திருமுறை 6 · 6.097 · 11

திருவினாத்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பொது
நாடு
பொது

1

அண்டங் கடந்த சுவடு முண்டோ அனலங்கை யேந்திய ஆட லுண்டோபண்டை யெழுவர் படியு முண்டோ பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோகண்ட மிறையே கறுத்த துண்டோ கண்ணின்மேற் கண்ணொன்று கண்ட துண்டோதொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
அண்டம் கடந்த சுவடும் உண்டோ? அனல்அங்கை ஏந்திய ஆடல் உண்டோ?பண்டை எழுவர் படியும் உண்டோ? பாரிடங்கள் பலசூழப் போந்தது உண்டோ?கண்டம் இறையே கறுத்தது உண்டோ? கண்ணின்மேல் கண்ஒன்று உடையது உண்டோ?தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி உண்டோ? சொல்லீர்,எம் பிரானாரைக் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

எரிகின்ற இளஞாயி றன்ன மேனி இலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோவிரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோவரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோசொரிகின்ற புனலுண்டோ சூல முண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
எரிகின்ற இளஞாயிறு அன்ன மேனி இலங்கிழைஓர் பால்உண்டோ? வெள்ஏறு உண்டோ?விரிகின்ற பொறிஅரவத் தழலும் உண்டோ? வேழத்தின் உரிஉண்டோ? வெண்நூல் உண்டோ?வரிநின்ற பொறிஅரவச் சடையும் உண்டோ? அச்சடைமேல் இளமதியம் வைத்தது உண்டோ?சொரிகின்ற புனல்உண்டோ? சூலம் உண்டோ? சொல்லீர்,எம் பிரானாரைக் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோபுலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோகலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோசுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
நிலாமாலை செஞ்சடைமேல் வைத்தது உண்டோ? நெற்றிமேல் கண்உண்டோ? நீறு சாந்தோ?புலால்நாறு வெள்எலும்பு பூண்டது உண்டோ? பூதம்தற் சூழ்ந்தனவோ? போர்ஏறு உண்டோ?கலாம்மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ? கார்க்கொன்றை மாலை கலந்தது உண்டோ?சுலாமாலை ஆடுஅரவம் தோள்மேல் உண்டோ? சொல்லீர்,எம் பிரானாரைக் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோஉண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோகண்ணார் கழற்காலற் செற்ற துண்டோ காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோஎண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
பண்ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ? பாரிடங்கள் பலசூழப் போந்தது உண்டோ?உண்ணா அருநஞ்சம் உண்டது உண்டோ? ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ?கண்ஆர் கழல்காலற் செற்றது உண்டோ? காமனையும் கண்அழலால் காய்ந்தது உண்டோ?எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ? எவ்வகை,எம் பிரானாரைக் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நீறுடைய திருமேனி பாக முண்டோ நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோகூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம்ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ அதனருகே பிறையுண்டோ அளவி லாதஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
நீறுஉடைய திருமேனி பாகம் உண்டோ? நெற்றிமேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ?கூறுஉடைய கொடுமழுவாள் கையில் உண்டோ? கொல்புலித்தோல் உடைஉண்டோ? கொண்ட வேடம்ஆறுஉடைய சடைஉண்டோ? அரவம் உண்டோ? அதன்அருகே பிறைஉண்டோ? அளவுஇ லாதஏறுஉடைய கொடிஉண்டோ? இலயம் உண்டோ?- எவ்வகை,எம் பிரானாரைக் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன் பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன் குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்கட்டங்கக் கொடிதிண்டோ ளாடக் கண்டேன் கனமழுவாள் வலங்கையி லிலங்கக் கண்டேன்சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன் தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
பட்டமும் தோடும்ஓர் பாகம் கண்டேன்; பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்;கொட்டிநின்று இலயங்கள் ஆடக் கண்டேன்; குழைகாதில், பிறைசென்னி, இலங்கக் கண்டேன்;கட்டங்கக் கொடிதிண்தோள் ஆடக் கண்டேன்; கனம்மழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்;சிட்டனைத் திருஆல வாயில் கண்டேன்- தேவனைக் கனவில்நான் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன் அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன் பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்கலிக்கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன் கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்வலித்துடுத்த மான்றோ லரையிற் கண்டேன் மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
அலைத்துஓடு புனல்கங்கை சடையில் கண்டேன்; அலர்கொன்றைத் தார்அணிந்த ஆறு கண்டேன்;பலிக்குஓடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்; பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்;கலிக்கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்; கறைமிடறும் கண்டேன்; கனலும் கண்டேன்;வலித்துஉடுத்த மான்தோல் அரையில் கண்டேன்- மறைவல்ல மாதவனைக் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நீறேறு திருமேனி நிகழக் கண்டேன் நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன் கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன் அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன் இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
நீறுஏறு திருமேனி நிகழக் கண்டேன்; நீள்சடைமேல் நிறைகங்கை ஏறக் கண்டேன்;கூறுஏறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்; கொடுகொட்டி, கைஅலகு, கையில் கண்டேன்;ஆறுஏறு சென்னிஅணி மதியும் கண்டேன்; அடியார்கட்கு ஆர்அமுதம் ஆகக் கண்டேன்;ஏறுஏறி இந்நெறியே போதக் கண்டேன்- இவ்வகைஎம் பெருமானைக் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டுசுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டுஅரையுண்ட கோவண ஆடை யுண்டு வலிக்கோலுந் தோலு மழகா வுண்டுஇரையுண் டறியாத பாம்பு முண்டு இமையோர் பெருமா னிலாத தென்னே.
சொற்பிரிப்பு
விரையுண்ட வெண்நீறு தானும் உண்டு; வெண்தலைகை உண்டு;ஒருகை வீணை உண்டு;சுரைஉண்டு; சூடும் பிறைஒன்று உண்டு; சூலமும் தண்டும் சுமந்தது உண்டு(வ்);அரையுண்ட கோவண ஆடை உண்டு(வ்); அலிக்கோலும் தோலும் அழகா உண்டு(வ்);இரைஉண்டு அறியாத பாம்பும் உண்டு(வ்)- இமையோர் பெருமான்இ லாதது என்னே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன் ஓரூர னல்லனோ ருவம னில்லிஅப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும் அவனருளே கண்ணாகக் காணி னல்லால்இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.
சொற்பிரிப்பு
“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி- மயானத்தான், வார்சடையான்” என்னின், அல்லான்ஒப்புஉடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர்ஊரன் அல்லன்;ஓர் உவமன் இ(ல்)லி;அப்படியும் அந்நிறமும் அவ்வண் ண(ம்)மும் அவன்அருளே கண்ஆகக் காணின் அல்லால்,“இப்படியன், இந்நிறத்தன், இவ்வண் ணத்தன், இவன்இறைவன்” என்றுஎழுதிக் காட்டஒ ணாதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன் புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன் மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்அன்னத்தே ரூர்ந்த அரக்கன் றன்னை அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன் சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.
சொற்பிரிப்பு
பொன்ஒத்த மேனிமேல் பொடியும் கண்டேன்; புலித்தோல் உடைகண்டேன்; புணரத் தன்மேல்மின்ஒத்த நுண்இடையாள் பாகம் கண்டேன்; மிளிர்வதுஒரு பாம்பும் அரைமேல் கண்டேன்;அன்னத்தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்;சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்- சிவனைநான் சிந்தையுள் கண்ட ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.