திருமுறை 6 · 6.058 · 10

திருவலம்புரம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
வலம்புரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவருஞ் சூழ நின்றுகண்மலிந்த திருநெற்றி யுடையா ரொற்றைக் கதநாகங் கையுடையார் காணீ ரன்றேபண்மலிந்த மொழியவரு மியானு மெல்லாம் பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்லமண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
சொற்பிரிப்பு
மண்அளந்த மணிவண்ணர் தாமும், மற்றை மறையவனும், வானவரும், சூழ நின்று-கண்மலிந்த திருநெற்றி உடையார்; ஒற்றைக் கதநாகம் கைஉடையார்; காணீர் அன்றே?-பண்மலிந்த மொழியவரும், யானும், எல்லாம் பணிந்துஇறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல,மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கு,அங்கே மன்னி னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக் கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்லகலைநவின்ற மறையவர்கள் காணக் காணக் கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம் வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
சொற்பிரிப்பு
சிலைநவின்று ஒருகணையால் புரம்மூன்று எய்த தீவண்ணர்; சிறந்துஇமையோர் இறைஞ்சி ஏத்தக்,கொலைநவின்ற களியானை உரிவை போர்த்துக், கூத்துஆடித், திரிதரும்அக் கூத்தர்; நல்லகலைநவின்ற மறையவர்கள் காணக் காணக், கடுவிடைமேல், பாரிடங்கள் சூழக், காதல்மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு,அங்கே மன்னி னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந் துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடிவாக்கால் மறைவிரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
சொற்பிரிப்பு
தீக்கூரும் திருமேனி ஒருபால், மற்றை ஒருபாலும் அரிஉருவம் திகழ்ந்த செல்வர்;ஆக்கூரில் - தான்தோன்றி புகுவார் போல, அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும்நோக்கார், ஒருஇடத்தும்; நூலும் தோலும் துதைந்துஇலங்கும் திருமேனி வெண்நீறு ஆடி,வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி, வலம்புரமே புக்கு,அங்கே மன்னி னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கேபோவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழவாவா வெனவுரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
சொற்பிரிப்பு
மூவாத மூக்கப்பாம்பு அரையில் சாத்தி மூவர் உருஆய முதல்வர்; இந்நாள்கோவாத எரிகணையைச் சிலைமேல் கோத்த குழகனார்; குளிர்கொன்றை சூடி இங்கேபோவாரைக் கண்டுஅடியேன் பின்பின் செல்லப், புறக்கணித்துத், தம்முடைய பூதம் சூழ“வாவா!” எனஉரைத்து மாயம் பேசி, வலம்புரமே புக்கு,அங்கே மன்னி னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அனலொருகை யதுவேந்தி அதளி னோடே ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்புனல்பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப் புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்சினவிடையை மேற்கொண்டு திருவா ரூருஞ் சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போலமனமுருக வளைகழல மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
சொற்பிரிப்பு
அனல்ஒருகை யதுஏந்தி, அதளி னோடே ஐந்தலைய மாநாகம் அரையில் சாத்திப்,புனல்பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல் மேனிப் புனிதனார், புரிந்துஅமரர் இறைஞ்சி ஏத்தச்,சினவிடையை மேற்கொண்டு, திருஆ ரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல,மனம்உருக, வளைகழல, மாயம் பேசி, வலம்புரமே புக்கு,அங்கே மன்னி னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் காலினாற் காய்ந்துகந்த காபா லியார்முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச் சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவமறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
சொற்பிரிப்பு
கறுத்ததுஒரு கண்டத்தர்; காலன் வீழக் காலினால் காய்ந்துஉகந்த காபா லி(ய்)யார்;முறித்ததுஒரு தோல்உடுத்து, முண்டம் சாத்தி, முனிகணங்கள் புடைசூழ, முற்றம் தோறும்தெறித்ததுஒரு வீணையராய்ச் செல்வார்; தம்வாய்ச் சிறுமுறுவல் வந்துஎனது சிந்தை வௌவ,மறித்துஒருகால் நோக்காதே, மாயம் பேசி, வலம்புரமே புக்கு,அங்கே மன்னி னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம் பசுஞ்சாந்தங் கொண்டணிந்து பாதம் நோவஇட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க் கெவ்வூரீர் எம்பெருமா னென்றேன் ஆவிவிட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி வேறோர் பதிபுகப் போவார் போலவட்டணைகள் படநடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
சொற்பிரிப்பு
பட்டுஉடுத்துப், பவளம்போல் மேனி எல்லாம் பசுஞ்சாந்தம் கொண்டுஅணிந்து, பாதம் நோவஇட்டுஎடுத்து நடம்ஆடி, இங்கே வந்தார்க்கு, “எவ்ஊரீர், எம்பெருமான்?” என்றேன்; ஆவிவிட்டிடும்ஆறு அதுசெய்து, விரைந்து நோக்கி, வேறுஓர் பதிபுகப் போவார் போல,வட்டணைகள் படநடந்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு,அங்கே மன்னி னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பல்லார் பயில்பழனப் பாசூ ரென்றும் பழனம் பதிபழமை சொல்லி நின்றார்நல்லார் நனிபள்ளி யின்று வைகி நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்சொல்லார் ஒருவிடமாத் தோள்கை வீசிச் சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கும்மல்லார் வயல்புடைசூழ் மாடவீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
சொற்பிரிப்பு
“பல்லார் பயில்பழனப் பாசூர்” என்றும் பழனம் பதிபழைமை சொல்லி நின்றார்;“நல்லார் நனிபள்ளி இன்று வைகி, நாளைப்போய், நள்ளாறு சேர்தும்” என்றார்;சொல்லார், ஒருஇடமாத்; தோள்கை வீசிச், சுந்தரராய், வெந்தநீறு ஆடி, எங்கும்மல்ஆர் வயல்புடைசூழ் மாடவீதி வலம்புரமே புக்கு,அங்கே மன்னி னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொங்கா டரவொன்று கையிற் கொண்டு போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்தங்கா ரொருவிடத்துந் தம்மேல் ஆர்வந் தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா என்கண்ணில் நின்றகலா வேடங் காட்டிமங்குல் மதிதவழும் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
சொற்பிரிப்பு
பொங்குஆடு அரவுஒன்று கையில் கொண்டு, போர்வெண் மழுஏந்திப், போகா நிற்பர்;தங்கார் ஒருஇடத்தும், தம்மேல் ஆர்வம் தவிர்த்துஅருளார்; “தத்துவத்தே நின்றேன்” என்பர்;எங்கே இவர்செய்கை? ஒன்றுஒன்று ஒவ்வா; என்கண்ணில் நின்றுஅகலா வேடம் காட்டி,மங்குல் மதிதவழும் மாட வீதி வலம்புரமே புக்கு,அங்கே மன்னி னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழஅங்கொருதன் றிருவிரலால் இறையே யூன்றி அடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
சொற்பிரிப்பு
செங்கண்மால் சிலைபிடித்துச், சேனை யோடும் சேதுபந் தனம்செய்து, சென்று புக்குப்,பொங்குபோர் பலசெய்து, புகலால் வென்ற போர்அரக்கன் நெடுமுடிகள் பொடிஆய் வீழ,அங்குஒருதம் திருவிரலால் இறையே ஊன்றி, அடர்த்து,அவற்கே அருள்புரிந்த அடிகள், இந்நாள்வங்கம்மலி கடல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கு,அங்கே மன்னி னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.