திருமுறை 6 · 6.066 · 10

திருநாகேச்சரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
நாகேச்சுரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந் தலையவனை மலையவனை உலக மெல்லாம்ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை அழலவனை நிழலவனை அறிய வொண்ணாமாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை வளரா நின்றதீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
சொற்பிரிப்பு
தாய்அவனை, வானோர்க்கும் ஏனோ ருக்கும் தலையவனை, மலையவனை, உலகம் எல்லாம்ஆயவனைச், சேயவனை, அணியான் தன்னை, அழலவனை, நிழலவனை, அறிய ஒண்ணாமாயவனை, மறையவனை, மறையோர் தங்கள் மந்திரனைத், தந்திரனை, வளரா நின்றதீஅவனைத், திருநாகேச் சுரத்துஉ ளானைச்,- சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

உரித்தானை மதவேழந் தன்னை மின்னார் ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத் தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க் கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
சொற்பிரிப்பு
உரித்தானை, மதவேழம் தன்னை; மின்ஆர் ஒளிமுடிஎம் பெருமானை; உமைஓர் பாகம்தரித்தானைத்; தரியலர்தம் புரம்எய் தானைத்; தன்அடைந்தார் தம்வினை,நோய் பாவம் எல்லாம்அரித்தானை; ஆல்அதன்கீழ் இருந்து நால்வர்க்கு அறம்,பொருள்,வீடு, இன்பம்,ஆறு அங்கம், வேதம்,தெரித்தானைத்; திருநாகேச் சுரத்துஉ ளானைச்,- சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக் காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்வாரானை மதிப்பவர்தம் மனத்து ளானை மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாதஏரானை இமையவர்தம் பெருமான் றன்னை இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்கசீரானைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
சொற்பிரிப்பு
கார்ஆனை உரிபோர்த்த கடவுள் தன்னைக்; காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்வாரானை; மதிப்பவர்தம் மனத்துஉ ளானை; மற்றுஒருவர் தன்ஒப்பார், ஒப்பு,-இ லாத,-ஏரானை; இமையவர்தம் பெருமான் தன்னை; இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்கசீரானைத்; திருநாகேச் சுரத்துஉ ளானைச்,- சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தலையானை எவ்வுலகுந் தானா னானைத் தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணாநிலையானை நேசர்க்கு நேசன் றன்னை நீள்வான முகடதனைத் தாங்கி நின்றமலையானை வரியரவு நாணாக் கோத்து வல்லசுரர் புரமூன்று மடிய வெய்தசிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
சொற்பிரிப்பு
தலையானை, எவ்உலகும் தான்ஆ னானைத், தன்உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணாநிலையானை, நேசர்க்கு நேசன் தன்னை, நீள்வான முகடுஅதனைத் தாங்கி நின்றமலையானை, வரிஅரவு நாணாக் கோத்து வல்அசுரர் புரம்மூன்றும் மடிய எய்தசிலையானைத், திருநாகேச் சுரத்துஉ ளானைச்,- சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும்பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப் பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்பையானைப் பையரவ மசைத்தான் றன்னைப் பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச்செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
சொற்பிரிப்பு
மெய்யானைத், தன்பக்கல் விரும்பு வார்க்கு; விரும்பாத அரும்பாவி அவர்கட்கு என்றும்பொய்யானைப்; புறம்காட்டில் ஆட லானைப்; பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்பையானைப்; பைஅரவம் அசைத்தான் தன்னைப்; பரந்தானைப்; பவளமால் வரைபோல் மேனிச்செய்யானைத்; திருநாகேச் சுரத்துஉ ளானைச்,- சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்தநிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகிநிற்பனவும் நடப்பனவு மாயி னானைமறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மைஅஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ்சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
சொற்பிரிப்பு
துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத் தோத்திரங்கள் பலசொல்லி வானோர் ஏத்தநிறைந்தானை; நீர்,நிலம்,தீ, வெளி,காற்று, ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயி னானை;மறந்தானைத், தன்நினையா வஞ்சர் தம்மை; அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க்கு என்றும்சிறந்தானைத்; திருநாகேச் சுரத்துஉ ளானைச்,- சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மறையானை மால்விடையொன் றூர்தி யானை மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்இறையானை என்பிறவித் துயர்தீர்ப் பானை இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம் என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்தசிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
சொற்பிரிப்பு
மறையானை, மால்விடைஒன்று ஊர்தி யானை, மால்கடல்நஞ்சு உண்டானை, வானோர் தங்கள்இறையானை, என்பிறவித் துயர்தீர்ப் பானை, இன்னமுதை, மன்னியசீர் ஏகம் பத்தில்உறைவானை, ஒருவரும்ஈங்கு அறியா வண்ணம் என்உள்ளத்து உள்ளே ஒளித்து வைத்தசிறையானைத், திருநாகேச் சுரத்துஉ ளானைச்,- சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில் இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப்பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப் பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக் குறியிலாக் கொடியேனை அடியே னாகச்செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
சொற்பிரிப்பு
எய்தானைப், புரம்மூன்றும் இமைக்கும் போதில்; இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப்பெய்தானைப்; பிறப்புஇலியை; அறத்தில் நில்லாப் பிரமன்தன் சிரம்ஒன்றைக் கரம்ஒன் றி(ன்)னால்கொய்தானைக்; கூத்தாட வல்லான் தன்னைக்; குறிஇலாக் கொடியேனை அடியேன் ஆகச்செய்தானைத்; திருநாகேச் சுரத்துஉ ளானைச்,- சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச் சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்கெளியானை யாவர்க்கு மரியான் றன்னை இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறற்தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
சொற்பிரிப்பு
அளியானை, அண்ணிக்கும் ஆன்பால் தன்னை, வான்பயிரை, அப்பயிரின் வாட்டம் தீர்க்கும்துளியானை, அயன்மாலும் தேடிக் காணாச் சுடரானைத், துரிசுஅறத் தொண்டு பட்டார்க்குஎளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன்கரும்பின் தன்உள்ளால் இருந்த தேறல்தெளியானைத், திருநாகேச் சுரத்துஉ ளானைச் சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்றச் சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப்பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப் பனிமதியஞ் சடையானைப் புனிதன் றன்னைஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந்தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.
சொற்பிரிப்பு
சீர்த்தானை; உலகுஏழும் சிறந்து போற்றச் சிறந்தானை; நிறைந்துஓங்கு செல்வன் தன்னைப்;பார்த்தானை, மதனவேள் பொடியாய் வீழப்; பனிமதியம் சடையானைப்; புனிதன் தன்னை;ஆர்த்துஓடி மலைஎடுத்த அரக்கன் அஞ்ச அருவிரலால் அடர்த்தானை; அடைந்தோர் பாவம்தீர்த்தானைத்; திருநாகேச் சுரத்துஉ ளானைச் சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.