திருமுறை 6 · 6.052 · 10

திருவீழிமிழலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண் கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்றபண்ணவன்காண் பண்ணவற்றின் றிறலா னான்காண் பழமாகிச் சுவையாகிப் பயக்கின் றான்காண்மண்ணவன்காண் தீயவன்காண் நீரா னான்காண் வந்தலைக்கும் மாருதன்காண் மழைமே கஞ்சேர்விண்ணவன்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
சொற்பிரிப்பு
கண்அவன்காண்; கண்ஒளிசேர் காட்சி யான்காண்; கந்திருவம் பாட்டுஇசையில் காட்டு கின்றபண்அவன்காண்; பண்அவற்றின் திறம்ஆ னான்காண்; பழம்ஆகிச் சுவைஆகிப் பயக்கின் றான்காண்;மண்அவன்காண்; தீஅவன்காண் நீர்ஆ னான்காண்; வந்துஅலைக்கும் மாருதன்காண்; மழைமே கம்சேர்விண்அவன்காண்; விண்ணவர்க்கும் மேல்ஆ னான்காண்- விண்இழிதண் வீழி மிழலை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆலைப் படுகரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்சீல முடையடியார் சிந்தை யான்காண் திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண் பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்வேலை விடமுண்ட மிடற்றி னான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
சொற்பிரிப்பு
ஆலைப்படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத் தான்காண்;சீலம்உடை அடியார் சிந்தை யான்காண்; திரிபுரம்மூன்று எரிபடுத்த சிலையி னான்காண்;பாலினொடு தயிர்நறுநெய் ஆடி னான்காண்; பண்டரங்க வேடன்காண்; பலிதேர் வான்காண்;வேலைவிடம் உண்ட மிடற்றி னான்காண்- விண்இழிதண் வீழி மிழலை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தண்மையொடு வெம்மைதா னாயி னான்காண் சக்கரம் புட்பாகற் கருள்செய் தான்காண்கண்ணுமொரு மூன்றுடைய காபா லிகாண் காமனுடல் வேவித்த கண்ணி னான்காண்எண்ணில்சமண் தீர்த்தென்னை யாட்கொண் டான்காண் இருவர்க் கெரியா யருளி னான்காண்விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
சொற்பிரிப்பு
தண்மையொடு வெம்மைதான் ஆயி னான்காண்; சக்கரம்புள் பாகற்கு அருள்செய் தான்காண்;கண்ணும்ஒரு மூன்றுஉடைய காபா லீகாண்; காமன்உடல் வேவித்த கண்ணி னான்காண்;எண்இல்சமண் தீர்த்துஎன்னை ஆட்கொண் டான்காண்; இருவர்க்கு எரிஆய் அருளி னான்காண்;விண்ணவர்கள் போற்ற இருக்கின் றான்காண்; விண்இழிதண் வீழி மிழலை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

காதிசைந்த சங்கக் குழையி னான்காண் கனக மலையனைய காட்சி யான்காண்மாதிசைந்த மாதவமுஞ் சோதித் தான்காண் வல்லேன வெள்ளெயிற்றா பரணத் தான்காண்ஆதியன்காண் அண்டத்துக் கப்பா லான்காண் ஐந்தலைமா நாகம்நா ணாக்கி னான்காண்வேதியன்காண் வேதவிதி காட்டி னான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
சொற்பிரிப்பு
காதுஇசைந்த சங்கக் குழையி னான்காண்; கனகமலை அனைய காட்சி யான்காண்;மாதுஇசைந்த மாதவமும் சோதித் தான்காண்; வல்ஏன வெள்எயிற்றுஆ பரணத் தான்காண்;ஆதியன்காண்; அண்டத்துக்கு அப்பா லான்காண்; ஐந்தலைமா நாகம்நாண் ஆக்கி னான்காண்;வேதியன்காண்; வேதவிதி காட்டி னான்காண்- விண்இழிதண் வீழி மிழலை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நெய்யினொடு பாலிளநீ ராடி னான்காண் நித்தமண வாளனென நிற்கின் றான்காண்கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண் காலனுயிர் காலாற் கழிவித் தான்காண்செய்யதிரு மேனிவெண் ணீற்றி னான்காண் செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னான்காண்வெய்ய கனல்விளையாட் டாடி னான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
சொற்பிரிப்பு
நெய்யினொடு பால்இளநீர் ஆடி னான்காண்; நித்தமண வாளன்என நிற்கின் றான்காண்;கையின்மழு வாளொடுமான் ஏந்தி னான்காண்; காலன்உயிர் காலால் கழிவித் தான்காண்;செய்யதிரு மேனியில்வெண் நீற்றி னான்காண்; செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தி னான்காண்;வெய்யகனல் விளையாட்டு ஆடி னான்காண்- விண்இழிதண் வீழி மிழலை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கண்டுஞ்சுங் கருநெடுமால் ஆழி வேண்டிக் கண்ணிடந்து சூட்டக்கண் டருளு வான்காண்வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம் வான்கங்கைச் சடைக்கரந்த மாதே வன்காண்பண்டங்கு மொழிமடவாள் பாகத் தான்காண் பரமன்காண் பரமேட்டி யாயி னான்காண்வெண்டிங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
சொற்பிரிப்பு
கண்துஞ்சும் கருநெடுமால் ஆழி வேண்டிக், கண்இடந்து, சூட்டக்,கண்டு அருளு வான்காண்;வண்டுஉண்ணும் மதுக்கொன்றை, வன்னி, மத்தம், வான்கங்கை, சடைக்கரந்த மாதே வன்காண்;பண்தங்கு மொழிமடவாள் பாகத் தான்காண்; பரமன்காண்; பரமேட்டி ஆயி னான்காண்;வெண்திங்கள் அரவொடுசெஞ் சடைவைத் தான்காண்- விண்இழிதண் வீழி மிழலை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண் வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண் சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
சொற்பிரிப்பு
கல்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக்கு அருள்செய்த கருணை யான்காண்;வில்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்; வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்;தற்பரமாம் தற்பரமாய் நிற்கின் றான்காண்; சதாசிவன்காண்; தன்ஒப்பார் இல்லா தான்காண்;வெற்புஅரையன் பாவை விருப்புஉ ளான்காண்- விண்இழிதண் வீழி மிழலை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மெய்த்தவன்காண் மெய்த்தவத்தில் நிற்பார்க் கெல்லாம் விருப்பிலா இருப்புமன வினையர்க் கென்றும்பொய்த்தவன்காண் புத்தன் மறவா தோடி எறிசல்லி புதுமலர்க ளாக்கி னான்காண்உய்த்தவன்காண் உயர்கதிக்கே உள்கி னாரை உலகனைத்தும் ஒளித்தளித்திட் டுய்யச் செய்யும்வித்தகன்காண் வித்தகர்தாம் விரும்பி யேத்தும் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
சொற்பிரிப்பு
மெய்த்தவன்காண்; மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம்; விருப்புஇலா இருப்புமன வினையர்க்கு என்றும்பொய்த்தவன்காண்; புத்தன் மறவாது ஓடி எறிசல்லி புதுமலர்கள் ஆக்கி னான்காண்;உய்த்தவன்காண், உயர்கதிக்கே உள்கி னாரை; உலகுஅனைத்தும் ஒளித்துஅளித்திட்டு உய்யச் செய்யும்வித்தகன்காண் - வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண்இழிதண் வீழி மிழலை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சந்திரனைத் திருவடியாற் தளர்வித் தான்காண் தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண் டான்காண்இந்திரனைத் தோள்முறிவித் தருள்செய் தான்காண் ஈசன்காண் நேசன்காண் நினைவோர்க் கெல்லாம்மந்திரமும் மறைப்பொருளு மாயி னான்காண் மாலொடயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்வெந்தழலின் விரிசுடரா யோங்கி னான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.
சொற்பிரிப்பு
சந்திரனைத் திருவடியால் - தளர்வித் தான்காண்; தக்கனையும் முனிந்துஎச்சன் தலைகொண் டான்காண்;இந்திரனைத் தோள்முறிவித்து அருள்செய் தான்காண்; ஈசன்காண்; நேசன்காண்,- நினைவோர்க்கு எல்லாம்,-மந்திரமும் மறைப்பொருளும் ஆயி னான்காண்; மாலொடுஅயன் மேலொடுகீழ் அறியா வண்ணம்வெந்தழலின் விரிசுடர்ஆய் ஓங்கி னான்காண்- விண்இழிதண் வீழி மிழலை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஈங்கைப்பேர் ஈமவனத் திருக்கின் றான்காண் எம்மான்காண் கைம்மாவி னுரிபோர்த் தான்காண்ஓங்குமலைக் கரையன்றன் பாவை யோடும் ஓருருவாய் நின்றான்காண் ஓங்கா ரன்காண்கோங்குமலர்க் கொன்றையந்தார்க் கண்ணி யான்காண் கொல்லேறு வெல்கொடிமேற் கூட்டி னான்காண்வேங்கைவரிப் புலித்தோல்மே லாடை யான்காண் விண்ணிழிதண்வீழி மிழலை யானே.
சொற்பிரிப்பு
ஈங்கைப்பேர் ஈமவனத்து இருக்கின் றான்காண்; எம்மான்காண்; கைம்மாவின் உரிபோர்த் தான்காண்;ஓங்குமலைக்கு அரையன்தன் பாவை யோடும் ஓர்உருஆய் நின்றான்காண்; ஓங்கா ரன்காண்;கோங்குமலர்க் கொன்றைஅம்தார்க் கண்ணி யான்காண்; கொல்ஏறு வெல்கொடிமேல் கூட்டி னான்காண்;வேங்கைவரிப் புலித்தோல்மேல் ஆடை யான்காண்- விண்இழிதண்வீழி மிழலை யானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.