திருமுறை 7 · 7.079 · 10

திருப்பருப்பதம்

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டபாடை
தலம்
பருப்பதம்
நாடு
வடநாடு

1

மானும்மரை இனமும்மயில் இனமுங்கலந் தெங்குந்தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப்பூமாமரம் உரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத்தேமாம்பொழில் நீழல்துயில் சீபர்ப்பத மலையே.
சொற்பிரிப்பு
மானும்‌, மரை இனமும்‌, மயில் ‌இனமும்‌, கலந்து எங்கும்‌தாமே மிக மேய்ந்து தடஞ் ‌ சுனை நீர்களைப்‌ பருகி,பூ மா மரம்‌ உரிஞ்சி, பொழில் ‌ஊடே சென்று, புக்கு,தேமாம் பொழில்‌ நீழல்‌ துயில் ‌ சீ பர்ப்பத மலையே .
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள்மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட மலங்கித்தன களிற்றைஅழைத்தோடியும் பிளிறீயவை அலமந்துவந் தெய்த்துத்திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ் சீபர்ப்பத மலையே.
சொற்பிரிப்பு
மலைச்‌ சாரலும்‌ பொழில்‌ சாரலும் ‌ புறமே வரும்‌ இனங்கள்‌மலைப்பால்‌ கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி, தன களிற்றைஅமைத்து ஓடியும்‌, பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து,திகைத்து ஓடி, தன்‌ பிடி தேடிடும் ‌ சீ பர்ப்பத மலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மன்னிப்புனங் காவல்மட மொழியாள்புனங் காக்கக்கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்கதிர் கொய்யஎன்னைக்கிளி மதியாதென்று எடுத்துக்கவண் ஒலிப்பத்தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே.
சொற்பிரிப்பு
மன்னிப்‌ புனம்‌ காவல்‌ மட மொழியாள்‌ புனம்‌ காக்க, iகன்னிக் கிளி வந்து கவைக் ‌ கோலிக்‌ கதிர்‌ கொய்ய,என்னைக்‌ கிளி மதியாது என எடுத்துக்‌ கவண்‌ ஒலிப்ப,தென்‌ நல்‌ கிளி திரிந்து ஏறிய சீ பர்ப்பத மலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மையார்தடங் கண்ணாள்மட மொழியாள்புனங் காக்கச்செவ்வேதிரிந் தாயோவெனப் போகாவிட விளிந்துகைபாவிய கவணால்மணி எறியஇரிந் தோடிச்செவ்வாயன கிளிபாடிடுஞ் சீபர்ப்பத மலையே.
சொற்பிரிப்பு
மை ஆர்‌ தடங்கண்ணாள்‌ மட மொழியாள்‌ புனம்‌ காக்கச்‌செவ்வே திரிந்து "ஆ ஓ!” எனப் ‌ போகாவிட, விளிந்து,கை பாவிய கவணால்‌ மணி எறிய இரிந்து ஓடிச்‌செவ்வாயன கிளி பாடிடும் ‌ சீ பர்ப்பத மலையே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலிற் றிரியத்தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கிமானக்குற அடல்வேடர்கள் இலையாற்கலை கோலித்தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ் சீபர்ப்பத மலையே.
சொற்பிரிப்பு
ஆனைக்குலம்‌ இரிந்து ஓடி, தன் ‌ பிடி சூழலில்‌ திரிய,தானப்‌ பிடி செவி தாழ்த்திட, அதற்கு மிக இரங்கி,மானக்‌ குற அடல்‌ வேடர்கள் ‌ இலையால்‌ கலை கோலி,தேனைப்‌ பிழிந்து இனிது ஊட்டிடும் ‌ சீ பர்ப்பத மலையே .
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மாற்றுக்களி றடைந்தாயென்று மதவேழங்கை யெடுத்துமூற்றித்தழல் உமிழ்ந்தும்மதம் பொழிந்தும்முகஞ் சுழியத்தூற்றத்தரிக் கில்லேனென்று சொல்லிஅயல் அறியத்தேற்றிச்சென்று பிடிசூளறுஞ் சீபர்ப்பத மலையே.
சொற்பிரிப்பு
மாற்றுக்‌ களிறு அடைந்தாய்‌ என்று மத வேழம்‌ கை எடுத்து,மூற்றித்‌ தழல்‌ உமிழ்ந்தும்‌ மதம் ‌ பொழிந்தும்‌ முகம்‌ சுழிய,'தூற்றத்‌ தரிக்கில்லேன்‌' என்று சொல்லி அயல்‌ அறியத்‌தேற்றிச்‌ சென்று, பிடி சூள்‌ அறும் ‌ சீ பர்ப்பத மலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அப்போதுவந் துண்டீர்களுக் கழையாதுமுன் னிருந்தேன்எப்போதும்வந் துண்டாலெமை எமர்கள்சுழி யாரோ*இப்போதுமக் கிதுவேதொழில் என்றோடியக் கிளியைச்செப்பேந்திள முலையாள்எறி சீபர்ப்பத மலையே.*சுளியாரோ
சொற்பிரிப்பு
அப்போது வந்து உண்டீர்களுக்கு, அழையாது முன்‌ இருந்தேன்‌;எப்போதும்‌ வந்து உண்டால்‌, எமை எமர்கள்‌ சுழியாரோ? *இப்போது உமக்கு இதுவே தொழில்‌ என்று ஓடி, அக்‌ கிளியைச்‌செப்பு ஏந்து இளமுலையாள்‌ எறி சீ பர்ப்பத மலையே .*சுளியாரோ
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

திரியும்புரம் நீறாக்கிய செல்வன்றன கழலைஅரியதிரு மாலோடயன் றானும்மவர் அறியார்கரியின்னினம் ஓடும்பிடி தேனுண்டவை களித்துத்திரிதந்தவை திகழ்வாற்பொலி சீபர்ப்பத மலையே.
சொற்பிரிப்பு
திரியும்‌ புரம்‌ நீறு ஆக்கிய செல்வன் தன கழலைஅரிய திருமாலோடு அயன் தானும்‌ அவர்‌ அறியார்‌;கரியின்‌ இனமோடும்‌ பிடி தேன்‌ உண்டு அவை களித்துத்‌திரிதந்தவை, திகழ்வால்‌ பொலி சீ பர்ப்பத மலையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஏனத்திரள் கிளைக்கஎரி போலமணி சிதறஏனல்லவை மலைச்சாரலிற் றிரியுங்கர டீயும்மானும்மரை இனமும்மயில் மற்றும்பல வெல்லாந்தேனுண்பொழில் சோலைமிகு சீபர்ப்பத மலையே.
சொற்பிரிப்பு
ஏனத்திரள்‌, கிளைக்க , எரி போல மணி சிதற,ஏனல்‌ அவை மலைச்சாரல்‌ இற்று இரியும்‌ கரடீயும்‌,மானும்‌, மரை இனமும்‌, மயில் ‌ மற்றும்‌, பல எல்லாம்‌,தேன்‌ உண்‌ பொழில்‌ சோலை மிகு சீ பர்ப்பத மலையே,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூரன்செல்லல்லுற அரியசிவன் சீபர்ப்பத மலையைஅல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார்ஒல்லைச்செல உயர்வானகம் ஆண்டங்கிருப் பாரே.
சொற்பிரிப்பு
நல்லார்‌ அவர் பலர்‌ வாழ் தரு வயல்‌ நாவல ஊரன்‌செல்லல்‌ உற அரிய சிவன்‌ சீ பர்ப்பத மலையைஅல்லல்‌ அவை தீரச்‌ சொன தமிழ் மாலைகள்‌ வல்லார்‌ஒல்லைச்‌ செல, உயர் வானகம் ‌ ஆண்டு அங்கு இருப்பாரே,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.