திருமுறை 6 · 6.067 · 10

திருக்கீழ்வேளூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
கீழ்வேளுர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்கதாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச் சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்ததோளானைத் தோளாத முத்தொப் பானைத் தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்தகீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சொற்பிரிப்பு
ஆள்ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை, ஆன்அஞ்சும் ஆடியை,நான் அபயம் புக்கதாளானைத், தன்ஒப்பார் இல்லா தானைச், சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்ததோளானைத், தோளாத முத்துஒப் பானைத், தூவெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்தகீளானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக், கேடுஇலியை, நாடுமவர் கேடுஇ லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்கா தானைநற்பான்மை அறியாத நாயி னேனை நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்பற்பாவும் வாயாரப் பாடி யாடிப் பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக்கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சொற்பிரிப்பு
சொற்பாவும் பொருள்தெரிந்து, தூய்மை நோக்கித், தூங்காதார் மனத்துஇருளை வாங்கா தானை;நற்பான்மை அறியாத நாயி னேனை நன்நெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்;பற்பாவும் வாய்ஆரப் பாடி, ஆடிப், பணிந்து,எழுந்து, குறைந்து,அடைந்தார் பாவம் போக்க-கிற்பானைக்; கீழ்வேளூர் ஆளும் கோவைக், கேடுஇலியை, நாடுமவர் கேடுஇ லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அளைவாயில் அரவசைத்த அழகன் றன்னை ஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும்விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்குளைவானை அல்லாதார்க் குளையா தானை உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசுகிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சொற்பிரிப்பு
அளைவாயில் அரவுஅசைத்த அழகன் தன்னை, ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்விளைவானை, மெய்ஞ்ஞானப் பொருள்ஆ னானை, வித்தகனை, எத்தனையும் பத்தர் பத்திக்குஉளைவானை, அல்லாதார்க்கு உளையா தானை, உலப்புஇலியை, உள்புக்குஎன் மனத்து மாசுகிளைவானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக், கேடுஇலியை, நாடுமவர் கேடுஇ லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத் தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக்கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக் கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணைகேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சொற்பிரிப்பு
தாள்பாவு கமலமலர் தயங்கு வானைத் தலைஅறுத்து மாவிரதம் தரித்தான் தன்னைக்,கோள்பாவு நாள்எல்லாம் ஆனான் தன்னைக், கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்மீட்பானை, வித்துருவின் கொத்துஒப் பானை, வேதியனை, வேதத்தின் பொருள்கொள் வீணைகேட்பானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக், கேடுஇலியை நாடுமவர் கேடுஇ லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்சொல்லானைச் சுடர்மூன்று மானான் றன்னைத் தொண்டாகிப் பணிவார்கட் கணியான் றன்னைவில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்ககில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சொற்பிரிப்பு
நல்லானை, நரைவிடைஒன்று ஊர்தி யானை, நால்வேதத்து ஆறுஅங்கம் நணுக மாட்டாச்சொல்லானைச், சுடர்மூன்றும் ஆனான் தன்னைத், தொண்டுஆகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை,வில்லானை, மெல்லியல்ஓர் பங்கன் தன்னை, மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க-கில்லானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக், கேடுஇலியை, நாடுமவர் கேடுஇ லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை தூமத்தம் வாளரவஞ் சூடி னானைஅழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னைவிழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சொற்பிரிப்பு
சுழித்தானைக், கங்கை;மலர் வன்னி, கொன்றை, தூமத்தம், வாள்அரவம், சூடி னானை;அழித்தானை, அரணங்கள் மூன்றும் வேவ; ஆலால - நஞ்சுஅதனை உண்டான் தன்னை;விழித்தானைக், காமன்உடல் பொடிஆய் வீழ; மெல்லியல்ஓர் பங்கனை;முன் வேல்நல் ஆனைக்கிழித்தானைக்; கீழ்வேளூர் ஆளும் கோவைக், கேடுஇலியை நாடுமவர் கேடுஇ லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற ஓங்காரத் துட்பொருள்தா னாயி னானைவிளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும் விண்ணொடுமண் ஆகாச மாயி னானைவளரொளியை மரகதத்தி னுருவி னானை வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சொற்பிரிப்பு
உளர்ஒளியை, உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உள்பொருள்தான் ஆயி னானை,விளர்ஒளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடுமண் ஆகாசம் ஆயி னானை,வளர்ஒளியை, மரகதத்தின் உருவி னானை, வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்கிளர்ஒளியைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக், கேடுஇலியை நாடுமவர் கேடுஇ லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத் தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானைஉடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னைமடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்விகெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சொற்பிரிப்பு
தடுத்தானைக், காலனைக் காலால் பொன்றத்; தன்அடைந்த மாணிக்குஅன்று அருள்செய் தானை;உடுத்தானைப், புலிஅதளோடு அக்கும் பாம்பும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை;மடுத்தானை, அருநஞ்சம் மிடற்றுள் - தங்க; வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்விகெடுத்தானைக்; கீழ்வேளூர் ஆளும் கோவைக், கேடுஇலியை, நாடுமவர் கேடுஇ லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்புபூண்டானைப் புறங்காட்டி லாட லானைப் போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னைஆண்டானை அறிவரிய சிந்தை யானை அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சொற்பிரிப்பு
மாண்டார் எலும்புஅணிந்த வாழ்க்கை யானை, மயானத்தில் கூத்தனை,வாள் அரவோடு என்புபூண்டானைப், புறங்காட்டில் ஆட லானைப், போகாதுஎன் உள்புகுந்து இடம்கொண்டு என்னைஆண்டானை, அறிவுஅரிய சிந்தை யானை, அசங்கையனை, அமரர்கள்தம் சங்கை எல்லாம்கீண்டானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக், கேடுஇலியை, நாடுமவர் கேடுஇ லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும் முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப் பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போதுபொறித்தானைப் புரமூன்று மெரிசெய் தானைப் பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
சொற்பிரிப்பு
முறிப்புஆன பேசிமலை எடுத்தான் தானும் முதுகுஇற,முன் கைந்நரம்பை எடுத்துப் பாடப்,பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்; பாவியேன் நெஞ்சுஅகத்தே பாதப் போதுபொறித்தானைப்; புரம்மூன்றும் எரிசெய் தானைப்; பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்கிறிப்பானைக்; கீழ்வேளூர் ஆளும் கோவைக், கேடுஇலியை, நாடுமவர் கேடுஇ லாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.