திருமுறை 6 · 6.018 · 11

திருப்பூவணம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பூவணம்
நாடு
பாண்டியநாடு

1

வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
வடிஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்; வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்;கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும்;இடி ஏறு களிற்று உரிவைப் போர்வை தோன்றும்; எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்;பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும் அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்ஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும் ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ் செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்தபூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்; அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்;ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்; ஒற்றை வெண்பிறை தோன்றும்; பற்றார் தம்மேல்சேண் நாக வரை வில்லால் எரித்தல் தோன்றும்; செத்தவர் தம் எலும்பினால் செறியச் செய்தபூண்நாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங் கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்றுசொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றுஞ் சூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும்அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
கல் ஆலின் நீழல் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்றுசொல்லாகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்; சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்;அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்;பொல்லாத புலால் எலும்பு பூணாய்த் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும் பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும் நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
படைமலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்;நடைமலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்;உடைமலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; ஊரல் வெண்சிர மாலை உலாவித் தோன்றும்;புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும் மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும் இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றுங்கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை ஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
மயலாகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும்; மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்;இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்; இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்;கயல்பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை ஆயிரமாம் முகத்தினொடு வானில் - தோன்றும்புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பாராழி வட்டத்தார் பரவி யிட்ட பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ்சீராழித் தாமரையின் மலர்க ளன்ன திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன் உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்றுபோராழி முன்னீந்த பொற்புத் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
பார்ஆழி வட்டத்தார் பரவி இட்ட பல்மலரும், நறும்புகையும், பரந்து தோன்றும்;சீர்ஆழித் தாமரையின் மலர்கள் அன்ன திருந்தியமா நிறத்த சேவடிகள் தோன்றும்;ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன் உடல்துணித்த இடர்பாவம் கெடுப்பித்து, அன்று,போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றுந்துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந் தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்; சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்;மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும்; வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்;துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூயமா மதி உடனே வைத்தல் தோன்றும்;பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும் நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும் மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
செறிகழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்; திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்;நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்; நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்;மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்; மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்;பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும் அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும் மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ் செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்; அணிகிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்-மருப்பு ஓட்டு மணி வயிரக் கோவை தோன்றும்; மணம் மலிந்த நடம் தோன்றும்; மணிஆர் வைகைத்திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்; செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று பலபிறவி அறுத்தருளும் பரிசு தோன்றுங்கோங்கணைந்த கூவிளமும் மதமத் தமுங் குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்பூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி, அன்று, தன் முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்;பாங்கு அணைந்து பணிசெய்வார்க்கு அருளி, அன்று, பலபிறவி அறுத்து அருளும் பரிசும் தோன்றும்;கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்;பூங்கணைவேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும்நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
சொற்பிரிப்பு
ஆர் ஒருவர் உள்குவார் உள்ளத்து உள்ளே அவ்உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்;வார் உருவப் பூண்முலை நல் மங்கை தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்;நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை நெறுநெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்;போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்- பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.