திருமுறை 6 · 6.081 · 10

திருக்கோடிகா

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
கோடிகா
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய் கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய்விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
சொற்பிரிப்பு
கண்தலம்சேர் நெற்றிஇளங் காளை கண்டாய்; கல்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்;மண்தலம்சேர் மயக்குஅறுக்கும் மருந்து கண்டாய்; மதில்கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்;விண்தலம்சேர் விளக்குஒளிஆய் நின்றான் கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்;கொண்டல்அம்சேர் கண்டத்துஎம் கூத்தன் கண்டாய்- கோடிகா அமர்ந்துஉறையும் குழகன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய் திருவாரூர்த் திருமூலத் தானன் கண்டாய்கொண்டாடு மடியவர்தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
சொற்பிரிப்பு
வண்டுஆடு பூங்குழலாள் பாகன் கண்டாய்; மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்;பண்டுஆடும் பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்; பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்;செண்டுஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய்; திருஆரூர்த் திருமூலட் டானன் கண்டாய்;கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்- கோடிகா அமர்ந்துஉறையும் குழகன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய் அடியார்கட் காரமுத மானான் கண்டாய்மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய் ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
சொற்பிரிப்பு
அலைஆர்ந்த புனல்கங்கைச் சடையான் கண்டாய்; அடியார்கட்கு ஆர்அமுதம் ஆனான் கண்டாய்;மலைஆர்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்; வானோர்கள் முடிக்குஅணிஆய் நின்றான் கண்டாய்;இலைஆர்ந்த திரிசூலப் படையான் கண்டாய்; ஏழ்உலகும் ஆய்நின்ற எந்தை கண்டாய்;கொலைஆர்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்- கோடிகா அமர்ந்துஉறையும் குழகன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய் மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய் ஐயா றகலாத ஐயன் கண்டாய்குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
சொற்பிரிப்பு
மற்றுஆரும் தன்ஒப்பார் இல்லான் கண்டாய்; மயிலாடு துறைஇடமா மகிழ்ந்தான் கண்டாய்;புற்றுஆடு அரவுஅணிந்த புனிதன் கண்டாய்; பூந்துருத்திப் பொய்இலியாய் நின்றான் கண்டாய்;அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்; ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்;குற்றாலத்து அமர்ந்துஉறையும் கூத்தன் கண்டாய்- கோடிகா அமர்ந்துஉறையும் குழகன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய் புகலூரை யகலாத புனிதன் கண்டாய்நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய் நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
சொற்பிரிப்பு
வார்ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்; மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்;போர்ஆர்ந்த மால்விடைஒன்று ஊர்வான் கண்டாய்; புகலூரை அகலாத புனிதன் கண்டாய்;நீர்ஆர்ந்த நிமிர்சடைஒன்று உடையான் கண்டாய்; நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்;கூர்ஆர்ந்த மூஇலைவேல் படையான் கண்டாய்- கோடிகா அமர்ந்துஉறையும் குழகன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய் கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய் அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
சொற்பிரிப்பு
கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்; கண்அப்ப விண்அப்புக் கொடுத்தான் கண்டாய்;படிமலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்; பற்றுஅற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்;அடிமலிந்த சிலம்புஅலம்பத் திரிவான் கண்டாய்; அமரர்கணம் தொழுதுஏத்தும் அம்மான் கண்டாய்;கொடிமலிந்த மதில்-தில்லைக் கூத்தன் கண்டாய்; கோடிகா அமர்ந்துஉறையும் குழகன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய் ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்கழையாடு கழுக்குன்ற மமர்ந்தான் கண்டாய் காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்இழையாடு மெண்புயத்த இறைவன் கண்டாய் என்னெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
சொற்பிரிப்பு
உழைஆடு கரதலம்ஒன்று உடையான் கண்டாய்; ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்;கழைஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்; காளத்திக் கற்பகம்ஆய் நின்றான் கண்டாய்;இழைஆடும் எண்புயத்த இறைவன் கண்டாய்; என்நெஞ்சத் துள்-நீங்கா எம்மான் கண்டாய்;குழைஆட நடம்ஆடும் கூத்தன் கண்டாய்- கோடிகா அமர்ந்துஉறையும் குழகன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே.
சொற்பிரிப்பு
படம்ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்; பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்;நடம்ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய்; நால்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்;கடம்ஆடு களிறுஉரித்த கண்டன் கண்டாய்; கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்;குடம்ஆடி இடம்ஆகக் கொண்டான் கண்டாய்- கோடிகா அமர்ந்துஉறையும் குழகன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 10-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை