திருமுறை 6 · 6.074 · 10

திருநாரையூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
நாரையூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச் சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைஅல்லானைப் பகலானை அரியான் றன்னை அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்தவில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்நல்லானைத் தீயாடு நம்பன் றன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
சொல்லானைப், பொருளானைச், சுருதி யானைச், சுடர்ஆழி நெடுமாலுக்கு அருள்செய் தானை,அல்லானைப், பகலானை, அரியான் தன்னை, அடியார்கட்கு எளியானை, அரண்மூன்று எய்தவில்லானைச், சரம்விசயற்கு அருள்செய் தானை, வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி ஏத்தும்நல்லானைத், தீஆடும் நம்பன் தன்னை,- நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப் பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானைமஞ்சுண்ட வானாகி வானந் தன்னில் மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னைநெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும்நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
பஞ்சுண்ட மெல்அடியாள் பங்கன் தன்னைப், பாரொடு,நீர், சுடர்,படர்காற்று, ஆயி னானை;மஞ்சுண்ட வான்ஆகி, வானம் தன்னில் மதிஆகி, மதிசடைமேல் வைத்தான் தன்னை;நெஞ்சுண்டுஎன் நினைவுஆகி நின்றான் தன்னை; நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க, ஓங்கும்நஞ்சுஉண்டு, தேவர்களுக்கு அமுதுஈந் தானை;- நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னை முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்தேவாதி தேவர்கட்குந் தேவன் றன்னைத் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னைஆவாத அடலேறொன் றுடையான் றன்னை அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்றநாவானை நாவினில்நல் லுரையா னானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை, முடியாதே முதல்நடுவு முடிவுஆ னானைத்,தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னைத், திசைமுகன்தன் சிரம்ஒன்று சிதைத்தான் தன்னை,ஆவாத அடல்ஏறுஒன்று உடையான் தன்னை, அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்றநாவானை, நாவினில்நல் உரைஆ னானை,- நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச் செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானைவம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்றகம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக் கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்நம்பனையெம் பெருமானை நாதன் றன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
செம்பொன்னை, நன்பவளம் திகழும் முத்தைச், செழுமணியைத், தொழுமவர்தம் சித்தத் தானை,வம்புஅவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை, மதில்கச்சி மன்னு கின்றகம்பனை,எம் கயிலாய மலையான் தன்னைக், கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும்நம்பனை,எம் பெருமானை, நாதன் தன்னை,- நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப் புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னைவிரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை வெண்ணீறு செம்மேனி விரவி னானைவரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னை வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னைநரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
புரைஉடைய கரிஉரிவைப் போர்வை யானைப், புரிசடைமேல் புனல்அடைத்த புனிதன் தன்னை,விரைஉடைய வெள்எருக்குஅம் கண்ணி யானை, வெண்நீறு செம்மேனி விரவி னானை,வரைஉடைய மகள்தவம்செய் மணாளன் தன்னை, வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை,நரைவிடைநல் கொடிஉடைய நாதன் தன்னை,- நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பிறவாதும் இறவாதும் பெருகி னானைப் பேய்பாட நடமாடும் பித்தன் றன்னைமறவாத மனத்தகத்து மன்னி னானை மலையானைக் கடலானை வனத்து ளானைஉறவானைப் பகையானை உயிரா னானை உள்ளானைப் புறத்தானை ஓசை யானைநறவாரும் பூங்கொன்றை சூடி னானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
பிறவாதும் இறவாதும் பெருகி னானைப், பேய்பாட நடம்ஆடும் பித்தன் தன்னை,மறவாத மனத்துஅகத்து மன்னி னானை, மலையானைக், கடலானை, வனத்துஉ ளானை,உறவானைப், பகையானை, உயிர்ஆ னானை, உள்ளானைப், புறத்தானை, ஓசை யானை,நறவுஆரும் பூங்கொன்றை சூடி னானை,- நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தக்கனது வேள்விகெடச் சாடி னானைத் தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக் கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னைஅக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னைநக்கனைவக் கரையானை நள்ளாற் றானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
தக்கனது வேள்விகெடச் சாடி னானைத், தலைகலனாப் பலிஏற்ற தலைவன் தன்னைக்,கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக், கோள்நாகம் பூண்ஆகக் கொண்டான் தன்னை,அக்கினொடும் என்புஅணிந்த அழகன் தன்னை, அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன் தன்னை,நக்கனை,வக் கரையானை, நள்ளாற் றானை,- நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னை அந்தகனுக் கந்தகனை அளக்க லாகாஎரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச் சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னைநரிவிரவு காட்டகத்தி லாட லானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
அரிபிரமர் தொழுதுஏத்தும் அத்தன் தன்னை, அந்தகனுக்கு அந்தகனை, அளக்கல் ஆகா-எரிபுரியும் - இலிங்கபுரா ணத்துஉ ளானை, எண்ஆகிப் பண்ஆர் எழுத்துஆ னானைத்,திரிபுரம்செற்று ஒருமூவர்க்கு அருள்செய் தானைச், சிலந்திக்கும் அரசுஅளித்த செல்வன் தன்னை,நரிவிரவு காட்டுஅகத்தில் ஆட லானை,- நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஆலால மிடற்றணியா அடக்கி னானை ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்பாலாகித் தேனாகிப் பழமு மாகிப் பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானைமேலாய வேதியர்க்கு வேள்வி யாகி வேள்வியினின் பயனாய விமலன் றன்னைநாலாய மறைக்கிறைவ னாயி னானை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
ஆலாலம் மிடற்றுஅணியா அடக்கி னானை; ஆல்அதன்கீழ் அறம்நால்வர்க்கு அருள்செய் தானைப்;பால்ஆகித், தேன்ஆகிப், பழமும் ஆகிப், பைங்கரும்புஆய், அங்குஅருந்தும் சுவைஆ னானை,மேல்ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி, வேள்வியினின் பயன்ஆய விமலன் தன்னை;நால்ஆய மறைக்குஇறைவன் ஆயி னானை;- நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மீளாத ஆளென்னை உடையான் றன்னை வெளிசெய்த வழிபாடு மேவி னானைமாளாமை மறையவனுக் குயிரும் வைத்து வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத்தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன் தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கேநாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
மீளாத ஆள்என்னை உடையான் தன்னை, வெளிசெய்த வழிபாடு மேவி னானை,மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் தன்னைத்,தோள்ஆண்மை கருதிவரை எடுத்த தூர்த்தன் தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்து ஆங்கேநாளோடு வாள்கொடுத்த நம்பன் தன்னை,- நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.