திருமுறை 7 · 7.037 · 11

திருவாரூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
கொல்லி
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசாறருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப்பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
சொற்பிரிப்பு
குருகு பாய, கொழுங்‌ கரும்புகள்‌ நெரிந்த சாறுஅருகு பாயும்‌ வயல் ‌ அம்‌ தண்‌ ஆரூரரைப்‌பருகும்‌ ஆறும்‌, பணிந்து ஏத்தும்‌ ஆறும்‌, நினைந்துஉருகும்‌ ஆறும்‌, இவை உணர்த்த வல்லீர்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரைமறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.
சொற்பிரிப்பு
பறக்கும்‌ எம்‌ கிள்ளைகாள்‌! பாடும்‌ எம்‌ பூவைகாள்‌!அறக்கண்‌ என்னத்‌ தகும் ‌ அடிகள்‌ ஆரூரரைமறக்க கில்லாமையும்‌, வளைகள்‌ நில்லாமையும்‌,உறக்கம்‌ இல்லாமையும்‌, உணர்த்த வல்லீர்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்ஆளும்அம் பொற்கழல் அடிகளா ரூரர்க்குவாழுமா றும்வளை கழலுமா றும்மெனக்கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
சொற்பிரிப்பு
சூழும்‌ ஓடிச்‌ சுழன்று உழலும்‌ வெண்நாரைகாள்‌!ஆளும்‌ அம்‌ பொன்கழல் ‌ அடிகள்‌ ஆரூரர்க்குவாழும்‌ ஆறும்‌, வளை கழலும்‌ ஆறும்‌, எனக்குஊழும்‌ மாறும்‌, இவை உணர்த்த வல்லீர்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள்அக்கிரமங் கள்செயும் அடிகளா ரூரர்க்குவக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்உக்கிரமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.
சொற்பிரிப்பு
சக்கிரவாளத்து இளம் ‌ பேடைகாள்‌! சேவல்காள்‌!அக்கிரமங்கள்‌ செயும் ‌ அடிகள்‌ ஆரூரர்க்குவக்கிரம்‌ இல்லாமையும்‌, வளைகள்‌ நில்லாமையும்‌,உக்கிரம்‌ இல்லாமையும்‌, உணர்த்த வல்லீர்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள்அலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும்முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.
சொற்பிரிப்பு
இலை கொள்‌ சோலைத்தலை இருக்கும்‌ வெண்நாரைகாள்‌!அலைகொள்‌ சூலப்படை அடிகள்‌ஆரூரர்க்கு,கலைகள்‌ சோர்கின்றதும்‌, கன வளை கழன்றதும்‌,முலைகள்‌ பீர்‌ கொண்டதும்‌, மொழிய வல்லீர்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள்அண்டவா ணர்தொழும் அடிகளா ரூரரைக்கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய்உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
சொற்பிரிப்பு
வண்டுகாள்‌! கொண்டல்காள்‌! வார்‌ மணல்‌ குருகுகாள்‌ !அண்டவாணர்‌ தொழும் ‌ அடிகள்‌ ஆரூரரைக்‌கண்டவாறும்‌, காமத் தீக்‌ கனன்று எரிந்து மெய்‌உண்டவாறும்‌, இவை உணர்த்த வல்லீர்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள்ஆனலங் கொண்டவெம் மடிகளா ரூரர்க்குப்பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன்ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே.
சொற்பிரிப்பு
தேன்‌ நலம்‌ கொண்ட தேன்‌! வண்டுகாள்‌! கொண்டல்காள்‌!ஆன் நலம்‌ கொண்ட எம் அடிகள்‌ ஆரூரர்க்கு,பால் நலம்‌ கொண்ட எம் ‌ பணைமுலை பயந்து பொன்‌ஊன்‌ நலம்‌ கொண்டதும் ‌ உணர்த்த வல்லீர்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் நாரைகாள்அற்றமுற் றப்பகர்ந் தடிகளா ரூரர்க்குப்பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும்உற்றுமற் றின்மையும் உணர்த்த வல்லீர்களே.
சொற்பிரிப்பு
சுற்றுமுற்றும்‌ சுழன்று உழலும்‌ வெண்நாரைகாள்‌!அற்றம்‌ முற்றப்‌ பகர்ந்து அடிகள்‌ ஆரூரர்க்குபற்று மற்று இன்மையும்‌, பாடு மற்று இன்மையும்‌,உற்று மற்று இன்மையும்‌, உணர்த்த வல்லீர்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

குரவநா றக்குயில் வண்டினம் பாடநின்றரவமா டும்பொழில் அந்தணா ரூரரைப்பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும்உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே.
சொற்பிரிப்பு
குரவம்‌ நாற, குயில் ‌ வண்டு இனம்‌ பாட, நின்றுஅரவம்‌ ஆடும்‌ பொழில் ‌ அம்‌ தண்‌ ஆரூரரைப்‌பரவி நாடு(ம்‌)மதும்‌, பாடி நாடு(ம்‌) மதும்‌,உருகி நாடு(ம்‌) மதும்‌, உணர்த்த வல்லீர்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கூடுமன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்ஆடும்அம் பொற்கழல் அடிகளா ரூரரைப்பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடிஊடுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
சொற்பிரிப்பு
கூடும்‌ அன்னப்பெடைகாள்‌! குயில்‌! வண்டுகாள்‌!ஆடும்‌ அம்‌ பொன்கழல் ‌ அடிகள்‌ஆரூரரைப்‌பாடுமாறும்‌, பணிந்து ஏத்துமாறும்‌, கூடிஊடுமாறும்‌, இவை உணர்த்த வல்லீர்களே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும்அத்தன்அம் பொற்கழல் அடிகளா ரூரரைச்சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.
சொற்பிரிப்பு
நித்தம்‌ ஆக(ந்‌) நினைந்து உள்ளம்‌ ஏத்தித்‌ தொழும்‌அத்தன்‌, அம்‌ பொன்கழல் ‌ அடிகள்‌, ஆரூரரைச்‌சித்தம் வைத்த புகழ்ச் ‌ சிங்கடி அப்பன்‌ மெய்ப்‌பத்தன்‌, ஊரன்‌ சொன்ன பாடுமின்‌, பத்தரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.