திருமுறை 6 · 6.030 · 10

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண் ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண் வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்டஅம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண் அனலாடி யானஞ்சு மாடி னான்காண்செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரிற் றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்; ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயி னான்காண்;வம்புஉந்து கொன்றைஅம்தார் - மாலை யான்காண்; வளர்மதிசேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட,அம்புஒன்றால் மூஎயிலும் எரிசெய் தான்காண்; அனல்ஆடி, ஆன்அஞ்சும் ஆடி னான்காண்-செம்பொன்செய் மணிமாடத் திருஆ ரூரில்- திருமூலட் டானத்துஎம் செல்வன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் செல்லுந் தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்துந்திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரிற் றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
அக்குஉலாம் அரையினன்காண்; அடியார்க்கு என்றும் ஆர்அமுதுஆய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்;கொக்கு,உலாம் பீலியொடு, கொன்றை மாலை, குளிர்மதியும், கூர்அரவும், நீரும், சென்னித்தொக்குஉலாம் சடையினன்காண்; தொண்டர் செல்லும் தூநெறிகாண் - வானவர்கள் துதிசெய்து ஏத்தும்,திக்குஎலாம் நிறைந்தபுகழ்த் திருஆ ரூரில் திருமூலட் டானத்துஎம் செல்வன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண் நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தான்காண்வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண் வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்காரேறு முகிலனைய கண்டத் தான்காண் கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்சீரேறு மணிமாடத் திருவா ரூரிற் றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
நீர்ஏறு சடைமுடிஎம் நிமலன் தான்காண்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தான்காண்;வார்ஏறு வனமுலையாள் பாகத் தான்காண்; வளர்மதிசேர் சடையான்காண்; மாதே வன்காண்;கார்ஏறு முகில்அனைய கண்டத் தான்காண்; கல்ஆலின் கீழ்அறங்கள் சொல்லி னான்காண்-சீர்ஏறு மணிமாடத் திருஆ ரூரில்- திருமூலட் டானத்துஎம் செல்வன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண் கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண் உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண் ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரிற் றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
கான்ஏறு களிற்றுஉரிவைப் போர்வை யான்காண்; கற்பகம்காண் காலனைஅன்று உதைசெய் தான்காண்;ஊன்ஏறும் முடைதலையில் பலிகொள் வான்காண்; உத்தமன்காண்; ஒற்றியூர் மேவி னான்காண்;ஆன்ஏறுஒன்று அதுஏறும் அண்ணல் தான்காண்; ஆதித்தன் பல்இறுத்த ஆதி தான்காண்-தேன்ஏறு மலர்ச்சோலைத் திருஆ ரூரில்- திருமூலட் டானத்துஎம் செல்வன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண் பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண் வானவரு மறியாத நெறிதந் தான்காண்நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்சிறப்போடு பூசிக்குந் திருவா ரூரிற் றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
பிறப்போடு இறப்புஎன்றும் இல்லா தான்காண்; பெண்உருவோடு ஆண்உருவம் ஆயி னான்காண்;மறப்படும்என் சிந்தைமருள் நீக்கி னான்காண்; வானவரும் அறியாத நெறிதந் தான்காண்-நறப்படுபூ மலர்,தூபம், தீபம், நல்ல நறும்சாந்தம், கொண்டுஏத்தி நாளும் வானோர்சிறப்போடு பூசிக்கும் திருஆ ரூரில் திருமூலட் டானத்துஎம் செல்வன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண் தருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண்அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்எங்கள்பெரு மான்காணென் னிடர்கள் போக அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற் றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
சங்கரன்காண்; சக்கரம்மாற்கு அருள்செய் தான்காண்; தருணேந்து சேகரன்காண்; தலைவன் தான்காண்;அங்கமலத்து அயன்சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன்காண்; அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்;எங்கள்பெரு மான்காண்;என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன்காண் - இமையோர் ஏத்தும்செங்கமல வயல்புடைசூழ் திருஆ ரூரில் திருமூலட் டானத்துஎம் செல்வன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண் நான்மறையோ டாறங்க மாயி னான்காண்மின்றிகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண் வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்துன்றுபொழிற் கச்சியே கம்பன் றான்காண் சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்ததென்றலார் மணங்கமழுந் திருவா ரூரிற் றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
நன்றுஅருளித், தீதுஅகற்றும் நம்பி ரான்காண்; நால்மறையோடு ஆறுஅங்கம் ஆயி னான்காண்;மின்திகழும் சோதியன்காண்; ஆதி தான்காண்; வெள்ஏறு நின்றுஉலவு கொடியி னான்காண்;துன்றுபொழில் கச்சிஏ கம்பன் தான்காண்; சோற்றுத் துறையான்காண் - சோலை சூழ்ந்ததென்றலார் மணம்கமழும் திருஆ ரூரில்- திருமூலட் டானத்துஎம் செல்வன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண் புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்மின்னலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண் வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண் கோலமா நீறணிந்த மேனி யான்காண்செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற் றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
பொன்நலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்; புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்;மின்நலத்த நுண்இடையாள் பாகத் தான்காண்; வேதியன்காண்; வெண்புரிநூல் மார்பி னான்காண்;கொல்-நலத்த மூஇலைவேல் ஏந்தி னான்காண்; கோலமா நீறுஅணிந்த மேனி யான்காண்-செந்நலத்த வயல்புடைசூழ் திருஆ ரூரில்- திருமூலட் டானத்துஎம் செல்வன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்மண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண் வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண்தெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற் றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
விண்டவர்தம் புரம்மூன்றும் எரிசெய் தான்காண்; வேலைவிடம் உண்டுஇருண்ட கண்டத் தான்காண்;மண்டலத்தில் ஒளிவளர விளங்கி னான்காண்; வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்;புண்டரிகக் கண்ணானும், பூவின் மேலைப் புத்தேளும், காண்புஅரிய புராணன் தான்காண்-தெண்திரைநீர் வயல்புடைசூழ் திருஆ ரூரில்- திருமூலட் டானத்துஎம் செல்வன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண் தென்னானைக் காவன்காண் தீயில் வீழமருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் வஞ்சகர்பா லணுகாத மைந்தன் றான்காண்அருவரையை எடுத்தவன்றன் சிரங்கள் பத்தும் ஐந்நான்கு தோளுநெரிந் தலற வன்றுதிருவிரலா லடர்த்தவன்காண் திருவா ரூரிற் றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே.
சொற்பிரிப்பு
செருவளரும் செங்கண்மால் ஏற்றி னான்காண்; தென்ஆனைக் காவன்காண்; தீயில் வீழ,மருவலர்தம் புரம்மூன்றும் எரிசெய் தான்காண்; வஞ்சகர்பால் அணுகாத மைந்தன் தான்காண்;அருவரையை எடுத்தவன்தன் சிரங்கள் பத்தும், ஐந்-நான்கு தோளும்,நெரிந்து அலற அன்றுதிருவிரலால் அடர்த்தவன்காண் - திருஆ ரூரில் திருமூலட் டானத்துஎம் செல்வன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.