திருமுறை 6 · 6.076 · 10

திருப்புத்தூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
புத்தூர்
நாடு
பாண்டியநாடு

1

புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண் போர்விடையின் பாகன்காண் புவன மேழும்விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண் விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேத நான்குந்தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரங்கொண் டோ ன்காண் தீர்த்தன்காண் திருமாலோர் பங்கத் தான்காண்திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
புரிந்துஅமரர் தொழுதுஏத்தும் புகழ்தக் கோன்காண், போர்விடையின் பாகன்காண், புவனம் ஏழும்விரிந்துபல உயிர்ஆகி விளங்கி னான்காண், விரைக்கொன்றைக் கண்ணியன்காண், வேதம் நான்கும்தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரம்கொண் டோன்காண், தீர்த்தன்காண், திருமால்ஓர் பாகத் தான்காண்-திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்- திருத்தளியான் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வாராரும் முலைமங்கை பாகத் தான்காண் மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங் குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்டகாராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண் கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
வார்ஆரும் முலைமங்கை பாகத் தான்காண்; மாமறைகள் ஆயவன்காண்; மண்ணும், விண்ணும்,கூர்ஆர்வெந் தழலவனும், காற்றும், நீரும், குலவரையும், ஆயவன்காண்; கொடுநஞ்சு உண்டகார்ஆரும் கண்டன்காண்; எண்தோ ளன்காண், கயிலைமலைப் - பொருப்பன்காண் - விருப்போடு என்றும்தேர்ஆரும் நெடுவீதித் திருப்புத் தூரில்- திருத்தளியான் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும் விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற புனக்காந்தட் கைகாட்டக் கண்டு வண்டுதென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன்காண், பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்,நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நல்கனகக் கிழிதருமிக்கு அருளி னோன்காண்-பொன்காட்டக் கடிக்கொன்றை, மருங்கே நின்ற புனக்காந்தள் கைகாட்டக், கண்டு வண்டுதென்காட்டும் செழும்புறவின் - திருப்புத் தூரில்- திருத்தளியான் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும் இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந் துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்மாடேறி முத்தீனுங் கானல் வேலி மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதிசேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
ஏடுஏறு மலர்க்கமலத்து அயனும், மாலும், இந்திரனும், பணிந்துஏத்த இருக்கின் றான்காண்;தோடுஏறும் மலர்க்கடுக்கை, வன்னி, மத்தம், துன்னியசெஞ் சடையான்காண்; துகள்தீர் சங்கம்மாடுஏறி முத்துஈனும் கானல் வேலி மறைக்காட்டு மாமணிகாண் - வளங்கொள் மேதிசேடுஏறி மடுப்படியும் திருப்புத் தூரில்- திருத்தளியான் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கருமருவு வல்வினைநோய் அகற்றி னான்காண்(1) காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டீகாண்தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன்றன் சங்காதி ஆரூரில் தனியா னைகாண்திருமருவு பொழில்புடைசூழ் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.(1) காற்றினான்காண்
சொற்பிரிப்பு
கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண், காமருபூங் கச்சிஏ கம்பத் தான்காண்,பெருமருவு பேர்உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத் தண்புலியூர் மன்றுஆ டீகாண்,தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன்தன் சங்காத்தி, ஆரூரில் - தனியா னைகாண்-திருமருவு பொழில்புடைசூழ் திருப்புத் தூரில்- திருத்தளியான் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

காம்பாடு தோளுமையாள் காண நட்டங் கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்யபாம்பாடப் படுதலையிற் பலிகொள் வோன்காண் பவளத்தின் பருவரைபோற் படிமத் தான்காண்தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட சங்கரன்காண் பொங்கரவக் கச்சை யோன்காண்சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
காம்புஆடு தோள்உமையாள் காண, நட்டம் கலந்துஆடல் புரிந்தவன்காண்; கையில் வெய்யபாம்புஆடப், படுதலையில் பலிகொள் வோன்காண்; பவளத்தின் பருவரைபோல் படிமத் தான்காண்;தாம்புஆடு சினவிடையே பகடாக் கொண்ட சங்கரன்காண்; பொங்குஅரவக் கச்சை யோன்காண்-சேம்புஆடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்- திருத்தளியான் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வெறிவிரவு மலர்க்கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண் ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானற்செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
வெறிவிரவு மலர்க்கொன்றை, விளங்கு திங்கள், வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்;பொறிவிரவு கதம்நாகம், அக்கி னோடு பூண்டவன்காண்; பொருபுலித்தோல் ஆடை யான்காண்;அறிவுஅரிய நுண்பொருள்கள் ஆயி னான்காண்; ஆயிரம்பேர் உடையவன்காண் - அம்தண் கானல்செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்- திருத்தளியான் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

புக்கடைந்த வேதியற்காய்க் காலற் காய்ந்த புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையா ளஞ்சமிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண் வெண்மதியைக் கலைசேர்த்த திண்மை யோன்காண்அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்திக்கணைந்து வருமருங்கில் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
புக்குஅடைந்த வேதியற்குஆய்க் காலற் காய்ந்த புண்ணியன்காண்; வெண்நகைவெள் வளையாள் அஞ்ச,மிக்குஎதிர்ந்த கரிவெருவ, உரித்த கோன்காண்; வெண்மதியைக் கலைசேர்த்த திண்மை யோன்காண்;அக்குஅரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதிகாண் - அம்தண் தென்றல்திக்குஅணைந்து வருமருங்கில் - திருப்புத் தூரில்- திருத்தளியான் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும் பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்றகொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்டபெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம் பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
பற்றவன்காண், ஏனோர்க்கும் வானோ ருக்கும்; பராபரன்காண்; தக்கன்தன் வேள்வி செற்றகொற்றவன்காண்; கொடுஞ்சினத்தை அடங்கச் செற்று, ஞானத்தை மேல்மிகுத்தல் கோளாக் கொண்டபெற்றியன்காண்; பிறங்குஅருவிக் கழுக்குன் றத்துஎம் பிஞ்ஞகன்காண்; பேர்எழில்ஆர் காம வேளைச்செற்றவன்காண் - சீர்மருவு திருப்புத் தூரில்- திருத்தளியான் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட ஓராழி படைத்தவன்காண் உலகு சூழும்வரமதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண் வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணா அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
உரம்மதித்த சலந்தரன்தன் ஆகம் கீண்ட ஓர்ஆழி படைத்தவன்காண், உலகு சூழும்வரம்மதித்த கதிரவனைப் பல்கொண் டான்காண், வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்,அரமதித்துச் செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன்காண், அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்சிரம்நெரித்த சேவடிகாண் - திருப்புத் தூரில்- திருத்தளியான் காண்;அவன்என் சிந்தை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.