திருமுறை 7 · 7.060 · 10

திருவிடைமருதூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கேசி
தலம்
இடைமருதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற் கைப்பர் பாழ்புக மற்றது போலப்பழுது நான்உழன் றுள்தடு மாறிப் படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்அழுது நீயிருந் தென்செய்தி மனனே அங்க ணாஅர னேயென மாட்டாஇழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தைபி ரானே.
சொற்பிரிப்பு
கழுதை குங்குமம் தான்‌ சுமந்து எய்த்தால்‌, கைப்பர்‌, பாழ்‌ புக; மற்று அது போலப்‌பழுது நான்‌ உழன்று உள்‌ தடுமாறிப்‌ படு சுழித் தலைப்‌பட்டனன்‌; எந்தாய்‌!அழுது நீ இருந்து என்‌ செய்தி? மனனே! “அங்கணா! அரனே!” என மாட்டாஇழுதையேனுக்கு ஓர்‌ உய்வகை அருளாய்‌ இடைமருது உறை எந்தை பிரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன் அஞ்சி னேன்நம னாரவர் தம்மைஉரைப்பன் நானுன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாதஇரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தைபி ரானே.
சொற்பிரிப்பு
நரைப்பு மூப்பொடு பிணி வரும்‌, இன்னே; நன்றி இல்‌ வினையே துணிந்து எய்த்தேன்‌;அரைத்த மஞ்சள்‌அது ஆவதை அறிந்தேன்‌; அஞ்சினேன்‌, நமனார்‌ அவர் தம்மை;உரைப்பன்‌, நான்‌ உன சேவடி சேர; உணரும்‌ வாழ்க்கையை ஒன்று அறியாதஇரைப்பனேனுக்கு ஓர்‌ உய்வகை அருளாய்‌ இடைமருது உறை எந்தை பிரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்என்னெ னக்கினி இற்றைக்கு நாளை என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்முன்ன மேஉன சேவடி சேரா மூர்க்க னாகிக் கழிந்தன காலம்இன்னம் என்றனக் குய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தைபி ரானே.
சொற்பிரிப்பு
புல்‌ நுனைப்‌ பனி வெங்கதிர்‌ கண்டால்‌ போலும்‌ வாழ்க்கை பொருள்‌ இலை; நாளும்‌என்‌ எனக்கு? இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர்‌ உற்றனன்‌; எந்தாய்‌!முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன்‌ ஆகிக்‌ கழிந்தன, காலம்‌;இன்னம்‌ என் தனக்கு உய்வகை அருளாய்‌ இடைமருது உறை எந்தை பிரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய மூர்க்க னாகிக் கழிந்தன காலம்சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன் சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்அந்தி வெண்பிறை சூடும்எம் மானே ஆரூர் மேவிய அமரர்கள் தலைவாஎந்தை நீயெனக் குய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தைபி ரானே.
சொற்பிரிப்பு
முந்திச்‌ செய்வினை இம்மைக்கண்‌ நலிய, மூர்க்கன்‌ ஆகிக்‌ கழிந்தன, காலம்‌;சிந்தித்தே மனம்‌ வைக்கவும்‌ மாட்டேன்‌; சிறுச்‌ சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்‌;அந்தி வெண்பிறை சூடும்‌ எம்மானே! ஆரூர்‌ மேவிய அமரர்கள் தலைவா!எந்தை! நீ எனக்கு உய்வகை அருளாய்‌- இடைமருது உறை எந்தை பிரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள் ஐவ ரும்புர வாசற ஆண்டுகழித்துக் காற்பெய்து போயின பின்னைக் கடைமு றைஉனக் கேபொறை ஆனேன்விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தைபி ரானே.
சொற்பிரிப்பு
அழிப்பர்‌, ஐவர்‌ புரவு உடையார்கள்‌: ஐவரும்‌ புரவு ஆசு அற ஆண்டு,கழித்து, கால்‌ பெய்து, போயின பின்னை, கடைமுறை உனக்கே பொறை ஆனேன்‌;விழித்துக்‌ கண்டனன்‌, மெய்ப்பொருள் தன்னை; வேண்டேன்‌, மானுட வாழ்க்கை, ஈது ஆகில்‌;இழித்தேன்‌; என் தனக்கு உய்வகை அருளாய்‌ இடைமருது உறை எந்தை பிரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக் கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்கற்றி லேன்கலை கள்பல ஞானங் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன் பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்எற்று ளேன்எனக் குய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தைபி ரானே.
சொற்பிரிப்பு
குற்றம் தன்னொடு குணம் பல பெருக்கி, கோல நுண்‌ இடையாரொடு மயங்கி,கற்றிலேன்‌ , கலைகள் பல ஞானம்‌; கடிய ஆயின கொடுமைகள்‌ செய்தேன்‌;பற்றல்‌ ஆவது ஓர்‌ பற்று மற்று இல்லேன்‌; பாவியேன்‌ பல பாவங்கள்‌ செய்தேன்‌;எற்று உளேன்‌? எனக்கு உய்வகை அருளாய்‌ இடைமருது உறை எந்தை பிரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக் குற்றஞ் செற்றம் இவைமுத லாகவிடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும் வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்லநடுக்கம் உற்றதோர் மூப்புவந் தெய்த நமன்த மர்நர கத்திடல் அஞ்சிஇடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தைபி ரானே.
சொற்பிரிப்பு
கொடுக்க கிற்றிலேன்‌, ஒண்‌ பொருள் தன்னை; குற்றம் செற்றம்‌ இவை முதல்‌ஆக,விடுக்க கிற்றிலேன்‌, வேட்கையும்‌ சினமும்‌; வேண்டில்‌, ஐம்புலன்‌ என்‌ வசம்‌ அல்ல;நடுக்கம்‌ உற்றது ஓர்‌ மூப்பு வந்து எய்த, நமன்தமர்‌ நரகத்து இடல்‌ அஞ்சி,இடுக்கண்‌ உற்றனன்‌; உய்வகை அருளாய்‌ இடைமருது உறை எந்தை பிரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஐவ கையர் அரையரவ ராகி ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்அவ்வ கையவர் வேண்டுவ தானால் அவர வர்வழி ஒழுகிநான் வந்துசெய்வ கையறி யேன்சிவ லோகா தீவ ணாசிவ னேயெரி யாடீஎவ்வ கையெனக் குய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தைபி ரானே.
சொற்பிரிப்பு
ஐவகையர்‌ அரையர்‌ அவர்‌ ஆகி, ஆட்சி கொண்டு, ஒரு கால்‌ அவர்‌ நீங்கார்‌;அவ்‌வகை அவர்‌ வேண்டுவது ஆனால்‌, அவர்‌ அவர் வழி ஒழுகி, நான்‌ வந்துசெய்வகை அறியேன்‌; சிவலோகா! தீவணா! சிவனே! எரி ஆடீ!எவ்‌வகை, எனக்கு உய்வகை? அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஏழை மானுட இன்பினை நோக்கி இளைய வர்வலைப் பட்டிருந் தின்னம்வாழை தான்பழுக் கும்நமக் கென்று வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம் போக மும்பொருள் ஒன்றறி யாதஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தைபி ரானே.
சொற்பிரிப்பு
ஏழை மானுட இன்பினை நோக்கி, இளையவர்‌ வயப்பட்டு இருந்து, “இன்னம்‌வாழை தான்‌ பழுக்கும்‌, நமக்கு” என்று வஞ்ச வல்வினையுள்‌ வலைப்பட்டு,கூழை மாந்தர் தம்‌ செல்கதிப்‌ பக்கம்‌, போகமும்‌ பொருள்‌ ஒன்று அறியாதஏழையேனுக்கு ஓர்‌ உய்வகை அருளாய்‌ இடைமருது உறை எந்தை பிரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும்இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல் இடைம ருதுறை எந்தைபி ரானைஉரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே.
சொற்பிரிப்பு
அரைக்கும்‌ சந்தனத்தோடு அகில்‌ உந்தி ஐவனம்‌ சுமந்து ஆர்த்து இரு பாலும்‌இரைக்கும்‌ காவிரித்‌ தென்கரை தன் மேல்‌ இடைமருது உறை எந்தை பிரானை,உரைக்கும்‌ ஊரன்‌ ஒளி திகழ்‌ மாலை, உள்ளத்தால்‌ உகந்து ஏத்தவல்லார்கள்‌,நரைப்பு மூப்பொடு நடலையும்‌ இன்றி, நாதன் சேவடி நண்ணுவர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.