திருமுறை 6 · 6.038 · 11

திருவையாறு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஓசை ஒலியெலா மானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயேவாச மலரெலா மானாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயேபேசப் பெரிது மினியாய் நீயே பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயேதேச விளக்கெலா மானாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
ஓசை ஒலிஎலாம் ஆனாய், நீயே; உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே;வாச மலர்எலாம் ஆனாய் நீயே; மலையான் மருகனாய் நின்றாய் நீயே;பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடிஎன்மேல் வைத்தாய், நீயே;தேச விளக்குஎலாம் ஆனாய், நீயே;- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே நோவாமே நோக்கருள வல்லாய் நீயேகாப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயேஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயேதீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
நோக்க(அ)ரிய திருமேனி உடையாய், நீயே; நோவாமே நோக்குஅருள வல்லாய், நீயே;காப்ப(அ)ரிய ஐம்புலனும் காத்தாய், நீயே; காமனையும் கண்அழலால் காய்ந்தாய், நீயே;ஆர்ப்ப(அ)ரிய மாநாகம் ஆர்த்தாய், நீயே; அடியான்என்று அடிஎன்மேல் வைத்தாய், நீயே;தீர்ப்ப(அ)ரிய வல்வினைநோய் தீர்ப்பாய், நீயே- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே கடல்வரைவான் ஆகாய மானாய் நீயேதனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயேமனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயேசினத்திருந்த திருநீல கண்டன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
கனத்துஅகத்துக் கடும்சுடர்ஆய் நின்றாய், நீயே; கடல்,வரை,வான், ஆகாயம், ஆனாய், நீயே;தனத்துஅகத்துத் தலைகலனாக் கொண்டாய், நீயே; சார்ந்தாரைத் தகைந்துஆள வல்லாய், நீயே;மனத்துஇருந்த கருத்துஅறிந்து முடிப்பாய், நீயே; மலர்ச்சே வடிஎன்மேல் வைத்தாய், நீயே;சினத்துஇருந்த திருநீல கண்டன், நீயே- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வானுற்ற மாமலைக ளானாய் நீயே வடகயிலை மன்னி யிருந்தாய் நீயேஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயேஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயேதேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
வான்உற்ற மாமலைகள் ஆனாய், நீயே; வடகயிலை மன்னி இருந்தாய், நீயே;ஊன்உற்ற ஒளிமழுவாள் படையாய், நீயே; ஒளிமதியோடு, அரவு,புனல், வைத்தாய், நீயே;ஆன்உற்ற ஐந்தும் அமர்ந்தாய், நீயே; “அடியான்”என்று அடிஎன்மேல் வைத்தாய், நீயே;தேன்உற்ற சொல்மடவாள் பங்கன், நீயே- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயேஉண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயேகண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயேதிண்ணார் மழுவாட் படையாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
பெண்ஆண் பிறப்புஇலியாய் நின்றாய், நீயே; பெரியார்கட்கு எல்லாம் பெரியாய், நீயே;உண்ணா அருநஞ்சம் உண்டாய், நீயே; ஊழி முதல்வனாய் நின்றாய், நீயே;கண்ஆய் உலகுஎலாம் காத்தாய், நீயே; கழல்சே வடிஎன்மேல் வைத்தாய், நீயே;திண்ஆர் மழுவாள் படையாய், நீயே- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயேகற்றிருந்த கலைஞான மானாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயேபெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயேசெற்றிருந்த திருநீல கண்டன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
உற்றிருந்த உணர்வுஎலாம் ஆனாய், நீயே; உற்றவர்க்குஓர் சுற்றம்ஆய் நின்றாய் நீயே;கற்றிருந்த கலைஞானம் ஆனாய், நீயே; கற்றவர்க்குஓர் கற்பகம்ஆய் நின்றாய், நீயே;பெற்றிருந்த தாய்அவளின் நல்லாய், நீயே; பிரானாய் அடிஎன்மேல் வைத்தாய், நீயே;செற்றிருந்த திருநீல கண்டன், நீயே- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எல்லா வுலகமு மானாய் நீயே ஏகம்ப மேவி யிருந்தாய் நீயேநல்லாரை நன்மை யறிவாய் நீயே ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயேபொல்லா வினைக ளறுப்பாய் நீயே புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயேசெல்வாய செல்வந் தருவாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
எல்லாம் உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி இருந்தாய், நீயே;நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச் சுடர்விளக்குஆய் நின்றாய், நீயே;பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச்சே வடிஎன்மேல் வைத்தாய், நீயே;செல்வாய செல்வம் தருவாய், நீயே- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே அளவில் பெருமை யுடையாய் நீயேபூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயேநாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயேதேவ ரறியாத தேவன் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவுஇல் பெருமை உடையாய், நீயே;பூவினில் நாற்றம்ஆய் நின்றாய், நீயே; போர்க்கோலம் கொண்டுஎயில் எய்தாய், நீயே;நாவில் நடுஉரைஆய் நின்றாய், நீயே; நண்ணி அடிஎன்மேல் வைத்தாய், நீயே;தேவர் அறியாத தேவன், நீயே- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே ஏகம்ப மேய இறைவன் நீயேவண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே வாரா வுலகருள வல்லாய் நீயேதொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயேதிண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
எண்திசைக்கும் ஒண்சுடர்ஆய் நின்றாய், நீயே; ஏகம்பம் மேய இறைவன், நீயே;வண்டுஇசைக்கும் நறுங்கொன்றைத் தாராய், நீயே; வாரா உலகுஅருள வல்லாய், நீயே;தொண்டுஇசைத்துஉன் அடிபரவ நின்றாய், நீயே; தூமலர்ச்சே வடிஎன்மேல் வைத்தாய், நீயே;திண்சிலைக்குஓர் சரம்கூட்ட வல்லாய், நீயே- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயேகண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயேதொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயேதிண்டோ ள்விட் டெரியாட லுகந்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
விண்டார் புரம்மூன்றும் எய்தாய், நீயே; விண்ணவர்க்கும் மேல்ஆகி நின்றாய், நீயே;கண்டாரைக் கொல்லும்நஞ்சு உண்டாய், நீயே; காலங்கள் ஊழிஆய் நின்றாய், நீயே;தொண்டுஆய் அடியேனை ஆண்டாய், நீயே; தூமலர்ச்சே வடிஎன்மேல் வைத்தாய், நீயே;திண்தோள்விட்டு எரிஆடல் உகந்தாய் நீயே- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஆரு மறியா இடத்தாய் நீயே ஆகாயந் தேரூர வல்லாய் நீயேபேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத் திறுத்தாய் நீயேஊரும் புரமூன்று மட்டாய் நீயே ஒண்டா மரையானும் மாலுங் கூடித்தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.
சொற்பிரிப்பு
ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம் தேர்ஊர வல்லாய், நீயே;பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத்து இறுத்தாய், நீயே;ஊரும் புரம்மூன்றும் அட்டாய், நீயே; ஒண்தா மரையானும் மாலும் கூடித்தேரும் அடிஎன்மேல் வைத்தாய், நீயே- திருஐயாறு அகலாத செம்பொன் சோதீ!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.