திருமுறை 7 · 7.052 · 10

திருவாலங்காடு

அருளியவர்
சுந்தரர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
ஆலங்காடு
நாடு
தொண்டைநாடு

1

முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ளுமைபங்காசித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமேபத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய னூர்மேயஅத்தா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
சொற்பிரிப்பு
முத்தா! முத்தி தர வல்ல முகிழ் மென்முலையாள்‌ உமை பங்கா!சித்தா! சித்தித்‌ திறம்‌ காட்டும்‌ சிவனே! தேவர் சிங்கமே!பத்தா! பத்தர் பலர்‌ போற்றும் ‌ பரமா! பழையனூர்‌ மேயஅத்தா! ஆலங்காடா! உன் ‌ அடியார்க்கு அடியேன்‌ ஆவேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமேமெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளேபையா டரவம் அரைக்கசைத்த பரமா பழைய னூர்மேயஐயா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
சொற்பிரிப்பு
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் தன்னைப்‌ போகாமே,மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா! மெய்யர்‌ மெய்ப்பொருளே!பை ஆடு அரவம்‌ அரைக்கு அசைத்த பரமா! பழையனூர்‌ மேயஐயா! ஆலங்காடா! உன் ‌ அடியார்க்கு அடியேன்‌ ஆவேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தூண்டா விளக்கின் நற்சோதீ தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்பூண்டாய் எலும்பைப் புரமூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனேபாண்டாழ் வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேயஆண்டா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
சொற்பிரிப்பு
தூண்டா விளக்கின்‌ நற்சோதீ! தொழுவார் தங்கள்‌ துயர்‌ தீர்ப்பாய்‌!பூண்டாய்‌, எலும்பை! புரம் மூன்றும் ‌ பொடியாச்‌ செற்ற புண்ணியனே!பாண்டு ஆழ்‌ வினைகள்‌அவை தீர்க்கும் ‌ பரமா! பழையனூர்‌ மேயஆண்டா! ஆலங்காடா! உன் ‌ அடியார்க்கு அடியேன்‌ ஆவேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மறிநேர் ஒண்கண் மடநல்லார் வலையிற் பட்டு மதிமயங்கிஅறிவே அழிந்தே னையாநான் மையார் கண்ட முடையானேபறியா வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேயஅறிவே ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
சொற்பிரிப்பு
மறி நேர்‌ ஒண் கண்‌ மடநல்லார் ‌ வலையில்‌ பட்டு, மதி மயங்கி,அறிவே அழிந்தேன்‌, ஐயா, நான்‌! மை ஆர்‌ கண்டம்‌ உடையானே!பறியா வினைகள்‌அவை தீர்க்கும் ‌ பரமா! பழையனூர்‌ மேயஅறிவே! ஆலங்காடா! உன் ‌ அடியார்க்கு அடியேன்‌ ஆவேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வேலங் காடு தடங்கண்ணார் வலையுட் பட்டுன் நெறிமறந்துமாலங் காடி மறந்தொழிந்தேன் மணியே முத்தே மரகதமேபாலங் காடி நெய்யாடி படர்புன் சடையாய் பழையனூர்ஆலங் காடா உன்னுடைய அடியார்க் கடியேன் ஆவேனே.
சொற்பிரிப்பு
வேல்‌ அங்கு ஆடு தடங்கண்ணார் ‌ வளையுள்‌ பட்டு, உன்‌ நெறி மறந்து,மால்‌ அங்கு ஆடி, மறந்தொழிந்தேன்‌; மணியே! முத்தே! மரகதமே!பால்‌ அங்கு ஆடீ! நெய்‌ ஆடீ! படர் புன்சடையாய்‌! பழையனூர்‌ஆலங்காடா! உன்னுடைய அடியார்க்கு அடியேன்‌ ஆவேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

எண்ணார் தங்கள் எயிலெய்த எந்தாய் எந்தை பெருமானேகண்ணாய் உலகங் காக்கின்ற கருத்தா திருத்த லாகாதாய்பண்ணா ரிசைக ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்அண்ணா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
சொற்பிரிப்பு
எண்ணார் தங்கள்‌ எயில்‌ எய்த எந்தாய்‌! எந்தை பெருமானே!கண்‌ணாய்‌ உலகம்‌ காக்கின்ற கருத்தா! திருத்தல்‌ ஆகாதாய்‌!பண்‌ ஆர்‌ இசைகள்‌அவை கொண்டு பலரும்‌ ஏத்தும்‌ பழையனூர்‌அண்ணா! ஆலங்காடா! உன் ‌ அடியார்க்கு அடியேன்‌ ஆவேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளாவிண்டார் புரங்க ளெரிசெய்த விடையாய் வேத நெறியானேபண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேயஅண்டா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
சொற்பிரிப்பு
வண்டு ஆர் குழலி உமை நங்கை பங்கா! கங்கை மணவாளா !விண்டார்‌ புரங்கள்‌ எரி செய்த விடையாய்‌! வேத நெறியானே!பண்டு ஆழ்‌ வினைகள் பல தீர்க்கும்‌ பரமா! பழையனூர்‌ மேயஅண்டா! ஆலங்காடா! உன் ‌ அடியார்க்கு அடியேன்‌ ஆவேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பேழ்வா யரவி னணையானும் பெரிய மலர்மே லுறைவானுந்தாழா துன்றன் சரண்பணியத் தழலாய் நின்ற தத்துவனேபாழாம் வினைக ளவைதீர்க்கும் பரமா பழையனூர் தன்னைஆள்வாய் ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
சொற்பிரிப்பு
பேழ்வாய்‌ அரவின்‌ அணையானும்‌, பெரிய மலர் மேல்‌ உறைவானும்தாழாது, உன் தன்‌ சரண்‌ பணிய, தழலாய்‌ நின்ற தத்துவனே!பாழாம்‌ வினைகள்‌அவை தீர்க்கும் ‌ பரமா! பழையனூர்‌ தன்னைஆள்வாய்‌! ஆலங்காடா! உன் ‌ அடியார்க்கு அடியேன்‌ ஆவேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்டபெம்மான் ஈமப் புறங்காட்டிற் பேயோ டாடல் புரிவானேபன்மா மலர்க ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்அம்மா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
சொற்பிரிப்பு
எம்மான்‌! எந்தை! மூத்தப்பன்‌! ஏழ்‌ஏழ் படிகால்‌ எமை ஆண்டபெம்மான்‌! ஈமப்‌ புறங்காட்டில் ‌ பேயோடு ஆடல்‌ புரிவானே!பல்‌ மா மலர்கள்‌ அவை கொண்டு பலரும்‌ ஏத்தும்‌ பழையனூர்‌அம்மா! ஆலங்காடா! உன் ‌ அடியார்க்கு அடியேன்‌ ஆவேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பத்தர் சித்தர் பலரேத்தும் பரமன் பழைய னூர்மேயஅத்தன் ஆலங் காடன்றன் அடிமைத் திறமே அன்பாகிச்சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச் சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே.
சொற்பிரிப்பு
பத்தர் சித்தர் பலர்‌ ஏத்தும் ‌ பரமன்‌, பழையனூர்‌ மேயஅத்தன்‌, ஆலங்காடன்‌ தன்‌ அடிமைத் திறமே அன்பாகிச்‌சித்தர்‌ சித்தம் வைத்த புகழ்ச் ‌ சிறுவன் ஊரன்‌ ஒண் தமிழ்கள்‌-பத்தும்‌ பாடி ஆடுவார் ‌ பரமன்‌ அடியே பணிவாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.