திருமுறை 7 · 7.016 · 11

திருக்கலயநல்லூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கராகம்
தலம்
கலயநல்லூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்துவிரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.
சொற்பிரிப்பு
குரும்பை முலை மலர்க்குழலி கொண்ட தவம்‌ கண்டு, குறிப்பினொடும்‌ சென்று, அவள் தன்‌ குணத்தினை நன்கு அறிந்து,விரும்பு வரம்‌ கொடுத்து, அவளை வேட்டு, அருளிச்செய்த விண்ணவர் கோன்‌; கண் நுதலோன்‌; மேவிய ஊர்‌ வினவில்‌-அரும்பு அருகே சுரும்பு அருவ, அறுபதம்‌ பண்‌ பாட, அணி மயில்கள்‌ நடம்‌ ஆடும்‌ அணி பொழில்‌ சூழ்‌ அயலில்‌கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும்‌, கழனிக்‌ கமலங்கள்‌ முகம் மலரும்‌, கலயநல்லூர் காணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளிஇருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவில்பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும் பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக்கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங் களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே.
சொற்பிரிப்பு
செரு மேவு சலந்தரனைப்‌ பிளந்த சுடர்‌ ஆழி செங்கண்மலர்‌ பங்கயமாச்‌ சிறந்தானுக்கு அருளிஇருள்‌ மேவும்‌ அந்தகன் மேல்‌ திரிசூலம்‌ பாய்ச்சி, இந்திரனைத்‌ தோள்‌ முரித்த இறையவன்‌ ஊர்‌ வினவில்‌.பெரு மேதை மறை ஒலியும்‌, பேரி-முழவு ஒலியும்‌, பிள்ளை இனம்‌ துள்ளி விளையாட்டு ஒலியும்‌, பெருக;கருமேதி புனல்‌ மண்ட; கயல்‌ மண்ட,; கமலம்‌ களி வண்டின் கணம்‌ இரியும்‌ கலயநல்லூர் காணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது வியற்றி இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத் தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில்மண்டபமுங் கோபுரமும் மாளிகைசூ ளிகையும் மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.
சொற்பிரிப்பு
இண்டைமலர்‌ கொண்டு, மணல்‌ இலிங்கம்‌ அது இயற்றி, இனத்து ஆவின்‌ பால்‌ ஆட்ட, இடறிய தாதையைத்‌ தாள்‌துண்டம்‌ இடு சண்டி அடி அண்டர்‌ தொழுது ஏத்தத்‌ தொடர்ந்து அவனைப்‌ பணிகொண்ட விடங்கனது ஊர்‌ வினவில்‌மண்டபமும்‌ கோபுரமும்‌ மாளிகை சூளிகையும்‌, மறை ஒலியும்‌ விழவு ஒலியும்‌ மறுகு நிறைவு எய்தி,கண்டவர்கள்‌ மனம்‌ கவரும்‌, புண்டரிகப்‌ பொய்கைக்‌ காரிகையார்‌ குடைந்து ஆடும்‌, கலயநல்லூர் காணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தால் மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லாஉலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்அலையடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்றென் கரைமேல்கலையடைந்த கலிகடியந் தணர்ஓமப் புகையாற் கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.
சொற்பிரிப்பு
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள்‌ கண்‌ புதைத்தலுமே, வல்‌ இருள்‌ஆய்‌ எல்லாஉலகுடன் தான்‌ மூட, இருள்‌ ஒடும்‌ வகை, நெற்றி ஒற்றைக்கண்‌ படைத்து உகந்த உத்தமன்‌ ஊர்‌ வினவில்‌அலை அடைந்த புனல்‌ பெருகி, யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி, வரும்‌ அரிசிலின்‌ தென் கரைமேல்‌, ,கலை அடைந்து கலி கடி அந்தணர்‌ ஓமப்‌ புகையால் கணமுகில்‌ போன்று அணி கிளரும்‌, கலயநல்லூர் காணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நிற்பானுங் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்வெற்பார்வில் அரவுநாண் எரியம்பால் விரவார் புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்சொற்பால பொருட்பால சுருதியொரு நான்குந் தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் றிறத்தேகற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார் கலைபயிலந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.
சொற்பிரிப்பு
நிற்பானும்‌, கமலத்தில்‌ இருப்பானும்‌, முதலா நிறைந்து அமரர்‌ குறைந்து இரப்ப, நினைந்தருளி, அவர்க்காய்‌வெற்பு ஆர்‌ வில்‌, அரவு நாண்‌, எரி அம்பால்‌, விரவார்‌ புரம் முன்றும்‌ எரிவித்த விகிர்தன்‌ ஊர்‌ வினவில்‌,சொற்பால பொருள் பால சுருதி ஒரு நான்கும்‌ தோத்திரமும்‌ பல சொல்லித்‌ துதித்து, இறை தன்‌ திறத்தேகற்பாரும்‌ கேட்பாருமாய்‌, எங்கும்‌ நன்கு ஆர்‌ கலை பயில்‌ அந்தணர்‌ வாழும்‌ கலயநல்லூர் காணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப் பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச்செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித் தருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில்தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந் திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்றென் கரைமேல்கற்றின(ம்)நன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.
சொற்பிரிப்பு
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்விப்‌ பெருந்‌ தேவர்‌ சிரம்‌ தோள்‌ பல்‌ கரம்‌ கண்‌ பீடு அழியச்‌செற்று, மதிக் கலைசிதையத்‌ திருவிரலால்‌ தேய்வித்து, அருள்‌ பெருகு சிவபெருமான்‌ சேர்தரும்‌ ஊர்‌ வினவில்‌தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும்‌ திரை பொருது வருபுனல்‌ சேர்‌ அரிசிலின்‌ தென் கரைமேல்‌,கற்றினம்‌ நல்‌ கரும்பின்‌ முளை கறிகற்க, கறவை கமழ்‌ கழுநீர்‌ கவர்‌ கழனி, கலயநல்லூர் காணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும் இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றிநிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகி நிற்பனவும் நடப்பனவாம் நின்மலனூர் வினவிற்பலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப் பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற் கயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.
சொற்பிரிப்பு
இலங்கையர் கோன்‌ சிரம் பத்தோடு இருபது திண்தோளும்‌ இற்று அலற ஒற்றை விரல்‌ வெற்பு அதன்மேல்‌ ஊன்‌றி,நிலம்‌ கிளர்‌ நீர்‌ நெருப்பொடு காற்று ஆகாசம்‌ ஆகி, நிற்பனவும்‌ நடப்பன ஆம்‌ நின்மலன்‌ ஊர்‌ வினவில்‌பலங்கள் பல திரை உந்தி, பரு மணி பொன்‌ கொழித்து, பாதிரி சந்து அகிலினொடு கேதகையும்‌ பருகிக்,கலங்கு புனல்‌ அலம்பி வரும்‌ அரிசிலின்‌ தென் கரைமேல்‌, கயல்‌ உகளும்‌ வயல்‌ புடை சூழ்‌, கலயநல்லூர் காணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன் வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்தவேலைவிட முண்டமணி கண்டன்விடை யூரும் விமலனுமை யவளோடு மேவியஊர் வினவில்சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச் சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக்காலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்து கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.
சொற்பிரிப்பு
மால்‌ அயனும்‌ காண்பு அரிய மால்‌ எரி ஆய்‌ நிமிர்ந்தோன்‌, வன்னி மதி சென்னிமிசை வைத்தவன்‌ மொய்த்து எழுந்தவேலை விடம்‌ உண்ட மணிகண்டன்‌, விடை ஊரும்‌ விமலன்‌, உமையவளோடு மேவிய ஊர்‌ வினவில்‌சோலை மலி குயில்‌ கூவ, கோல மயில்‌ ஆல, சுரும்பொடு வண்டு இசை முரல, பசுங்கிளி சொல்‌ துதிக்க,காலையிலும்‌ மாலையிலும்‌ கடவுள்‌ அடி பணிந்து கசிந்த மனத்தவர்‌ பயிலும்‌ கலயநல்லூர் காணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்கரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக் கனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில்இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம் இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்தென் கரைமேற்கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.
சொற்பிரிப்பு
பொரும்‌ பலம்‌ அது உடை அசுரன்‌ தாரகனைப்‌ பொருது பொன்றுவித்த பொருளினை முன்‌ படைத்து உகந்த புனிதன்‌,கரும்பு விலின்‌ மலர்வாளிக்‌ காமன்‌ உடல்‌ வேவக்‌ கனல் விழித்த கண்நுதலோன்‌., கருதும்‌ ஊர்‌ வினவில்‌இரும்‌ புனல்‌ வெண்திரை பெருகி, ஏலம்‌, இலவங்கம்‌, இருகரையும்‌ பொருது அலைக்கும்‌ அரிசிலின்‌ தென் கரைமேல்‌,கரும்‌ பு(ன்‌)னை வெண்முத்து அரும்பிப்‌ பொன்மலர்ந்து பவளக்‌ கவின்‌ காட்டும்‌ கடிபொழில்‌ சூழ்‌, கலயநல்லூர் காணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற் றடங்கொள்பெருங் கோயில்தனிற் றக்கவகை யாலேவண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேற்கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே.
சொற்பிரிப்பு
தண் கமலப் பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர்‌ தலத்தில்‌ தடம்‌ கொள்‌ பெருங்கோயில் தனில்‌ ,தக்க வகையாலேவண்கமலத்து அயன்‌ முன்‌ நாள்‌ வழிபாடு செய்ய, மகிழ்ந்தருளி இருந்த பரன்‌ மருவிய ஊர்‌ வினவில்‌வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்‌ விரைமலரும்‌ விரவு புனல்‌ அரிசிலின்‌ தென் கரைமேல்‌,கண்‌ கமுகின்‌ பூம்பாளை மது வாசம்‌ கலந்த கமழ்‌ தென்றல்‌ புகுந்து உலவு, கலயநல்லூர் காணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன் தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடிஉண்பலிகொண் டுழல்பரமன் உறையுமூர் நிறைநீர் ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனைநண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன் நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம் பாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே.
சொற்பிரிப்பு
தண்புனலும்‌ வெண்மதியும்‌ தாங்கிய செஞ்சடையன்‌, தாமரையோன்‌ தலை கலனாக்‌ காமரம்‌ முன்‌ பாடிஉண்‌ பலி கொண்டு உழல்‌ பரமன்‌, உறையும்‌ ஊர்‌, நிறை நீர்‌ ஒழுகு புனல்‌ அரிசிலின்‌ தென் கலயநல்லூர்‌ அதனை,நண்பு உடைய நன்‌ சடையன்‌ இசைஞானி சிறுவன்‌, நாவலர் கோன்‌ ஆரூரன்‌ நாவின்‌ நயந்து உரைசெய்‌பண்‌ பயிலும்‌ பத்தும்‌ இவை பத்தி செய்து நித்தம்‌ பாட வல்லார்‌, அல்லலொடு பாவம்‌ இலர்‌, தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.