திருமுறை 6 · 6.032 · 10

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றிஅற்றவர்கட் காரமுத மானாய் போற்றி அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றிமற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றிசெற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி! கழல்அடைந்தார் செல்லும் கதியே, போற்றி!அற்றவர்கட்கு ஆர்அமுதம் ஆனாய், போற்றி! அல்லல்அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி!மற்றுஒருவர் ஒப்புஇல்லா மைந்தா, போற்றி! வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி!செற்றவர்தம் புரம்எரித்த சிவனே, போற்றி! திருமூலட் டானனே, போற்றி போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றிகொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றிஅங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றிசெங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
வங்கம்மலி கடல்நஞ்சம் உண்டாய், போற்றி! மதயானை ஈர்உரிவை போர்த்தாய், போற்றி!கொங்குஅலரும் நறுங்கொன்றைத் தாராய், போற்றி! கொல்புலித்தோல் ஆடைக் குழகா, போற்றி!அங்கணனே, அமரர்கள்தம் இறைவா, போற்றி! ஆலமர நீழல்அறம் சொன்னாய், போற்றி!செங்கனகத் தனிக்குன்றே, சிவனே, போற்றி! திருமூலட் டானனே, போற்றி போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மலையான் மடந்தை மணாளா போற்றி மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றிநிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றிஇலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றிசிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
மலையான் மடந்தை மணாளா, போற்றி! மழவிடையாய் நின்பாதம், போற்றி போற்றி!நிலைஆக என்நெஞ்சில் நின்றாய், போற்றி! நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய், போற்றி!இலைஆர்ந்த மூஇலைவேல் ஏந்தி, போற்றி! ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய், போற்றி!சிலையால்அன்று எயில்எரித்த சிவனே, போற்றி! திருமூலட் டானனே, போற்றி போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி பூதப் படையுடையாய் போற்றி போற்றிமன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி மறியேந்து கையானே போற்றி போற்றிஉன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி உலகுக் கொருவனே போற்றி போற்றிசென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
பொன்இயலும் மேனியனே, போற்றி போற்றி! பூதப் படைஉடையாய், போற்றி போற்றி!மன்னியசீர் மறைநான்கும் ஆனாய், போற்றி! மறிஏந்து கையானே, போற்றி போற்றி!உன்னுமவர்க்கு உண்மையனே, போற்றி போற்றி! உலகுக்கு ஒருவனே, போற்றி போற்றி!சென்னிமிசை வெண்பிறையாய், போற்றி போற்றி! திருமூலட் டானனே, போற்றி போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி நற்றவனே நின்பாதம் போற்றி போற்றிவெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றிதுஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றிசெஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
நஞ்சுஉடைய கண்டனே, போற்றி போற்றி! நல்-தவனே, நின்பாதம் போற்றி போற்றி!வெஞ்சுடரோன் பல்இறுத்த வேந்தே, போற்றி! வெண்மதிஅம் கண்ணி விகிர்தா, போற்றி!துஞ்சுஇருளில் ஆடல் உகந்தாய், போற்றி! தூநீறு மெய்க்குஅணிந்த சோதீ, போற்றி!செஞ்சடையாய், நின்பாதம் போற்றி போற்றி! திருமூலட் டானனே, போற்றி போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றிபொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றிஅங்கமலத் தயனோடு மாலுங் காணா அனலுருவா நின்பாதம் போற்றி போற்றிசெங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
சங்கரனே, நின்பாதம் போற்றி போற்றி! சதாசிவனே, நின்பாதம் போற்றி போற்றி!பொங்குஅரவா, நின்பாதம் போற்றி போற்றி! புண்ணியனே, நின்பாதம் போற்றி போற்றி!அம்கமலத்து அயனோடு மாலும் காணா அனல்உருவா, நின்பாதம் போற்றி போற்றி!செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி! திருமூலட் டானனே, போற்றி போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றிகொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றிநம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி நால்வேத மாறங்க மானாய் போற்றிசெம்பொனே மரகதமே மணியே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
வம்புஉலவு கொன்றைச் சடையாய், போற்றி! வான்பிறையும் வாள்அரவும் வைத்தாய், போற்றி!கொம்புஅனைய நுண்இடையாள் கூறா, போற்றி! குரைகழலால் கூற்றுஉதைத்த கோவே, போற்றி!நம்பும்அவர்க்கு அரும்பொருளே, போற்றி போற்றி! நால்வேதம் ஆறுஅங்கம் ஆனாய், போற்றி!செம்பொனே, மரகதமே, மணியே, போற்றி! திருமூலட் டானனே போற்றி போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றிவள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றிவெள்ளையே றேறும் விகிர்தா போற்றி மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றிதெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
உள்ளம்ஆய் உள்ளத்தே நின்றாய், போற்றி! உகப்பார் மனத்துஎன்றும் நீங்காய், போற்றி!வள்ளலே, போற்றி! மணாளா, போற்றி! வானவர்கோன் தோள்துணித்த மைந்தா, போற்றி!வெள்ளைஏறு ஏறும் விகிர்தா, போற்றி! மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய், போற்றி!தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய், போற்றி! திருமூலட் டானனே போற்றி போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றிதேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி திருமாலுக் காழி யளித்தாய் போற்றிசாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றிசேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
பூஆர்ந்த சென்னிப் புனிதா, போற்றி! புத்தேளிர் போற்றும் பொருளே, போற்றி!தேஆர்ந்த தேவர்க்கும் தேவே, போற்றி! திருமாலுக்கு ஆழி அளித்தாய், போற்றி!சாவாமே காத்துஎன்னை ஆண்டாய், போற்றி! சங்குஒத்த நீற்றுஎம் சதுரா, போற்றி!சேஆர்ந்த வெல்கொடியாய், போற்றி போற்றி! திருமூலட் டானனே, போற்றி போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றிகரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றிஅருமந்த தேவர்க் கரசே போற்றி அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
பிரமன்தன் சிரம்அரிந்த பெரியோய், போற்றி! பெண்உருவோடு ஆண்உருஆய் நின்றாய், போற்றி!கரம்நான்கும் முக்கண்ணும் உடையாய், போற்றி! காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய், போற்றி!அருமந்த தேவர்க்கு அரசே, போற்றி! அன்றுஅரக்கன் ஐந்நான்கு தோளும், தாளும்,சிரம்,நெரித்த சேவடியாய், போற்றி போற்றி! திருமூலட் டானனே போற்றி போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.