திருமுறை 7 · 7.090 · 10

கோயில்

அருளியவர்
சுந்தரர்
பண்
குறிஞ்சி
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந்தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும்பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
மடித்து ஆடும்‌ அடிமைக் கண்‌ அன்றியே, மனனே! நீ வாழும்‌ நாளும்தடுத்து ஆட்டி, தருமனார் தமர்‌ செக்கில் ‌ இடும்போது தடுத்து ஆட்கொள்வான்‌;கடுத்து ஆடு கரதலத்தில்‌ தமருகமும்‌, எரி அகலும்‌; கரிய பாம்பும்‌பிடித்து ஆடி; புலியூர்ச்‌ சிற்றம்பலத்து எம் பெருமானைப்‌ பெற்றாம்‌ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பேராது காமத்திற் சென்றார்போல் அன்றியே பிரியா துள்கிச்சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந் திருவி னாரைஓராது தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
பேராது காமத்தில்‌ சென்றார்‌ போல் ‌ அன்றியே, பிரியாது உள்கி,சீர்‌ ஆர்ந்த அன்பராய்‌, சென்று, முன் ‌ அடி வீழும்‌ திருவினாரை,ஓராது தருமனார் தமர்‌ செக்கில் ‌ இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்‌,பேராளர்‌ புலியூர்ச்‌ சிற்றம்பலத்து எம் பெருமானைப்‌ பெற்றாம்‌ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து நாளும் உள்கிப்பிரியாத அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழுஞ் சிந்தை யாரைத்தரியாது தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
நரியார் தம்‌ கள்ளத்தால்‌ பக்கு ஆனபரிசு ஒழிந்து, நாளும்‌ உள்கி,பிரியாத அன்பராய்‌, சென்று, முன் ‌ அடி வீழும்‌ சிந்தையாரை,தரியாது தருமனார் தமர்‌ செக்கில் ‌ இடும் போது, தடுத்து ஆட்கொள்வான்‌,பெரியோர்கள்‌ புலியூர்ச்‌ சிற்றம்பலத்து எம் பெருமானைப்‌ பெற்றாம்‌ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட் டறுப்பிப் பானைஅருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங் காவல் பூண்டஉரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும்பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
கருமை ஆர்‌ தருமனார்‌ தமர்‌ நம்மைக் ‌ கட்டிய கட்டு அறுப்பிப்பானை;அருமை ஆம்‌ தன்‌ உலகம்‌ தருவானை; மண்ணுலகம்‌ காவல்‌ பூண்டஉரிமையால்‌ பல்லவர்க்குத்‌ திறை கொடா மன்னவரை மறுக்கம்‌ செய்யும்‌,பெருமை ஆர்‌ புலியூர்ச்‌ சிற்றம்பலத்து எம் பெருமானைப்‌ பெற்றாம்‌ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக் கண்ணி யானைஉருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்துகந் துலவா இன்பம்தருவானைத் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
கருமானின்‌ உரி ஆடை, செஞ்சடை மேல்‌ வெண் மதியக் கண்ணியானை,உரும்‌ அன்‌ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம்‌தருவானை, தருமனார் தமர்‌ செக்கில் ‌ இடும்போது தடுத்து ஆட்கொள்வான்‌,பெருமானார்‌, புலியூர்ச்‌ சிற்றம்பலத்து எம் பெருமானைப்‌ பெற்றாம்‌ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம்எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே நம்மை நாளும்பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி பாவந் தீர்க்கும்பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
உய்த்து ஆடித்‌ திரியாதே, உள்ளமே! ஒழி கண்டாய்‌, ஊன் கண்‌ ஓட்டம்‌!"எத்தாலும்‌ குறைவு இல்லை” என்பர் காண்‌; நெஞ்சமே! நம்மை நாளும்‌பைத்து ஆடும்‌ அரவினன்‌, படர் சடையன்‌, பரஞ்சோதி, பாவம்‌ தீர்க்கும்‌பித்தாடி, புலியூர்ச்‌ சிற்றம்பலத்து எம் பெருமானைப்‌ பெற்றாம்‌ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கு மூர்த்தி என்னப்பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போகவிட்டானை மலைஎடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும்‌ மூர்த்தி என்னப்‌பட்டானை, பத்தராய்ப்‌ பாவிப்பார்‌ பாவமும்‌ வினையும்‌ போகவிட்டானை, மலை எடுத்த இராவணனைத்‌ தலை பத்தும்‌ நெரியக்‌ காலால்‌தொட்டானை, புலியூர்ச்‌ சிற்றம்பலத்து எம் பெருமானைப்‌ பெற்றாம்‌ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா கருத கிற்றார்க்கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே நம்மைநாளுஞ்செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
கல்‌ தானும்‌ குழையுமாறு அன்றியே, கருதுமா கருத கிற்றார்க்கு,"எற்றாலும்‌ குறைவு இல்லை” என்பர் காண்‌; உள்ளமே! நம்மை நாளும்‌செற்று ஆட்டித்‌ தருமனார் தமர்‌ செக்கில் ‌ இடும்போது தடுத்து ஆட்கொள்வான்‌,பெற்றேறி, புலியூர்ச்‌ சிற்றம்பலத்து எம் பெருமானைப்‌ பெற்றாம்‌ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே நம்மை நாளுந்தாடுடைய தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்தபீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
நாடு உடைய நாதன் பால்‌ நன்று என்றும் ‌ செய்‌, மனமே! நம்மை நாளும்‌,!தாடு உடைய தருமனார் தமர்‌ செக்கில் ‌ இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்‌,மோடு உடைய சமணர்க்கும்‌, முடை உடைய சாக்கியர்க்கும்‌, மூடம்‌ வைத்த,பீடு உடைய புலியூர்ச்‌ சிற்றம்பலத்து எம் பெருமானைப்‌ பெற்றாம்‌ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன் பைங்கண் ஏற்றன்ஊரூரன் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
பார்‌ ஊரும்‌ அரவு அல்குல்‌ உமை நங்கை அவள்‌ பங்கன்‌; பைங்கண்‌ ஏற்றன்‌ ;ஊர் ஊரன்‌; தருமனார் தமர்‌ செக்கில் ‌ இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்‌ ;ஆரூரன்‌ தம்பிரான்‌; ஆரூரன்‌; மீ கொங்கில்‌ அணி காஞ்சிவாய்ப்‌பேரூரர் பெருமானைப்‌ புலியூர்ச்‌ சிற்றம்பலத்தே பெற்றாம்‌ அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.