திருமுறை 6 · 6.056 · 10

திருக்கயிலாயம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
கயிலாயம் (நொடித்தான்மலை)
நாடு
வடநாடு

1

பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி பூதப் படையாள் புனிதா போற்றிநிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றிமறையுடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப் படுவாய் போற்றிகறையுடைய கண்ட முடையாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
பொறைஉடைய பூமி,நீர், ஆனாய், போற்றி! பூதப் படைஆள் புனிதா, போற்றி!நிறைஉடைய நெஞ்சின் இடையாய், போற்றி! நீங்காதுஎன் உள்ளத்து இருந்தாய், போற்றி!மறைஉடைய வேதம் விரித்தாய், போற்றி! வானோர் வணங்கப் படுவாய், போற்றி!கறைஉடைய கண்டம் உடையாய், போற்றி!- கயிலை மலையானே போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

முன்பாகி நின்ற முதலே போற்றி மூவாத மேனிமுக் கண்ணா போற்றிஅன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி ஆறேறு சென்னிச் சடையாய் போற்றிஎன்பாக வெங்கு மணிந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றிகண்பாவி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
முன்புஆகி நின்ற முதலே, போற்றி! மூவாத மேனிமுக் கண்ணா, போற்றி!அன்புஆகி நின்றார்க்கு அணியாய், போற்றி! ஆறுஏறு சென்னிச் சடையாய், போற்றி!என்புஆகம் எங்கும் அணிந்தாய், போற்றி! என்சிந்தை நீங்கா இறைவா, போற்றி!கண்பாவி நின்ற கனலே, போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மாலை யெழுந்த மதியே போற்றி மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றிமேலை வினைக ளறுப்பாய் போற்றி மேலாடு திங்கள் முடியாய் போற்றிஆலைக் கரும்பின் தெளிவே போற்றி அடியார்கட் காரமுத மானாய் போற்றிகாலை முளைத்த கதிரே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
மாலை எழுந்த மதியே, போற்றி! மன்னிஎன் சிந்தை இருந்தாய், போற்றி!மேலை வினைகள் அறுப்பாய், போற்றி! மேல்ஆடு திங்கள் முடியாய், போற்றி!ஆலைக் கரும்பின் தெளிவே, போற்றி! அடியார்கட்கு ஆர்அமுதம் ஆனாய், போற்றி!காலை முளைத்த கதிரே, போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

உடலின் வினைக ளறுப்பாய் போற்றி ஒள்ளெரி வீசும் பிரானே போற்றிபடருஞ் சடைமேல் மதியாய் போற்றி பல்கணக் கூத்தப் பிரானே போற்றிசுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றிகடலி லொளியாய முத்தே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
உடலின் வினைகள் அறுப்பாய், போற்றி! ஒள்எரி வீசும் பிரானே, போற்றி!படரும் சடைமேல் மதியாய், போற்றி! பல்கணக் கூத்தப் பிரானே, போற்றி!சுடரில் திகழ்கின்ற சோதீ, போற்றி! தோன்றிஎன் உள்ளத்து இருந்தாய், போற்றி!கடலில் ஒளியாய முத்தே, போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றிபொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றிமெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றிகைசேர் அனலேந்தி யாடீ போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
மைசேர்ந்த கண்டம் உடையாய், போற்றி! மாலுக்கும் ஓர்ஆழி ஈந்தாய், போற்றி!பொய்சேர்ந்த சிந்தை புகாதாய், போற்றி! போகாதுஎன் உள்ளத்து இருந்தாய், போற்றி!மெய்சேரப் பால்வெண்நீறு ஆடீ, போற்றி! மிக்கார்கள் ஏத்தும் விளக்கே, போற்றி!கைசேர் அனல்ஏந்தி ஆடீ, போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆறேறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றிநீறேறு மேனி யுடையாய் போற்றி நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றிகூறேறு மங்கை மழுவா போற்றி கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றிகாறேறு கண்ட மிடற்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
ஆறுஏறு சென்னி முடியாய், போற்றி! அடியார்கட்கு ஆர்அமுதாய் நின்றாய், போற்றி!நீறுஏறு மேனி உடையாய், போற்றி! நீங்காதுஎன் உள்ளத்து இருந்தாய், போற்றி!கூறுஏறு மங்கை மழுவா, போற்றி! கொள்ளும் கிழமைஏழ் ஆனாய், போற்றி!காறுஏறு கண்டம்– மிடற்றாய், போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அண்டமே ழன்று கடந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றிபண்டை வினைக ளறுப்பாய் போற்றி பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றிதொண்டர் பரவு மிடத்தாய் போற்றி தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றிகண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
அண்டம்ஏழ் அன்று கடந்தாய், போற்றி! ஆதி புராணனாய் நின்றாய், போற்றி!பண்டை வினைகள் அறுப்பாய், போற்றி! பாரோர் விண்ஏத்தப் படுவாய், போற்றி!தொண்டர் பரவும் இடத்தாய், போற்றி! தொழில்நோக்கி ஆளும் சுடரே, போற்றி!கண்டம் கறுக்கவும் வல்லாய், போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி பேராநோய் பேர விடுப்பாய் போற்றிஉருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றிஅருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி ஆரு மிகழப் படாதாய் போற்றிகருகிப் பொழிந்தோடு நீரே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
பெருகி அலைக்கின்ற ஆறே, போற்றி! பேராநோய் பேர விடுப்பாய், போற்றி!உருகி நினைவார்தம் உள்ளாய், போற்றி! ஊனம் தவிர்க்கும் பிரானே, போற்றி!அருகி மிளிர்கின்ற பொன்னே, போற்றி! ஆரும் இகழப் படாதாய், போற்றி!கருகிப் பொழிந்துஓடும் நீரே, போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி தேடி யுணராமை நின்றாய் போற்றிபொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றிமெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றிகையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
செய்ய மலர்மேலான், கண்ணன், போற்றி! தேடி உணராமை நின்றாய், போற்றி!பொய்யா நஞ்சுஉண்ட பொறையே, போற்றி! பொருள்ஆக என்னைஆட் கொண்டாய், போற்றி!மெய்ஆக ஆன்அஞ்சு உகந்தாய், போற்றி! மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய், போற்றி!கைஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றிசீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றிகோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று கொடிதாகக் காய்ந்த குழகா போற்றிகாலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
மேல்வைத்த வானோர் பெருமான், போற்றி! மேல்ஆடு புரம்மூன்றும் எய்தாய், போற்றி!சீலத்தான் தென்இலங்கை மன்னன், போற்றிச் சிலைஎடுக்க, வாய்அலற வைத்தாய் போற்றி!கோலத்தால் குறைவுஇல்லான் தன்னை, அன்று, கொடிதுஆகக் காய்ந்த குழகா, போற்றி!காலத்தால் காலனையும் காய்ந்தாய், போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.