திருமுறை 6 · 6.094 · 10

நின்ற

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பொது
நாடு
பொது

1

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகிஅருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகிநெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
சொற்பிரிப்பு
இருநிலன்ஆய்த், தீஆகி, நீரும் ஆகி, இயமான னாய்,எறியும் காற்றும் ஆகி,அருநிலைய திங்கள்ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய்,அட்ட மூர்த்தி ஆகிப்,பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர்உருவும் தம்உருவும் தாமே ஆகி,நெருநலைஆய், இன்றுஆகி, நாளை ஆகி, நிமிர்புன் சடைஅடிகள் நின்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக் கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப் பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகிஎண்ணாகி எண்ணுக்கோ ரெழுத்து மாகி எழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
சொற்பிரிப்பு
மண்ஆகி, விண்ஆகி, மலையும் ஆகி, வயிரமும்ஆய், மாணிக்கம் தானே ஆகிக்,கண்ஆகிக், கண்ணுக்குஓர் மணியும் ஆகிக், கலைஆகிக், கலைஞானம் தானே ஆகிப்,பெண்ஆகிப், பெண்ணுக்குஓர் ஆணும் ஆகிப், பிரளயத்துக்கு அப்பால்ஓர் அண்டம் ஆகி,எண்ஆகி எண்ணுக்குஓர் எழுத்தும் ஆகி எழும்சுடர்ஆய் எம்அடிகள் நின்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கல்லாகிக் களறாகிக் கானு மாகிக் காவிரியாய்க் காலாறாய்க் கழியு மாகிப்புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப் புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச் சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகிநெல்லாகி நிலனாகி நீரு மாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
சொற்பிரிப்பு
கல்ஆகிக், களறுஆகிக், கானும் ஆகிக், காவிரிஆய்க், கால்ஆறுஆய்க், கழியும் ஆகிப்,புல்ஆகிப், புதல்ஆகிப், பூடும் ஆகிப், புரம்ஆகிப், புரம்மூன்றும் கெடுத்தான் ஆகிச்,சொல்ஆகிச், சொல்லுக்குஓர் பொருளும் ஆகிச், சுலாவுஆகிச், சுலாவுக்குஓர் சூழல் ஆகி,நெல்ஆகி, நிலன்ஆகி, நீரும் ஆகி, நெடுஞ்சுடர்ஆய் நிமிர்ந்து,அடிகள் நின்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க் கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்கூற்றாகிக் கூற்றுதைத்தகொல் களிறு மாகிக் குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகிஏற்றானாய் ஏறூர்ந்த செல்வ னாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
சொற்பிரிப்பு
காற்றுஆகிக், கார்முகில்ஆய்க், காலம் மூன்றுஆய்க், கனவுஆகி, நனவுஆகிக், கங்குல் ஆகிக்,கூற்றுஆகிக், கூற்றுஉதைத்த கொல்களிறும் ஆகிக், குரைகடல்ஆய்க், குரைகடற்குஓர் கோமா னும்ஆய்,நீற்றானாய், நீறுஏற்ற மேனி ஆகி, நீள்விசும்புஆய், நீள்விசும்பின் உச்சி ஆகி,ஏற்றானாய், ஏறுஊர்ந்த செல்வன் ஆகி, எழும்சுடர்ஆய், எம்அடிகள் நின்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வ மாகித்தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானுந் தானே யாகிநீயாகி நானாகி நேர்மை யாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
சொற்பிரிப்பு
தீஆகி, நீர்ஆகித், திண்மை ஆகித், திசைஆகி, அத்திசைக்குஓர் தெய்வம் ஆகித்,தாய்ஆகித், தந்தையாய்ச், சார்வும் ஆகித், தாரகையும் ஞாயிறும்தண் மதியும் ஆகிக்,காய்ஆகிப், பழம்ஆகிப், பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி,நீஆகி, நான்ஆகி, நேர்மை ஆகி, நெடுஞ்சுடர்ஆய், நிமிர்ந்துஅடிகள் நின்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அங்கமா யாதியாய் வேத மாகி அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப் பான்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக் கடலாகி மலையாகிக் கழியு மாகிஎங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
சொற்பிரிப்பு
அங்கம்ஆய், ஆதிஆய், வேதம் ஆகி, அருமறையோடு ஐம்பூதம் தானே ஆகிப்,பங்கம்ஆய்ப், பலசொல்லும் தானே ஆகிப், பால்மதியோடு ஆதிஆய்ப், பான்மை ஆகிக்,கங்கைஆய்க், காவிரிஆய்க், கன்னி ஆகிக், கடல்ஆகி, மலைஆகிக், கழியும் ஆகி,எங்கும்ஆய், ஏறுஊர்ந்த செல்வன் ஆகி, எழும்சுடர்ஆய், எம்அடிகள் நின்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்கோதா விரியாய்க் குமரி யாகிக் கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்போதாய மலர்கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகியாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
சொற்பிரிப்பு
மாதா பிதாஆகி, மக்கள் ஆகி, மறிகடலும் மால்விசும்பும் தானே ஆகிக்,கோதா விரிஆய்க், குமரி ஆகிக், கொல்புலித்தோல் ஆடைக் குழகன் ஆகிப்,போதுஆய் மலர்கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்புஅறுக்கும் புனிதன் ஆகி,ஆதானும் எனநினைந்தார்க்கு எளிதே ஆகி, அழல்வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி அறிவாகி அழலாகி அவியு மாகிநாவாகி நாவுக்கோர் உரையு மாகி நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப் பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்தேவாகித் தேவர் முதலு மாகிச் செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
சொற்பிரிப்பு
ஆவாகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவுஆகி, அழல்ஆகி, அவியும் ஆகி,நாஆகி, நாவுக்குஓர் உரையும் ஆகி, நாதனாய், வேதத்தின் உள்ளோன் ஆகிப்,பூஆகிப், பூவுக்குஓர் நாற்றம் ஆகிப், பூக்குளால் வாசம்ஆய் நின்றான் ஆகித்,தேஆகித், தேவர் முதலும் ஆகிச், செழுஞ்சுடர்ஆய்ச், சென்றுஅடிகள் நின்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நீராகி நீளகலந் தானே யாகி நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப் பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகிஆரேனுந் தன்னடைந்தார் தம்மை யெல்லாம் ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப் பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
சொற்பிரிப்பு
நீர்ஆகி, நீள்அகலம் தானே ஆகி, நிழல்ஆகி, நீள்விசும்பின் உச்சி ஆகிப்,பேர்ஆகிப், பேருக்குஓர் பெருமை ஆகிப், பெருமதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி,ஆரேனும் தன்அடைந்தார் தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்லஎம் ஈச னார்தாம்பார்ஆகிப், பண்ஆகிப், பாடல் ஆகிப், பரஞ்சுடர்ஆய்ச், சென்றுஅடிகள் நின்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மாலாகி நான்முகனாய் மாபூ தமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்பாலாகி எண்டிசைக்கும் எல்லை யாகிப் பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்பூலோகப் புவலோக சுவலோ கமாய்ப் பூதங்க ளாய்ப்புராணன் றானே யாகிஏலா தனவெலாம் ஏல்விப் பானாய் எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
சொற்பிரிப்பு
மால்ஆகி, நான்முகனாய், மாபூ தம்ஆய், மருக்கம்ஆய், அருக்கம்ஆய் மகிழ்வும் ஆகிப்,பால்ஆகி, எண்திசைக்கும் எல்லை ஆகிப், பரப்புஆகிப், பரலோகம் தானே ஆகிப்,பூலோகப் புவலோக சுவலோ கம்ஆய்ப், பூதங்கள் ஆய்ப்,புராணன் தானே ஆகி,ஏலா தனஎலாம் ஏல்விப் பானாய், எழும்சுடர்ஆய், எம்அடிகள் நின்ற ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.