திருமுறை 7 · 7.002 · 11

திருப்பரங்குன்றம்

அருளியவர்
சுந்தரர்
பண்
இந்தளம்
தலம்
பரங்குன்றம்
நாடு
பாண்டியநாடு

1

கோத்திட்டையுங் கோவலும் கோயில்கொண் டீர்உமைக் கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ் சில்பூத மும்நீ ரும்திசை திசையனசோத்திட்டு விண்ணோர் பலரும் தொழநும் அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம் படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
சொற்பிரிப்பு
கோத்திட்டையும்‌ கோவலும்‌ கோவில் கொண்டீர்‌; உம்மைக்‌ கொண்டு உழல்கின்றது ஓர்‌, கொல்லைச்‌ சில்லை,சே, திட்டுக்‌ குத்தித்‌ தெருவே திரியும்‌; சில் பூதமும்‌ நீரும்‌ திசைதிசையன;சோத்திட்டு விண்ணோர் பலரும்‌ தொழ, நும்‌ அரைக்‌ கோவணத்தோடு ஒரு தோல்‌ புடை சூழ்ந்து,ஆர்த்திட்டதும்‌ பாம்பு; கைக்‌ கொண்டதும்‌ பாம்பு- அடிகேள்‌! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர் முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக்கண்டத்தி லும்தோளி லும்கட்டி வைத்தீர் கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர்பிண்டஞ் சுமந்தும் மொடும்கூட மாட்டோம் பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும்அண்டம் கடந்தப் புறத்தும் இருந்தீர் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
சொற்பிரிப்பு
முண்டம்‌ தரித்தீர்‌; முதுகாடு உறைவீர்‌; முழுநீறு மெய்‌ பூசுதிர்‌; மூக்கப்‌ பாம்பைக்‌கண்டத்திலும்‌ தோளிலும்‌ கட்டி வைத்தீர்‌;கடலைக்‌ கடைந்திட்டது ஓர்‌ நஞ்சை உண்டீர்‌;பிண்டம்‌ சுமந்து உம்மொடும்‌ கூடமாட்டோம்‌; பெரியாரொடு நட்பு இனிது” என்று இருத்தும்‌;அண்டம்‌ கடந்து அப்‌புறத்தும்‌ இருந்தீர்‌ அடிகேள்‌! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மூடாய முயலகன் மூக்கப் பாம்பு முடைநா றியவெண் தலைமொய்த்த பல்பேய்பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல் பரிசொன் றறியா தனபா ரிடங்கள்தோடார் மலர்க்கொன் றையும்துன் னெருக்கும் துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்றாடா தனவேசெய் தீர்எம் பெருமான் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
சொற்பிரிப்பு
மூடு ஆய முயலகன்‌, மூக்கப்‌ பாம்பு, . முடை நாறிய வெண்தலை, மொய்த்த பல்பேய்‌,பாடாவரு பூதங்கள்‌, பாய்‌ புலித்தோல்‌, பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள்‌,தோடு ஆர்‌ மலர்க் கொன்றையும்‌, துன்‌ எருக்கும்‌; துணை மா மணி நாகம்‌ அரைக்கு அசைத்து, ஒன்றுஆடாதனவே செய்தீர்‌; எம்பெருமான்‌ ! அடிகேள்‌! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி மலையான் மடந்தை மணவாள நம்பிபஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையா ளொடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்நஞ்சுண்டு தேவர்க் கமுதம் கொடுத்த நலம்ஒன் றறியோம் உங்கைநா கமதற்கஞ்சுண் டுபடம் அதுபோ கவிடீர் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
சொற்பிரிப்பு
மஞ்சுண்ட மாலை மதி சூடு சென்னி, மலையான் மடந்தை மணவாள நம்பி!பஞ்சுண்ட அல்குல்‌ பணை மென்முலையாளொடு நீரும்‌ ஒன்றுஆய்‌ இருத்தல்‌ ஒழியீர்‌;நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம்‌ கொடுத்த நலம்‌ ஒன்று அறியோம்‌; உம்‌ கை நாகம்‌ அதற்குஅஞ்சு உண்டு, படம்‌; அது போக விடீர்‌ அடிகேள்‌! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர் புலால்வா யனபே யொடுபூச் சொழியீர்எல்லாம் அறிவீர் இதுவே அறியீர் என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலும்கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதும் கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
சொற்பிரிப்பு
பொல்லாப்‌ புறங்காட்டு அகத்து ஆட்டு ஒழியீர்‌; புலால்‌ வாயன பேயொடு பூச்சு ஒழியீர்‌;எல்லாம்‌ அறிவீர்‌; இதுவே அறியீர்‌” என்று இரங்குவேன்‌, எல்லியும்‌ நண்பகலும்‌;கல்லால் நிழல் கீழ்‌ ஒரு நாள்‌ கண்டதும்‌, கடம்பூர்க்‌ கரக்கோயிலில்‌ முன்‌ கண்டதும்‌,அல்லால்‌ விரகு ஒன்று இலம்‌; எம்பெருமான்‌ ! அடிகேள்‌! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தென்னாத் தெனாத்தெத் தெனாஎன்று பாடிச் சில்பூ தமும்நீ ரும்திசை திசையனபன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர் படம்பக்கம் கொட்டுந் திருவொற்றி யூரீர்பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர் படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர்அண்ணா மலையேன் என்றீர் ஆரூருளீர் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
சொற்பிரிப்பு
தென்னாத் தெனாத் தெத்தெனா என்று பாடிச்‌ சில்பூதமும்‌ நீரும்‌ திசைதிசையன;பல்‌-நால் மறை பாடுதிர்‌; பாசூர்‌ உளீர்‌; படம்பக்கம்‌ கொட்டும்‌ திரு ஒற்றியூரீர்‌;பண்‌ ஆர்‌ மொழியாளை ஓர் பங்கு உடையீர்‌; படுகாட்டு அகத்து என்றும்‌ ஓர்‌ பற்று ஒழியீர்‌;அண்ணாமலையேன்‌ ' என்றீர்‌; ஆரூர்‌ உளீர்‌ அடிகேள்‌! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சிங்கத் துரிமூடு திர்தே வர்கணம் தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர்பங்கம் பலபே சிடப்பா டும்தொண்டர் தமைப்பற்றிக் கொண்டாண்டு விடவுங் கில்லீர்கங்கைச் சடையீர் உம்கருத் தறியோம் கண்ணுமூன் றுடையீர் கண்ணேயாய் இருந்தால்அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
சொற்பிரிப்பு
சிங்கத்து உரி மூடுதிர்‌; தேவர்கணம்‌ தொழ நிற்றீர்‌; பெற்றம்‌ உகந்து ஏறிடுதிர்‌;பங்கம் பலபேசிடப்‌ பாடும்‌ தொண்டர் தமைப்‌ பற்றிக் கொண்டு ஆண்டு விடவும்‌ கில்லீர்‌;கங்கைச்‌ சடையீர்‌! உம்‌ கருத்து அறியோம்‌; கண்ணும் மூன்று உடையீர்‌; கண்ணே ஆய்‌ இருந்தால்‌,அங்கத்து உறு நோய்‌ களைந்து ஆளகில்லீர்‌ அடிகேள்‌! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர் பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீரும்துணிவண் ணத்தின்மேலும் ஓர்தோல் உடுத்துச் சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசிமணிவண்ணத் தின்மேலும் ஓர்வண்ணத் தராய் மற்றுமற் றும்பல் பலவண் ணத்தராய்அணிவண் ணத்தராய் நிற்றீர்எம் பெருமான் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
சொற்பிரிப்பு
பிணி வண்ணத்த வல்வினை தீர்த்து அருளீர்‌; பெருங்காட்டு அகத்தில்‌ பெரும்‌ பேயும்‌ நீரும்‌துணிவண்ணத்தின்‌ மேலும்‌ ஓர்‌ தோல்‌ உடுத்து, சுற்றும்‌ நாகத்தராய்‌, சுண்ணநீறு பூசி,மணிவண்ணத்தின்‌ மேலும்‌ ஓர்‌ வண்ணத்தராய்‌, மற்றும் மற்றும்‌ பல்பல வண்ணத்தராய்‌,அணி வண்ணத்தராய்‌, நிற்றீர்‌; எம்பெருமான்‌! அடிகேள்‌! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர் மலையின் தலைஅல் லதுகோ யில்கொள்ளீர்வேளா ளியகா மனைவெந் தழிய விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையும்தோளாள் உமைநங்கை யொர்பங் குடையீர் உடுகூறை யுஞ்சோறும் தந்தாள கில்லீர்ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
சொற்பிரிப்பு
கோள்‌ ஆளிய குஞ்சரம்‌ கோள்‌ இழைத்தீர்‌; மலையின்‌ தலை அல்லது கோயில் கொள்ளீர்‌;வேள்‌ ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர்‌; அது அன்றியும்‌, வேய்‌ புரையும்‌தோளாள்‌ உமை நங்கை ஓர் பங்கு உடையீர்‌; உடு கூறையும்‌ சோறும்‌ தந்து ஆளகில்லீர்‌;ஆள்‌ ஆளியவே கிற்றீர்‌; எம்பெருமான்‌! அடிகேள்‌! உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பாரோடு விண்ணும் பகலும் ஆகிப் பனிமால் வரைஆ கிப்பரவை ஆகிநீரோ டுதீயும் நெடுங்காற் றும்ஆகி நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித்தேரோ டவரை எடுத்த அரக்கன் சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம்ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென் அடியோம் உமக்காட் செயஅஞ் சுதுமே.
சொற்பிரிப்பு
பாரோடு விண்ணும்‌ பகலும்‌ ஆகி, பனி மால்வரை ஆகி, பரவை ஆகி,நீரோடு தீயும்‌ நெடுங்‌ காற்றும்‌ ஆகி, நெடுவெள்ளிடை ஆகி, நிலனும்‌ ஆகி,தேர்‌ ஓட வரை எடுத்த அரக்கன்‌ சிரம் பத்து இறுத்தீர்‌; உம்‌ செய்கை எல்லாம்‌ஆரோடும்‌ கூடா; அடிகேள்‌! இது என்‌? அடியோம்‌ உமக்கு ஆட்செய அஞ்சுதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதும்என் றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சிமுடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்படியா இவைகற் றுவல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கேகுடியாகி வானோர்க்கும் ஓர்கோவும் ஆகிக் குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
சொற்பிரிப்பு
“அடிகேள்‌! உமக்கு ஆட்செய அஞ்சுதும்‌'” என்று அமரர் பெருமானை ஆரூரன்‌ அஞ்சி,முடியால்‌ உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும்‌ ஓர்‌ நான்கும்‌, ஓர்‌ ஒன்றினையும்‌படியா, இவை கற்று வல்ல அடியார்‌, பரங்குன்றம்‌ மேய பரமன்‌ அடிக்கேகுடி ஆகி, வானோர்க்கும்‌ ஓர்‌ கோவும்‌ ஆகி, குலவேந்தராய்‌ விண்முழுது ஆள்பவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.