள் வெற்றியுடன் திகழ்க . கை கூப்பித் தொழுவார் தமது நெஞ்சத்தில்  நினைந்து நினைந்து களிப்படைவதற்கு ஏதுவாகிய அரசனுடைய திருவடிகள் நிலைபெற்றுச் சிறக்க; தலை குவித்து வணங்குவாரை மேன்மை அடைவிக்கும் புகழுடையானது திருவடிகள்  வெற்றியுடன் மிளிர்க. ஆண்டவனுடைய திருவடிகள் நம்மைக் காப்பனவாக; நம் அப்பனுடைய  திருவடிகள் காக்க; ஒளி மேனியனுடைய திருவடிகள் காக்க ; மங்கலப் பொருளாகிய சிவபெருமானுடைய செவ்விய பாதங்கள் காப்பனவாக; அன்பிலே விளங்கி நின்ற  மாசில்லாதவன் திருவடிகள் காக்க; வஞ்சப் பிறவியை வேரறுக்கும் வேந்தன் திருவடிகள்  காக்க; அழகு நிரம்பிய திருப்பெருந்துறையில் வீற்றிருந்த நம் இன்பன் திருவடிகள் நம்மைக் காக்க; தெவிட்டாத இனிமையை ஆறாக நல்கும் மலைபோலும் பெருமான் நம்மைக் காக்க. சிவபெருமானாகிய முழுமுதற் கடவுள் எனது நினைவின் கண் நிலை  பெற்றிருந்த காரணத்தால், என் செயலற்று அவனது திருவருள் துணை கொண்டு அவனது  திருவடிகளைத் தொழுது இயற்றிய நல் தவத்தின் பயனாக, நெற்றிக்கண் முதல்வன் ஆசிரியனாக எழுந்தருளி வந்து தனது அருட்பார்வை நல்கவே சிவ ஞானம் பெற்று,  மனத்தாற்கிட்ட ஒண்ணாத மாறிலா அழகு நிறைந்த அவனது திருவடிகளைப் பணிந்து, எனது நெஞ்சம் மகிழ்ச்சியடையவும், முற்பிறவியில் செய்த எனது ஊழ்வினை முற்றிலும்  ஒழிந்து போகவும், சிவனது பழமையான அருட்செயல் முறையினை யான் சொல்லுவேன், மேலுள்ள வானுலகெங்கும் நிறைந்தும், கீழுள்ள மண்ணுலகெங்கும் நிறைந்தும், அவற்றிற்கு அப்பாலுமாய் விளங்குவோனே, எங்கும் திகழ்கின்ற ஒளி மேனியனே, கணிக்கப்படும் சுட்டுப் பொருள் அனைத்தையும் கடந்து நிற்கும் அளவிலாத் தன்மையனே, நினது ஒப்புயர்வற்ற பெரிய புகழினை, அறிவு விளக்கத்தைத் தடை  செய்யும் தீயவினை உடையேன் எடுத்தோதும் வகை யாதும் தெரியாதேன். எம்பெருமான்! கல்லாய்ப் புல்லாகிப் பூடாய் மரமாகிச்  செல்லாஅ நின்ற இத் தாவரத்துள், புழுவாய்ப் பாம்பாய்ப் பறவையாய்ப் பல்விருகமாகி மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி  முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இச்சங்கமத்துள் எல்லாப் பிறப்பும்  பிறந்திளைத்தேன், ஆணவ இருளில் கிடந்த யான் உடம்பெடுத்து உழன்று, பக்குவம் வந்த காலை உன் திருவடியைக் கூடிப் பிழைக்கும் வண்ணம், எனது நெஞ்சத்துள், ஐந்தொழிற்கும் காரணமான ஓம் என்ற முதுமொழி வடிவாய் நின்ற உண்மையனே! கட்டு இலாதவனே, அறவுருவாகிய காளை மேல் எழுந்தருள்பவனே, அறிவு நூல்கள் நின்னுடைய பேரளவினைக் காணமாட்டாது. ஐயனே என்று அலற, அவற்றின் எல்லையைக் கடந்து உயர்ந்தும் தாழ்ந்தும் விரிந்தும் விளங்குகின்ற பெருமையனாய் அவற்றால் காணவொண்ணாத நுட்பப் பொருளாய் எவற்றினும் கலந்துள்ளவனே, பிறவியில் உழலாது நிலைப்பாயிருப்பதற்கு ஏது ஆய உனது அழகிய திருப்பாதங்களை இப்போது காணப் பெற்றுப் பாச நீக்கம் அடைந்தேன், வெப்பமுடையவனே, குளிர்ச்சியுடையவனே, அத்துவிதக் கலப்பால்  உயிரோடு தொடர்புடைய மாசிலாதவனே. யான் பற்றிய நன்மையிலாதனவும்  நிலையாதனவும் ஆகிய இவைகள் எல்லாம் என்னை விட்டு நீங்கி ஒழியுமாறு குருவாய் வந்து  அருள் புரிந்து மெய்யறிவாய் விளங்குகின்ற உண்மை ஒளியே, எவ்வகையான அறிவும்  விளங்கப் பெறாத எனக்குப் பேரறிவின் பயனாய்ப் பேரின்பம் ஈந்தருளும் பெருந்தன்மையனே, பொய்யை மெய்யென உணரும் திரிபுணர்ச்சியை நீங்கச் செய்யும் தூய அறிவானவனே. படைக்கப்படுதல், ஒருகால அளவாக நிலைபெறுத்தப் படுதல், ஒடுக்கப்படுதல் என்பன இல்லாதவனே, எல்லா உலகங்களையும் நீயே படைப்பாய், நிறுத்துவாய், ஒடுக்குவாய். மலபரிபாகம் வரும்வரை என்னைப் பிறவியில் செலுத்துவாய். உய்தி கூடுங்காலம் வருங்கால் நின் திருத்தொண்டாகிய நற்றவத்தில் புகுவிப்பாய். பின்னர் பிறவி அறுதற்கு ஏதுவாய நின் திருவருளைத் தருவாய். பூவின் மணம்போல் நுட்பமாயிருப்பவனே, நீ தூரத்திலிருப்பவனும் ஆவாய், அருகே இருப்பவனுமாவாய். எவ்வாறெனில் சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்கின்ற இரகசியப் பொருளாயுள்ளாய். எனினும், நின் மெய்யடியார்கள் உள்ளத்திலே சிறப்பாக விளங்கிப் பசுவில் இருந்து உடன் கறந்த புனிதமான பாலோடு சருக்கரையும் நெய்யும் கலந்து இனிமை பயத்தாற்போல், இன்பம் ஊற்றெடுக்குமாறு நிலை பெற்றருளி எடுத்த பிறவியை ஒழிக்கும் எங்கள் பிரானாய் உள்ளாய். எங்கள் பிரானே, பூதங்களைத் திருமேனியாகக் கொண்ட நீ அவற்றிற்குரிய ஐந்து நிறங்களையும் உடையாய் ; அன்பர்க்குப் பூத நிறங்களோடு தோன்றும் நீ செருக்குடைய வானோர் உன்னைத் துதித்த போதும், நீ அவர்கட்குத் தோன்றாது ஒளித்திருந்தனை. தத்துவனே! குற்றமிலாதானே! கொடிய வினையேனது அறிவிச்சை செயல்கள் மறையும்படி மூடிய இருளாகிய ஆணவம் மாயும் வண்ணம், நல்வினை, தீவினை என்னும் காண்டற்கும் கடத்தற்கும் அரிய இருவகைக் கயிறுகளிலே பிணிப்புற்றுத் தன்னகத்து எங்குமுள்ள புழுக்களும், மாசுகளும், புறத்தேயுள்ள தோலினாற் போர்த்து மூடப் பெற்றுத் தனது நவத்துவாரங்களிலும் அழுக்கு வடியும் குடிலை எனக்குக் கொடுத்தருளி, யான் கலங்கும்படி ஐம்பொறியறிவு தத்தம் வழியில் என்னை இழுத்துத் தந்திரமாகக் கேடு செய்தலினாலும், அவற்றின் சார்பாய் நின்று உன்னை அணுகவொட்டாது தடை செய்யுமனத்தின் இடர்ப்பாட்டினாலும், உன்னோடு கலந்து உறவாகி உள்ளமுருகி,  அழுது தொழுதலாகிய நற்செயல் யாதுமில்லாத சிறியனேன் பொருட்டு, இந்நில வுலகத்தே அருட்குருவாய் எழுந்தருளி வந்து உனது புகழ்மிக்க திருவடிகளை எனக்குக் காட்டியருளி நாயினும் கீழ்ப்பட்டவனாய்க் கிடந்த அடியனேற்குத் தாயினும் மேம்பட்ட கருணை வடிவான மெய்யனே. குற்றமில்லாத ஒளியானது இதழ்களாக மலரப்பெற்ற பூப்போன்ற ஒளி மேனியனே, குரு முதல்வனே, இனிமை நிறைந்த பிறவி மருந்தே சிவலோகனே, கட்டுப்படுதற்கு ஏதுவாகிய அவாவினை வேரறுத்து அறிவினை விரிவுறச் செய்யும் மேலோனே, காதலொடு கூடிய இரக்கம் வைத்து என் மனத்துள்ள களங்கம் ஒழியும்படி எனது உள்ளத்தை விட்டு நீங்காது விளங்கிய பேரருள் வடிவாகிய வற்றாது ஓடும் பெரிய ஆறு போன்றவனே, உண்ண உண்ணத் தெவிட்டாத இன்னமுதம் போன்றவனே, அளவிலடங்காத பெருமை உடையவனே, ஆய்ந்து அறியாதார் உள்ளத்திலிருந்தும் அவர்கட்குப் புலனாகாத சோதியே, எனது கல் மனத்தைக் கரைத்துத் தண்ணீராக உருகும்படி செய்து பிரிவாற்ற எண்ணாத உயிர்க்குயிராய் நின்றவனே. உலகுயிர்களினால் வரும் இன்பமும் துன்பமுமில்லாதவனே, அன்பர் பொருட்டு அவற்றையுடையவனே, கலப்பினால் எப்பொருளுமாய், பொருள் தன்மையால் ஒன்றும் அல்லாதவனாயும் இருக்கின்ற அறிவுருவனே, அடர்ந்த இருள் போன்றவனே,  தோன்றாத பெருமையை உடையவனே, எப்பொருளின் தோற்றத்திற்கும் மூலகாரணனே, எவற்றையும் ஒடுக்கும் இறுதிக் கடவுளாயும், எப்பொருளினும், உள்ளீடாயும் இருந்து, தனக்கொரு முதலும் முடிவும் நடுவும் இல்லாதவனே, என்னை வலிய இழுத்து ஆட்கொண்டருளிய எங்கள் அப்பனாகிய பெருந்தன்மையனே, கூரிய மெய்யறிவினாலே  கேட்டுக் சிந்தையுட்கொண்டு தெளிந்து உணர்வாருடைய உள்ளத்தே சுட்டிறந்தறியப்படும்  பொருளே சுட்டப்படாத அநுபவப் பொருளே, நுகரப்படும் நுட்பப் பொருளே, ஒன்றை  நாடிப் போதலும் அதனை யடைதலும், அதன் கண் நின்று மீளுதலுமில்லாத நன்மையனே, உயிர்களை உய்தி கூட்டுவிக்கும் எங்கள் அரசனே, நீ அங்ஙனம் செய்வதை உயிர்கள் தமது  அறிவாற் காணுதற்கரிய பெரிய அறிவே. ஆற்றின் தூய புனல் போலத் துன்பங்கலவாத இன்பப் பெருக்கே, அப்பனே,  மாறுபாடு அடைகின்ற உலகத்திற்கு அப்பாற் பட்டவனாய் நிலைபெற்ற விளக்கமுடைய  கதிரொளிப் பிழம்பாய், மொழியால் உணர்த்துதற்கு அரிய நுட்ப அனுபவமாய், உலகத்தே  வெவ்வேறாகக் காணப்பட்டு வந்து முடிவாக அறிவாய்த் தெளியப்படும் தெள்ளியனே , கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவிடத்தே விளங்கும் தெளிவான பரம்பொருளே, எனது  உள்ளத்திலே ஊற்றாகத் ததும்பிய உண்ணத் தெவிட்டாத அமுதமே, கட்டிலும் வீட்டிலும் என்னை அடிமையாக உடையவனே. எங்கள் தலைவனே, வெவ்வேறு திரிபுகளுடைய ஊனுடம்பினுள்ளே கிடத்தலை யான் பொறுக்கமாட்டேன். அவ்வுடம்பைத் தொலைக்கவல்ல அரனே, ஓலம் என்று கூவிக்கூவி, வழிபட்டுப் பாடி நினைத்திருந்து நிலையாதவற்றின் பற்றற்று நிலைப்பொருளோடு ஒன்று பட்டவர்கள் மீண்டும் இவ்வுலகில் வந்து வினைக்கீடாய் பிறப்பினை அடையாமே, வஞ்சராகிய ஐம்புல அவாக்களுக்கு இடமாகிய, சிறு மனையாய உடம்பை முற்றிலும் தொலைக்கும் திறமையனே, நடு இரவு போன்ற, முழுதும் முடிவுற்ற காலத்தே தனது திருக்கூத்தினைப் பழகிப் பின் தோற்றக்காலத்தே பெருநடம் புரியும் முதல்வனே, நிலவுலகில் தில்லை மன்றினுள் ஆடுவோனே, தெற்கின் கண் உள்ள பாண்டி நாட்டை உடையவனே, துயருடைய இப்பிறப்பினை ஒழிப்பானே ஓலம் என்று  சொல்லாற் கூறவொண்ணாதானை வழுத்தி. அவனது திருவருள் வயமாய் நின்று மொழிந்த இக்கலி வெண்பாட்டின் பயன் தெரிந்து ஓதுபவர்கள் சிவலோகத்தினுள்ளே புகுவார்கள். அங்கு சிவ பெருமான்      திருவடிக் கீழ் அன்பர் பலரும் வணங்கிப் புகழுமாறு இருப்பார்கள்.